நானும் அரசியலும்

இந்தத் தேர்தல்ல நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு நீங்க என்னைக் கேட்டா பட்டுன்னு சொல்லிடுவேன். “போன தேர்தல்ல?” அப்டீன்னு கேட்டீங்கன்னா, அது வந்து வேற கட்சிக்குன்னு இழுப்பேன். இன்னும் சீரியஸா அதுக்கு முன்னாடி தேர்தல்ல ஓட்டை யாருக்கு போட்டே நீன்னு என்னையைக் கேட்டீங்கன்னு வைங்க, திட்டாதீங்க-அந்தத் தேர்தல்ல நான் ஓட்டுப் போடவேயில்லை.

அப்ப கிளம்பு, உனக்கு அரசியல் பத்தி கட்டுரை எழுத தகுதியே இல்லைன்னு சொல்றீங்களா? உண்மைதாங்க. ஆனால், தலைப்பு ‘நானும் அரசியலும்’னுல்ல இருக்கு? அதனால, கொஞ்சம் நானும் இந்த விவகாரம் புடிச்ச அரசியலுங்கிறதைப் பத்திக் கொஞ்சம் எழுதிடறேனே? ப்ளீஸ்!

அதாகப்பட்டது நான் ஒரு சாதாரண வாக்காளன். அல்லது வாக்காளினி. ஏதோ ஒண்ணு. அதாங்க முக்கியம்? சரி, அதை விடுங்க. நம்ம தலைப்புக்கு வர்றேன். பொதுவா நான் செய்திகள் அதிகம் கேக்கிறதில்லீங்க. ஆனா தேர்தல் சமயத்துல அரசியல் தாகத்தின், (தாக்கத்தின்?) காரணமா செய்திகளை கொஞ்சம் கவனமாக கேப்பேங்க.

அந்தக் கட்சிக்கும், இந்தக் கட்சிக்கும் கூட்டணி – அடப் பாவிகளா? போன தேர்தல்ல ஜென்ம எதிரிகளா சண்டை போட்டீங்களேப்பா?

இவங்க கூட்டணிலேருந்து அவங்க விலகிட்டாங்க – நாலு வருஷம் முன்னாடி தாயாப் புள்ளையா பழகிட்டிருந்தீங்களே நண்பாஸ்?

வந்த கட்சிக்கும், நொந்த கட்சிக்கும் தொகுதி உடன்பாடு – சாமி, இது மட்டும் புரியவேயில்லை தங்கங்களா!

புரியலேன்னா, புரிஞ்சிக்க முயற்சி பண்ணுன்னு சொல்றீங்களா? பண்ணுனேனே?

எனக்குத் தெரிஞ்ச அரசியல் நிபுணர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். “கூட்டணின்னா என்ன?”

அவர் சொன்னாரு: “ரெண்டு மூணு கட்சிகள் ஒண்ணா சேந்து ஒரு வேட்பாளரை நிறுத்தி, கூட்டணி கட்சிகள் எல்லாம் அந்த ஒரு வேட்பாளருக்கே ஓட்டு கேப்பாங்க.”

நியாம்தானே? நல்ல வேட்பாளரா இருந்தா எல்லாரும் ஆதரிக்க வேண்டியதுதானே? சரி, கூட்டணி விஷயம் ஓகே. அதென்னது தொகுதி உடன்பாடு? மண்டைக்குள்ள நம் நமன்னு அரிச்சிக்கிட்டு இருந்த சந்தேகத்தை நம்மகிட்ட சிக்குன நிபுணர்கிட்ட கேட்டேன்.

பதில் தயாரா இருந்துச்சி: “தொகுதி உடன்பாடுன்னா கட்சிகள் அவங்களுக்குள்ளேயே செஞ்சிக்கிற ஒரு விதமான அட்ஜஸ்ட்மெண்ட்.”

அட்ஜஸ்ட்மெண்ட் இல்லாம வாழ்க்கையே இல்லையே? அப்புறம் அரசியல் மட்டும் என்ன? அதனால சரி, இதுவும் ஓகே. ஆனா என்ன விதமான அட்ஜஸ்ட்மெண்ட், “இதும் கூட்டணி மாதிரியேவா நிபுணர்?”

“இல்லை தொகுதி உடன்பாடுன்னா வேற.”

