இருட்டால் ஒரு வெளிச்சம்

“நாம கெளம்பலாம்… எப்படியோ தங்கிக்க எடம் கெடச்சிருச்சு! அதுவும் நம்ம அபார்ட்மெண்ட்டிலேயே!! ஆனா, அஞ்சாவது மாடில, 512-ம் நம்பர்ல!” என்று, குளத்திலிருந்து கரையேறியவன்போல ஈரஞ் சொட்டச்சொட்ட கதவுக்கு வெளியே நின்று நடுநடுங்கியபடி தன் குடும்பத்தாரிடம் செல்வராஜ் சொன்னபோது நள்ளிரவு போலிருந்தது. ஆனால் கடிகாரம் ஏழேகால்தான் காட்டியது!

மகனின் நற்செய்தி, ரஞ்சிதத்தின் வயிற்றில் பால் வார்த்தது. குடும்பத்தினரின் காதுகளில் தேன் பாய்ந்தது.

இவர்கள் வீடு, அபார்ட்மெண்டின் தரைத்தளத்தில். இரவு மழை, சாத்தியிருந்த கதவின் இடுக்கு வழியாகப் பழமணம் போல் நுழைந்திருந்தது. வீட்டுக்குள் இரண்டடி உயரம் பரவி நின்றது. இவர்களை சோஃபா, கட்டில் மேல் ஏறி நிற்க வைத்திருந்தது.

நேற்று மாலையிலிருந்தே மின்சாரம் இல்லை. வீட்டிலிருந்து வெளியேற வழியில்லை. கார் ஸ்டார்ட் ஆகவில்லையாம். அதன் எஞ்சினைத் தாண்டி ஏறி, போர்ட்டிகோவில் இடுப்பளவு மழைநீர் நிற்கிறதாம். தெருக்களில் கழுத்துயரமாம்.

வந்து சொன்னவனின் கைகளில் இவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உணவுமில்லை; நீருமில்லை. வீட்டுக்குள் போன்களுக்கு டவரில்லை. ஊருக்கோ, உறவுகளுக்கோ பேசவும் வாய்ப்பில்லை; இவர்களிடம் உயிரில்லை!

இவர்களிடம் மட்டுந்தானா? நகரெங்கும் அதே பிணக்களை. மாமழையின் அதீதப் பிரியத்தில் நகரமே தத்தளித்தது… முடியவில்லை; மூழ்கத் துவங்கியது! அதை மாலைத் தொலைக்காட்சி சொன்னது. “விவரம் இடைவேளைக்குப் பிறகு…” என்றது. தொடர்வதற்குள், ஒரு மின்னலின் கத்தரிக்கோல் அதை வெட்டியது.

நகரமே ஒவ்வோராண்டும் டிசம்பர்ப் புயலின் மீதுதான் ஒற்றைக்காலால் நின்று கொண்டிருக்கிறது.

“வாங்க, போகலாம்!” என்றதும், எல்லோருமாய்க் கிளம்பினார்கள்.

புதையல் தேடுபவர்கள் போலத் தலைகுனிந்து, மிச்சமிருந்த செல் டார்ச்சின் யூக ஒளியில் படியேறும்போது, நடுக்கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்து தப்பித்துக் குடும்பமே கரையேறுவது போலிருந்தது. சிறகில்லாப் பறவைகளின் சின்னஞ்சிறு வலசை!

செயலிழந்திருந்த லிஃப்ட் சிரித்துக் கொண்டது… “எப்படிப் படுத்துவார்கள்…? இப்படி நடக்கிறார்கள்…!”

நான்கு மாடிகள். நாற்பத்தெட்டுப் படிகள்.

ரஞ்சிதத்தின் ‘மளுக், மளுக்’கென முணகிக் கிரீச்சிடும் முழங்கால்களுக்குள் ‘சுளீர், சுளீரென’ நிகழப்போகும் நாற்பத்தெட்டுக்கத்திச் செருகல்களும் நாற்பத்தெட்டுக் கண்டங்கள்!

