இயற்கையின் வேகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்: பொறுமையே அதன் இரகசியம். — ரால்ஃப் வால்டோ எமர்சன்
சில மாதங்களுக்கு முன்பாக நெம்மேலியில் வந்துள்ள பூநாரைகள் குறித்துக் கேள்விப்பட்டு அந்தப் பறவைகளைக் காணச் சென்றிருந்தேன். அப்போது அந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றித் தெரியாது. அந்த இடத்திற்குச் சென்ற பிறகு தான் கடல் நீரும் நன்னீரும் கலக்கும் அந்தப் பெரிய சதுப்புநிலத்தின் உயிர்ப்பன்மைமிக்க அலையாத்திக் காடுகளின் அமைப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது. இப்பகுதி, கடலோடு முட்டுக்காடு வழியே பிணைக்கப்பட்டிருக்கிறது என்றும் அங்குள்ளோர் கூறினார்கள். நெம்மேலி உப்புப் பாத்திகள் (Nemmeli Salt Pans) இப்பகுதியின் மிக முக்கியமான பறவை நோக்கும் இடமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் ஏரிகளும் குளங்களும் இருக்க, வலசைப் பறவைகள் குறிப்பாக நெம்மேலி பகுதிக்கு ஏன் வருகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீர்த்தேக்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள உவர் சதுப்புநிலங்கள் முதுகெலும்பில்லா (benthic invertebrates) உயிரினங்களின் வாழிடங்களாக உள்ளன. இவை உவர்நீர்ப் பரப்பில் உள்ள மண்ணில் துளையிட்டு அங்கு ஆக்சிஜன் சுழற்சிக்கு உதவுகின்றன. உவர் மண்ணைச் செழுமை செய்து கடலோரங்களைக் கடலரிப்பு மற்றும் புயல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. நண்டு, மீன் மற்றும் இறால்களின் இனப்பெருக்கப் பகுதிகளாகவும் உள்ளன. இந்த மீன்களையும் இறால்களையும் உண்ண இங்கு அதிகளவில் வலசைப் பறவைகள் வருகின்றன. இந்தப்பகுதியைக் குடிநீர்த் தேக்கமாக மாற்றுவது, இந்த அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே பருவத்திலேயே அழித்துவிடும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வளவு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கட்டப்படப்போகும் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தால் பாதிக்கப்படப்போகும் உயிர்கள் குறித்த தகவல்கள் எனக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தின. அரசு எதனால் இங்கு மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தைக் கட்டத் தீர்மானித்தது என்பதை யோசித்தால் நமக்கு இதன் முக்கியத்துவம் நன்றாக விளங்கும்.
41,000 ஹெக்டேருக்கு அதிகமான நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டுள்ளது நெம்மேலி. இது சென்னையின் ஆறாவது குடிநீர் ஆதாரமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையின் எதிர்காலக் குடிநீர்த் தேவைக்கு இந்த இடத்தில் நீர்த்தேக்கத்தை அமைத்தால், அதன் மூலம் ஒரு நாளைக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்குமென்றும் இதனால் பதிமூன்று லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தால் கடல்நீர் உட்புகுவதைத் தவிர்க்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சூழலியல் வல்லுநர்களின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, மக்களின் குடிநீர்த் தேவையை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.
நெம்மேலி பகுதி, உலகின் முக்கிய வலசைப் பறவைப் பாதைகளில் ஒன்றான மத்திய ஆசிய பறவைப் பாதையின் (Central Asian Flyway) ஒரு பகுதியாக உள்ளது. மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல வலசைப் பறவைகள் குளிர்காலங்களில் இப்பகுதியைத் தற்காலிகத் தங்குமிடமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் அந்த இடம் முக்கியமான உயிர் வழித்தடமாக (bio-corridor) இருக்கிறது. நெம்மேலிக்குப் பூநாரைகளும் மற்ற பறவைகளும் வர முக்கியக் காரணம் அங்கு நன்னீருடன் கடல்நீர் கலப்பதால் அந்த இடத்தில் உருவாகியிருக்கும் உவர்நீர்ச் சூழலாகும். பொதுவாக நீர்வாழ் பறவைகள் ஒரு வகையான பாசி, இறால் மற்றும் சிறிய நீர்வாழ் உயிரினங்களை உண்டு வாழும். இந்த உணவுகள் உவர்நீர்ப் பகுதியில் அதிகம் இருப்பதாலேயே இதுபோன்ற இடங்களுக்கு இவை அதிகம் வருகின்றன.