“அப்போ, வேற வேற வேட்பாளர்ங்களா?”

“இல்லே, ஒரே வேட்பாளர்தான். ஆனா கூட்டணி வேற. உடன்பாடு வேற.”

“ஓ. ஓகே. ஓகே.” ரொம்ப நல்லாப் புரிஞ்சிடுச்சிங்க அரசியல்!

எனக்கும் புரிஞ்சுதா இல்லையான்னு என் முழியிலேயே தெரிஞ்சிருக்கும் போல. வல்லுனர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாவே சில விவரங்களை எடுத்துச் சொன்னார்.

“எதிர்பார்த்த மாதிரியே அந்தக் கூட்டணி உடைஞ்சிடுச்சி.”

“ஏங்க?”

“இவங்க கேட்ட சீட் கொடுக்கலை இல்லே? அதான்.”

சரியாப் போச்சு. அப்ப கூட்டணி எல்லாம் கொள்கையைப் பொறுத்த சமாச்சாரம் இல்லையா? மைண்ட் வாய்ஸை மைண்டோட நிறுத்திக்கிட்டேன்.

அரசியல் கொஞ்சம் சிரமமான விஷயம்தான் போல. புரிஞ்சிக்கிறதுக்கு சற்றே அதிகமான புத்திசாலித்தனம் அவசியம் என்றே படுகிறது. கலர் துண்டுகளும், கரை வேட்டிகளும் சட்டென்று மின்னல் வேகத்தில் மாறிவிடுகின்றன. ஒருவர் இன்னொருவரைத் திட்டுகிறார். அடுத்த நாளே இருவருமாக சேர்ந்து வேறு ஒருவரை ஏசுகிறார்கள்.

காலையில பள்ளிக்கூட விழாவுல, “ஜாதிகள் இல்லையடி பாப்பா”ன்னு வசனம் பேசுறாங்க. சாயங்காலம் பிரஸ் மீட்ல, “எங்கள் சங்கம் முடிவு செய்திருப்பதன் படி எங்களின் வோட்டு….” – மிச்சத்தை நான் சொல்லணுமா? ஐ மீன் எழுதணுமா?

இதுல தொல்லை என்னன்னா, நாமளே நம்ம ஜாதியைப் பத்தி அதிகம் யோசிச்சிருக்க மாட்டோம். இவங்க எல்லாம் சேந்து நமக்கு ஞாபகபடுத்திடுவாங்க. அது கூடப் பரவால்ல. மத்தவங்க குலம் என்ன கோத்திரம் என்னன்னு சட்டை கூடப் பண்ண மாட்டோம். இந்த அரசியல்வாதிங்க விடுற ஸ்டேட்மெண்ட்டால – விடுங்க, சட்டை பண்ணாத விஷயத்தை சட்டை பண்ணாமலே இருப்போம்.

ஆனா ஒண்ணுங்க, அரசியல்வாதிங்ககிட்ட ஒற்றுமை அதிகங்க. அவங்களுக்குள்ள ஆயிரம் இருந்தாலும் மக்கள்கிட்ட மட்டும், ஸாரி, மக்களை மட்டும் விட்டே கொடுக்க மாட்டாங்க. மக்கள் நலம்தான் அவங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால ஆட்சி மாறினா, நல்ல திட்டங்கள் மாறாது. தொடரும். என்னது? பொய் சொல்றேனா? பின்னே? அரசியல் பத்தி கட்டுரைங்க. பொய் இல்லாம எழுத நான் என்ன மகாத்மா காந்தியா?

அப்புறம் அரசியலுக்கு சினிமாவிலேருந்து வந்தா ஏன் திட்றாங்கன்னே தெரியல. மத்த வேலை செய்றவங்க அரசியலுக்கு வர்ற மாதிரி அவங்களும் ஒரு வேலை செஞ்சிட்டு அரசியலுக்கு வர்றாங்க. அவ்ளோதானே? அதே மாதிரி அரசியல்வாதிகளின் மகனோ மகளோ அரசியலுக்கு வர்றதுல என்ன ஆச்சரியமிருக்கு? டாக்டர் பசங்க டாக்டருக்குதானே படிக்கிறாங்க?

