மருத்துவர் பக்கம் – 29: இனிப்புச் சுவையின் அடிமைத்தனம் 

சர்க்கரை நோய் எனும் நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை நான் ஆதரிப்பதில்லை. ஏன் ?

நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் பலரும் “இனிப்பு” சேர்க்க வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், பக்கத்து வீட்டுக்காரர் கூறினார் என்றும் வாக்கிங் நண்பர் கூறினார் என்றும் சீனி சேர்ப்பதை நிறுத்திவிட்டுத் தங்களுக்குத் தோதாக நாட்டுச் சர்க்கரை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். இது தவறென்று அவர்கள் உணர வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தமட்டில்:

  • சீனி
  • நாட்டுச் சர்க்கரை
  • பனங்கற்கண்டு
  • கருப்பட்டி
  • தேன்
  • இனிப்பான பழங்கள்

என்று அனைத்தும் இரத்த சர்க்கரை அளவுகளை அதிகமாக உயர்த்துபவையே. இதில் சீனியும் நாட்டுச் சர்க்கரையும் கரும்பில் இருந்து வருபவையே. எனவே, இரண்டும் நீரிழிவு நோயாளியின் இரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில் ஒன்றுதான் என்று உணர வேண்டும்.

இதற்கடுத்த படியாகச் சுகர் ஃப்ரீ எனும் மாத்திரையை, பொடியைப் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். சுகர் ஃப்ரீ தீவிரமாக இரத்த க்ளூகோஸ் அளவுகளை உயர்த்துவதில்லை என்றாலும், நமது மூளையில் இனிப்புச் சுவை உருவாக்கும் போதை என்பது தொடர்ந்து சுகர் ஃப்ரீ உபயோகப்படுத்துபவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.

இனிப்புச் சுவை போதையை உருவாக்குமா?

ஆம்… ஒவ்வொரு முறை நாம் இனிப்புச் சுவையைச் சுவைக்கும் போதும், மூளையின் ஊக்கமளிக்கும் மண்டலம் தூண்டப்பட்டு மறுமுறை இனிப்புச் சுவையை விரும்பி உண்ணச் செய்கிறது. இதனால் நாம் இனிப்புச் சுவை தரும் போதைக்கு அடிமையாகிறோம். எப்படி மது அருந்துபவர், கொகைன், கஞ்சா போன்றவற்றை எடுப்பவர் அந்த விஷயங்கள் தரும் போதைக்கு அடிமையாகிறாரோ, அதேபோல்தான் இந்த இனிப்பும் செய்கிறது.

இதனால் தான் சீனியை நிறுத்தச் சொன்னால், நம் மனம் நாட்டுச் சர்க்கரைக்குத் தாவுகிறது. நாட்டுச் சர்க்கரையை நிறுத்தச் சொன்னால் பனங்கருப்பட்டிக்குத் தாவுகிறது. அதையும் நிறுத்தச் சொன்னால் இறுதியில் சுகர் ஃப்ரீக்கு வருகிறது. இப்படிச் சுகர் ஃப்ரீ போட்டுப் பருகுபவர்களுக்கு இந்த இனிப்புச் சுவை மீது மூளைக்குப் போதையும் அடிமைத்தனமும் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே, எப்போதெல்லாம்:

  • இனிப்பான ஸ்வீட் (இனிப்புப் பண்டங்கள்)
  • சாக்லேட் (இனிப்புக் கட்டி)
  • ஐஸ்க்ரீம் (பனிக்கூழ்)
  • அல்வா (இனிப்புக் களி)

போன்றவற்றைக் காணுங்கால், நாக்கு ஊறி மூளையில் உள்ள போதை மையம் தூண்டப்பட்டு அதை உண்பார்கள். கூடவே தேவைக்கு மீறியும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களினால் செய்யப்பட்ட உணவுகளைக் குறைத்து உண்டாலும், நொறுக்குத்தீனி விஷயத்தில் எல்லை மீறுபவர்களாக இருப்பார்கள்.

