1
பெரிய வீட்டுச் சிவராமலிங்கம் செத்த செய்தி கந்தனுக்கு மதியம் இரண்டு மணிக்கு வந்தது. கீழத்தெரு முனியசாமியின் பையன் சைக்கிளில் மூச்சிரைக்க வந்து, ஓலைக்குடிசையின் தட்டியைத் தள்ளாமலேயே கத்தினான்.
“கந்தன் தாத்தா, பெரிய வீட்டு அய்யா போயிட்டாராம். ஒங்கள ஒடனே வரச் சொன்னாவ.”
கந்தன் வாசலில் உட்கார்ந்து கோடரியைக் கல்லில் தேய்த்துக்கொண்டிருந்தான். கை ஒரு கணம் நின்றது. பிறகு மறுபடியும் தேய்க்கத் தொடங்கினான். கோடரி வெயிலில் ஒரு கோடாக மின்னியது.
உள்ளே அடுப்படியில் கனியம்மாள் கேழ்வரகுக் கூழைக் கரைத்துக்கொண்டிருந்தாள். அகப்பை பானையின் விளிம்பில் தட்டும் சத்தம் நின்றது. அவள் வெளியே வரவில்லை. நாற்பது வருடமாக இந்த ஊரில் யார் செத்தாலும் இந்தக் குடிசைக்குத்தான் முதல் செய்தி வரும். ஆனால் இந்தப் பெயருக்கு அகப்பை நின்றது இதுதான் முதல் தடவை.
கந்தன் எழுந்து, கூரையின் உத்தரத்தில் செருகி வைத்திருந்த கம்பை உருவினான். கருவேலக் கம்பு. ஆளுயரம். அடிப்பக்கம் கரி ஏறியிருந்தது. எத்தனை தலைகளைத் தொட்டிருக்கும் என்று அவன் ஒருநாளும் எண்ணியதில்லை. பறையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான். மூலையில் இருந்த பிளாஸ்டிக் கேனில் தண்ணீர் நிரப்பி மூடியை இறுக்கினான்.
“கூழு குடிச்சுட்டுப் போவும்” என்றாள் கனியம்மாள்.
“வந்து குடிச்சுக்கிடுதேன்.”
அவன் வர நாளை மதியமாகும் என்று இருவருக்கும் தெரியும்.
பாதையில் இறங்கியபோது கனியம்மாளின் குரல் மறுபடியும் வந்தது. “மாரிக்கு ஃபோன் போட்டுச் சொல்லட்டுமா?”
மாரி அவர்களுடைய ஒரே மகன். திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டர். பத்து வருடத்துக்கு முன் ஒருநாள் கந்தன் அவனையும் சுடுகாட்டுக்குக் கூட்டிப் போனான். அன்று அவன் சிதையைப் பார்த்து வாந்தி எடுத்தான். அடுத்த மாதமே திருப்பூருக்கு பஸ் ஏறினான். இப்போது பொங்கலுக்கு வரும்போது மேலத்தெரு முக்கில் இருக்கும் கணேசன் டீக்கடையில் பெஞ்சில் உட்கார்ந்து எல்லோரும் குடிக்கும் கண்ணாடி கிளாஸில் டீ குடிப்பான். கந்தன் அதைப் பார்த்திருக்கிறான்.
“வேண்டாம்” என்றான் கந்தன்.
2
மேலத்தெரு மதிய வெயிலில் கொதித்தது. கந்தன் தெருவின் நடுவில் நடக்கவில்லை. ஓரமாக, சாக்கடைக் கல்லுக்குப் பக்கத்தில் நடந்தான். யாரும் சொல்லித் தரவில்லை. உடம்புக்குள் எங்கோ ஒரு கோடு கிழிக்கப்பட்டிருக்கிறது. கால்கள் அதைத் தாண்டுவதில்லை.