அப்புறம் தேர்தல் சமயத்துல ரோட்டு சுவர்ல எல்லாம் கட்சி விளம்பரத்தை அழிச்சிடறாங்க. ஏன்னே தெரியலை. எனக்கெல்லாம் எங்க தொகுதி வேட்பாளர் யாருன்னு சுவரைப் பாத்துப் படிச்சிதான் பழக்கம். என்னைக்கு தேர்தல்லுன்னும் அந்த சுவர்தான் சொல்லும். தேர்தல் கமிஷன் இந்த சின்ன கடுகு சமாச்சாரத்தை விட்டுட்டு பெரிய பெரிய பூசணிக்காய், பரங்கிக்காய் விஷயமெல்லாம் இருக்குன்னு யோசிக்கிறாங்களா இல்லையான்னு தெரியல.

இது என்னடா இது, ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்காம எல்லாமே சொள்ளைங்குது. எல்லாரும் சொத்தைங்கிற விஷயத்தை சரிதாங்குதுன்னு யோசிக்கிறீங்களா? உங்களை யோசிக்க வைக்கணும்னுதான் இந்தக் கட்டுரையே.

சின்னச் சின்ன விஷயங்களை ஒதுக்கித்தள்ளுங்கள். உண்மையில் மக்களுக்கு நன்மை செய்பவர்களை கண்டறியுங்கள். அட்டையைப் பார்த்து புத்தகத்தை முடிவு செய்யாதீர்கள். அது நயமிக்க அட்டைக்கும் பொருந்தும். சுமாரான அட்டைக்கும் பொருந்தும்.

போதும் நிப்பாட்டுன்னு சொல்றது கேக்குது. அரசியலைப் பத்தின்னு ஆரம்பிச்சிட்டு அட்வைஸ் பண்ணலேன்னா எப்டீங்க? என்னதான் திக்கித் திணறி எழுதுனாலும் ஐநூறு வார்த்தையை தாண்டலீங்க என் கட்டுரை. அவ்ளோதாங்க எனக்கும் அரசியலுக்கும் உள்ள சொந்தம். என்ன கொஞ்சம், இல்லை இல்லை, ரொம்ப ரொம்ப தூரத்து சொந்தம்.

ஆயிரம் வார்த்தைகள் கூட எட்டாத இந்த பந்தம் என்னைப் படுத்துற பாடு இருக்கே? ஒரு கருத்து சொன்னா, கட்டம் கட்டிடுறாங்க. சொல்லாம இருந்தா ஓரங்கட்டிடறாங்க. இதுவா, அதுவா, இந்தப் பக்கமா, அந்தப் பக்கமான்னு முடிவெடுத்தே ஆகணுமா என்னா? நடுவாக்குல இப்டிக்கா ஓரமா வாழ்ந்துட்டுப் போலாம்னா, வழியே இல்லீங்க.

சொன்ன மாதிரி அரசியல்வாதிங்ககிட்ட ஒற்றுமை அதிகங்க. என்னை மாதிரி குழப்பவாதிங்களையும் அடிச்சி, ஐ மீன் ஆதரிச்சி, அனுசரிச்சி, ஓட்டுப் போடலேன்னாலும் பரவால்லேன்னு விட்டுறாங்க பாருங்க.

அதாங்க அரசியல். சந்தடி சாக்குல என் பேனாவுக்கு நான் உங்ககிட்ட எல்லாம் ஓட்டு கேட்டுட்டேன் பாருங்க. அதுவும் அரசியல்தாங்க.

ஆனாலும் மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருக்கதாங்க செய்யுது. நான் நம்ம மாநிலம்னு சொல்லலே, இந்தியான்னு சொல்லலே. உலகம் பூராவுமே, என்னதான் ஜனநாயகம், மக்களாட்சின்னு சொன்னாலும், ஆள்கிறவர்களுக்கும், ஆளப்படுகிறவர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்குங்க.

ஆள்கிறவர்களில் யாரும் உணவின்றி, வீடின்றி, உடையின்றி, கல்வியின்றி, மருத்துவமின்றி, உரிமையின்றி, சுதந்திரம் இன்றி இல்லை. ஆளப்படுகிறவர்கள்???

Author

Related posts

நினைவோட்டத்தின் திருக்கார்த்தியல்

உயிரின் எடையும், அதற்கான விலையும்!

மூன்றெழுத்து அதிசயம் :- என் அப்பா