ஈற்றடிக்கோர் பாட்டு – 19

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கையிரண்டு போதாது காண்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

பையில் எனைத்தாங்கி பைய வளர்த்தாளை
செய்யும் செயல்திருத்தச் செய்தாளை – மெய்வருத்தி
தெய்வமாய் இன்று திகழ்வாள் புகழெழுத
கையிரண்டு போதாது காண்

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்..

சுபாஷிணி ரமணன்
மாறாச் சிரிப்புடன் மண்மீது வாழ்ந்தாளே
ஆறாத் துயரை அளித்தே மறைந்தாளே
வாயுண்டு வாழ்த்த, வணங்கித் துதிக்கவே
கையிரண்டு போதாது காண்

மாலா மாதவன்
என்னே குறும்புகண்ணா எவ்வீட்டு வெண்ணையிது
முன்னோடும் காலடக்கி முன்னமர்வாய் – அன்னையே
வையிரண்டு என்றார்கள் வாய்க்கவில்லை வாய்ப்பெனக்கு
கையிரண்டு போதாது காண்

சின்னக்கண்ணன்
தாயினைப் பார்ப்பதற்கு தாவியோடிச் சென்ற தினம்
நோயினைக் காட்டாமல் நுண்சிரிப்பில் சற்றுதான்
வாயினில் காட்ட வணங்கிய தென்னுள்ளம்
கையிரண்டும் போதாது காண்

மது ஸ்ரீதரன்
காசி நகர்க்கரசி காசினியின் பேரரசி
நேச மலர்க்கரம் நீட்டினாள் – ஈசனவன்
ஐயை எதிர்நின்று அன்னையே என்றிரக்க
கையிரண்டு போதாது காண்

இப்னு ஹம்துன்
பார்க்கும் கடலெடுத்துப் பையில் அடைப்பதில்லை
சேர்ப்பன எல்லாமும் சிற்றளவே – தேர்ந்தயிவ்
வையகத்தில் தென்படும் வற்றா வளங்கொள்ள
கையிரண்டும் காணாது காண்.

பஃறொடை வெண்பா
அன்னை இருப்பாள் அகமெல்லாம் என்றென்றும்
தன்னிலும் மேலாகத் தன்பிள்ளை வாழுதற்கு
என்னவும் செய்தே எழிற்மகவைக் காத்திருப்பாள்
முன்னிலை ஆக முளைப்பவள் தம்மின்
கருணையொளி காண்பதற்குக் கண்ணிரண்டும் போதா;
பெருகிவரும் ஆறாகப் பாசம் – உருகவைக்கும்
மெய்யன்பின் வற்றா அருள்வெள்ளம் கொள்வதற்குக்
கையிரண்டும் போதாது காண்.

ஹேமா செந்தில்
பெற்றவள் மாய்ந்திட வற்றாத காயத்தை
மற்றவள் ஆற்றியே தேற்றிட – அற்றைக்கு
மெய்சிலிர்க்க வைத்த மறுதாயைத் தாங்கிடக்
கையிரண்டும் போதாது காண்.

உஷா கண்ணன்
ஐயிரண்டு மாதம் கருவில் சுமந்தாய்
ஐயிரண்டு விரலால் அள்ளி அணைத்தாய்
ஐயிரண்டு நான்கு வருடம் காத்தாய்
ஐயிரண்டு நொடியில் மீளா துயில் கொண்ட உனை
ஐயாயிரம் ஆண்டானாலும் வணங்க
கையிரண்டு போதாது காண்

விஜி சம்பத்
அலைகள் வந்து முத்தமிடும் கடற்கரையில்
ஆர்ப்பரிக்கும் அருவிகளின் சாரலில்
இறைவனின் அற்புத தரிசனத்தில்
ஈடில்லா இயற்கையின் பூஞ்சோலைகளில் தேடினேன்
உற்றார் உறவினரின்
அண்மையில்
ஊராரின் ஆறுதல் வார்த்தைகளில்
எதிலும் கிடைக்கவில்லை என் தேடலுக்கான விடை
ஏனிந்த நிலை என்று மனதுக்குள்
ஐயமும்,நிராசையும் தோன்றி என்னை வதைக்க
ஒன்றும் புரியாத நிலையில் வாடினேன்! சட்டென
ஓர் அற்புத ஒளி என்னை வழி நடத்த ஓடினேன்
ஔவை முதியோர் இல்லத்திற்கு!
என் வருகைக்காகக் காததிருந்த தாயின் திருவடிகளைப்
பற்றி வணங்கிட
இருகை போதாது காண்.