ஏறித்தானே ஆகவேண்டும்? அவரவர் பாவத்தை அவரவர்தான் சுமக்கவேண்டும்! அவரவர் உடம்புதான் அவரவர் பாவம்.

தார்ச்சாலையில் குதித்தோடும் லாடக் குதிரையின் குளம்பொலி போல் ஷூ சப்திக்க எதிர்ப்படிகளிலிருந்து இறங்கி வந்துகொண்டே, “எல்லாரும் வாங்க! நம்ம வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கீங்க!” என்றவாறே நெருங்கி, “வாங்க பாட்டி!” என்று பேத்தி போல் ஆதரவாய் அணைத்து, ஸ்பெஷலாய் ரஞ்சிதத்தின் இடுப்பைத் தாங்கிப் படியேற்ற முயன்றாள் நேகா.

அவள் கை பட்ட இடத்தில் ரஞ்சிதத்தின் இடுப்பு சுழித்தது. சென்சிடிவான பசுமாட்டைப் புதிதாக யாராவது தொட்டால், அவ்விடத்தை அது இவ்வாறுதான் சுழித்துக் கொள்ளும். அப்படித்தான் நேகாவின் தொடுகை, ரஞ்சிதத்திற்குப் பயிர்ப்பை ஏற்படுத்தியது. காரணம், மேனகா என்ற இயற்பெயர் கொண்ட, நேகா என்று பெயர் மாற்றிக் கொண்ட, இருபத்தெட்டு வயதுக் ‘குட்டி’, அந்த ‘அடங்காப்பிடாரி’, ரஞ்சிதத்தின் மானசீக விரோதி.

அவரைப் பொறுத்தவரை, அவளொரு ஆட்டக்காரி; அவுசாரி! அவளைப் பார்க்கும்போதெல்லாம் ரஞ்சிதத்திற்குப் பற்றிக் கொண்டு வரும். “பொம்பளையா இவ…?”

இரண்டாண்டுகளுக்கு முன் நேகா இங்கு தனியாளாய்த்தான் குடிவந்தாள். பாய்ஸ் கட்டுடன், இன் பண்ணியிருந்த முன்புற அடையாளங்களை மழுப்பிய தட்டைச் சட்டையின் கீழ் 3/4த் பேண்டில், ‘புள்ளிங்கோ’ போலிருந்தாள்.

முதலில் ஆணென்றுதான் பங்கஜம் நினைத்தார். மறுநாளின் பாவாடையும், பக்கத்தில் வந்து பேசிய குரலும்தான் அவளைப் பெண்ணென்றன.

மகனும், மருமகளும் ஆளுக்கொரு திசையில் வேலைக்குப் போய்விட, பேரன் கல்லூரிக்கும் பேத்தி ஸ்கூலுக்குமாகப் பறக்க, எழுபத்தி நான்கிலிருக்கும் ரஞ்சிதத்தின் நகராப் பகல்கள் தெருவை வேடிக்கை பார்ப்பதிலும், இரவுகள் வராத தூக்கத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டும் பொருளற்றுப் போய்க் கொண்டிருந்தன. அபார்ட்மெண்ட்வாசிகள் ஒவ்வொருவரையும் துப்பறிவதிலும், புலனாய்வதிலும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருந்த அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான் ஆட்களில்லை. நின்று பேசவோ, கைவசமிருக்கும் இவரது டேட்டா கலெக்ஷன்களைக் கேட்கவோ, கொண்டாடவோ யாருக்கும் நேரமில்லை!

“பேசாமல் கிராமத்திலேயே கிடந்திருக்கலாம்…!” என்பதுதான் அவரது நிரந்தரப் பெருமூச்சு.

