அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 8: மாயைக் குகைகள்

அனுமன் திரிகூட மலையின் உச்சியில் நின்றுகொண்டிருந்தான். அவன் மனம் சற்று சஞ்சலப்பட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்து பெண்களால் எழுந்த தடைகள் ஒருபுறம் என்றாலும், இந்நிகழ்வுகளால் எழுந்த சினம் அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

சினத்தினூடே அவனை மீண்டும் மீண்டும் அலைகழித்தது அந்த எண்ணம். ஒரு பெண்ணை அழிப்பது எந்த அறத்தின்படி நியாயம் என்று மனம் பல கேள்விகளை எழுப்பி அவனைத் திக்குமுக்காடச் செய்தது. தன் மீதே அவன் அளவற்ற கோபம் கொண்டான்.

ஒரு பெண்ணைக் கொல்வது ஒருவனின் ஒட்டுமொத்த நற்புண்ணியங்களையும் அழித்து, அவனைப் பெரும் பாவச் சேற்றில் தள்ளும். மேலும் ஆயுதம் இல்லாதவர்களையும், பெண்களையும் காப்பதுதான் வீரர்களின் கடமை. அவர்களைக் கொன்றால் அது வீரத்திற்கும், அறத்திற்கும் பெரும் பழியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று அவன் கற்ற ஞானம் அவனைக் குத்திக்காட்டியது.

உச்சியிலிருந்து அவன் இலங்கையை நோக்கினான். எங்கும் சிவந்த மலர்கள், சிவந்த இலைகள். கடலின் நீரலைகள் அந்த மாலை வேளையில் அவனுக்குச் செந்நிறக் குருதியைப் போல அலைந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அவன் உடல் சினத்தின் உச்சியில் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. சினம், சேர்ந்தாரைக் கொல்லும் விஷம். எதிராளியைத் தண்டிப்பதற்காகத் தானே நஞ்சை அருந்துவதற்குச் சமமானது தன் சினத்தை உள்ளத்தில் வளர்ப்பது. எதிரியைப் போல ஒருவனுக்குத் தானே தேடிவரும் பகை அது. தூமாக்கினியாக எரியும் உமியின் இடையே அமர்ந்துகொண்டு, அந்த நெருப்பு தன்னுடலை மெல்ல வதைப்பதற்குச் சமம்.

அனுமன் தன்னைச் சினம் ஆட்கொண்டிருப்பதை உணர்ந்து அதிலிருந்து வெளிவர முயன்றான். தன்முனைப்பின்றிச் சினம் அடங்காது. அனுமன் தன்னை ஒருநிலைப்படுத்திக்கொள்ள அந்த மலை உச்சியில் அமர்ந்தான். மனம் முழுதும் இராமனின் நாமம் மட்டுமே நிரம்பியிருந்தது.

மனம் மெல்லத் தெளிவடையத் தொடங்கியது. இராமன் கடந்து வந்த பாதையை மீண்டும் நினைத்துப் பார்த்தான். தாடகையைக் கொன்ற நிகழ்வு நினைவுக்கு வந்ததும் நிதானித்தான்.

தேவர்களுக்கே பெரும் துன்பம் விளைவித்த அசுரர்களுக்குத் தஞ்சமளித்து, உலகை அழிக்கத் துணிந்த பிருகு முனிவரின் மனைவியான ‘காவ்யமாதா’ என்பவளை உலக நன்மைக்காக மகாவிஷ்ணு வதம் செய்தார். பூமியை அழிக்க நினைத்த விரோசனனின் மகளான ‘மந்தரா’ என்பவளைத் தேவேந்திரன் உலக தர்மத்தைக் காப்பதற்காகக் கொன்றான். அந்த வழியில் இராமனும் உலக மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தாடகையை அழித்ததை நினைவுகூர்ந்தான்.

மக்களுக்குத் தீமை செய்யும் ஒரு கொடியவளைக் கொல்லும்போது அங்கே இரக்கத்திற்கோ, அவள் பெண் என்ற பரிதாபத்திற்கோ இடம் தரக்கூடாது. பொதுமக்களையும், முனிவர்களையும் காப்பதுதான் ஒரு வீரனின் முதல் கடமை. அதைச் செய்யாவிட்டால், அதுவே அவனுக்கு அறம் பிறழ்ந்ததற்கும் பசுவைக் கொன்ற பாவத்திற்கு இணையான பாவத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்ற இராமனுக்கான கௌசிகரின் வாக்கும் அவன் மனதைத் தெளிவாக்கியது. தான் அறம் பிறழவில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்தான். அவன் சினம் முழுதும் நீங்கியிருந்தது.

