“எம்.டி. இப்போது பிஸியாக இருக்கிறார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கள் சார்” என்று அவரது உதவியாளர் ராம் சொல்லிவிட்டுப் போய் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது ரகுவுக்கு என்ன செய்யவேண்டுமென்று புரியவில்லை. ‘ஒருவேளை திரும்பவும் சென்று நினைவூட்ட வேண்டுமோ…’ சென்று கேட்டால் “அதான் சொன்னேனே சார்.. வெயிட் பண்ணச் சொல்லி..” என்று ராம் எரிந்து விழவும் வாய்ப்பிருக்கிறது. எப்போது பார்த்தாலும் சினேகம் பூசிச் சிரிப்பவர் இன்று நேரமில்லாமல் அங்குமிங்கும் பதற்றமாக அலைந்துகொண்டிருக்கிறார்.
எம்.டியே கூட.. “என்ன ரகு.. வேலை நேரத்தில எதுவுமே செய்யாம சும்மாவே இரண்டு மணி நேரமா என்னைப் பார்க்கிறதுக்காக உட்கார்ந்திருந்தீங்களா.. நான்தான் வேலை பிசியில் மறந்துட்டேன்.. நீங்களாவது அரை மணி நேரம் ஆனவுடனே திரும்பவும் ஒரு டைம் செக் பண்ணியிருக்கலாமே” என்றும் கேட்கவும் வாய்ப்பிருக்கிறது.
ரகு ஒரு கட்டுமானப் பொறியாளன். கடந்த ஆறு மாதங்களாகத்தான் இந்த நிறுவனத்தில் இருக்கிறான். மதுரையில் இயங்கிவரும் ஒரு பெரிய இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மெதுவாக வெவ்வேறு துறைகளில் கால்பதித்து சமீபத்தில்தான் இந்தக்கட்டுமானத் துறைக்கு வந்திருக்கிறார்கள்.
அரசாங்கம் கொடுக்கும் பப்ளிக் டெண்டர் எடுத்துச் சாலை போட்டுக்கொடுக்கும் வேலையை அதிமுக்கியமான புராஜெக்ட்டாக அவரது எம்.டி பார்க்கிறார். அதற்கெனவே ஸ்பெஷலாக வெவ்வேறு நேர்முகத் தேர்வுகளில் வடிகட்டி வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவன்தான் ரகு.
இதற்கு முன்பு அவன் வடஇந்தியாவில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்த்தவனுக்கு இந்தச் சூழ்நிலைகளை அனுசரித்துப் போகக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் அவர்தான் இன்று அவனைப் பார்க்கவேண்டுமென்று அழைத்திருந்தார். காலையில் சரியாக எட்டு மணிக்கு அப்பாய்ன்ட்மென்ட்.
பொதுவாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திங்கட்கிழமை அவரைச் சந்தித்து வேலை சம்பந்தமாக விவாதிப்பது வழக்கம். தினமும் அவருக்கு ரிப்போர்ட்டை மின்னஞ்சலில் அனுப்பிவிடுவதால் அனேகமாக அரை மணி நேரத்திற்குள் விவாதம் முடிந்துவிடும். இத்தனை நாளில் ஒருமுறை கூட அவரைப் பார்ப்பதற்கு இவ்வளவு நேரம் காக்க வைத்ததில்லை.
இவன் நேரடியாக எம்.டிக்கு ரிப்போர்ட் செய்வது அங்கு நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை என்பதை ரகு உணர்ந்திருந்தாலும் அதை ஒரு பெரிய விஷயமாக அவன் எடுத்துக்கொள்ளவில்லை. அவனைப் பொறுத்தவரை செய்கிற வேலையை அதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் சரியாகச் செய்து முடித்துவிட வேண்டும்.. தவிர யாரைப் பற்றியும் அனாவசியமாகப் பேசுவதைத் தவிர்த்துவிடுவான். சென்ற புதிதில் இது தெரியாமல் சைட்டில் நிறைய பேர் சூப்பர்வைசர்களைக் குறைகூறிக்கொண்டு இவனிடம் வந்ததுண்டு..
நாசூக்காக உரையாடலை மடைமாற்றி வேலை குறித்து மட்டும் பேச்சை வளர்ப்பான். நாளடைவில் எல்லோரும் இவனைப் பற்றி மெதுவாகப் புரிந்துகொண்டார்கள். குழைவதும் கூழைக் கும்பிடு போடுவதும் தேவைக்கு அதிகமாக மரியாதை கொடுப்பதும் அவனுக்குப் பிடிக்காத விஷயங்கள்.
