திரிகாலம்
தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள
அந்த மாதத்திற்குக் குழப்பம் இருந்தது
அதே குழப்பம்தான்
அந்த நாளிற்கும் வந்தது
தன்னிலை திரிந்து மாறி நின்றன
தொடக்கத்தில் கோடை மழையெனப்
பெயர் வாங்கி அடித்து வாங்கிய மேமாத மழையும்
நள்ளிரவுக் கோலமாய்க் கோடை மதியமும்
தன்னிலைத் திரிந்து அப்போதைய நிலையின்
வெளியீடாய் இருக்கக் கற்றுக்கொண்டன.
பொருளுலகு
‘ஃபெர்பார்மன்ஸ் இல்லையாம்’
‘வயசாயிடுச்சாம்’
‘அவுட் டேட்டட் ஆயிட்டானாம்’
என அழ மட்டும்தான் இல்லை…
புலம்பித் தீர்த்த மகனை அணைத்து
ஆறுதலுரைத்த வயதான அப்பாவுக்கு
பால் இல்லையென்று அடிமாட்டுக்கு
விலைபேசிய கன்றீன்ற பசு நினைவு எட்டியது
எட்டியும் என்ன
பசு இருந்த சுவட்டோடு தனித்திருந்த தொழுவம்
வேறொன்று வர மறுதினமே இயங்கியது