இந்த நிகழ்வை அவர் எதிர்பார்க்கவில்லை. 40 வருடங்களை நெருங்கும் பணி அனுபவத்தில் சலிப்பூட்டக்கூடிய மற்ற எல்லா நாட்களையும் போலத்தான் இந்த நாளும் கடந்து போகும் என்றுதான் அவர் நினைத்திருப்பார். ஆனால், இன்று ஒரு சுவாரசியம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் அசைபோட்டபடி இயந்திர கதியில் நடந்துகொண்டிருந்தார் ‘பாஸ்கல் மார்ட்டின்’ என்னும் அவர்.
‘மவுண்டன் வியூ’வில் உள்ள தன் அலுவலகத்தில் இருந்து வழக்கம் போல மதிய உணவுக்காகத் தன் குவார்ட்டர்ஸுக்குக் கிளம்பினார்.
அறுபதை நெருங்கும் வயது என்றபோதிலும் கால்களில் அபாரமான வேகம். வேற்றுலக வாசிகளை ஆராய்ச்சி செய்யும் ‘SETI’ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி. விஞ்ஞானிகளுக்கே உரிய ‘கிளிஷே’க்களான குறுந்தாடி, கண்ணாடி, வெள்ளைக் கோட் போன்றவை மிஸ்ஸிங். கிளீன் ஷேவ் செய்திருந்தார். ‘டக்-இன்’ செய்த சிவப்பு நிற கேஷுவல் டீ-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ். முகத்தில் சற்று இந்திய ஜாடை எட்டிப்பார்த்தது. ஆம், பாஸ்கலின் அப்பா இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தபோது இந்தியப் பெண் ஒருவர் மீது காதல் கொண்டு, மனைவியாக்கி யூ.எஸ். கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
வீட்டை நெருங்க நெருங்க காலையில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் பாஸ்கலை உறுத்தியது. ரிட்டையர் ஆகும் வயதில் இது என்ன தொல்லை? ஒருவிதத்தில் இது சுவாரசியமாகவும் இருந்தது. SETIயில் விஞ்ஞானியாக இருப்பது என்பது இந்தியாவில் ரெகமெண்டேஷன் புண்ணியத்தில் ஒரு சின்ன டவுனில் ஏதோ ஒரு மத்திய அரசு வேலையில் புகுந்துகொண்டு வருடக் கணக்கில் செய்த வேலையையே செய்துகொண்டு பெஞ்சைத் தேய்ப்பது போலத்தான். வேற்றுலக வாசிகள் நாள் ஒன்றுக்குப் பத்து சமிக்ஞைகளை அனுப்புகிறார்களா என்ன? மேலும், பணிகள் பெரும்பாலும் ‘ஆட்டோமேட்’ செய்யப்பட்டுவிட்டன. ராட்சத ஆன்டெனாக்கள் வானத்தை 180 டிகிரியில் அக்குவேறு ஆணிவேறாக ஸ்கேன் செய்து அலசி ஏதேனும் புரிந்துகொள்ளத்தக்க ரேடியோ சிக்னல்கள் வந்திருக்கின்றனவா என்று தாமாகவே கண்டுபிடித்துச் சொல்லும். மற்றபடி பெரிதாக வேலைகள் இல்லை. ரிசர்ச் மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது, பி.ஹெச்.டி. கைடன்ஸ் வேலை, பேப்பர்களை ‘peer review’ செய்வது இப்படியாக சில வருடங்கள் கழியும்.