இந்தத் தீவில், தன்னைத் தேடி வலியவந்து பேசுபவள் இவள் ஒருத்திதான்… இவளும் எப்போதும் தீயணைப்பு வீரன் போல் தான் திரிந்து கொண்டிருப்பாள். இறங்கும்போதோ, ஏறும்போதோ லிஃப்ட்டுக் கெதிரில் வீட்டு வாசலில் ரஞ்சிதம் அமர்ந்திருந்தால் மட்டும் ஒரு நிமிடம் பிரேக்கடிப்பாள். சிநேகமாகச் சிரிப்பாள். “எப்டியிருக்கீங்க?” என்று கேட்பாள். கசப்பைச் சகித்துக் கொண்டு ரஞ்சிதம் புன்னகைப்பார். எதையாவது இவரிடம் சொல்லிக் கொண்டே, பதிலுக்குக் காத்திராமல் நேகா தன் பாய்ச்சலைத் தொடர்வாள்.

என்னமோ I.T.யாம்… அதுல வொர்க் பண்றாளாம்… “பேரண்ட்ஸ் அங்கே நேடிவ்ல; வில்லேஜ்ல. நான் இங்கே கம்பெனில வொர்க் பண்றேன். ஆர்க்கெஸ்ட்ரால பாடுவேன். ட்ராமால நடிப்பேன். ஸ்டேஜ்ல பெர்ஃபார்மன்ஸ் பண்றேன். ரெண்டு மூணு மேகஸீன்ஸ்ல ஃப்ரீலான்ஸர். ஷார்ட் ஃபிலிம் ரெண்டு பண்ணிட்டேன். மாடலிங் ட்ரை பண்றேன்… மீடியாலயும்! சினிமாக்குள்ள கூடப் போவேன்னு நினைக்கிறேன்… ஆனா, அது கேமிராவுக்கு முன்னாடியா? பின்னாடியா?ன்னுதான் தெர்ல!”

இவையெல்லாம் அவள் தன்னிடம் அவ்வப்போது உதிரி உதிரியாய் ‘உளறிய’, பொருளேதும் புரியாத, ஆனால் மறக்காத, ஏதோதோ சொற்கள். ஆகமொத்தம் அவள் ஆம்பளப் பாப்பாத்தி!

“இருபத்தெட்டு வயசு எருமைமாடு. இவளுக்கென்ன கேடு? எவனோ ஒருத்தனக் கட்டிக்கிட்டு, பொங்கித் தின்னுக்கிட்டு, ரெண்டொன்னப் பெத்துக்கிட்டு வீட்ல கெடக்க வேண்டியதானே? டான்ஸ்காரியாட்டம் மினுக்கிக்கிட்டு காலைல போறா. ஒரு நாள் அஞ்சு மணிக்கே போறா. ஒரு நாள் பத்தர தாண்டுது! ராத்திரித் திரும்புறது நிச்சயமா பத்துக்குள்ள கெடயவே கெடயாது. பன்னெண்டுக்கோ, ஒன்னுக்கோ, அதுக்கப்புறமோ… ஒரு நாள் சொந்த ஸ்கூட்டர்ல; ஒரு நாள் எவன்கூடவோ பைக்ல; அடுத்த நாள் இன்னோருத்தன்கூட கார்ல. சில நாள் வர்றதே இல்ல!

இதெல்லாம் பத்தாதுன்னு, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு கூத்து.

இவ வீட்லயே இன்னோருத்தனக் குடிவச்சுக்கிட்டா. ஒத்த பெட்ரூம்பு மட்டும் உள்வாடகையாம். வெளிக்கதவுக்கு ரெண்டு சாவியாம். ஆளுக்கொன்னாம். அவன்தோதுக்கு அவன் வருவானாம்; போவானாம்! இவ காலேஜ்மேட்டாம்… சம்பளம் பத்தலயாம்… பெரிய வேலயாத் தேடிக்கிட்டிருக்கானாம்… வாடகைல ஷேர் பண்ணிக்கிறானாம்… அது இவளுக்குக் கொஞ்சம் உதவியா இருக்காம்…”

இப்படியெல்லாம் அவளே வலியவந்து ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல, “த்தூ” என்று துப்பலாம் போலிருக்கும். என்ன செய்வது? அவள் போனபின் எழுந்து சென்று பாத்ரூமில் துப்பிக் கொள்வார்.