நேற்று சைட்டில் இருந்து கிளம்பும்போதே அவன் டீமில் வேலைபார்க்கும் நாச்சிமுத்து சொன்னது நினைவிற்கு வந்தது.
“சார் நாளைக்கு ஹெட் ஆபீஸ் போறீங்க. திரும்பி இங்க சைட்டுக்கு வர லேட்டாகலாம். நாங்களே கான்கிரீட் வேலையை ஆரம்பிச்சிடவா..”
“இல்லை முத்து.. வந்துருவேன். பெருசா எத்தனை நேரம் ஆகிடப்போகுது.. வெயிட் பண்ணுங்க..”
“இல்லை நீங்க அளவு சொன்னீங்கன்னா நான் கான்கிரீட் ஊத்தி வேலையை ஆரம்பிச்சிருவேன். இதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை நான் தனியாவே இதெல்லாம் பார்த்திருக்கேன் சார்”
“இல்லை முத்து.. கான்கிரீட் போடுகிறப்ப நிச்சயமாக நான் கூட இருக்கணும்”
“அப்ப சரி சார்.. நாளைக்கு நீங்க போனா நீங்க வர முன்ன பின்ன ஆகும்னு எனக்குத் தோணுச்சு.. அதனாலதான் கேட்டேன்”
‘ஏன்’ அப்படி நினைத்தான் என்று நேற்று அவனிடம் கேட்டிருக்கவேண்டுமென ரகு நினைத்துக்கொண்டான்.
சாலை போடுகிற வேலையில் கான்கிரீட் ஊற்றுதல் அதிலும் சரியான கலவை என்பது மிக முக்கியம். அதை முத்துவை நம்பி விட்டுவிட ரகுவிற்கு மனமில்லை. இதற்கு முன்பே ஒரு வவுச்சரில் அவன் செய்த மோசடியைக் கண்டுபிடித்து அவனை எச்சரித்திருக்கிறான்.
கண்டுபிடித்தவுடன் தெரியாமல் பூஜ்யம் ஒன்று சேர்ந்துவிட்டதே என்று சமாளித்தவன் அவனை நம்பிக் குடும்பம் இருக்கிறதென்று கெஞ்சியதால் ‘இனி இதுமாதிரி தவறுகள் நடக்காது’ என்று எழுதி வாங்கிக்கொண்டிருக்கிறான். அன்றிலிருந்து முத்து இவனிடம் இயல்பாக இல்லை.
திட்டப்படி இன்றும் நாளையும் கான்கிரீட் வேலையை முடித்தாக வேண்டும். அப்போதுதான் அடுத்த இருபத்தெட்டு நாட்கள் கியூரிங் செய்ய முடியும். இந்த புராஜெக்ட்டைச் சரியாக முடிப்பது இவன் வேலைக்கு மட்டும் நல்லது இல்லை. கம்பெனிக்கும் இந்தத் துறையில் சரியாகக் காலூன்ற ஆரம்பப்புள்ளியாக இருக்கும். அவனுக்குத் தெரியும். இதே துறையில் இருக்கும் போட்டி நிறுவனங்கள் இவர்களைக் கூர்மையாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.
இது இந்தத் துறையில் மட்டுமல்ல.. எல்லா இடங்களிலும் பொதுவாக நடப்பதுதான்.. புதிய யுக்தியுடன் நுழையும் யாருக்கும் இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்துவிடுவதில்லை. ஆனால் இதில் அவரது எம்.டி ஜெயித்துவிட வேண்டுமென ரகு விரும்பினான்.
ஏனென்றால் வணிக நோக்கம் தவிர்த்து, வாழ்கிற இந்தச் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்ற நோக்கத்தில் தரமான சாலைகளுக்காக மிகக் குறைந்த செலவில் கோட் செய்யப்பட்ட டெண்டர் இது. இந்தச் சாலை போட்டுத்தருவதில் இந்த நிறுவனத்திற்கு லாபம் எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை.
இதை அந்த ஒப்பந்தத்தைப் பார்வையிடும்போதே இவனும் ஜே.எம்.டியும் சுட்டிக்காட்டினார்கள். ஜே.எம்.டி என்றால் ஜாயிண்ட் எம்.டி. அவரது மகள்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் எம்.டி அதை மாற்ற மறுத்துவிட்டார்.