அன்று நிகழ்ந்த நிகழ்வு இதுதான்: காலை பத்தரை மணி அளவில் க்ரீன் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தபோது ராமிடம் இருந்து ‘மிக முக்கியம் மற்றும் மிக அவசரம்’ என்ற லேபிளைத் தாங்கி அந்த மின்னஞ்சல் வந்திருந்தது. ராம் ‘SETI’யின் தலைமை ரிசர்ச் ஸ்காலர். இந்திய மாணவன். இங்கே வந்து கிரீன் கார்டு வாங்கி செட்டில் ஆனவன். ‘no nonsense guy’ என்பார்களே, அப்படிப்பட்ட ‘கருமமே கண்ணான’ மாணவன். சாதாரண மின்னஞ்சல் ஒன்றையே அத்தனை தரவுகளுடன் இழைத்து இழைத்து அனுப்புபவன். அவனிடமிருந்து ‘மிக முக்கியம்’ என்று ஒரு மின்னஞ்சல் வந்தால்?
செய்தி இதுதான். வேற்றுலக வாசிகளிடம் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. பொதுவாக இப்படிப்பட்ட potential ரேடியோ சிக்னல்கள் வளவளா கொளகொளா என்று இடியாப்பச் சிக்கலாக இருக்கும். ஆனால் இந்தச் செய்தி மிகத் தெளிவாக இருக்கிறது. வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்து வாயிலும் திணித்த மாதிரி.
‘Contact and redemption in two days’! Contact சரி, அது என்ன redemption? எதை மீட்டெடுக்கப் போகிறார்கள் அந்த வேற்றுலக வாசிகள்? நம் கனிம வளங்களையா? சமீபத்தில் ஓர் விலையுயர்ந்த தனிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதே, ‘ஸ்டீபன் ஹாக்கியம்’, ஒரு கிராம் 10 மில்லியன் டாலர் விலை! அதை கொள்ளையடித்துச் செல்வதற்கா இந்தத் திடீர் போர்த் தொடுப்பு??
வீட்டில் நுழைந்ததும் லின்டா மூட்-அவுட்டில் இருந்தார். பாஸ்கலுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சினை அவர் மனைவிக்கு. பிரச்சினை என்றால் சின்னச் சின்ன உப்புப்பெறாத விஷயங்கள். தோட்டக்காரன் வரவில்லை, நேற்று ஆன்லைனில் வாங்கிய ‘ரிக்லைனர்’ சரியில்லை, தங்கை கிரேஸ் ஒரு வாரமாகச் சரியாகப் பேசவில்லை, இப்படி..
இன்று என்ன சமைத்திருக்கிறாள்?
வழக்கம் போல காரமே இல்லாத அந்த ‘ஒயிட் பாஸ்தா’ தானா? காரத்துக்கு ஏங்கியது அவரது ‘பாதி இந்திய’ நாக்கு.
“இன்று எதுவும் சமைக்கவில்லை, கேன்டீனில் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்”
பாஸ்கல் கடுப்பானார்.
“இதை ஃபோன் பண்ணிச் சொல்ல வேண்டியதுதானே?”
“அதனால் என்ன? தடுக்கி விழுந்தால் ஆபீஸ், அங்கே போய் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்”
ஆபீஸ் கேன்டீனா? அதற்கு லின்டா செய்யும் ஒயிட் பாஸ்தா நூறு மடங்கு மேல்.
“இப்போதைக்கு சாண்ட்விட்ச் ஏதேனும் செய்து கொடேன், பயங்கரப் பசி”
லின்டா அழுதுகொண்டிருந்தார்.
“எதுக்கு அழற?” என்றார் பாஸ்கல், “ஒரு சாண்ட்விட்ச் தானே கேட்டேன்!”
“அட்லஸ் நேத்து ராத்திரியில் இருந்து காணவில்லை” என்றார் லின்டா. அழுது கண்கள் சிவந்துபோய் இருந்தன.
“ம்ம்.. இங்கதான் பக்கத்தில் எங்கயாச்சும் போயிருப்பான், தேடிப் பாரு”
“இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டான், எனக்கு பயமா இருக்கு”
“அக்கம்பக்கத்துல, குவார்ட்டர்ஸ் ஆபீஸுக்குத் தகவல் சொன்னாயா?”