லீவு இருந்தால், தக்கினி டி-ஷர்ட்டும், பேருக்கு ஷார்ட்ஸும் போட்டுக்கொண்டு, வெறுங் கழுத்தோடும் பாழ்நெற்றியோடும் மூளி போல மாலை முழுக்கவும் அபார்ட்மெண்டின் கீழ்த்தளத்தையே வெட்டியாய்ச் செக்குமாடு மாதிரி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். ‘வாக்கிங்’காம்!

இவரையும் “வர்றீங்களா பாட்டி?” என்று வம்பிழுப்பாள். தன் முழங்காலைச் சுட்டி இவர் இயலாமையை உணர்த்துவார். அவள் சிரித்துக் கொண்டே நிற்காமல் போய்க் கொண்டிருப்பாள். இவருக்குத் திகுதிகுக்கும்.

“ஆம்பளயாப் பெறந்திருக்க வேண்டியவ. என்னா அழும்பு? என்னா குதி, விடலைப் பயலாட்டம்…?”

இவராக அவளிடம் எதுவுமே கேட்பதில்லை. போன வாரத்தில் ஒரு நாள், “கோவா டூர் போறேன் பாட்டி. மூணு நாள் ட்ரிப். கூட ரமேஷ் வர்றான்!” என்றாள். அந்த எருமைமாடுதான் இந்தத் தடிமாட்டின் படுக்கையறையில் உள்வாடகைக்கு இருப்பவன்!

“என்கிட்ட ஏம்மா இதையெல்லாம் சொல்ற?” என்று மட்டும் கேட்டார்.

“பாக்க மட்டுமில்ல; பழகவும் நீங்க எம் பாட்டி மாதிரிதானே இருக்கீங்க? ‘எங்கே காணோம்?’னு நெனப்பீங்கள்ல? அதான், சும்மா!” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

“நினைத்தாலே குமட்டும் அவளின் கைகள், ஐயோ… என் இடுப்பில்! என்ன கருமம்டா இது?” என்று சுய கழிவிரக்கம் கொண்ட ரஞ்சிதம், “ஏண்டா ஆண்டவா என்னை இப்படிச் சோதிக்கிற?” என்றும் தனக்குள் கேட்டுக் கொண்டாள். “எல்லாம் இந்தச் சனியனால…!” என்று மழையைச் சபித்தாள்.

இதையெல்லாம் கேளாத காதுகளோடு அது இன்னும் பிடிவாதமாக இறங்கிக் கொண்டிருந்தது.

கதவைத் திறந்தே வைத்திருந்தாள்.

இவர்களை முந்திச் சென்று, வாசற்படியில் திரும்பி நின்று, “வாங்க; வாங்க; எல்லாரும் வாங்க!” என்றாள். (வரவேற்கிறாளாமாம்!)

உள்ளே போய் எமர்ஜென்சி லாம்ப்பை ஆன் செய்தாள். (பயன்படுத்தாமல் சார்ஜைச் சேமித்து வைத்திருக்கிறாள்!)

செல்வராஜிடம், “அங்கிள், இன்னைக்கு ராத்திரி இது உங்க வீடு!” என்றாள். (அதன் இரண்டாம் அர்த்தத்தை உடனே உணர்ந்து, நாக்கைக் கடித்துக் கொண்டாள்.)

அவரது மனைவி ராஜியிடம், “ஆண்டி, ஃப்ரீயா ஃபீல் பண்ணிக்கங்க; ரிலாக்ஸா இருங்க!” என்றாள். (ஃப்ரண்ட்ஷிப் டெவலப்!)

காலேஜ் பையன் கார்த்திக்கைத் தழுவிக் கொண்டாள். (ஆனால், “வாடா மச்சான்!” என்று கண்ணடித்தாள்.)