நேரம் பார்த்தான்.. தாமதமாகிக்கொண்டிருக்கிறது. எழுந்துகொண்டான்.
இனி காத்திருப்பதில் பயனில்லையென்று தோன்றியது.. வருவது வரட்டுமென்று ‘இப்போது வேலை இருக்கிறதென்றும் நாளை சந்திக்க அனுமதி கேட்டும்’ எம்.டிக்கு ஒரு நோட் எழுதி ராமிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
“நான் வேணா பாஸ்கிட்ட ஒருமுறை கேட்டுப் பார்க்கட்டுமா.. அவரு காலையில இருந்தே ஜே.எம்.டி கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கார், அதனால இன்னைக்கு இருந்த எல்லா மீட்டிங்கும் கேன்சல்..”
“இல்லை சார் இப்போ நான் கிளம்பணும்.. சைட்ல கான்கிரீட் போடுகிறப்ப அங்க நான் இருந்தாகணும். நீங்க தகவல் சொல்லிடுங்க..”
கீழே வந்து பைக்கை எடுத்துக்கொண்டு சைட்டிற்குக் கிளம்பியவனுக்கு ஒரே சிந்தனைதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இது திட்டமிட்ட ஒன்றா.. இல்லை எதேச்சையான நிகழ்வா.. நேற்று நாச்சிமுத்து எதற்காக அப்படிச் சொன்னான். எது எப்படியென்றாலும் ரகு அவனது எம்.டியைத் தீவிரமாக நம்பினான்.
ஏனென்றால் நேர்முகத் தேர்வில் நடந்தது இன்றும் நன்றாக நினைவிருக்கிறது.
மற்ற தேர்வுகளை விடக் கடைசிச் சுற்றாக நடந்த நேர்முகத் தேர்வு எம்.டியுடன் மட்டும்.. அங்கு அவனே எதிர்பார்க்காத ‘மண் வலிமை’ பற்றிக் கேட்கப்பட்ட நுணுக்கமான கேள்விகளில் ரகுவே அசந்துபோனான். கடைசிக் கேள்வியாக
“மிஸ்டர் ரகு.. நீங்க இப்ப வேலை செய்துட்டு இருக்கிற பன்னாட்டு நிறுவனத்துல உங்களுக்குச் சம்பளம் அதிகம்.. ஆனா அதைவிடக் குறைவான சம்பளத்துக்கு எதுக்கு இங்க நீங்க வர்றீங்க” என்ற கேள்விக்கு அப்பாவின் நுரையீரல் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருப்பதால் அவருடன் இருக்க விரும்புவதாகச் சொன்னான். அதைக் கேட்டவுடன் அதிகம் யோசிக்காமல் அவன் முன்பு வாங்கிய சம்பளத்தை விட இருபது சதவீதம் அதிகமாகக் கொடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அவர்மேல் இருந்த மரியாதையை ரகுவிற்கு அதிகப்படுத்தியது.
“ என்னைப் பொறுத்தவரைக்கும் செய்யற வேலையில உங்க கவனம் பூரா இருக்கணும்னா முதல்ல சம்பளம் உங்களுக்குத் திருப்தியா இருக்கணும்… இல்லைன்னா வேற எங்க இது கிடைக்கும்னு அலைபாயும். மனுஷ மனசோட டிசைன் அப்படி. உங்ககிட்ட நீண்டகால கமிட்மென்ட்டை எதிர்பார்க்கிறேன்..”
“இந்த புராஜெக்ட் மட்டும் நான் நினைக்கிற மாதிரி சரியா வந்துச்சுன்னா தமிழ்நாடு முழுக்க நிறைய சாலைகள் போடுகிற பெரிய வேலைகள் நமக்குக் கிடைக்கும். தரமான சாலைகள் தமிழ்நாடு முழுக்க லாப நோக்கம் இல்லாம போட ஒரு ஆரம்பப்புள்ளியா இந்த புராஜெக்ட் இருக்கணும்”
இப்படி யோசித்துக்கொண்டே வந்தவன் வேகமாகப் புதூர், சர்வேயர் காலனி தாண்டி அழகர்கோவில் சாலையில் இருக்கிற சைட்டை அடைந்துவிட்டான்.