பெரிய வீட்டின் வாசலில் பந்தல் போடத் தொடங்கியிருந்தார்கள். திண்ணையில் சொந்தக்காரர்கள் வெள்ளை வேட்டியும் கறுப்புக் கண்ணாடியுமாக உட்கார்ந்திருந்தார்கள். உள்ளிருந்து ஒப்பாரிச் சத்தம் கேட்டது. முன்னறையின் ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் பெரிய வீட்டு அம்மா உட்கார்ந்திருந்தாள். தலை நரைத்து, நெற்றியில் பொட்டு இல்லாமல். அவள் கந்தனைப் பார்த்தாள். பிறகு பார்வையைத் திருப்பிக்கொண்டாள். கந்தன் வாசலுக்கு நான்கடி தள்ளி நின்றான். தோளிலிருந்த பறையை இறக்கி வைத்தான். கம்பைச் சுவரில் சாய்த்தான். கைகளைக் கட்டிக்கொண்டு காத்திருந்தான்.
பெரிய வீட்டு அய்யாவின் தம்பி மகன் தங்கராசு வெளியே வந்தான். “கந்தா, சாயங்காலம் அஞ்சு மணிக்கு எடுக்கோம். விறகு, வறட்டி எல்லாம் நேத்தே சொல்லி வெச்சாச்சு. அமெரிக்காவுல இருந்து கார்த்திக் வந்துட்டான். கொள்ளி அவந்தான் வைப்பான்.”
“சரிங்க எசமான்.”
“கூலி எப்பவும் போலதான். ஆயிரத்தி ஐநூறு. அரிசி, துணிமணி தனி.” தங்கராசு சொல்லிவிட்டு, திண்ணையில் இருந்த யாரிடமோ திரும்பி, “இவனுவளுக்கு இப்பெல்லாம் ரேட்டு ஏறிப்போச்சுல்லா” என்றான். கந்தன் காதில் அது விழுந்தது. விழ வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டது. அவன் கட்டிய கைகளை இறக்கவில்லை.
அப்போது உள்ளிருந்து ஒருவன் வந்தான். முப்பத்தைந்து வயது இருக்கும். அரைக்கால் சட்டையும் டீஷர்ட்டும் போட்டிருந்தான். கண்கள் சிவந்திருந்தன. விமானத்தில் தூங்காதவனின் கண்கள். ஒரு கையில் ஃபோன். மற்ற கையில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்.
“நீங்கதான் கந்தன் அய்யாவா?”
திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்களுக்குள் ஏதோ அசைந்தது. தங்கராசு தொண்டையைச் செருமினான்.
“ஆமாங்க எசமான்.”
கார்த்திக் படியிறங்கி வந்து கந்தனின் கையைப் பிடித்துக் குலுக்கினான். “அப்பா உங்களப் பத்தி சொல்லியிருக்காரு. இந்த ஊருல எல்லாத்தையும் நீங்கதான் நாப்பது வருஷமா பாத்துக்கிறீங்கன்னு.” பிறகு கையிலிருந்த பாட்டிலை நீட்டினான். “வெயில் ரொம்ப அதிகமா இருக்கு. தண்ணி குடிங்க அய்யா.”
கந்தன் பாட்டிலை வாங்கவில்லை. “தண்ணீ இருக்குங்க” என்று இடுப்பில் கட்டியிருந்த தன் கேனைத் தொட்டுக் காட்டினான். கார்த்திக் கொஞ்சம் குழம்பியவனாகப் பாட்டிலைத் திரும்ப எடுத்துக்கொண்டான். திண்ணையில் யாரோ லேசாகச் சிரித்தார்கள்.
“எவ்வளவு நேரம் ஆவும் அய்யா? நாளைக்கு சாயங்காலம் எனக்கு சென்னைல இருந்து ஃப்ளைட்.”
“ராத்திரி முழுக்க ஆகுங்க. காலைல பாலூத்தணும்.”
கார்த்திக் தலையாட்டினான். “தூத்துக்குடில எலக்ட்ரிக் க்ரிமடோரியம் இருக்குன்னு பாத்தேன்…”
திண்ணையிலிருந்த பெரியவர் ஒருவர் எழுந்துவிட்டார். “இந்தக் குடும்பத்துல அதெல்லாம் கெடையாதுப்பா. உங்க தாத்தா, அவுங்க அப்பா எல்லாரும் இந்தச் சுடுகாட்டுலதான் காரியம் பண்ணியிருக்கோம்.”