டென்த் ஷீலாவிடம் “உட்கார்றா குட்டி!” என்று சேரை நகர்த்தினாள். (பிரியமாய்த் தலையைக் கலைத்தாள்.)

ரஞ்சிதத்தை மறுபடி அணைத்து “வாங்க பாட்டி, நாம மட்டும் பெட்ரூமுக்குள்ள போவோம்!” என்று தன் அறைக்குள் கடத்த முயன்று, தோற்றாள். (கருமம், அதுக்குள் யாரு போறது…?)

எல்லோருக்குமாக ஹாலில் பெட்ஷீட்களை விரித்தாள். “ரெண்டுதான் இருக்கு; அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!”

அடுப்பைப் பற்றவைத்தாள். “நல்லவேளை, பால் இல்லாட்டிக்கும் கேஸாவது இருக்கு!”

ஆளுக்கொரு டம்ளர் வெந்நீர், அவ்வேளையின் அமுதம்!

“ப்ரெட்-ஜாம் இருக்கு. நியூஸ் பாத்தேன்; பத்துப் பாக்கெட் வாங்கி வச்சுட்டேன்! ஆனா, இந்தக் குளிர்ல எதுக்கு? சூடா உப்புமாவே கிண்டிரலாம்… இல்ல, ஆண்டி?”

ராஜி புன்னகையைப் பதிலளித்துக் கொண்டே வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்க அவளோடு கிச்சனுக்குள் நுழைந்தாள். எமர்ஜென்சி லாம்ப்பும் கூடவே போனது. ஹால் இருட்டானது.

ராஜி, “ஆமா, துணையாள் இல்லாம தனியாவா இருக்க…? எப்டி இருக்க?”

“அதான் இப்ப ரெண்டு மாசமா ரமேஷ்னு ஒருத்தன் ஜாயிண்ட் பண்ணியிருக்கானே? வாடகைல ஷேர் பண்ணிக்கிறான். ஆனா, இப்ப எங்க மாட்டிக்கிட்டான்னு தெர்ல. அவன் போனும் ஸ்விட்ச் ஆஃப்! பெட்ரூம் சாவி அவன்கிட்ட மாட்டிக்கிச்சு! வச்சிட்டுப் போயிருந்தான்னா, நீங்கள்லாம் பெட்ல படுக்கலாம்… அது டபுள் காட் வித் ஃபோம்! ப்ச், என்ன பண்றது…? இத உப்புப் போதுமான்னு பாருங்க! பாத்து, சுடப் போகுது…”

கொதிக்கக் கொதிக்க அந்தப் பசிப்பிணி மருந்தை அந்தக் குளிரில் வட்டமாக அமர்ந்து ஊதி ஊதித் தின்றபோது, எல்லா முகங்களிலும் படிப்படியாக இருபத்தேழு மணிநேர இருளகன்று, ஒளியூறியது.

“நீயும் உட்காரும்மா!” என்று ராஜி அவள் கையைப் பற்றியபோது,

“இருக்கட்டும் அக்கா! மிச்சத்தக் கடைசியில சாப்டுக்கிறேன்! சாருக்கு எது பிடிச்சிருக்கு? சுகரா, பொடியா…?”

அக்கா வீட்டுக்கு விருந்தாடப் போன தம்பியும் தங்கையும் போல கார்த்திக்கும் ஷீலாவும் ஆகிப்போனார்கள்.

“நைட்டி மாத்திக்கிறீங்களாக்கா?” என்று அவள் நீட்டியது, ஷீலாவின் சைஸுக்குத்தான் போதுமானது.

ராஜி, “பரவால்ல! இதே போதும்; படுத்துக்கலாம், தூக்கம் வருது!” என்றாள்.

ரஞ்சிதம் ‘மடி’யில். ராஜி ‘சுடி’யில். நேகா ‘மிடி’யில். அதைக் கவனித்துச் சுட்டிக்காட்டிய ஷீலா நேகாவின் ‘நைட்டி’யில்.

