- கவிதை வாசிப்புகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- என்னவோர் எழுத்தாளர்! – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- மாபெரும் தப்பிப்பு – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
- அதற்கு வழியில்லை – சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் 3
- அழகிய கண்களைக் கொண்ட மனிதன் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது
அங்கே ஒரு விசித்திரமான வீடு இருந்தது
அதன் எல்லா சன்னல்களும்
எப்போதும் திரைச்சீலைகளால்
மூடப்பட்டிருக்கும்
அந்த வீட்டுக்குள் இருந்து
எந்தக் குரலும்
எங்களுக்குக் கேட்டதில்லை
வீட்டைச் சுற்றியிருந்த
முற்றம் முழுவதும்
மூங்கில்களால் நிறைந்திருந்தது
அந்த மூங்கில்களுக்குள்
விளையாடுவது
எங்களுக்குப் பிடித்திருந்தது
எங்களை நாங்கள் டார்சான் என
கற்பனை செய்துகொள்வோம்
(ஜேன் யாரும் இல்லையென்றாலும்)
அங்கே ஒரு மீன் குளம் இருந்தது
பெரிய குளம்
நீங்கள் எங்கும் பார்த்திராத அளவுக்கு
கொழுத்த தங்க மீன்கள்
அதில் நிறைந்திருந்தன
அவை மனிதர்களுக்குப் பழகியவை
அவை நீரின் மேற்பரப்பிற்கு வந்து
எங்கள் கைகளிலிருந்து
ரொட்டித் துண்டுகளை
வாங்கிக் கொள்ளும்
எங்கள் பெற்றோர்
எங்களிடம் சொல்லியிருந்தார்கள்:
“அந்த வீட்டுப் பக்கமே
போகாதீர்கள்” என்று
அதனாலேயே
நாங்கள் அங்கே போனோம்
அங்கே யாராவது வசிக்கிறார்களா
என்று வியந்தோம்
வாரங்கள் கடந்தன
யாரையும்
நாங்கள் பார்க்கவில்லை
பிறகு ஒருநாள்
வீட்டிற்குள்ளிருந்து
ஒரு குரல் கேட்டது
“கேடு கெட்டவளே”
அது
ஒரு ஆணின் குரல்
அடுத்த கணம்
வீட்டின் வலைக்கதவு
வேகமாகத் திறக்க,
அந்த மனிதன்
வெளியே நடந்து வந்தான்
அவனது வலது கையில்
ஒரு மதுப் புட்டி
வயது முப்பது இருக்கலாம்
வாயில் சுருட்டு
சவரம் செய்யாத முகம்
சீவப்படாத கலைந்த தலைமுடி
செருப்பில்லா கால்களுடன்
உள்சட்டை மற்றும்
காற்சட்டையோடு இருந்தான்
ஆனால்
அவனது கண்கள்
மிகப் பிரகாசமாக இருந்தன
பேரொளியோடு மின்னின
அவன் சொன்னான்,
“ஹேய் சிறு மனிதர்களே,
மகிழ்ச்சியாக
விளையாடுகிறீர்கள் என்று
நம்புகிறேன்”
பின்னர்
மெலிதாகச் சிரித்துவிட்டு
மீண்டும் வீட்டுக்குள்
சென்று விட்டான்.
நாங்கள் அங்கிருந்து
எங்கள் பெற்றோரின்
முற்றத்திற்குத் திரும்பினோம்
அதைப் பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்தோம்
எங்கள் பெற்றோர்
நாங்கள் ஏன் அந்த வீட்டிலிருந்து
விலகியிருக்க வேண்டுமென்று
விரும்பினார்கள் என்றால்,
அப்படிப்பட்ட ஒரு மனிதனை
நாங்கள் பார்த்துவிடக் கூடாது
என்பதற்காகத்தான்—
இயற்கையிலேயே வலிமையான
அழகான கண்களையுடைய
ஒரு மனிதனை
எங்கள் பெற்றோருக்கே
வெட்கமாக இருந்திருக்க வேண்டும்
அந்த மனிதனைப் போல்
தாங்கள் இல்லை என்பதை நினைத்து
அதனாலேயே
எங்களை விலகியிருக்க
சொல்லியிருக்க வேண்டும்
ஆனால் நாங்கள் மீண்டும்
அந்த வீட்டிற்குச் சென்றோம்
மூங்கில்களிடமும்
பழகிய அந்த
தங்க மீன்களிடமும்.
பல முறைகள்
பல வாரங்கள்
அங்கே சென்றோம்
ஆனால் அந்த மனிதனை
மீண்டும் பார்க்கவோ
கேட்கவோ இல்லை
எப்போதும் போல
சன்னல் திரைகள்
இறக்கப்பட்டிருந்தன
அமைதி நிலவியது
பின்னர் ஒருநாள்
பள்ளியிலிருந்து
திரும்பி வரும்போது
அந்த வீட்டைப் பார்த்தோம்
அது எரித்து
சாம்பலாக்கப்பட்டிருந்தது
எதுவும்
மிச்சமிருக்கவில்லை
புகைந்து கொண்டிருந்த
முறுக்கப்பட்ட கருகிய
அஸ்திவாரம் மட்டுமே
எஞ்சியிருந்தது
நாங்கள்
மீன் குளத்திற்குச் சென்றோம்
அதில்
தண்ணீர் இல்லை
அந்தக் கொழுத்த
ஆரஞ்சு நிறத் தங்க மீன்கள்
செத்துப் போய்
காய்ந்து கொண்டிருந்தன
நாங்கள் மீண்டும்
எங்கள் பெற்றோரின்
முற்றத்திற்குத் திரும்பி
அதைப் பற்றி பேசி
ஒரு முடிவுக்கு வந்தோம்
எங்கள் பெற்றோர்தான்
அந்த வீட்டை
எரித்திருக்க வேண்டும்
அவர்களைக்
கொன்றிருக்க வேண்டும்
தங்க மீன்களையும்
கொன்றிருக்க வேண்டும்
ஏனென்றால்
அவை எல்லாமே
மிக அழகாக இருந்தன
அந்த மூங்கில் காடும்
எரிந்து போயிருந்தது
அழகிய கண்களையுடைய
அந்த மனிதனைப் பார்த்து
அவர்கள்
பயந்திருக்க வேண்டும்
அந்தத் தருணத்தில்
நாங்களும் பயந்தோம்
எங்கள் வாழ்நாள் முழுவதும்
இப்படிப்பட்ட விஷயங்கள்
நடந்து கொண்டிருக்குமோ என்று—
இப்படிப்பட்ட
வலிமையுடனும் அழகுடனும்
யாரும் இருப்பதை
எவரும் விரும்ப மாட்டார்களோ என்று—
மற்றவர்கள் அதை
அனுமதிக்க மாட்டார்களோ என்று—
அதற்காகப் பலர்
இறக்க வேண்டியிருக்குமோ
என்று
*
மூலம்: “The Man with the Beautiful Eyes” By Charles Bukowski
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994):
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.
*