கார்த்திக் கந்தனைப் பார்த்து லேசாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு கூட்டு இருந்தது. நாம் இருவரும் இந்தப் பெரியவர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டவர்கள் என்பதுபோல. கந்தன் தரையைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
3
அவனுக்கு அன்று பன்னிரண்டு வயது.
பங்குனி மாசம். வெயில் மண்டையைப் பிளந்தது. அப்பா மாடசாமி பெரிய வீட்டு வயலில் கதிர் அறுத்துக்கொண்டிருந்தார். அவருக்குக் கஞ்சிச் சட்டி எடுத்துக்கொண்டு களத்துக்குப் போவது அவன் வேலை. மேலத்தெரு வழியாகப் போனால் கால் மைல் குறையும். ஓரமாக, சாக்கடைக் கல்லுக்குப் பக்கத்தில், தலையைக் குனிந்துகொண்டு போனால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.
அன்று தாகம் அவனை நிறுத்தியது. பெரிய வீட்டுத் திண்ணையின் ஓரத்தில் ஒரு வெண்கலச் செம்பு இருந்தது. வழிப்போக்கர்களுக்கு, வீட்டுக்கு வருகிறவர்களுக்கு. புளி போட்டுத் தேய்த்து, தங்கம் போல மின்னியது. அதன் வாயில் ஒரு சின்ன நசுங்கல். செம்பின் கழுத்தில் வியர்வை போலத் தண்ணீர்த் துளிகள் பூத்திருந்தன.
தெருவில் ஆள் நடமாட்டமில்லை. அவன் கஞ்சிச் சட்டியைக் கீழே வைத்தான். செம்பை எடுத்தான். அண்ணாந்து, உதடு படாமல், மேலிருந்து வாய்க்குள் ஊற்றிக்கொண்டான். அப்பா சொல்லிக்கொடுத்தது அப்படித்தான். தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. மண் பானைத் தண்ணீரின் குளிர்ச்சி இல்லை. உலோகத்தின் குளிர்ச்சி. தொண்டைக்குள் இறங்கும்போதே நெஞ்சு வரை குளிர்ந்தது.
செம்பைக் கீழே வைத்தபோது வீட்டு வாசலில் இருபது வயது சிவராமலிங்கம் நின்றுகொண்டிருந்தான். வெள்ளைச் சட்டையும் மணிக்கட்டில் HMT வாட்ச்சும் பார்த்தவுடனே பெரிய இடத்துப் பிள்ளை எனத் தெரிந்தது. உள்ளே திரும்பிக் கூப்பிட்டான்.
“யம்மா, கொஞ்சம் சாம்பலும் புளியும் எடுத்தா.”
சாம்பலும் புளியும் வந்தது. கூடவே தெருவின் திண்ணைகளில் பெண்களும் வந்தார்கள்.
“உக்காருல. இந்தச் சாம்பலையும் புளியையும் போட்டு செம்பை நல்லா தேய்ல செறுக்கியுள்ள.” அவன் கத்தியதில் மேலும் சில வீட்டுச் சன்னல்கள் திறந்துகொண்டன.
அவன் தெருவின் நடுவில் கொதிக்கும் மண்ணில் குத்தவைத்து உட்கார்ந்தான். செம்பின் மேல் சாம்பலைப் போட்டுப் புளியால் தேய்த்தான். உள்ளே, வெளியே, கழுத்தில், அடியில். “நல்லா தேய்ல” என்றான் சிவராமலிங்கம். அவன் இன்னும் தேய்த்தான். தன்னுதடு படவே இல்லை என்று சொல்ல நினைத்தான். வார்த்தை வரவில்லை. ஏழு தடவை தேய்க்க வைத்தார்கள். ஒவ்வொரு தடவைக்குப் பிறகும் போன தையில்தான் அந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்திருந்த ஒருத்தி நின்றபடியே, செம்பின் மேல் தண்ணீர் ஊற்றினாள். ஒவ்வொரு தடவையும் வாயில் முந்தானையை வைத்துக்கொண்டு சிரித்தாள். ஒரு சின்னப் பையன் கைதட்டினான்.