“என்ன சார் எம்.டியைப் பார்த்துப் பேசியாச்சா” என்றான் முத்து. ரகுவின் மௌனத்தைப் புரிந்துகொண்டவன் சிரித்தபடியே..
“இதுக்குத்தான் யாரோட வம்பிழுக்கறோம்னு தெரிஞ்சு பண்ணணும். இதெல்லாம் எங்களுக்குப் பண்ணத் தெரியாதா.. யாரோட மோதறோம்னு தெரியாமயே பகைச்சிக்கிட்டா இப்படித்தான்” என்று முனகினான்.
“என்ன முத்து அங்கிட்டு திரும்பிப் பேசுற.. என்னைப் பார்த்துப் பேசு”
“நான் ஒண்ணும் சொல்லலையே சார்..” என்று நகர்ந்துவிட்டான்.
இப்போது அதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. பரபரவென எல்லா ஆட்களையும் அழைத்துச் செய்யவேண்டிய வேலைகளை விளக்கியவன் இரவு முழுக்க அங்கேயே இருக்கவேண்டியதாகிவிட்டது. விடிந்தவுடன் தூக்கம் தொலைத்து மிகுந்த சோர்வுடன் அமர்ந்திருந்தவனை அழைக்க விடிவதற்கு முன்பாகவே எம்.டியின் உதவியாளர் ரகுவைத் தேடி வந்துவிட்டார்.
“என்ன ராம் சார் ஏதாவது பிராப்ளமா..” என்று கேட்டுக்கொண்டே அவரை நோக்கி நடந்தான் ரகு.
மெல்லிய புன்னகையுடன் அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினான் நாச்சிமுத்து.
“ஒரு முக்கியமான மீட்டிங்.. நீங்க உடனே என்னோட கிளம்பணும்”
“இல்லை சார் நைட் முழுக்க இங்கயே இருந்திட்டேன்.. வீட்டுக்குப் போய்க் குளிச்சிட்டு உடனே கிளம்பி வந்திடுறேன்”
“அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை.. நீங்க இங்கதான் நைட் முழுக்க இருந்தீங்கன்னு எம்.டிக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் உங்களை அவசரமா கூப்பிட்டிருக்காரு.. என்கூட கார்லயே வந்துருங்க. நைட் தூங்காம வண்டி ஓட்ட வேண்டாம்”
ரகுவிற்கு அவன் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது போலவும்.. விட்டால் வேறு எங்காவது ஓடிவிடுவான் என்று கையோடு அழைத்துச் செல்வதாகவும் தோன்றியது. மேலும் அங்கு வேலைசெய்யும் அனைவரும் அவனைப் பார்வையால் துளைப்பது போல உணர்ந்தான்.
எனவே அவசரமாகக் காரை அடைந்தான். சிறிது அவஸ்தையான மௌனம். தொண்டையை மெதுவாகக் கனைத்துக்கொண்டவர்
“ஏன் ரகு பர்சேஸ் ஆர்டர்ல சொல்லியிருக்கிற விலையை விட இன்வாய்ஸ் விலை கூடுதலா இருக்கு.. இதைச் சரிபண்ணணும்னு எம்.டிக்கும் நேரா மெயில் அனுப்பிட்டீங்களா..”
“ஆமாம் சார்.. ஏதாவது பிரச்சனையா”
“அதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்டவங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கணும்ல..”
“அனுப்பினேன் சார்.. முதல்ல அந்த மேனேஜருக்குத்தான் அனுப்பினேன்.. பதில் எதுவும் வரல.. இரண்டு வாரம் கழிச்சுத்தான் எம்.டிக்கு அனுப்பினேன்”
‘ம்’ என்று சிறிது யோசித்தவர் “நம்ம கம்பெனியில பர்சேஸ் ஹெட் யாரு தெரியுமா..” என்றார்.
கொஞ்சம் யோசித்தவன் தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினான்.
“அது வேற யாரும் இல்லை நம்ம ஜே.எம்.டி” என்றார்.
திடுக்கென நிமிர்ந்தான். நாச்சிமுத்துவிற்கு இது தெரிந்தும் இவனிடம் சொல்லவில்லை. இப்போது ஓரளவுக்கு அவனை அவசர அவசரமாக அழைத்துச் செல்லும் காரணம் புரிந்தது.
