சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை எட்டாவது முறையாக வென்ற மம்மூட்டியிடம் “முன்பு யேசுதாஸ், ‘இனி தனக்கு மாநில விருதுகள் வேண்டாம், இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று கூறியது போல், நீங்களும் ஏன் இளையவர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கக் கூடாது?” என்ற கேள்வியை முன்னெழுப்பிய போது, மம்மூட்டி சொன்ன பதில் தான் திரைப்படங்களின் மீதும் தன்னை மெருகேற்றுக்கொள்வதில் அவருக்கு இருக்கும் முனைப்பையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது.
“நான் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அமர்ந்திருக்கின்ற இந்த நாற்காலியை இன்னொருவருக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்? இது ஒன்றும் எனது பரம்பரைச் சொத்தாக எனக்குக் கிடைத்தது இல்லையே?! ஒவ்வொரு முறையும் இந்த நாற்காலியில் அமர்வதற்கு நானும் மிகுந்த கடின உழைப்பையும், தயாரிப்பையும் மேற்கொண்டிருக்கிறேன்.ஒவ்வொரு முறை இந்த நாற்காலியை அடைவதற்காக நான் எடுக்கும் முயற்சிகளோடு இளையவர்களும் முயல்கிறார்கள் என்றால், அவர்கள் என்னைத் தாண்டிச் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்தால், ஒரு நடிகனாக அது எனக்கும் பெருமைதானே?! ஆகவே, நான் கஷ்டப்பட்டு தேடி எடுக்கின்ற இந்த நாற்காலியை, எனக்கு வயதாகிவிட்டது என்பதற்காகவோ அல்லது நான் பலமுறை அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் என்பதற்காகவோ ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. என்னோடு போட்டி போட்டு அவர்கள் அந்த நாற்காலியை அடைந்து விடுவார்களேயானால் அதுதான் அவர்களுக்கும் பெருமை, எனக்கும் பெருமை” என்று சொன்னார். தன் நடிப்பின் மீதும், தொழில் மீதும் பற்று இல்லாமல் இருந்தால், அவரால் இப்படி பேசி இருக்க முடியாதல்லவா?
இப்படிச் சொன்ன மம்மூட்டிதான் விருது வழங்கும் விழாவில், தன்னோடு சிறந்த நடிகர்களாகப் பரிந்துரைக்கப்பட்ட டொவினோ தாமஸையும், ஆசிஃப் அலியையும் மேடைக்கு அழைத்து, அவர்களும் மிகச் சிறந்த நடிகர்கள்தான் என்பதை மேடையில் அறிவித்தார். தான் ஒரு மகா நடிகன் மட்டுமல்ல; மாறாக, இளைய தலைமுறையினரையும், அவர்களது திறமைகளையும் அங்கீகரிக்கின்ற சிறந்த கலைஞனும் கூட என்று நிரூபித்த தருணம் அது.
இந்தக் காரணத்தினால்தான் மலையாளத் திரையுலகின் இளம் தலைமுறையைச் சார்ந்த நடிகர்களுமே கூட மம்மூட்டி என்ற மகத்தான கலைஞனை மனதார அங்கீகரித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலக நாயகன் கமல் ஹாசனுக்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் மம்மூட்டி பேசுகையில், “தெரிந்தோ தெரியாமலோ நானும் கமல் ஹாசனும் ஒரு போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இருவருமே மூன்று முறை தேசிய விருதுகளை வென்றிருக்கிறோம். நான்காவது விருதை யார் வெல்லப்போகிறோம் என்பதில் எங்களுக்குத் தெரியாமலேயே ஒரு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வைக் குறிப்பிட்டு கமல் ஹாசன், மம்மூட்டி நான்காவது தேசிய விருதைப் பெற்றதைப் பாராட்டியிருந்ததும், கமல் ஹாசனின் வாழ்த்துக்களில் தான் பெருமை அடைவதாக மம்மூட்டி குறிப்பிட்டிருந்ததும் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது.