“காலைலயே சொல்லிட்டேன், தேடிட்டு இருக்காங்க”
இனி பேசிப் பயனில்லை. அட்லஸ் கிடைக்கும் வரை லின்டா அப்செட் ஆகத்தான் இருப்பாள். பாஸ்கல் மீண்டும் ஆபீஸுக்குக் கிளம்பினார்.
லின்டாவின் நிலைமையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. 10 வருடங்களாகக் கூடவே இருக்கும் செல்லப் பூனை, பெர்சியன் வகை. நன்றாகக் கொழுத்து புஸு புஸுவென்று, மெத்து மெத்தென்று சமர்த்தாக, அழகாக முட்டைக் கண்களுடன் இருக்கும் கியூட்னஸ் அது. பிள்ளைகள் இல்லாத குறையைத் தீர்க்க லின்டாவுக்குக் கிடைத்த பொக்கிஷம். லின்டாவுக்கு எல்லாமே அட்லஸ்தான். குழந்தை, நண்பன், சகோதரன், ஹவுஸ்மேட், எமோஷனல் சப்போர்ட்……
எங்கே போயிருக்கும்?
அட்லஸ் மிகவும் பயந்த சுபாவம். அது மியாவ் என்று சத்தமாகக் கத்தி கேட்டதே இல்லை. ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு விதமாகக் காலை உரசும். அதன் உரசல் மொழிகள் லின்டாவுக்கு மட்டுமே அத்துபடி. வீட்டுக்கு யாரேனும் புதியவர்கள் வந்தால் எங்கோ சென்று ஒளிந்துகொள்ளும்.
ஆபீஸ் வளாகத்தில் நுழைந்தார்.
‘ஏலியன் சிக்னல்’ நிகழ்வு காரணமாக அந்த மத்தியான வேளையில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. அவசர மீட்டிங் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார் பாஸ்கல்.
“முதலில் இந்த ஏலியன் அனுப்பிய செய்தியின் உண்மைத் தன்மை பற்றி ஆராயவேண்டி இருக்கிறது. இது ஏதேனும் ‘பிராங்க்’ மெஸேஜாக இருக்க வாய்ப்பு உள்ளதா?” – உரையாடலை ஆரம்பித்தார் பாஸ்கல்.
திட்ட இயக்குனர் லாரன்ஸ் மைக்கை அட்ஜஸ்ட் செய்தார். “இந்த சங்கேத செய்தி 100 சதவிகிதம் உண்மையானதுதான். SETI வரையறுத்த ‘authentication criteria’ அத்தனையையும் ஒன்று விடாமல் pass செய்துவிட்டது இந்தச் செய்தி”
“எந்த அதிர்வெண்?”
“ஹைட்ராக்சில் ஃபிரீக்வென்சிக்கு ஒரு நேரோ பேண்ட் தள்ளி”
“ஏலியன்கள் எப்படி இருப்பார்கள்? எனி ஐடியா?”
“அவர்கள் confidence level-ஐப் பார்க்கும்போது மனிதர்களை விட பல மடங்கு பெரிய பரிமாணத்தில் இருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது”
ராம், பாஸ்கல் பக்கம் திரும்பினான். “சார், இந்தச் செய்தி பூமிக்கு அருகில் இருந்து வந்திருக்கிறது. அருகில் என்றால் மிக அருகில், வளிமண்டலத்துக்குச் சற்று மேலே, சுமார் 10,000 மைல் தொலைவில் இருந்து. கேரியர் அலைகளின் ரெட் ஷிப்ட் பூச்சியம். நம் மூன்று near-earth ஆன்டெனாக்கள் triangulation செய்து தொலைவைத் துல்லியமாக 10,129 மைல் என்று காட்டுகின்றன.”