தெருவின் மறுமுனையில் அப்பா வந்து நின்றார். யாரோ ஓடிப்போய்ச் சொல்லியிருக்க வேண்டும். அவர் நெருங்கி வரவில்லை. ஏழாவது தடவை முடியும் வரை அங்கேயே நின்றார். முடிந்ததும் சிவராமலிங்கம் செம்பைக் காலால் தள்ளிவிட்டான்.
“இத இனி தொழுவத்துல மாட்டுக்குத் தண்ணி காட்ட வெச்சுக்கிடுங்க.”
அப்பா அப்போதுதான் நெருங்கி வந்தார். கஞ்சிச் சட்டியை எடுத்துக்கொண்டார். இருவரும் நடந்தார்கள். அவன் கைகள் இரண்டும் சாம்பலும் புளியுமாக இருந்தன. அவன் அவற்றைத் துடைக்கவில்லை. வீடு சேரும் வரை அவை காய்ந்து, விரல் இடுக்குகளில் வெடித்தன.
அன்றிரவு கீழத்தெருவில் கிழவியொருத்தி இறந்து போனாள். அப்பா பறை அடித்தார். அவன் ராத்திரி முழுக்கக் கேட்டுக்கொண்டு படுத்திருந்தான். அப்பா அதற்கு முன்போ பின்போ அவ்வளவு வேகமாக அடித்து அவன் கேட்டதில்லை. விடியும் வரை பறைச் சத்தம் நிற்கவில்லை.
அந்தச் செம்பு அதற்குப் பிறகு பெரிய வீட்டுத் தொழுவத்தில், கல் தொட்டிக்குப் பக்கத்தில் கிடந்தது. புளி போட்டுத் தேய்க்க யாருமில்லாததால் அதன் தங்க நிறம் மங்கி, பச்சை பூத்து, பிறகு கறுத்தது. மேலத்தெருவுக்குப் பறை அடிக்கப் போகும் ஒவ்வொரு முறையும் தொழுவத்தின் தட்டிக்குள் அவன் கண்கள் தானாகப் போகும். அது அங்கேயே இருக்கும். மாடுகள் அதிலிருந்து குடித்தன. அன்றிலிருந்து மேலத்தெருவில் அவன் ஒருமுறைகூடத் தண்ணீர் குடித்ததில்லை. எந்த இழவுக்குப் போனாலும் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு போவான்.
4
ஐந்து மணிக்கு உடலைத் தூக்கினார்கள். கந்தன் முன்னால் பறை அடித்துக்கொண்டு நடந்தான். பாடைக்குப் பின்னால் கார்த்திக் கொள்ளிச் சட்டியோடு நடந்தான். அவன் சித்தப்பா மகன் ஒருவன் எல்லாவற்றையும் ஃபோனில் படம் பிடித்துக்கொண்டு வந்தான்.
சுடுகாட்டில் விறகை அடுக்கினான் கந்தன். அடியில் வறட்டி, அதற்கு மேல் கருவேல விறகு, தலைப்பக்கம் கனமாக. அது அவன் அப்பா சொல்லிக்கொடுத்தது. தலைதான் கடைசியாக எரியும். இருபத்தி மூன்று வருடத்துக்கு முன் அப்பா மாடசாமி செத்தபோது, கீழத்தெருச் சுடுகாட்டில் அவருக்கும் இப்படித்தான் அடுக்கினான். அன்று கொள்ளி வைத்ததும், நடுச்சாமத்தில் கம்பை உயர்த்தியதும் அவன்தான். கொள்ளி வைப்பவனும் வெட்டியானும் ஒருவனாக இருந்த ஒரே இரவு அது. அன்று அவன் கை நடுங்கியது. அதற்குப் பிறகு ஒருநாளும் நடுங்கியதில்லை. பிணத்தை விறகின் மேல் கிடத்தி, வறட்டியால் மூடி, மேலே ஈர மண் பூசினான். அவன் கைகள் வேகமாக, நிதானமாக வேலை செய்தன. இந்த உடலுக்கும் மற்ற உடல்களுக்கும் அந்தக் கைகளுக்கு வித்தியாசம் தெரியவில்லை.
