வெற்றிடம்..

தட்டப்பட்டு திறக்கப்படாத
உங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்
பின் தொடரும்
“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.
புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டு
பின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்
உங்கள் எகத்தாளம்.
நேர்காணலின் கதவை மூடும்
கடைசி நொடியில் கேட்கும்
என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.
பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரை
நானே ஒதுங்கியதாய் ஒதுக்கப்படுகிறேன்.
சாலை நடுவே கிடந்து சிதைகிறது
என் உதிர்ந்த இறகுகளின் மிச்சம்.
எப்போதும் போரில்
முதல் ஆளாகவே நிறுத்தப்படுகிறேன்.
என் கரங்களில் திணிக்கப்படும் வாள்,
முனை உடைந்தும் துருவேறியுமே காணப்படுகிறது.
எப்போதும் போரில்
முதல் ஆளாகவே வெட்டப்படுகிறேன்.
இரவின் நடுவில்
சந்தேகமாய் முறைக்கும் ஆந்தைகளுடன்
ஒன்றாகவே பயணிக்கிறேன்.
கடலலைகள் என் பாதம் தொடாமல்
விலகி விலகி நடுக்கடலுக்கு ஓடின.
ஆங்காரமாயென் துருவேறிய வாளை
அதன் மழுங்கிய முனைகளுடன்
வெற்றிடத்தில் வீசிக்கொண்டிருக்கிறேன்.
விடியும் வரை போரிட்டதில்
கிழிந்து தொங்கியது வெற்றிடம்.

Author

  • எழுத்தாளர் அப்பு சிவா, நாவல்கள், சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைகதைகள் போன்ற பல்வேறு வகைகளில் எழுதியுள்ளார். அவருடைய சில படைப்புகளில் "இருள் சூழ் உலகு, பாமரன்" மற்றும் "கடவுள் துகள்" ஆகியவை அடங்கும். 

Related posts

தமிழகக்கல்விச்சூழல்: சவால்களும்தீர்வுகளும்

நன்னீருக்காகப் பலியாகும் உயிர்கள்

ஆரோக்கியமே உண்மையான அழகு