இருபத்தைந்து கிலோமீட்டர் நீளத்திற்கு விரியும் இந்த நெம்மேலி பகுதியில் ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் பெரும் கூட்டமாக வருவதாக 2025 -2026 கணக்கெடுப்பில் பதிவு செய்திருக்கிறார்கள். ஏறத்தாழ 45,000 பறவைகள் இந்த வருடம் வருகை தந்திருக்கின்றன. இதில் வலசை வரும் வாத்து இனங்கள் மட்டுமே கிட்டத்தட்ட 16,000 என்கிறது கணக்கெடுப்பு. 2025 – 2026இல் மஞ்சள்மூக்கு நாரைகள் (Painted Stork), கருந்தலை அரிவாள் மூக்கன்கள் (Black-headed Ibis) மற்றும் புள்ளி அலகுக் கூழைக்கடாக்கள் (Spot-billed Pelican) மூன்றும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நெம்மேலிக்கு வருகை தந்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகவே தோன்றுகிறது.
அழிந்துவிட்ட பறவைகளின் பட்டியலில் இருக்கும் பெரிய உள்ளானை (Great Knot) இங்கு கண்டதாக ஒரு பறவை ஆர்வலர் கூறியிருக்கிறார். பறவை ஆர்வலர்கள் கண்ட அழியும் நிலையில் இருக்கும் பறவைகளான வளைமூக்குப் பெருங்கண்ணி (Great Thick Knee), இந்தியப் பெருங்கண்ணி (Indian Thick Knee), சின்ன வானம்பாடி (Oriental Skylark), சாம்பல்தலை வானம்பாடி (Ashy Crowned Sparrow Lark), தோல்குருவி (Oriental Pratincole), பட்டாணி உப்புக்கொத்தி (Little ringed plover), நெடுங்கால் உள்ளான் (Black winged stilt), தகைவிலான் (Barn Swallow), செம்பட்டைத் தகைவிலான் (Eastern Red rumped swallow), சிவப்புமூக்கு ஆட்காட்டி (Red wattled Lapwing), மஞ்சள்மூக்கு ஆட்காட்டி (Yellow wattled Lapwing), கல்குருவி, நெட்டைக்காலி (Pipit) வகைகள், களியன் (Common Pochard), வளைமூக்கு உள்ளான் (Curlew Sandpiper), பெரிய புள்ளிக் கழுகு (Greater Spotted Eagle), சாம்பல் உப்புக்கொத்தி (Grey Plover), வரித்தலை மண்கொத்தி (Broad-billed Sandpiper), கருந்தலை மீன்கொத்தி (Black-capped Kingfisher), பட்டைவால் மூக்கன் (Bar-tailed Godwit), கருவால் மூக்கன் (Black-tailed Godwit), சிறிய பூநாரை (Lesser Flamingo), வெண்கழுத்து நாரை (Asian Woolly-necked Stork), புள்ளி அலகுக் கூழைக்கடா (Spot-billed Pelican), சிவப்புக் கழுத்து வைரி (Red-necked Falcon), சிவப்புவால் வானம்பாடி (Rufous-tailed Lark) இதுபோக கருடன், கள்ளப்பருந்து உட்பட பல பறவைகள் இங்கு வருகை தருவதாய் IUCN அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வளவு அற்புதமான பல்லுயிர்ச் சூழலைக் கொண்ட நெம்மேலி சென்னையில் எஞ்சியிருக்கும் ஒரே உவர்நீர்ச் சதுப்புநிலப் பகுதி என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.
நீண்டு மெலிந்த சிவந்த கால்கள், மெல்லிய குழல் போன்ற வளைந்த கழுத்து, இளஞ்சிவப்பு நிற இறகுகள் கொண்ட பூநாரைகள் பார்ப்பதற்கு வெகு அழகானவை. இத்துணை அழகான பூநாரைகள் சதுப்புநிலங்களில் உள்ள நீலப்பச்சை ஆல்காக்கள் (பாசிகள்), அவற்றை உணவாகக் கொள்ளும் கூன் இறால்கள் மற்றும் டுனாலியெல்லா (Dunaliella) என்ற ஒருசெல் தாவரங்களையும் முக்கிய உணவாகக் கொள்ளும். டுனாலியெல்லாவில் தான் வைட்டமின் ஏ தயாரிப்புக்கு முக்கியமான பீட்டா கரோட்டினாய்டு துகள்கள் அதிக அளவில் உள்ளன. இந்தத் துகள்கள் தான் பூநாரைகளுக்கு அழகு சேர்க்கும் இளஞ்சிவப்பு நிறத்தை வழங்குகின்றன. நன்னீரும் கடல்நீரும் கலக்கும் நெம்மேலி பகுதியில் இந்த டுனாலியெல்லா செழிப்பாக இருப்பதாலேயே பூநாரைகள் இங்கு அதிகம் வருகை தருகின்றன. ஒருவேளை இது நன்னீர்த் தேக்கமாக மாற்றப்பட்டால் பூநாரைகளுக்கு வாழிடம் பறிபோகும் அபாயமுண்டு.