“என்னாகப் போகிறோமோ…?” என்கிற பதிலறிய இயலாத, பலமணி நேரப் பதற்றம், நேகாவின் உபசரிப்பாலும் உப்புமாவாலும் ஒட்டுமொத்தமாகத் தணிந்துவிட, ஹாலில் பெட்ஷீட்டின் மீதே வரிசையாய்ச் சரிந்தார்கள்!

அசதியிலும், இடங்கிடைத்த வசதியிலுமாக, நேகா சாப்பிட்டு முடித்துக் கைகழுவி வருவதற்குள் எல்லோரும் நித்ராதேவியின் மடியில்; ரஞ்சிதம் மட்டும் சுவரில் சாய்ந்தபடி கண்மூடி அறிதுயிலில்!

தூக்கத்தைத் துரத்திப்பிடிக்கும் அவருக்கான ஓட்டப்பந்தயம், இன்னும் ஒரு மணி நேரமாவது நிச்சயம்!

அருகில் வந்த நேகா, “பாட்டி, பாட்டி…!” என்று தொட்டெழுப்பினாள்.

ரஞ்சிதம் ‘விழித்தார்’. “காலைச் சுற்றிய சனியன், கடிக்காமல் விடாது போல…!” என்று தனக்குள் முனகிக் கொண்டார்.

“நல்லவேளை, தூங்கிட்டீங்களோன்னு நெனச்சேன்…! எந்திரிங்க, உள்ள வந்து எம் பெட்ல படுங்க!”

அது, ஒற்றைக் கட்டில். ஆனால், மெத்தையிருந்தது. “நீங்க இதுல படுத்துக்கங்க. குளிர்ல எப்டித் தரைல படுப்பீங்க?”

“நீ?”

எமர்ஜென்சி லாம்ப்பை அணைத்தாள். இவரது தலைமாட்டில் வைத்தாள். “உங்களுக்கு ரெஸ்ட்ரூம் போகத் தேவைப்படும்ல? யூஸ் பண்ணிக்கங்க!” இவரது தலையணையை அட்ஜஸ்ட் செய்தாள். “ஒன்னுதான் இருக்கு; உயரம் போதுமா?”

இவரையொட்டி வெறுந்தரையில் படுத்தாள். கையை மடித்துத் தலையணை செய்தாள். அவளின் குட்டிமிடி தரைக்குளிரைத் தடுக்க ஒருபோதும் உதவப் போவதில்லை!

“இறங்கும்போது பாத்து இறங்குங்க பாட்டி. கீழே நான் படுத்திருக்கேன்; மிதிச்சுறாதீங்க. நான் பாவம்ல…?”

பாவம் போலத்தான் இருந்தது.

“ரெஸ்ட்ரூம் லெஃப்ட்ல. சிரமம்னா யோசிக்காம ஹெல்ப்புக்கு எழுப்புங்க!”

“நல்லவேளை, இதுவே டபுள் காட்டாயிருந்தால், உரசிக்கொண்டு ஒட்டிப் படுத்திருப்பாள்…”

ரஞ்சிதம், கடவுளுக்கு மானசீக நன்றி சொன்னார்.

நெடுநேரம் ரஞ்சிதத்திற்குத் தூக்கம் வரவில்லை. சனியன், எப்போதுதான் படுத்தவுடன் வந்தது…?

ஹாலிலிருந்து சிறு பாம்புச் சீறல் போல் மெல்லிய சீழ்க்கைகள். எல்லாம் மழை ஒலி மீறிய குறட்டைகள். அவ்வப்போதைய மின்னலொளி, ஹாலில் தூங்கும் குடும்பத்தினர் மீது ஜன்னல் கம்பிகளை ஊடறுத்து நுழைந்து, வரிவரியாக விழுந்தது; விலகியது. பக்கத்தில் தரையில் கட்டை கிடத்தியிருந்த நேகா மீதும்!