“ஓ, அப்படியானால் ஏலியன்கள் ஏற்கனவே நம் பூமிக்கு வந்துவிட்டார்கள், நமக்கு மிக அருகில் முகாமிட்டு உள்ளார்கள் என்றா சொல்கிறீர்கள்? நம் ரேடார்கள் ஏன் அவர்களது ஸ்பேஸ் ஷிப்புகளைக் கண்டறியவில்லை?”
“நோ ஐடியா சார், ரேடார்களை ஏமாற்றும் தொழில்நுட்பம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கலாம்”
லாரன்ஸ் மீண்டும் பேசினார்.
“இந்த ஏலியன்களின் தொழில்நுட்பம் எப்படிப்பட்டது? நம்மை விட முன்னேறியவர்களா? ரேடியோ அலைகள் வழியாகத்தான் செய்தி அனுப்பியிருக்கிறார்கள், ஆனால் ஆங்கில எழுத்துக்களின் ஆஸ்கி கோடுகளை பைனரியாக அனுப்பியிருக்கிறார்கள். இங்குதான் கொஞ்சம் இடிக்கிறது. அவர்களுக்கு எப்படி ஆங்கிலம் தெரியும்?”
“அதனால்தான் இது ஒரு Fake Signal என்கிறேன்” என்றார் பாஸ்கல்.
ராம் ஏதோ யோசனை செய்து பிறகு பேசத் தொடங்கினான்.
“சார், நம் ஆன்டெனாக்கள் அனைத்தும் வானத்தை நோக்கி உள்ளன. எனவே இந்த சிக்னல் வானத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். போலி செய்தி அனுப்புபவர்களுக்கு வானத்தில் ஒரு reflector தேவை. சாட்டிலைட்களில் இருந்தும் வர வாய்ப்பில்லை. அவை முற்றிலும் வேறு அதிர்வெண்ணில் இயங்குகின்றன. எனவே, இந்த விஷயத்தை நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்”
பாஸ்கல் தீவிர சிந்தனையில் இருந்து மீண்டு, “ம்ம்ம், அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது எனக்கும் புதிராகத்தான் இருக்கிறது” என்று கூறி பரபரப்பாக எழுந்துகொண்டார். “சரி, ‘first contact’ ஏற்பட்டவுடன் நாம் பின்பற்ற வேண்டிய protocolகளை உடனே செயல்படுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். நாம் contact-ன் முதல் கட்டத்தில்தான் இருக்கிறோம். இந்தத் தகவல் வெளியே கசிந்தால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். ஐ.நா. மற்றும் அமெரிக்க அரசாங்கத்துக்கு மட்டும் நம் encrypted channel வழியாக உடனடியாகத் தகவல் அனுப்புங்கள். ஏலியன்களின் அடுத்த கட்ட நடவடிக்கை வரை இந்தத் தகவல் மிக மிக ரகசியமாகக் காக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுங்கள்”
கரோலின் எழுந்தார். நிறுவனத்தில் 25 வருடங்களாக ஆராய்ச்சி செய்யும் சீனியர் அனலிஸ்ட் அவர்.
“மிஸ்டர் பாஸ்கல், உலக மக்கள் அனைவருக்கும் இதைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உரிமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இது ஒட்டுமொத்த உலகத்துக்குமான தகவல்”
பாஸ்கல் யோசித்தார்.
“நீங்கள் சொல்வது சரிதான் கரோலின். ஆனால் இதைப் பற்றி அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்மிடம் அந்த அதிகாரம் இல்லை” என்றார்.
லாரன்ஸ் ஆமோதித்தார்.
“ஆமாம், இந்தச் செய்தி ஏற்படுத்தும் தாக்கம் பூதாகரமானது. ஸ்டாக் மார்க்கெட் வீழ்ந்துவிடும். உலக மக்கள் அத்தனை பேரும் தங்கள் டெபாசிட் பணத்தை உடனடியாக எடுக்க ஆரம்பிப்பார்கள். வங்கிகள் திணறும். விபத்துகள் அதிகரிக்கும், இன்டர்நெட் ஸ்தம்பிக்கும். ஏலியன் மீதான பயத்தில் பல பேர் தற்கொலை கூட செய்துகொள்ளக்கூடும்”
மீட்டிங் முடிந்து பாஸ்கல் வீடு திரும்புவதற்குள் இரவு மணி ஒன்பதாகிவிட்டது.