பூநாரைகள் குனிந்து இரை தேடுவது முக்காலி போல இருக்கிறது என்ற கலித்தொகைக் குறிப்புகள் உண்டு. பூநாரைகளின் அலகுகள் சேற்றுநீரை வடிகட்டிக் கூன் இறால்களையும் பாசியையும் உட்கொள்ளும். மூன்று அல்லது நான்கு மணி நேரம் சாப்பிட்டாலும் அவற்றுக்கு ஐம்பது அல்லது நூறு கிராம் ஆகாரம் மட்டுமே கிடைக்கும். இப்படி உவர்நீர்ச் சூழல் உள்ள இடங்கள் இல்லாமல் போனால் பூநாரைகள் தமிழகத்திற்கு வராமலே போகக்கூடும்.
வடக்கே முட்டுக்காடு முகத்துவாரம் வழியாகவும் தெற்கே கொக்கிலமேடு முகத்துவாரம் வழியாகவும் கடல்நீர் வந்து செல்லும் இடமாக இந்த நெம்மேலி பகுதி அமைந்துள்ளது. புதிய மற்றும் பழைய கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் இந்தப் பகுதியை நம்பியே உள்ளது. மாமல்லன் திட்டம் முதலில் கட்டப்படும் இடமானது கோவளம்-நெம்மேலி சூழல் மண்டலத்தில் உள்ள 4,375 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியது. இதில் ஏறத்தாழ 65% கழுவெளி நிலமாகவும் (சதுப்புநிலம்) மற்றும் 35% உப்பங்கழி நிலமாகவும் (உப்புப் படுகைகள்) அமைந்துள்ளது. இந்த உவர்நீர்ப்பரப்பை நம்பிக் கிட்டத்தட்ட பதினாறுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆண்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற பின், பெண்கள் தங்கள் பாரம்பரிய வழக்கமாகக் கைகளினாலேயே இறால்கள், நண்டுகள் மற்றும் சிறு மீன்களையும் பிடித்து வருகிறார்கள். ஏற்கனவே கடலில் குப்பைகளும் அணுக்கழிவுகளும் அதிகம் கலப்பதால் மீன்பிடித்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தால் மீனவப் பெண்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேறு தொழில்களைத் தேடித்தான் அலைய நேரும். இதனால் பல கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்று திரண்டு இந்தத் திட்டத்தைக் கைவிடக்கோரி முதல்வருக்கு மனுக்கள் அனுப்பி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் நீர்த்தேக்கம் கட்டலாமா என்று எந்த அறிவியல் ஆய்வுகளும் நடந்ததாகத் தெரியவில்லை. கடல்வாழ் உயிரினங்கள் பொதுவாக உப்பங்கழியும் நன்னீரும் இணையும் இந்த உவர்நீர்ப்பரப்பில் தான் முட்டையிடும். குஞ்சுகள் வளர்ந்து பெரிதான பிறகு தான் அவை கடலுக்குச் செல்லும் என்பதால் இந்தத் திட்டம் கடலிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு நன்னீராக மாறினாலும் அதிக உப்பைக் கொண்ட கழிவுநீர் மீண்டும் கடலிலேயே தான் கொட்டப்படும், அந்த நீரானது உயிர்கள் வாழத் தகுதியற்றதாக ஆகிவிடும்.
நீர்த்தேக்க வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது செழுமையான மண்ணின் மேல் பகுதி அகற்றப்பட்டிருக்கிறது. கடல்நீர் வந்து கலக்கும் முகத்துவாரங்கள் மண் கொண்டு மூடப்பட்டிருக்கின்றன. அந்தச் சதுப்புநிலத்தில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் தோல்குருவிகள் (Oriental Pratincole) தங்கள் முட்டைகளையும் குஞ்சுகளையும் ஜேசிபி வாகனங்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தவித்தலைகின்ற காணொளியை நண்பர் பகிர்ந்திருந்தார், அதன் தவிப்பு மனதை உலுக்கியது. ‘அறுவடைக்கு வந்த வாகனத்திடம் ஆறு நாள் தான் ஆகிறது என் குஞ்சு பொரித்து, பார்த்து அறுக்க முடியுமா? எனக் கேட்டது குருவி, பாவம் அதற்குத் தெரியவில்லை அரிவாளோடு வரும் அப்பத்தா போய் நெடுக்காலம் ஆகிவிட்டதென்று’ என்ற கவிதை இயந்திரங்களால் அழியும் மனிதமற்ற உலகை நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
மீனவப் பெண்கள் இனி எம் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வோம் என்று கவலையில் தவிக்கின்றனர். அழகான இளஞ்சிவப்பு நிறமுடைய பூநாரைகள் தங்கள் நிறங்களை இழந்து வருகின்றன. இவ்வளவு சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைப்பதைத் தவிர வேறென்ன நம்மால் செய்துவிட முடியும். இயற்கைக்கு எதிரான மனித செயல்பாடுகளை மனிதன் நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லையேல் இயற்கை ஏதாவது ஒருவகையில் தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளும். மனிதனால் தான் அதன் சீற்றத்தைத் தாங்க முடியாது.