அதே நேரம் இலங்கை மாநகரின் உச்சி மாடத்தின் நிலாமுற்றத்தில் நின்று, அரக்கர் கோன் இராவணன் இருண்ட நிலப்பரப்பை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது கைகளில் கனத்த பொற்கோப்பை இருந்தது. அதில் நறுமணமிக்க மது நின்றாடியது. அரண்மனைக் காவல் வீழ்ந்த செய்தி, லங்கிணி வீழ்த்தப்பட்ட செய்தி அவனுக்குத் தெரிந்ததிலிருந்து அவனுள்ளே இருந்த காமத்தை மீறி, போர்வியூகத்தை அறிந்த மாபெரும் அரசன் விழித்துக்கொண்டான்.

அவன் அனுமனுடன் விளையாட நினைத்தான். எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதை விட, அவனது பலத்தை விரயம் செய்து மனதளவில் சோரவைக்கும் தந்திரத்தை அவன் தேர்ந்தெடுத்தான்.

சாரணத் தலைவர்களை அழைத்த இராவணன், அவனது அதரங்களில் வழியும் குரூரமான புன்னகையோடு தன் திட்டத்தைச் சொன்னான்.

“அந்த வானரம் இலங்கைக்குள் ஊடுருவிவிட்டது. அது சீதையைத் தேடித் தான் வந்திருக்க வேண்டும். எனவே நிலவறைக் குகைகள், ரத்தினக் கூடாரங்கள், வடக்கு மாடங்கள் என ஒன்பது வெவ்வேறு இடங்களில் சீதை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வீதிகளில் பொய்யான வதந்திகளைப் பரப்புங்கள். அது உண்மையைப் போல இருப்பதற்கு அங்கே நம் சிறைக்கூடத்தில் இருக்கும் தேவர்களின் அழகு பொருந்திய பெண்களைத் தங்க வைத்து, காவலை அதிகரியுங்கள். சீதையைத் தேடி ஒவ்வொரு குகையாகவும், மாடமாகவும் தாவித் தாவி அவன் களைப்படைந்து, தன் நம்பிக்கையை இழந்து அலைவதைப் பார்க்க வேண்டும். போய் ஆவன செய்யுங்கள்!” என உத்தரவிட்டான்.

ஒற்றர்கள் தலைவணங்கி மறைந்தனர். மாலைச் சூரியன் முழுதும் மறைந்து இருள் சூழ்ந்து இலங்கை நகரத்தைப் போர்வையாகப் போர்த்தியது.

அந்த இரவின் இருளில், மாளிகைகளின் கூரைகளின் மீதும், கோபுரங்களின் நிழல்களிலும் சிறு பூனையைப் போல மௌனமாகப் பாய்ந்து நகர்ந்துகொண்டிருந்தான் அனுமன். எங்கே தேடுவது, எப்படித் தேடுவது என்று யோசித்த அவனது கூர்மையான செவிகளில் கீழே வீதிகளில் நின்றிருந்த அரக்கக் காவலர்களின் உரையாடல்கள் விழுந்தன.

ஒற்றர்கள் பரப்பிய வதந்திகளை நம்பிய அனுமன், முதல் இரண்டு குகைகளுக்குள் பாய்ந்தபோது அவனுள் இராம காரியம் முடிந்துவிடும் என்ற மாபெரும் நம்பிக்கையும் கிளர்ச்சியும் இருந்தன. ஆனால், பொன்னும் ரத்தினமும் மின்னிய பாதாள அரங்கிலோ, கடல் மட்டத்திற்குக் கீழே ஈரம் சொட்டிய இருண்ட சிறையிலோ அன்னை சீதை இல்லை, அங்கே சிறைவைக்கப்பட்டிருந்த தேவகன்னியரின் முகங்களில் இருந்த பயமும் ஏமாற்றமுமே அவனுக்கு மிஞ்சின.

மூன்றாவதாக அவன் பாய்ந்த அக்னிக் குகையில்தான் அவனது அக உணர்வுகள் முதன்முறையாகக் கொதித்து நிலைகுலைந்தன.

எரிமலையின் கசிவு போலக் கந்தகப் புகையும் வெம்மையும் நிறைந்திருந்த அந்தப் பாதாளக் குகைக்குள் இறங்கியபோது, சுற்றிலும் தீப்பொறிகள் பறந்தன. நடுவே தீப்பிழம்புகளின் நிழலாட்டத்தில் ஒரு பெண் உருவம் காவலுக்கு நடுவே தவிப்பதாகத் தோன்றியது.

“என் அன்னை இந்த வெம்மையிலா வாடுகிறாள்?”

என்று எண்ணிய கணத்தில் அனுமனின் இதயம் நரக வேதனையால் பிழியப்பட்டது. இராமனின் தேவிக்கு இத்தகைய சோதனையா என்ற பதைபதைப்பில், தன் உடலைச் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் அவன் முன்னகர்ந்தான்.