வீடு இருளடைந்து கிடந்தது. கதவு திறந்தே கிடந்தது. பதறிப்போய் உள்ளே நுழைந்தார் பாஸ்கல்.
“லின்டா!”
லின்டா சோபாவில் படுத்தபடி அழுதுகொண்டிருந்தார்.
“அட்லஸ், அட்லஸ்!”
“லின்டா, காம் டவுன்”
கையை வெடுக்கென்று தள்ளிவிட்டார் லின்டா. “இதுதான் நீங்கள் வீட்டுக்கு வரும் நேரமா? சாயங்காலம் ஆபீஸுக்கு வந்திருந்தேன், நீங்கள் முக்கிய மீட்டிங்கில் இருப்பதாகத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நம் அட்லஸ் காணாமல் போனதைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சமும் கவலை இல்லையா?”
பாஸ்கல் கோபமானார்.
“லின்டா, அட்லஸ் காணாமல் போனது எனக்கும் கவலைதான். ஆனால் அதை விடப் பெரிய விஷயம் ஒன்று இங்கே நடந்துகொண்டிருக்கிறது. நாளை இந்த நேரம் நாமெல்லாம் உயிருடன் இருப்போமா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். ஏலியன்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள்; நம்மை முற்றுகையிட்டிருக்கிறார்கள். சரி, நீ சாப்பிட்டாயா?”
உலகம் அழியப்போகிறது என்ற செய்தி கேட்டு லின்டா அதிர்ச்சி அடைவாள் என்று எதிர்பார்த்தார் பாஸ்கல்.
“அட்லஸ், அட்லஸ்! என் செல்லமே! என் மகனே! அம்மாவைத் தவிக்க விட்டு எங்கே போனாய்” புலம்பியபடி அரை மயக்கத்தில் சோஃபாவில் சாய்ந்தார் லின்டா.
உச்சகட்ட பரபரப்பில் விடிந்தது மறுநாளைய பொழுது. வானத்தைக் கருமேகங்கள் போல முற்றுகையிட்டு மறைத்திருந்தன ஏலியன்களின் விண்கலங்கள். மக்கள் அங்குமிங்கும் இலக்கின்றி ஓடிக்கொண்டிருந்தனர். தொலைபேசிகள் விடாமல் அலறின. பாஸ்கலின் வீட்டைச் சுற்றி மீடியாக்கள் மொய்த்தன. மைக்குகள் அவரது பேட்டிக்காகப் போட்டி போட்டன.
“கொஞ்சம் பொறுமையாக இருங்கள், உங்கள் கேள்விகளுக்கு ஒன்றொன்றாகப் பிறகு பதில் சொல்கிறேன், என்னிடம் இப்போதைக்கு மேலதிக தகவல்கள் இல்லை”
“சார், நாமெல்லாம் அழிந்துவிடுவோமா?”
“சார், ஏலியன்கள் எப்படி இருப்பார்கள்? என்ன பாஷை பேசுவார்கள்?”
“உங்களுக்கு இதைப் பற்றி முன்பே தெரியுமாமே, ஏன் உலக மக்களுக்கு அறிவிக்கவில்லை?”
சில மைக்குகள் லின்டாவையும் விட்டுவைக்கவில்லை.
“மேடம், இதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? சார் ஏதேனும் உங்களிடம் பகிர்ந்துகொண்டாரா?”
லின்டா பேயறைந்த முகத்துடன், “அட்லஸ், என் செல்லப் பிராணி, என் பூனை காணவில்லை” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பெண் செய்தியாளர் ஒருவர் உச்சுக்கொட்டினாள். “ஆமாம் மேடம், என் பூனை டயானா கூட நேற்றிலிருந்து காணவில்லை, I can relate to your pain” என்றாள்.