கார்த்திக் தோளில் ஓட்டைப் பானையைச் சுமந்துகொண்டு சிதையை மூன்று முறை சுற்றி வந்தான். ஒவ்வொரு சுற்றுக்கும் கந்தன் பானையில் அரிவாளால் ஓர் ஓட்டை போட்டான். தண்ணீர் தாரையாக வழிந்தது. மூன்றாவது சுற்றில் கார்த்திக் பானையைப் பின்னால் போட்டு உடைத்தான். கொள்ளி வைத்தான். பிறகு அழுதான். அது சொந்தக்காரர்களுக்காக அழுத அழுகை அல்ல. முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, தோள்கள் குலுங்க அழுதான். யாரும் அவனை நெருங்கவில்லை. கந்தன் சிதையின் மறுபக்கம் நின்று நெருப்பைக் கிளறினான்.
திரும்பிப் பார்க்காமல் போக வேண்டும் என்பது வழக்கம். சொந்தக்காரர்கள் போய்விட்டார்கள். கார்த்திக் கொஞ்சம் தள்ளி ஒரு கல்லில் உட்கார்ந்தான்.
“அய்யா, ஒண்ணு கேக்கட்டுமா?”
கந்தன் நெருப்பைப் பார்த்தபடியே நின்றான்.
“அப்பா எப்படிப்பட்டவரு? நீங்க அவர நாப்பது வருஷமா பாத்திருப்பீங்க. எனக்குத் தெரியாது. ஆறாவது முடிஞ்சதும் ஊட்டி ஹாஸ்டல். அப்புறம் சென்னை, அப்புறம் ஹூஸ்டன். வருஷத்துக்கு நாலஞ்சு தடவ ஃபோன்ல பேசுவோம். அவரு எப்பவும் வயலப் பத்தித்தான் பேசுவாரு. நான் எதுவும் கேட்டதில்ல.”
நெருப்பு எழுந்து வறட்டியைக் கவ்வியது. தலைப்பக்கம் இன்னும் கறுப்பாகவே இருந்தது.
“அய்யா பெரிய மனுசருங்க எசமான்” என்றான் கந்தன்.
கார்த்திக்குக்கு அந்தப் பதில் போதுமானதாக இருந்தது போலத் தெரிந்தது. அல்லது அதற்கு மேல் கேட்க அவனுக்குப் பயமாக இருந்திருக்கலாம். பர்ஸிலிருந்து இரண்டாயிரம் ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து நீட்டினான்.
“இத வச்சிக்கிடுங்க அய்யா. கூலி தங்கராசு அண்ணன் குடுப்பாங்க.”
கந்தன் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கினான். பழக்கத்தில் தலை தானாகக் குனிந்தது.
“ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா அய்யா? என் பசங்களுக்குக் காட்டணும். நம்ம ஊரு, நம்ம வழக்கம் எல்லாம் அவுங்களுக்குத் தெரியாது.”
கந்தன் எரியும் சிதைக்கு முன்னால் நின்றான். கார்த்திக் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஃபோனை உயர்த்திப் பிடித்தான்.
கார்த்திக் ஃபோனைத் திருப்பிக் காட்டினான். “நல்லா வந்திருக்கு அய்யா.” ஸ்க்ரீனில் இரண்டு பேர். ஒருவன் சிரித்துக்கொண்டிருந்தான். இன்னொருவன் நெருப்பு வெளிச்சத்துக்குக் கண்களைச் சுருக்கியிருந்தான். முகத்தின் ஒரு பக்கம் நெருப்பின் சிவப்பு, மறுபக்கம் இருட்டு. தோளில் இன்னொருவனின் கை. தன் முகத்தை அவ்வளவு பெரிதாக, அவ்வளவு அருகில் கந்தன் பார்த்தது அதுதான் முதல் தடவை. அது யாரோ ஒரு கிழவனின் முகம்போல இருந்தது.