ஆனால், அருகே சென்றபோதுதான் தெரிந்தது, அது தழல்களின் ஒளியால் தோற்றுவிக்கப்பட்ட வெறும் போலி உருவம். அக்கணமே அவனது பதற்றம் ஆறாத் துயரமாகவும் ஏமாற்றமாகவும் மாறியது.

தொடர்ந்து, நான்காவதாக மாயக் கண்ணாடிகள் பொருந்திய சோதிக்குகையையும், ஐந்தாவதாகப் புகையும் வாசனை திரவியங்களும் நிறைந்த குகையையும் அடைந்தபோது அவனது ஆற்றல் கரைந்துகொண்டிருந்தது. ஒரே பெண்ணின் பிம்பம் ஆயிரம் கண்ணாடிகளில் ஆயிரம் உருவங்களாகப் பிரதிபலித்து அவனது பார்வையை மயக்கியது. எலும்ப்புகளாலும், சந்தனக் கட்டைகளாலும், பளிங்குச் சுவர்களாலும் சூழப்பட்ட அடுத்தடுத்த குகைப்பாதைகளைக் கடந்து, எட்டாவதாக மாபெரும் மாயங்கள் நிறைந்த நிலவறைக்குள் அவன் நுழைந்தபோது, அனுமனின் உடல் முற்றிலும் மூச்சிரைத்துச் சோர்வடைந்திருந்தது.

அவனது மனதிற்குள் தவிப்பும், ‘சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் இராமனிடம் என்ன பதில் சொல்வது?’ என்ற மாபெரும் மனப்பாரமும் மலையென அழுத்தின.

அந்த எட்டாவது குகையின் இருளில், திசையறியாமல் அவனது கால்கள் தள்ளாடிய தருணத்தில், அவனுள் ஒரு கணம் ருக்ஷபிலத்தில் சுயம்பிரபை கற்பித்த மனப்பயிற்சி மின்னலென விழித்துக்கொண்டது. சுயம்பிரபையின் நினைவாற்றல் அவனுக்கு உணர்த்தியது.

‘புறக்கண்களால் மாயையைக் காண்பவன் மயங்குவான். மனதின் சலனத்தை நிறுத்துபவனே மாயையைக் கடப்பான்.’

அனுமன் தன் பாய்ச்சலை நிறுத்தினான். கண்களை மூடி, தன் மூச்சைச் சீராக்கி, புறவயமான அத்தனை சத்தங்களையும் பொய்யான காட்சிகளையும் தன் அகத்திலிருந்து விலக்கினான். அவன் சோர்ந்து ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்தான்.

அவனுடைய அந்தத் தவிப்பையும், அதைத் தொடர்ந்து அவன் அடைந்த மன உளைச்சலையும் ஒற்றர்கள் மூலம் அறிந்து இராவணன் நகைத்தான். கையில் இருந்த மதுக்கோப்பையை உதடோடு சேர்த்தான். அவன் சிந்தனை பலவகையில் பரந்து விரிந்தது. ஒருவேளை அந்த வானரன் சீதையை நெருங்கினால் என்ன செய்வது என்று அவன் மனம் பல சூழ்ச்சிகளை வகுத்தது.

அவன் கைகளில் இருந்த தங்க மதுக்கோப்பை அவன் எண்ணங்களின் இறுக்கத்திற்கு ஏற்ப நசுங்க ஆரம்பித்து, முடிவில் முழுதாக நசுங்கிச் சிறு பந்துபோல மாறியிருந்தது. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தவன் போல அவன் அந்த இடத்தை விட்டு மண்டோதரியின் அந்தப்புரம் நோக்கி நகர்ந்தான். அந்த ஒன்பதாவது குறிப்பை ஒற்றர்களிடம் அவனே சொல்லி அனுப்பினான். இப்போது அவன் கண்கள் முழுவதும் குரூரம் குடிகொண்டிருந்தது.

பின்குறிப்பு: மட்டக்களப்பு நாட்டுப்புற இராமாயண மரபில் அனுமன் இலங்கைக்குள் நுழையும் போது அவனைச் சிக்க வைக்கும் மாயைக் குகைகள் பற்றிய கதைப்பகுதி காணப்படுகிறது. அந்த வாய்மொழி மரபில் வரும் ஒன்பது குகைகளையும் இவ்வத்தியாயத்தின் அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அவற்றை இராவணனின் உளவுத்தந்திரத்தோடும் அனுமனின் அகப்போராட்டத்தோடும் இணைத்து இங்கே விரிவாக்கியுள்ளேன்.

(தொடரும்)

Author

Related posts

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 9

அது ஒரு பொற்காலம் – மங்கா நினைவுகள்

இடும்பை