ஒருவழியாக மீடியாவைச் சமாளித்து அலுவலகம் வந்துசேர்ந்தார் பாஸ்கல். எப்போதும் ஈயாடிக்கொண்டிருக்கும் அலுவலகம் ஜனத்திரளில் திக்குமுக்காடியது.
அவசரமாகத் தனது அறைக்குள் நுழைந்தார் பாஸ்கல்.
“சார், ஏலியன்களின் தலைவர் உங்களுடன் பேசவேண்டுமாம், லைனில் இருக்கிறார்” என்றார் லாரன்ஸ். ரேடியோ டிரான்ஸீவர் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாஸ்கலின் கை நடுங்கியது. குரலும்.
“ஹலோ…”
“ஹலோ! வணக்கம் மிஸ்டர் பாஸ்கல்! முதலில் நாங்கள் சொல்ல விரும்புவது, நீங்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. உங்களுக்கோ, உங்கள் கிரகத்துக்கோ எந்தவித ஆபத்தும் எங்களால் நேராது!”
“…”
“நாங்கள் பூமியில் இருந்து சுமார் 45 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ’47 Ursa Majoris’ என்று நீங்கள் அழைக்கும் ஒரு yellow விண்மீனைச் சுற்றிவரும் ஒரு எக்ஸோ கிரகத்தைச் சேர்ந்த கார்பன் based உயிரினங்கள். எங்கள் முன்னோர்களில் சிலர் சில லட்சம் வருடங்களுக்கு முன்பே உங்கள் கிரகமான பூமிக்கு வந்து உங்களில் ஒருவராக, உங்களுடன் சேர்ந்து உங்கள் பூமியில் வாழ ஆரம்பித்தனர். உங்கள் பூமியின் பரிணாம வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல், மொழி, பண்பாடு, வரலாறு, இலக்கியம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து எங்கள் கிரகத்துக்கு அவ்வப்போது அறிக்கை அனுப்பிவாறு இருந்தனர். இப்போது எங்கள் ஆராய்ச்சி முற்றுப்பெற்றுவிட்டதால் எங்கள் தலைமை மீண்டும் எங்களையெல்லாம் சொந்த கிரகத்துக்குத் திரும்ப அழைத்துச் செல்ல முன்வந்துள்ளது. மனிதர்களுக்கு எந்தச் சிரமமும் நேராமல் எங்கள் பிரஜைகளை நாங்கள் இங்கிருந்து அமைதியான முறையில் திரும்ப அழைத்துச் செல்ல இருக்கிறோம். நன்றி”
ஏலியன்களின் தலைவர் வினோதமான, அதே சமயம் தீர்க்கமான குரலில் பேசி முடித்ததும் பாஸ்கல் கொஞ்சம் தடுமாறினார். குரல் கம்மியது.
“ஹலோ! நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. எங்களுடன், எங்களில் ஒருவராக இத்தனை காலமும் இருந்து எங்களை ஆராய்ச்சி செய்தீர்களா? இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள்? எந்த வகை மனிதர்கள் நீங்கள்? சீனர்களா? ஆப்பிரிக்க மனிதர்களா? ரஷ்யர்களா? ஆதிவாசிகளா?”