தேசிய விருதை இதுவரை நான்கு முறை பெற்றிருப்பவர்கள் மம்மூட்டி மற்றும் அமிதாப் பச்சன் மட்டுமே. தேசியக் குழுவினரின் பாரபட்சம் காரணமாகவே, இதற்கு முன்பும் பல்வேறு முறைகள் மம்முட்டிக்கு விருதுகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.
அதன் பிறகு மம்மூட்டி தேர்ந்தெடுத்து நடித்த படங்களுக்கும், கமல் தேர்ந்தெடுத்து நடித்த படங்களுக்குமே கூட மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.
1989இல் தான் முதல்முறை தேசிய விருது பெற்றார் மம்மூட்டி. அதுவும் ‘மதிலுகள்‘ மற்றும் ‘வடக்கன் வீரகாத‘ என்ற இரு படங்களுக்காக. 1993லும் ‘பொந்தன்மாட‘, ‘விதேயன்‘ என இருபடங்களுக்காக தேசிய விருது பெற்றாலும், 1998-இல் அம்பேத்கராக நடித்ததற்காக மம்மூட்டிக்குக் கிடைத்த தேசிய விருதுக்குப் பின் மம்மூட்டிக்கு விருதுகள் எட்டாக்கனியாகி விட்டன.
என்றாலும், இரண்டாயிரத்தி ஒன்றில் ‘டானி’ திரைப்படத்திற்காக, 2004 இல் “காழ்ச்ச”, 2006இல், “கருத்த பக்ஷிகள்”, 2009இல், “பலேரி மாணிக்யம்” “குட்டி ஸ்ராங்கு” “கேரளா கஃபே” படங்களுக்காக, ( இந்த ஆண்டில்தான் அமிதாப் பச்சன் தனது நான்காவது விருதை “பா” படத்திற்காகப் பெற்றிருந்தார்) 2014இல் “முன்னறியிப்பு” , 2015இல் “பத்தேமாறி”, 2018இல், “பேரன்பு” படத்திற்காக, 2022இல் “நண்பகல் நேரத்து மயக்கம்” திரைப்படத்திற்காக என்று தொடர்ந்தும் மம்மூட்டியின் பெயர் கடைசிச் சுற்று வரை போட்டிகளில் இருந்துகொண்டே இருந்தது என்பதிலிருந்து மம்மூட்டி தன் கலைப்பயணத்தில் எத்தகைய பாத்திரங்களைத் தேர்வு செய்து உயிர்ப்பித்திருக்கிறார் என்பது புரியும்.
இருபத்தி எட்டு ஆண்டுகள் நீண்ட காத்திருப்பிற்குப் பின், இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது – நான்காவது முறையாக தேசிய விருது. இந்தப் பெருமைக்குரிய இன்னொருவர் அமிதாப் பச்சன் மட்டுமே.
கடந்த ஆண்டில் மம்மூட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு கலையுலகினருக்கும், அவரது இரசிகர்களுக்கும் பெரும் மனச்சோர்வை ஏற்படுத்தியிருந்த வேளையில் மீண்டும் அதே உற்சாகத்தோடு எழுந்து வந்து தனது சமூகப் பணிகளிலும், திரைப்பணிகளிலும் அதே உற்சாகத்தோடு ஈடுபடத் தொடங்கிய மம்மூட்டியின் மனதில் இன்றும் புதிய பாத்திரங்களுக்கான தீராத மோகம் அலையடித்துக் கொண்டேயிருக்கிறது.
காலத்தைப் பின்னகரச் செய்து தனது நடிப்பின் உயரங்களை நவீனப்படுத்தி, என்றும் திரையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்ததோடு தேங்கி விடாமல் தனது 75ஆம் வயதிலும் தன் வயதிற்கேற்ற பாத்திரங்களையும், ‘மெகா நடிகர்கள்’ தொடத் தயங்கும் சவாலான கதாபாத்திரங்களையும் தேடித் தேடிக் கண்டடைந்து கலைக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் மகா கலைஞரான மம்மூட்டிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.