5
நடுச்சாமத்துக்குப் பிறகு மண்டை வெடிக்க வேண்டிய நேரம்.
கந்தன் கருவேலக் கம்பைக் கையில் எடுத்தான். சிதைக்குள் தலைப்பக்கம் நெருப்பு வெள்ளையாகக் கனன்றுகொண்டிருந்தது. இந்த இடத்தில் சில வெட்டியான்கள் இரண்டு மூன்று முறை அடிப்பார்கள். அவன் அப்பா ஒருமுறைதான் அடிப்பார். “ஒரே அடி. உசுரோட இருக்கும்போது ஆருக்கும் ஒரு அடி கொறைச்சு அடிச்சிருக்க மாட்டானுவ. செத்த பெறகாவது ஒண்ணோட நிறுத்து” என்பார்.
அவன் கம்பை உயர்த்தினான்.
அந்த நொடியில் அவனுக்குள் எதுவும் எழவில்லை. ஐம்பது வருடமாக இதற்காகக் காத்திருந்ததுபோல் எந்தக் கொதிப்பும் வரவில்லை. மனதுக்குள் ஒரு கெட்ட வார்த்தைகூட வரவில்லை. ஆத்திரம் எழும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். அதுதான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கைகள் கம்பைப் பிடித்திருந்த விதம், கால்களை ஊன்றியிருந்த விதம், இடுப்பு திரும்பிய கோணம் எல்லாம் போன வாரம் கீழத்தெருவில் செத்த பூச்சியம்மாளுக்கு இருந்தது போலவே இருந்தது. போன மாதம் லாரியில் அடிபட்டுச் செத்த பதினெட்டு வயதுப் பையனுக்கும் இப்படியேதான்.
ஒரே அடி.
சிதைக்குள் மெல்லிய ஒரு சத்தம். தீப்பொறிகள் மேலே எழுந்து இருட்டில் அணைந்தன.
அவன் கம்பைத் தரையில் ஊன்றிக்கொண்டு நின்றான். பிறகு ஒரு பீடியைப் பற்ற வைத்தான். தூரத்தில் குளத்துக்கரைப் பக்கம் ஒரு நரி ஊளையிட்டது. அவன் சிதைக்குப் பக்கத்தில் மணலில் உட்கார்ந்தான். நெருப்பின் சூடு முகத்தில் அடித்தது.
ஒரு மணிக்கு மேல் சுடுகாட்டின் முள்வேலிக்கு வெளியே ஒரு லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. கனியம்மாள் கையில் தூக்குச் சட்டியுடன் வந்தாள். அவள் வேலியைத் தாண்டி உள்ளே வரமாட்டாள். சட்டியை வேலிக்கல்லின் மேல் வைத்துவிட்டு லாந்தரைத் தாழ்த்திக்கொண்டு நின்றாள். கந்தன் எழுந்து போய் சட்டியை எடுத்தான். கூழ் இன்னும் லேசாகச் சூடாக இருந்தது. வேலிக்கு அந்தப் பக்கம் அவள், இந்தப் பக்கம் அவன். அவன் குடித்து முடிக்கும்வரை அவள் போகவில்லை.
“அடிச்சாச்சா?” என்றாள்.
அவன் தலையாட்டினான்.
அவள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். லாந்தர் வெளிச்சம் அவன் முகத்தில் படும்படி உயர்த்திப் பிடித்தாள். எதையோ தேடுவதுபோல. எதுவும் கிடைக்கவில்லை என்பது அவள் முகத்தில் தெரிந்தது. ஆனால் அது நிம்மதியா ஏமாற்றமா என்று அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. சட்டியை வாங்கிக்கொண்டு இருட்டுக்குள் திரும்பி நடந்தாள்.
