தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா
ஒற்றை நட்சத்திரம்
வெளியே மழை பொழிகிறது
எனக்குள்ளும் மழை பொழிகிறது
ஒரு மேகம் இரு கண்களின்
பரஸ்பர சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு
காலம் கண்களைத் துடைத்துக்கொள்கிறது
ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது.
என்னுள்ளும் நெருப்புப் பிரவாகம் பாய்கிறது.
அதில் எதிர்நீச்சலடிக்கும் உள் மனிதனின்
துயர அழுகை
அதுவொரு விரக வேதனை
காதல் வனத்தில் காட்டுத்தீ பற்றியது
மனதைத் தொட்ட நெருப்பு மூளைக்கும் பரவியது
ஒரு பசும் நினைவு
தீக்குள் பாய்ந்து சாம்பலானது…
என் பாதி உடலை காலி செய்துவிட்டு
அவள் இருட்டைப் போர்த்திக்கொண்டதும்
என்னுள்ளும் வெளிச்சம் மாயமானது.
வானம் ஜோடி நட்சத்திரங்களைப் பிரித்துவிட்டது.
வானம் துறந்துவிட்ட புள்ளி நிலத்தில் உதிர்ந்தது.
ஒருவேளை அது நான்தானோ என்னமோ?!
வானில் மீந்துபோன “ஒற்றை நட்சத்திரம்”
பூமியில் உள்ள பாதி நான்
உள்ளுக்குள் கனன்றுகொண்டே
இரவின் மடியில் ஒளிர்கிறோம்!!