நினைவோட்டத்தின் திருக்கார்த்தியல்

சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி கண்டேன். போரினால் பாதிப்படைந்த இரண்டு பாலஸ்தீன சிறுவர்கள் தொலைவில் இருந்து தண்ணீரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒருவன் முன்னே இழுக்க பின்னவன் பின்னாலிருந்து தள்ளிக்கொண்டே வந்தான். வழியெங்கும் தண்ணீர் சிந்தியபடி கண்களில் கண்ணீர் சிந்தியபடி தண்ணீரை எடுத்து வரும் காட்சி நீண்ட நாட்களாக என் மனதை விட்டும் நீங்கவில்லை. போரின் உளவியல் சிறிய மலர்களை கொத்தாகக் கருக்குவது போல் பெரிய துயர் இருக்கிறதா?

‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்பு முன்வைக்கும் சிறுவர்களும் மனிதர்களும் உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். நேரடி போர் அல்லாமல் அன்றாட வாழ்வில் அல்லற்படுபவர்களாக வருகிறார்கள். அவர்கள் எந்த ஆதரவும் இல்லாதவர்கள். சரியோ தவறோ ஒதுங்கிக் கொள்ள ஒரு நிழலோ அல்லது நீக்கிக் கொள்ள ஒரு தீங்கென்று எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை. திரு. ராம் தங்கத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘திருக்கார்த்தியல்’ என்ற புத்தகம் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது.

நினைவோட்டம் வழியாக மொத்தம் பதினொரு சிறுகதைகளைக் கொண்டுள்ளது இந்தத் தொகுப்பு. 2023-ஆம் ஆண்டுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுள்ளது. குமரி மாவட்டத்தின் வட்டார வழக்குகளில் ஒன்றான நாஞ்சில் தமிழில் வெளிவந்துள்ளது. பொதுவாக நம் நிலம் சார்ந்த கதைகளைப் படிப்பதைப் போன்ற அலாதி பிரியம் வேறெதில் உண்டு.

எளிமையான மொழியில் கதையின் இயல்பு; அது ஒரு பாலத்திற்குக் கீழ் பாய்ந்து ஓடும் பழையாறு போல சரளமான மொழி. ஒரு சேர ஒரே இருப்பில் அத்தனை கதைகளையும் படித்துவிட்டு நகர்ந்து விடலாம் என்றால் அது மிகக் கடினமான ஒன்று. இடையிடையே வாசகர்களாகிய நமக்குக் கொஞ்சம் அவகாசமும் ஆசுவாசமும் கட்டாயம் தேவைப்படும்.

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை, அவர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள், அவர்களின் நிற்கதியான நிலை மற்றும் அவர்களின் உடுப்பு, உறைவிடம் என பல்வேறு கோணங்களில் நம்மை கயிற்றில் இருந்து பிரிந்த பம்பரம் போல் சுற்ற வைக்கிறது. முதல் கதையான ‘திருக்கார்த்தியல்’ கதையின் பெயரைப் படித்ததும் சிறுவயது நினைவுகள் அலையலையாக மனதில் தவழ்வதைத் தடுக்க முடியவில்லை. தெரளி இலையில் அவிக்கும் கொழுக்கட்டையின் மணம் எங்கள் சுற்றுவட்டாரத்தில் சுழன்று நிற்கும்.

திருக்கார்த்தியல் என்ற பண்டிகை தென்தமிழகத்தில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பண்டிகை என்னும் போது அதில் சடங்குகளும் விசேஷ பதார்த்தங்களும் இருக்கும். அப்படி குமரி மாவட்டம் மருதுவாழ் மலையில் ஏற்றும் தீபத்தில் துவங்கி பனை ஓலையில் அவிக்கக்கூடிய விசேஷ பலகாரமான கொழுக்கட்டையில் முடிகிறது இந்தக் கதை.

இடைப்பட்ட விஷயங்களை ஒரு வரியில் சொல்வதென்றால், ‘பசித்தவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் வரிகள் மிகச்சரியாக பொருந்திப் போகும். செந்தமிழ் அவனுக்கு வயது பதினொன்று, சிவா வயது பன்னிரண்டு, லிங்கத்திற்கு வயது பதினைந்து, கார்த்திக்கிற்கு வயது ஆறு, வினோத்திற்கு வயது பதிமூன்று. இப்படி இந்த புத்தகத்தில் வரும் அனைத்து நிராதரவான குழந்தைகளின் நிழல்களும் எனக்கு ஒரே ஒருவரின் சாயலைக் கொண்டதாக தோன்றியது. ஊர், பெயர், வகுப்பு, வேலை இவை மாறலாம்; ஆனால் கதாபாத்திரங்களின் அசைவு யாரோ ஒருவருடையது. ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், கல்வி கற்க முடியாத சூழல், குழந்தைத் தொழிலாளர் என இந்தக் கதை துயரங்களைச் சுமந்து நிராதரவாக வீதி வழி திரிகிறது.