அவன் கைகளைப் பார்த்தான். சிதையின் சாம்பல் விரல் இடுக்குகளில் படிந்து காய்ந்திருந்தது. மணிக்கட்டு வரை சாம்பல் நிறம். அவன் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்தான். சாம்பல் உதிரவில்லை. விரல் இடுக்குகளில் அது இன்னும் இறுகியது. புளியின் புளிப்பு வாசம் அவன் நாசிக்குள் வந்தது. அது எரியும் உடலின் வாடைக்கு நடுவே எங்கிருந்து வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் மூக்கைத் துடைத்துக்கொண்டான். ஆனாலும் புளிப்பு வாசம் போகவில்லை.
விடியும் வரை நெருப்பைக் கிளறிக்கொண்டிருந்தான். அது அவன் வேலை. கேனில் இருந்த தண்ணீர் நடுச்சாமத்துக்கு முன்பே தீர்ந்துபோயிருந்தது.
காலையில் சொந்தக்காரர்கள் வந்தார்கள். பாலூற்றினார்கள். கார்த்திக் ஒரு சின்ன மண் கலயத்தில் எலும்புகளைப் பொறுக்கினான். கந்தன் அவனுக்குக் காட்டிக்கொடுத்தான். இது தோள் எலும்பு, இது விரல் எலும்பு, இதை எடுத்துக்கிடுங்க எனச் சுட்டிக்காட்டினான். கார்த்திக் ஒவ்வொன்றையும் இரண்டு விரல்களால் கவனமாக எடுத்தான். அவன் கைகள் நடுங்கின.
மதியம் பன்னிரண்டு மணிக்கு கார்த்திக்கின் கார் சென்னைக்குக் கிளம்பியது. ஜன்னலைத் தாழ்த்தி கந்தனைப் பார்த்துக் கை அசைத்தான். “தேங்க்ஸ் அய்யா. ஃபோட்டோ வாட்ஸ்அப்ல அனுப்புறேன்.” கந்தனிடம் வாட்ஸ்அப் இல்லை. அவன் அதைச் சொல்லவில்லை.
6
கூலி வாங்க கந்தன் பெரிய வீட்டுக்குப் போனான். தெருவின் ஓரமாக, சாக்கடைக் கல்லுக்குப் பக்கத்தில் நடந்தான்.
பின்வாசலில் தங்கராசு ஒரு மூட்டையைக் கொடுத்தான். ஒரு மரக்கால் அரிசி, பெரிய வீட்டு அய்யா கடைசியாகப் படுத்திருந்த பாய், அவர் உடுத்தியிருந்த இரண்டு வேட்டிகள். செத்தவனின் துணிமணிகள் வெட்டியானுக்குத்தான் என்பது வழக்கம்.
கந்தன் மூட்டையை வாங்கிக் காலடியில் வைத்தான். கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
உள்ளே போக இரண்டடி எடுத்து வைத்த தங்கராசு திரும்பிப் பார்த்தான். “என்னல?”
கந்தன் அமைதியாக நின்றிருந்தான்.
“ஓ, கூலியா?” தங்கராசு சிரித்தான். பின்வாசலில் அவர்கள் இருவரைத் தவிர யாருமில்லை. ஆனாலும் திண்ணை நிறைய ஆள் இருப்பதுபோல் குரலை உயர்த்தினான். “அதான் சின்னவன் ரெண்டாயிரம் குடுத்தானாம்லா. டாலர் காசு. ஆயிரத்தி ஐநூறுக்கு ரெண்டாயிரம். மீதி ஐநூற நான் திருப்பிக் கேக்காம விட்டதே பெருசு.”
கந்தனின் தலை தானாகக் குனிந்தது. தங்கராசு தொழுவத்துப் பக்கம் போய் எதையோ எடுத்து வந்து மூட்டையின் மேல் வைத்தான்.
“இதையும் ஒனக்கே குடுக்கச் சொன்னாங்க பெரியம்மா. மாட்டுக்காடியில கெடந்துச்சு. மாடெல்லாம் வித்தாச்சு. இனி என்னத்துக்கு.”