பவளமணி பிரகாசம்
செய்வன திருந்தச் செய்யச் சொன்னவளை
மெய்வருந்தக் கூலி தரும் முயற்சியை
தெய்வம் தொழாது மழை பெய்வித்தவளை
புகழெழுத கையிரண்டு காணாது காண்

ராமலக்ஷ்மி ராஜன்
கண் திறக்கும் முன்னரே
கருவறையிலும் தாங்குபவள்
முதல் அடி தடுமாறுகையில்
மடி விரித்து ஏந்துபவள்

விதை ஒன்று கொடுத்தால்
விருட்சம் ஒன்றைப் பரிசளிப்பவள்
துளி நீர் தேடுகையில்
நதிகளை அனுப்பி வைப்பவள்

அவளது ஆழங்களைத் துளைத்து
தாதுக்களை அள்ளினாலும்
பசுமைப் போர்வையை
உரித்தெறிந்தாலும்
மூச்சுக் காற்றில்
மாசைக் கலந்தாலும்—
கருணை மாறாது
மறுதினம் காலை
சூரியனை அனுப்புபவள்

புயலாய்ச் சுழல்வதும்
எரிமலையாய்ப் பொங்குவதும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்பதும்
பூகம்பமாய் அதிர்வதும்
இடியாய் முழங்குவதும்கூட—
வழி தவறும் குழந்தைகளை
திருத்த விழையும் தவிப்பே

சிறு புல்லின் நுனி தொட்டு
உயர்ந்தோங்கிய மலை முகடு வரை
அவள் காட்டும் பெருந்தன்மைக்கு
அளவேதுமில்லை

அன்னை பூமியவள் கடன் தீர்க்க
பிறவிகள் ஏழு போதாது
நிலமகள் அவள் புகழ் பாட
ஆயிரம் நா போதாது
தரணித் தாயவள் பேரன்பை எழுத
கையிரண்டு போதாது காண்.

ப்ரசாத் ஜெயவேலு
கவி எழுதும் திறன் படைத்து
புவி காத்து நின்றானை – தவிர்த்திடாது
ஐயிரண்டில் ஈன்றாள் அனையானை வணங்கிட
கையிரண்டு போதாது காண்

கண்மணி பாண்டியன்
மாசு படாத காற்று ,
தூசு படியாத சாலை,
பச்சை பட்டாடையில் வயல்வெளி,
சிணுங்கி ஓடும் சிற்றோடை,
பவள வாய் கிளிகளும் புல்லினங்களும்
கனிகள் குலுங்கும் மரங்களில் கீதம் இசைக்க,
மகிழ்ச்சி முகங்கள் நிறைந்த நம் கிராமங்களில்
கொட்டிக்கிடக்கும் அழகை வணங்க
கையிரண்டு போதாது காண்.

ருக்மணி வெங்கட்ராமன்
அம்மா கடவுளின் மறுஉருவம்
அன்பை விதைக்கும் நற்குணம்
அனைத்தும் அருளும் அன்புள்ளம்
அவள் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்
அன்பினால் அரவணைத்துக் காப்பவள்
அயராது நமக்காக உழைப்பவள்
கண்ணுக்குள் வைத்து வளர்த்தவள்
கவலைகளைத் தன்னுள் மறைத்தவள்
காலமெல்லாம் பிறர் நலம் வேண்டுபவள்
கனிவான வார்த்தையால் தேற்றுபவள்
அவள் அன்புக்கு அளவேது?
அவள் தியாகத்திற்குத் இணையேது?
கண்ணுக்குள் வைத்து போற்ற
கையிரண்டு போதாது காண்!

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

Related posts

உருதுக் கவிதை உலகு: 18 – பர்வீன் ஷாகிர்

கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 3 & 4

இளையவன் சிவா கவிதைகள்