ஈற்றடிக்கோர் பாட்டு – 17

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கீச்சுக்கீச் சென்னும் கிளி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:
பேச்சுக்குச் சொல்லவில்லை பேரழகி நீதானே
பூச்சூடி வந்த புதுமலர்போல் நிற்பவளே
மூச்சினில் உன்பேச்சால் முன்னூறு பாடும்நீ
கீச்சுக்கீச் சென்னும் கிளி

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்..

மாலா மாதவன்
வேதம் பயிலுமிடம் வித்தை பயிலுமிடம்
நாதம் மிகுந்திருக்கும் நல்லாட்சி – மூதறிஞர்
பேச்சினது சாரத்தைப் பொன்போலத் தம்மொழியில்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

சின்னக்கண்ணன்
விட்டுசித்தர் வீடமர்ந்த வெண்மலர்க் கோதையாம்
சிட்டாக ரங்கனுளம் சீராய் கவர்ந்தவளை
மூச்சிரைத்துக் கூவியவள் முன்வைத்த கையதனில்
கீச்சுகீச் சென்னும் கிளி

இப்னு ஹம்துன்
காலையில் வாகன சப்தம் கடுமையுறச்
சோலைக் குயிலைச் செவிதேடும் – போலவே
வீச்சரிவாள் வன்முறையாய் வீசும் குரலிடை
கீச்சுக்கீச் சென்னும் கிளி

சுந்தர ராசன்
சிலம்பும் தயிர்த்துளிபோல் சீராட் டசோதை
புலம்பும் படிநடக்கும் பூவே நலம்பூக்கும்
ஆய்ச்சியர்கள் நின்னழகை ஆராய்தல் கண்டதுபோல்
கீச்சுகீச் சென்னும் கிளி

உமா சுவாமிநாதன்
பூச்சுற்றும் வண்டு புனைகாட்டில் இன்னிசையைப்
பாச்சுற்றும் பைங்கிளி பாடுங்காண் – மூச்சுவிட்டுத்
தேச்சுற்றும் சோலைத் திறம்பாடும் நன்னுதலே
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

நடராஜன் பாலசுப்பிரமணியன்
நல்லதொரு சீட்டெடுக்கும் நாதாங்கி தானகற்றி
நெல்மணி தந்திட; நீங்கா ததனுலகே;
சீச்சீ சிறையடையுஞ் சிற்றுண்டி நாடியே
கீச்சுக்கீச் சென்னுங் கிளி

ஜெயந்தி நாராயணன்
கோதையின் தோளிருந்து கோவிந்தா என்றழைப்பாய்
பாதை அறிந்தே அரங்கம் அடைந்தாயோ
கூச்சலால் அவளைக் கூவி அழைக்கும்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

மது ஸ்ரீதரன்
வம்படிப் பேச்சோ வெறும்புலம் பல்தானோ அன்பின் மொழியோ அரற்றலோ –
தம்பட்டக் கூச்சலோ கோளோ கவிமொழியோ கோபமோ கீச்சுக்கீச் சென்னும் கிளி

வனஜா முத்துகிருஷ்ணன்
மாந்தளிர் மேனியில் மரகத வண்ணம் பூண்ட கிளி,
மலர்வனச் சோலையில் மங்கல கீதம் பாடும் கிளி,
தென்றலின் தாலாட்டில் தேனிசை மொழி பொழியும் கிளி,
இயற்கையின் எழிலோவியமாய் கீச்கீச்எனும் கிளி

அ.சி. தியாகராஜன்
ஏச்சோ எசப்பாட்டோ என்னதான் கேட்டாலும்
பேச்சுத் தொடுக்கிறாய் பின்னணியில் கூச்சமில்லை
சீச்சீ சரியில்லை செல்லம் கொஞ்சுகிறாய்
கீச்சுக்கீச் சென்னும் கிளி.

நளினி சுந்தர்ராஜன்
மேகமிங்கே கருத்துத் திரளுது
மாரிவெள்ளம் கொட்டிட நிக்குது
கூதக் காத்து சில்லுனு வீசது
நினைவுகளாலே நெஞ்சம் வாடுது
கண்ணில் பொத்திய ஜீவனை
கையோடு சேத்து அணைக்கணும்
எண்ணிய ஏக்கமெல்லாம் தணிய
என்னோடு நீ வந்து சேரணும்
எத்தனை நாள் நானும் காத்திருக்க
தேனா இனிக்கும் குரலக் கேட்க
நித்தம் வேதனை கூடிப் போக
மனசில பாரம் வலியாய் அழுத்துதே
சென்ற வழி மீது வைத்த விழி
நித்தம் கலங்கி நிற்பது ஆகாதினி
நல்ல ஜோசியம் சொல்லிடுமா
கீச்சுக்கீச் சென்னும் கிளி

ருக்மணி வெங்கட்ராமன்
பச்சை நிறத்தில் பளபளக்கும் கிளியே!
பார்ப்பவர் மனதைப் பரவசமாக்கும் கிளியே!
மரக்கிளை மீது அமர்ந்து கொண்டு,
மனதைக் கவரும்விதம் தலை அசைக்கிறாய்!
இணையைக் காணத் தாவிடும் கிளியே!
இனிமையாகக் கூவும் அழகிய கிளியே!
கீச்சுக்கீச் சென்னும் கிளி

கண்மணி பாண்டியன்
கூண்டில் அடைத்து வைத்தால்
ஆரூடம் சொல்லும் சொன்னதை சொல்லும்
சோலையிலோ சுதந்திரமாய் குஞ்சுக்கு இரையூட்டும்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

ஹேமா செந்தில்
பச்சை நிறத்தில் பளபளக்கும் பட்டில்
இச்சை மழலை மிளிற்றும் மகளே
உச்சக் குரலில் இசைக்கும் கவியில்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

உஷா கண்ணன்
அஞ்சு வண்ணத்தில் மிளிரும் கிளி
ஆராரோ பாடும் வண்ணக்கிளி – திசையெட்டும்
கோலாகலமாய் பறக்கும் அன்னக்கிளி எங்குமே
கீச்சுக்கீச் சென்னும் கிளி

R.L. Pathy
கொஞ்சும்மொழி கேட்டுக் குளிர்ந்தது நெஞ்சமே
மிஞ்சும் அழகில் மயங்கினேன் — அஞ்சாமல்
பன்னீர்த் தமிழ்போல் பரவசம் ஊட்டிடும்
கீச்சுக்கீச் சென்னும் கிளி

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

Related posts

உருதுக் கவிதை உலகு: 17 –  ஜான் நிசார் அக்தர்

மருத்துவர் பக்கம் – 46: செயற்கை நுண்ணறிவின் போதாமை

மொட்டவிழ்வு..