மற்றுமொரு சுள்ளி

1.
கல்லின் பிளவில்
புல்லின் நுனி
நுழைகிறது விடியல்.

2.
உடைந்த மண்பாண்டம்
தேங்கிய மழைநீரில்
மிதக்கும் மேகம்.

3.
தனிப்பறவையின் கூவல்
ஆடும் வெற்றூஞ்சல்
காத்திருப்பின் கனம்.

4.
அசையாத கொக்கு
நதியைக் கடக்கும் மேகங்கள்
எதற்கும் அவசரம் இல்லை.

5.
அசையும் வெற்றுக்கிளை
தேடுகிறது காற்று
திரும்பாத சிறகுகள்.

6.
சுள்ளி சேகரிக்கும் பறவை
கூட்டைக் கலைக்கும் காற்று
மற்றுமொரு சுள்ளி.

7.
வாசலில் சிறு செருப்புகள்
மண்ணில் முதல் மழைத்துளி
மலர்ந்த முற்றம்.

8.
காலியான கூடு
புதிய சிறகொலி
திரும்பும் வசந்தம்.

9.
நிலவில்லாத குளம்
மூடப்படாத ஜன்னல்
தாமதிக்கும் ஒளி.

10.
பழைய மரப்பெட்டி
மங்கும் மணம்
உறங்கும் காலம்.

11.
பழுத்து உதிரும் இலை
திறக்காத கடிதம்
முகவரி மாறவில்லை.
*

ஒளிப்படம் மற்றும் குறுங்கவிதைகள்: ராமலக்ஷ்மி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

எண்ட் டோஹ் த்ரெ – 6

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 2