இவ்வாறு மாவுச்சத்து சார்ந்த, இனிப்புச் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து அதிகமாக உண்ணச் சொல்லி மூளை உந்திக் கொண்டே இருப்பதைத் தான் “க்ரேவிங்” (அடங்காத அவா) என்று அழைக்கிறோம். இத்தகைய க்ரேவிங்கை மனதால் கட்டுப்படுத்துவது கடினம்.

இந்த க்ரேவிங்கை வெகுவாகக் கட்டுப்படுத்திட முதன்முதலில் செய்ய வேண்டியது:

இனிப்புச் சுவை கொண்ட அனைத்தையும் முற்றிலும் ஒதுக்குவதாகும்

ஏமாற்றும் உணவுகள்

இன்னும் ஸ்டீவியா, சுக்ராலோஸ், எரித்ரிடால், சைலிடால், அஸ்பார்டேம் உள்ளிட்ட சுகர் சப்ஸ்டிட்யூட்ஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும் போது, அதை உண்ணும் நீரிழிவு நோயாளிகளை அந்த உணவுகள் ஒரு வகையில் ஏமாற்றுகின்றன. இதனால் ஒரு அசட்டை எண்ணம் உருவாகிறது. இதை Complacence என்கிறோம்.

அதாவது, சீனி போட்டுச் செய்த பதார்த்தமாக இருந்தால் இது சுகரை ஏற்றிவிடும் என்று பயம் இருக்கும். எனவே, 50 கிராம் மட்டுமே உட்கொள்ளும் இடத்தில், சுகர் ஃப்ரீ சேர்க்கப்பட்ட ஸ்வீட்டாக இருந்தால் மனதில் இது சுகரை ஏற்றாது என்ற எண்ணம் பதியப்பட்டு 500 கிராம் கூட எடுக்கும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் தாங்கள் சாப்பிட்ட ஸ்வீட் மாவுப்பொருளால் செய்யப்பட்டதை மறந்து, அந்த மாவுச்சத்து உள்ளே சென்றால் சுகர் ஏறும் என்பதையும் மறந்து அதிகமாகச் சாப்பிடும் வாய்ப்பு உருவாகும்.

நீரிழிவு நோயர்களுக்கான தீர்வு

எனவே, நீரிழிவு நோயாளிகள் இன்றிலிருந்து தாங்கள் பருகும் தேநீரையோ (டீ) கொட்டை வடிநீரையோ (காபி):

  • சீனி
  • நாட்டுச் சர்க்கரை
  • பனங்கற்கண்டு
  • கருப்பட்டி
  • சுகர் ஃப்ரீ
  • தேன்

என்று எதையும் கலக்காமல் பருகலாம். பாலில் கூட லாக்டோஸ் எனும் இயற்கையான இனிப்பு இருப்பதால், அடங்காத நீரிழிவு இருப்பவர்கள் பால் டீ, பால் காபி பருகுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு:

  • இனிப்பு சேர்க்காத ப்ளாக் டீ
  • இனிப்பு சேர்க்காதப் ப்ளாக் காபி
  • இனிப்பு சேர்க்காத க்ரீன் டீ

என்று பருகுவது அவர்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கும் மந்திரமாகும்.

இதைக் கூற எனக்குத் தகுதி இருப்பதாகவே நினைக்கிறேன். காரணம், நான் கடந்த பத்து வருடங்களாக இனிப்புச் சுவை கொண்ட எதையும் உணவில் சேர்ப்பதில்லை.

Author

Related posts

பயமா.. உனக்கா?!

பேரன்பின் சாட்சியங்கள் – அமுதவல்லி நாராயணனின் ’என்றும் நானறியேன்’ கவிதைத் தொகுப்பை முன் வைத்து…

*திம்மராஜபுரத்துக் கதைகள்* –  நூல் விமர்சனம்