மருத்துவர் பக்கம் – 45:  மனப்பருமன்

நம்மில் அனைவருக்கும் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும், கண்ணுக்குத் தெரியாத ஆனால் பிறரும் உணரக்கூடிய நோய் இது. உடல் பருமன் குறைக்க எத்தனையோ மெனக்கெடும் நாம், மனப்பருமன் குறைக்க என்ன செய்கிறோம்?

மனப்பருமனா? ஆம்… உடல் பருமன் எவ்வாறு பல நோய்களை உடலுக்குக் கொண்டு வருகிறதோ, அதே போன்று மனப்பருமன் பல நோய்களை மனதுக்குக் கொண்டு வருகிறது. உடல் பருமன் குறைக்க எளிதான தீர்வாகக் குறைந்த மாவு நிறை கொழுப்பு (பேலியோ) உணவு முறையும், ஓட்டமும், நடையும், விரதமும் இருக்கின்றன. ஆனால், மனப்பருமன் குறைக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சிகள் மிகக் கடுமையானவை; அதே சமயம் மிகுந்த பலன் தரக்கூடியவை.

வெற்றி வந்தால் அமைதியும், தோல்வி வந்தால் பொறுமையும் காக்க வேண்டும். ஒரு விஷயத்தைக் கேட்டவுடன் முடிவு செய்யாமல், அது குறித்து இன்னும் தீர விசாரித்துச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். முடிந்தவரை புறம்பேசாமலும், புறம்பேசும் இடங்களைத் தவிர்த்தலும் நலம். நமக்குச் சம்பந்தம் இல்லாத, நமது தலையீடு தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

பிறரது பேச்சு மற்றும் நடத்தை சுதந்திரத்தை மதிப்பதோடு, நமது சுதந்திரம் பிறரது சுதந்திரத்தைப் பாதித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிருக்கும் பாகுபாடின்றி மரியாதை தந்து பழக வேண்டும்; அவர்களது மற்றும் நமது சுயமரியாதைக்கு இழுக்கு நேராமல் காக்க வேண்டும். முடிந்தவரை சுயபுராணம் பாடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது நாளடைவில் சுயதுதியாக மாறி, கூடவே முகஸ்துதி பாடுபவர்களைச் சேர்த்துக்கொள்ளச் செய்யும். இது ஆபத்தான மனநோய்க்கு இட்டுச்செல்லக்கூடும்.

சுய மதம், சொந்த ஊர், நாடு, சுய சாதி மற்றும் குடும்ப மகிமை இவற்றைப் பேசிப் பெருமை அடிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. காரணம், மேற்சொன்ன அனைத்தும் நமக்குக் கிடைத்ததில் நமது பங்கு ஒன்றுமே இல்லை. நம்மை விட வசதி வாய்ப்பில் மேலிருப்பவரைக் கண்டு முடிந்தவரை பொறாமை கொள்ளாமல், அவர்கள் செய்த உழைப்பு மற்றும் தியாகத்தின் பலனால் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

அதேபோல் வசதி வாய்ப்பு மற்றும் பதவியில் கீழிருப்பவரை நிந்தனை செய்யாமலும், பிறர் கண்ணீருக்குக் காரணமாக இருந்துவிடாமலும் இருக்க வேண்டும். பிறர் கண்ணீர் விடக் கண்டால் அதைத் துடைக்க முயல வேண்டும். செல்வம் அமரும் இருக்கைக்கு அருகில் செருக்கும் அமர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இரகசியங்களைப் பேண வேண்டும். பொன்நகையை விடவும் புன்னகையின் மதிப்பு அதிகம் என்று உணர வேண்டும்.

செல்வத்தை ஈட்ட அறத்தைத் தியாகம் செய்யாமலும், முடிந்தவரை கடன் வாங்காமல் வாழ்வதும், வாங்கிய கடனை முறையாகத் திருப்புவதும் அவசியமாகும். பணத்தால் உதவி செய்ய முடியாவிட்டாலும், ஊக்க வார்த்தைகளாலும் செயல்களின் மூலமும் உதவி செய்ய முயல வேண்டும். உண்ண, உடுக்க, வாழ என்று பொருள் சேர்த்தல் நன்று; மாறாக, பல தலைமுறைகளுக்கும் பொருள் சேர்த்தல் நன்றன்று.

துளியும் ஆதாரம் இல்லாத பல தகவல்களைத் தலையில் அல்லது மனதில் ஏற்றிக்கொண்டு அவற்றைப் பரப்புவதும், அறிவியல் ஆதாரமற்ற பல விஷயங்களை ‘முன்னோர்கள் செய்தார்கள்’ என்று கூறி நம்புவதும் என மனப்பருமன் ஏற்றும் பல விஷயங்களை நாம் அனுதினமும் கடந்து வருகிறோம். இவற்றை முடிந்தவரை தவிர்த்து, மனப்பருமன் குறைக்கத் தொடர்ந்து போராடுவோமாக! ஏனெனில், உடல் பருமனை விடவும் மனப்பருமன் மிக ஆபத்தானது!.

(தொடரும்)

Author

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16:  அணக்க நகரம்

ஞான நூல்கள் – 30 & 31 & 32

பாகோஸ் என்கிற நபும்சகன் – 13