பாவம் போலவும், ஒரு பையன் போலவும் கால்களுக்குள் கையிடுக்கிக் குளிரில் வெறுந்தரையில் ஒடுங்கிக் கிடந்த அவளைப் பார்த்தால், ஓர் அநாதைச் சிறுமி போலவும், அபலை போலவுமிருந்தது. ரஞ்சிதத்திற்குள் துளிக்கருணை துளிர்த்தது.

“நல்லவதான் போல…!” என்ற எண்ணம் எழுந்தது. “பகவானே காப்பாத்து!” என்று அவளுக்காகப் பிரார்த்திக்க வைத்தது.

ரெஸ்ட்ரூம் போகவேண்டும் போலிருந்தது. எமர்ஜென்சி லாம்ப்பை ஆன் செய்தார். மெத்தையிலிருந்து இறங்க முனைந்தவரை, “பாட்டி! தடுமாறிராதீங்க!” என்று எழுந்த நேகா அணைத்தாள். “நீங்க இன்னமும் தூங்கலையா?”

“ஆமா, நீ…?”

“நானெங்கே இப்போதைக்குத் தூங்குறது? கண்ண மூடிக்கிட்டே எதையெதையோ யோசிச்சுக்கிட்டுக் கிடப்பேன்… எப்போத் தூங்குவேன்னு எனக்கே தெரியாது!”

“நீ இரு!” என்று அவளைத் தவிர்த்து, கழிவறை சென்று மீண்ட ரஞ்சிதம் மெத்தையில் உட்கார்ந்தவாறே, “ஏன் அப்படி…?” என்றார்.

எழுந்து குத்தவைத்து அமர்ந்து, தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்ட நேகா, “அது அப்படித்தான் பாட்டி! நாளைக்கு என்னென்ன பண்ணனும்? எங்கெங்கே போகணும்? யார்யாரப் பாக்கணும்? என்னென்ன பேசணும்?ன்னு திங்க் பண்ணிட்டே இருப்பேன்…”

“ஆபீஸ் போற… நல்ல சம்பளம் வாங்குற… பிறகு எதுக்கு வேற வேற யோசனை…?”

“அதெல்லாம் போதுமா பாட்டி? எல்லாமே டெம்பரவரி! நான் சொந்தக் கால்ல ஸ்டாண்ட் பண்ணனும்னா, இன்னும் ரொம்பத் தூரம் போகணும்…”

“ஏன் போகணும்? வீட்ல சொல்லி ஒரு கல்யாணம் காச்சியப் பண்ணிக்கிட்டு அக்கடான்னு நிழல்ல பொழைக்கிறத விட்டுட்டு…?”

“அதுக்காகவா நான் பொறந்தது? இல்லையே! பெத்தவங்க உடம்பக் கொடுத்திருக்காங்க. படிக்க வச்சுக் கைதூக்கி விட்டுருக்காங்க! இப்ப ஒரு கம்பெனில சம்பளம் தர்றாங்க! எல்லாமே சொசைட்டி எனக்குத் தந்தது… தர்றது… பதிலுக்கு நான் திருப்பிக் கொடுக்கணும்ல? சொந்தப் பொழப்பப் பாத்துக்கிட்டு, வந்த வேலைய முடிச்சுக்கிட்டு ‘கெளம்பிப் போறது’ குற்றம்னு தோணுதே! வாங்குனதத் திருப்பிக் கொடுக்கணும்ல?

முதல்ல கால ஊணிக்கணும்; பிறகு கைய விரிக்கணும்… பறக்கணும்… முடிஞ்சவரை பத்து கையால சம்பாதிக்கணும்; இருபது கையால எல்லாருக்கும் கொடுக்கணும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் எதையாவது முடிஞ்சதச் செய்யணும்… லைஃப்புக்கு ஒரு மீனிங் கொடுக்காம சும்மா போறதுக்காக இங்க நான் வரல…!”

“என்ன பண்ணப்போற? உனக்கு யாராவது உதவுவாங்கன்னு நம்புறியா?”