கதை யாருடைய கோணத்தில் சொல்லப்படுகிறதோ அவர் எந்த விதத்திலும் நியாயத்தைக் கேட்டு நிற்கவில்லை என்ற கூற்றைக் கதைக்குள் பொதிந்து வைக்கும் கலை ஆசிரியருக்கு வாய்த்திருக்கிறது. உணவுக்காக நடத்தும் மௌனப் போராட்டமும் திருட்டைச் சமாளிக்க தறிகெட்டு ஓடும் அந்த குற்ற உணர்வையும் வாசகன் தொட்டுணர முடிகிறது.

ஒவ்வொரு கதையிலும் வாசகன் சொல்லப்படாத வரிகளைக் கண்டுணர முடிகிறது. உண்மையில் கனமான வரிகள் அவை. ‘வெளிச்சம்’ என்றொரு கதையில் வரும் சிறுவன் பேக்கரியில் வேலைக்குச் செல்கிறான். அவனுடைய அம்மா ஒருநாள் அவனை நாகர்கோவில் விஜயதா திருமண மண்டபத்தில் சாப்பிடச் சொல்கிறாள். ஆனால் அவன் மீன் சோற்றுக்கு ஆசைப்பட்டு குடோனிலேயே சாப்பிடச் செல்கிறான். எனக்கு இந்த இடத்தில் சொல்லணும் போல இருந்துச்சு, ‘அந்த மண்டபத்தில் தான் எங்க உம்மா வாப்பாக்கு கல்யாணம் நடந்தது. என்னதான் கூட்டிட்டு போகல நீயாச்சும் போயிருக்கலாம் லிங்கம்’. சுரண்டல்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. ‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையில் ஒரு பெண்ணின் உடல் எப்படியெல்லாம் இந்த சமூகத்தின் கோர முகங்களால் சுரண்டப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

நிராதரவான நாதியற்ற பெண்களுக்கு இந்த சமூகம் உடல்ரீதியான சுரண்டலை நிகழ்த்துகிறது. அது பெண் சமூகத்திற்கெதிரான அநீதி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதில் ‘பெண்ணின் உடலுக்குக் கூட ஒரு விலை இருக்கிறது; ஆனால் அவள் உணர்வுகளுக்கு…?’ என்ற கேள்வி புத்தகத்தைத் தாண்டி துருத்திக் கொண்டு நிற்கிறது. ‘உடற்றும் பசி’ என்னும் சிறுகதையில் அனாதைச் சிறுவனாகிய கார்த்திக் தாய் தந்தையை இழந்தவன். ஆதரவற்றோர் விடுதியில் தங்கி பல துயரங்களுக்கு மத்தியில் பள்ளிக்கு வருகிறான். அவனோடு படிக்கக்கூடிய மாணவர்களுக்கெல்லாம் ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது; கார்த்திக்குக் கிடைக்கவில்லை. இந்த கதை சமூகத்தில் நிலவும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாகக் காட்டுகிறது.

பேனா பிடிக்கக்கூடிய கைகள் எச்சில் பாத்திரங்களைக் கழுவுகிறது. ஒரு மாட்டிறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனின் இயலாமை, பணத்திற்காக அவன் திரியும் அலைச்சல், ஊடாடும் வறுமை இத்தனையையும் தாண்டி விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை எங்கோ உயரத்தில் இருந்து எழுதுவதும் பேசுவதும் இலகு. ஆனால் அவர்களே எழுதும்போது அது கனம் கூடிப் போகிறது. அதைச் சுமக்க முடியாமல் நாம் தள்ளாடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இந்த ‘திருக்கார்த்தியலி’ல் குளுமை இல்லை; அது வெந்து நீறிக் கொண்டிருக்கிறது.

இதுவரை பிற மொழிகளில் இது போன்ற கதைகளை வாசிக்க நேர்ந்தாலும் நேரடியாக தமிழில் வாசிப்பது இதுவே முதல் முறை. எந்த ஒப்பனைகளும் இல்லாத எழுத்து நடை. எளிமையான வார்த்தைகள். ஒரு காற்றில் உதிரும் புளியம்பூக்களைப் போல சரசரவென ஓடும் கதைக்களம். ஒப்பனைப் பூச்சுகளற்ற அசல் கதைகள் இவை. உலகெங்கும் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு நாம் நகரும் வேளையில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய பால்யத்தைத் தொலைத்தவர்களின் திருவிழாவாக ‘திருக்கார்த்தியல்’ முன்வைக்கும் சிறுவர்களின் உலகம், அவர்களின் கைகளில் இருக்கும் பனை ஓலை கொழுக்கட்டையைப் பிடுங்கிய கதையன்றி வேறில்லை.

Author

Related posts

இடும்பை

மோக வலை

புழுக்கள்