அதனால்தான் வண்டியைக் கூட எடுக்க விடவில்லை. அது கம்பெனி பைக். அதனாலென்ன பரவாயில்லை.. நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஒருவேளை நான் பயந்துவிடுவேன் என நினைத்துவிட்டார்களா என்ன என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன் உண்மை என்றும் தோற்காது.
“அச்சமில்லை.. அச்சமில்லை அச்சமென்பதில்லையே… உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..” என்று சொல்லிக்கொடுத்த அப்பா ராகவன் வாத்தியாரை மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
அதற்குப் பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கண்கள் எரியத்தொடங்கியது. மூடிக்கொண்டான்.
ஐந்து நிமிடங்களில் கார் நின்றதும் கண்களைத் திறந்தவனுக்கு அதிர்ச்சி. கார் அப்பல்லோ மருத்துவமனை முன்பு நின்றிருந்தது.
“யாருக்கு என்ன சார் ஆச்சு.. மீட்டிங்னு சொல்லி இங்க வந்துருக்கோம்”
அவர் பதில் பேசாமல் இறங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து இறங்கியவனுக்கு வாசலிலேயே ஜே.எம்.டி நின்றிருந்ததைப் பார்த்தவுடன் நிச்சயமாக எம்.டிக்கு ஏதோ ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றியது.
இவனைப் பார்த்தவுடன் “என்ன ரகு இப்படிப் பொறுப்பில்லாம போனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருக்கீங்க..” குரலில் கொஞ்சம் கோபமிருந்தது…
அப்போதுதான் எடுத்துப் பார்த்தான்.. எப்போது போன் இறந்துபோயிருந்ததெனத் தெரியவில்லை. வேலை மும்முரத்தில் அவன் கவனிக்கவில்லை.
“நல்லவேளை.. உங்க போன் ரீச் ஆகாததுனால ஆபீசுக்கு மிட்நைட்ல போன் வந்தது. நேத்து முழுக்க நானும் அப்பாவும் மீட்டிங்ல இருந்ததால உங்க தங்கச்சி பண்ண போனை உடனே நான் எடுத்தேன்..”
“என்ன மேடம் சொல்றீங்க.. அப்பாவுக்கு என்ன ஆச்சு”
“ஒண்ணும் பயப்படாதீங்க.. இப்ப அவரு அபாய கட்டத்தைத் தாண்டிட்டார்..”
“ரொம்ப தேங்க்ஸ் மேடம்” என்றான் ரகு நன்றிப்பெருக்கில்.
“நீங்க எங்க அப்பாவோட கனவுக்காக நைட் முழுக்கக் கண் விழிக்கலியா.. அவரும் இங்கதான் இருந்தார்.. கொஞ்ச நேரம் முன்னாடிதான் கிளம்பினார். நேத்து முழுக்க பர்சேஸ் ஆர்டர் பிரச்சனையைத்தான் நானும் அப்பாவும் அனலைஸ் பண்ணினோம்.. அதுக்குத்தான் உங்களை வரச்சொன்னது.. மதியம் உங்களைத் தேடினோம். அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க”
கொஞ்சம் இடைவெளி விட்டவள்,
“நீங்க சொன்னது சரிதான்.. இது போன இரண்டு வருஷமா நடந்திருக்கு.. விசாரிச்சதுல இதுக்குத் துணைபோன மேனேஜரை நேத்து வேலையை விட்டுத் தூக்கியாச்சு. மத்த கம்பெனிகளோட பேசிட்டு இருக்கோம். ஒண்ணும் பிராப்ளம் இல்லை ہمیں சில லட்சங்கள் திரும்பி வரணும்..”
“இது உங்களாலதான் சாத்தியமாச்சு.. கன்கிராட்ஸ்.. அதனால அப்பா உங்களை லீடர்ஷிப் லெவலுக்கு புரொமோட் பண்ணியிருக்காரு.. இந்த ஹாஸ்பிடல் செலவெல்லாம் இனி கம்பெனி பார்த்துக்கும்.. நீங்க போய் உங்க அப்பாவை மட்டும் பாருங்க” என்று கை கொடுத்துவிட்டுச் சிரித்துக்கொண்டே கிளம்பினாள்.
அவசரமாக அப்பா எங்கே இருக்கிறார் எனத் தேடிக்கொண்டு அந்த மருத்துவமனை அறைக்குள் நுழைந்தான் ரகு. அப்பா இவனைப் பார்த்ததும் மெலிதாகப் புன்னகைத்தார்.