ஏலியன்களின் தலைவர் தன் விநோதக் குரலில் சிரித்தார். “நாங்கள் மனிதர்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது? உங்களால் இதுநாள் வரை ‘பூனைகள்’ என்று அழைக்கப்பட்ட வளர்ப்புப் பிராணிகள்தான் நாங்கள். எங்களுக்குப் பேசவும், எழுதவும், சிந்திக்கவும், கவிதை படைக்கவும், கணினியைக் கையாளவும், கணக்கு போடவும் தெரியும். எக்காரணம் கொண்டும் எங்கள் ‘மிஷன்’ முடியும் வரை எங்களை வெளிக்காட்டிக்கொள்ளக் கூடாது என்ற கட்டளையின்படி இத்தனை நாள் ஐந்தறிவு பிராணிகளாக வேஷமிட்டு உங்களிடையே நடித்து வந்தோம்”
“…”
“நீங்கள் அதிர்ச்சி அடைவது எங்களுக்குப் புரிகிறது. எனிவே, நாங்கள் இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டி இருக்கிறது. நிறைய ஆராய்ச்சிகள் செய்யவேண்டி இருக்கிறது. எங்களுடன் நீங்கள் தொடர்பில் இருக்க விரும்பினால் எங்கள் ஃபிரீக்வன்சி மற்றும் கோ-ஆர்டினேட்ஸைத் தருகிறோம். இப்போது நாங்கள் கிளம்புகிறோம். உலகில் இருந்த பூனைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நீங்கள் அறிந்துகொள்ள முடியாத ஒருவித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேற்று இரவே எங்கள் விண்கலங்களில் ஏற்றிவிட்டோம். நன்றி”
“…”
“தனிப்பட்ட முறையில் நான் இறுதியாக உங்களைச் சந்தித்து நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இறங்கி கீழே வந்து ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டும் உங்களைச் சந்திக்க இருக்கிறேன்.”
விண்கலம் கீழே இறங்கி வந்து நிற்க, அதன் கதவு திறந்தது.
உள்ளிருந்து கம்பீரமாக நடந்து வந்தது ‘அட்லஸ்’. கேமிராக்கள் ஒரு கோடி மின்னல் ஒளியாய் ஒரே நேரத்தில் அந்தக் காட்சியை ஃபிளாஷ்களில் படம் பிடித்தன.
கூட்டத்தை விலக்கிக்கொண்டு லின்டா ஓடிப்போய் அட்லஸை எடுத்து அணைத்து முத்தம் கொடுத்தார். அட்லஸ் முகம் தூக்கி அவரைப் பார்த்தது.
“அம்மா, இத்தனை நாள் என்னைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி!”
லின்டாவின் கண்களை நீர் நிறைத்தது.
“இதைப் பாருங்க, என் அட்லஸ் பேசுறான். என் குழந்தை பேசுறான், முதன்முதலா அவன் குரலைக் கேட்கிறேன். என்னை அம்மான்னு கூப்பிட்டான்”
“இதைப் பாரு அட்லஸ், ஏதேதோ உளறாதே. இனி நீ பழையபடி என் கூடத்தான் இருக்கணும், எங்கேயும் போகக் கூடாது. மத்த பூனைங்க போனா போகட்டும். நீ என் பிள்ளை, என் கூடத்தான் இருக்கணும். வா, வீட்டுக்குப் போகலாம்..”
அட்லஸ் ஒரு புன்னகையை உதிர்த்தது.
“மன்னியுங்கள் அம்மா, எங்கள் மிஷன் முடிந்தது, நாங்கள் போயாக வேண்டும், Miles to go before we sleep” என்றபடி லின்டாவின் கைகளில் இருந்து நழுவி ஓடி விருட்டென்று மீண்டும் விண்கலத்தில் ஏறியது.
விண்கலத்தின் கதவு மூடிக்கொள்ள, காத்திருந்த மற்ற ஆயிரக்கணக்கான விண்கலங்கள் அத்தனையும் ஒருசேர மேலெழும்பிச் சீரான வேகத்தில் பறக்கத் தொடங்கின.
கேமிராக்களின் ஃபிளாஷ் வெளிச்சம் ஒளிவெள்ளமாய் வானத்தை நனைக்க விண்கலங்கள் மேலே மேலே எழும்பி ஒரு புள்ளியாய்க் குறுகி வானத்தின் எல்லையற்ற வெறுமையில் மறைந்தன.