“எல்லாரும் எல்லாரையும் முடிஞ்சவரை யூஸ் பண்ணிக்கத்தான் பாக்குறாங்க; பாப்பாங்க…! வீட்லயும் அதுதான்! நாட்லயும் அதுதான்!! உறவையும் நட்பையும் உடைச்சுப் பாத்தா, உள்ள ஒளிஞ்சிருக்கிறது அதானே? ஆனா, அது ஒன்னும் தப்பில்லையே…? “இவள யூஸ் பண்ணிக்கலாம்”னு நம்மைச் சுத்தியிருக்கவங்களுக்குத் தோணுதுன்னா, அதுல அவங்களுக்குச் சந்தோஷம்னா, அப்படி யூஸ் ஆகுறதுல எனக்குச் சந்தோஷம்!

கல்யாணம், சொந்த வாழ்க்கை, சொகுசுன்னு சுருங்கிப் போக என்னால முடியலையே! “இன்னும் பற!”, “இன்னும் பற!”ங்குற றெக்கைகளுக்கு என்ன பதில் சொல்றது…?”

“நீ கிறிஸ்டினா? அவங்கதான் இப்படி யோசிப்பாங்க. ஆனா, இந்த வீட்லயோ, உன் கழுத்துலயோ அதுக்கான அடையாளமே இல்லையே…?”

“இல்ல இல்ல… அப்படி எந்த மதத்திலயும் நான் இல்ல! ஐ ஆம் ஃப்ரீ பேர்ட்!”

“ஆனா, பாக்குறதுக்கு அப்படித்தான் தெரியுற. பேசாம அதுல சேர்ந்துரலாம்ல?”

“இப்ப ஒருவேளை உணவுக்கும், ஒன்நைட் உறங்குறதுக்கும் உங்க குடும்பத்துக்கு நான் ஹெல்ப் பண்ணியிருக்கேன். உடனே நீங்க என் கட்சியில சேர்ந்துருவீங்களா? சேர முடியுமா? இல்ல, சேரணுமா? அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. விடிஞ்சதும், வெள்ளம் வடிஞ்சதும், உங்க வீடு, உங்க பொழப்பு, உங்களுக்கு…! என் ஆபீஸ், என் டியூட்டி எனக்கு…! அவ்வளவுதான் லைஃப்! என்ன சொல்றீங்க?”

ரஞ்சிதம் திகைத்தார். மௌனம் காத்தார். அது ஒருவிதத்தில் ஆபத்பாந்தவன்!

நேகா கொட்டாவி விட்டாள். “தூக்கம் வருது பாட்டி! தூங்குறேன்…!” என்று அனுமதி கேட்கும் தொனியில் சொல்லிவிட்டு நிம்மதியாய்ச் சுருண்டு படுத்தாள். ரஞ்சிதம் பார்த்துக் கொண்டே இருந்தார்.

காலை புலர்ந்தது. வானம் தெளிந்திருந்தது. மழை வெளிறியிருந்தது.

விழித்த நேகாவின் இடுப்பை ரஞ்சிதத்தின் கை சுற்றியணைத்திருந்தது. பாம்பைப் போல் ஆரத் தழுவியிருந்தது.

மெத்தை காலியாகக் கிடந்தது. நகரம் இயல்புக்குத் திரும்பத் தொடங்கிவிட்டது போலிருந்தது. விழித்துப் பார்த்துவிட்டு, மறுபடி ரஞ்சிதத்தின் கைகளுக்குள் சுழித்துக் கொண்ட நேகாவின் உதடுகளிலிருந்து பொருளார்ந்த ஒரு புன்னகை பிறந்தது.

அது, பழமணம் போல் பரவியது. கதவிடுக்கின் மழைநீர் போல் ரஞ்சித்தைச் சப்தமின்றிச் சூழ்ந்தது.

Author

Related posts

எத்தனால் காவியம்

வெக்கை

நேர் கொண்ட பார்வை