கறுத்துப்போன வெண்கலச் செம்பு. கந்தன் அதைக் கையில் எடுத்தான். கனமாக இருந்தது. ஆனால் அன்று அவன் சின்னக் கைகளுக்கு இருந்ததைவிட லேசாக இருந்தது. அவன் கட்டைவிரல் தானாக அதன் வாய்க்குப் போனது. அந்த நசுங்கல் அங்கேயே இருந்தது.
அவன் முன்னறைப் பக்கம் பார்த்தான். ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் யாரும் இல்லை. அந்த அறையின் இருட்டு மட்டும் இருந்தது. பெரியம்மா இதை ஏன் தனக்குக் கொடுக்கச் சொன்னாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் அதை மறந்திருக்கலாம். அல்லது மறக்காமல் இருந்திருக்கலாம். இரண்டில் எது என்று அவனால் சொல்ல முடியவில்லை. இரண்டுமே அவனுக்கு ஒரே மாதிரிதான் கனத்தன.
மூட்டையைத் தோளில் வைத்துக்கொண்டு, செம்பைக் கையில் பிடித்தபடி தெருவில் நடந்தான். மதியவேளை என்பதால் தெருவில் யாரும் இல்லை. ஒரு வீட்டுத் திண்ணையில் மட்டும் பள்ளிக்கூடச் சீருடையில் பெண் பிள்ளை காதில் இயர்ஃபோனோடு ஃபோனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கடந்து போனபோது அவள் தலையை உயர்த்தவில்லை. ஒரு நாய் வீட்டின் நிழலில் சுருண்டு படுத்திருந்தது. அது தலையைத் தூக்கி அவனைப் பார்த்தது. பிறகு மறுபடியும் படுத்துக்கொண்டது.
நேற்று மதியத்திலிருந்து அவன் தண்ணீர் குடிக்கவில்லை என்பது அப்போதுதான் அவனுக்கு உறைத்தது. நாக்கு வாயின் மேல்பக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. தொண்டைக்குள் சிதையின் புகை இன்னும் இருந்தது.
தெரு முக்கில் ஊராட்சிக் குடிநீர்க் குழாய் இருந்தது. ஐந்து வருடத்துக்கு முன் வந்தது. கீழத்தெருப் பெண்களும் இப்போது அங்கே குடம் வைக்கிறார்கள். யாரும் எதுவும் சொல்வதில்லை. அவன் அதைக் கடந்து போகும்போதெல்லாம் பார்க்காமலேயே கடந்து போவான்.
அந்தக் குழாயின் முன் நின்றான். மூட்டையைக் கீழே இறக்கி வைத்தான். செம்பைக் குழாய்க்கு அடியில் பிடித்து, திருகைத் திறந்தான்.
தண்ணீர் செம்பின் கறுத்த அடியில் விழுந்து சத்தமிட்டது. நிறைந்து, வழிந்து, அவன் விரல்களின் மேல் ஓடியது. விரல் இடுக்குகளில் காய்ந்திருந்த சாம்பல் கரைந்து, கறுப்புக் கோடுகளாக மணிக்கட்டில் இறங்கியது.
அவன் திருகை மூடினான். செம்பை இரண்டு கைகளாலும் தூக்கினான். அண்ணாந்தான். உதடுகள் செம்பின் விளிம்பைத் தொட்டன. அந்த நசுங்கலின் மேல்.
நீண்ட நேரம் குடித்தான். தண்ணீர் வாயோரம் வழிந்து, தாடையிலிருந்து நெஞ்சில் இறங்கி, அங்கே படிந்திருந்த சாம்பலைக் கழுவிக்கொண்டு போனது.
செம்பைக் கீழே இறக்கியபோது அதில் ஒரு மிடறுகூட மிஞ்சவில்லை.
தண்ணீர் குளிர்ச்சியாக இருந்தது. மண் பானைத் தண்ணீரின் குளிர்ச்சி இல்லை. உலோகத்தின் குளிர்ச்சி.