புழுக்கள்

“ஏய் செல்வி, எங்க சால் எங்க போயிருக்கு? உன் சால் ஏன் அப்படியே இருக்கு? நாங்க போனதுல பாதி சால் கூட நீ ஏறல. இப்படியே நீ கொத்துனா என்னைக்கு எங்க கூட சாலு ஏறுறது? உன் கூட்டாளி வள்ளி… மொதல்ல அவள உன்கூட இருந்து பிரிக்கணும்டி. அப்பதான் திருந்துவீங்க.”

அந்தக் குச்சிக்கிழங்கு வயலில் புல் செதுக்கும் காத்தாயி எழுந்து நின்று சத்தமாகச் சொன்னாள். காத்தாயிக்கு முப்பது வயது. திடமான தேகம். மாநிறம். தலையில் வெயிலுக்குத் துண்டை உருமால் போலக் கட்டியிருந்தாள்.

மணி பன்னிரண்டை தாண்டியிருக்க, வெயில் தங்கத்தை உருக்கி வார்த்தது போல பூமியெங்கும் சிதறடித்துக் கொண்டிருந்தது. ஆளுயரக் குச்சிக்கிழங்குச் செடிகள் நிழலைத் தந்து வெயிலை மறைத்து கொஞ்சம் காற்றைத் தந்து கொண்டிருந்தாலும், அதையும் மீறி வெயில் அலையாக வீசிக் கொண்டிருந்தது.

“ஹூக்கும்… அவங்கள நீ பிரிச்ச மாதிரிதான். ஒண்ணுக்குப் போனாக்கூட சேர்ந்து போறவங்க அவங்க. அவங்கள நீ பிரிக்கிறயாக்கும்?” என்றாள் அவளுக்கு இணையாகக் கொத்திக்கொண்டு சால் ஏறி வந்த கற்பகம்.

“என்னக்கா… எங்களப் பத்தி ஏதோ பேச்சு ஓடுது போல.” அங்கிருந்து குரல் கொடுத்தாள் செல்வி.

“உங்க ரெண்டு பேர் சாலும் எங்கடி இருக்கு?”

“எல்லாம் நாங்க கொத்திப்போம். இன்னும் பத்து நிமிஷத்துல உங்க சாலுக்குப் பக்கத்துல வர்றோமா இல்லையா பாருங்க.” வள்ளி சொன்னாள்.

“கிழிச்சீங்க… வாய் இல்லைனா உங்கள நாய் தூக்கிட்டுப் போயிடும்டி..”

“போகும்.. போகும்.. நாங்க ஏமாந்துட்டு இருப்போம் பாரு..” செல்வி சொன்னாள்.

இருவரும் வாயாடிகள். இருபது வயதில் செல்வியும், இருபத்தொரு வயதில் வள்ளியும் பருவச் செழிப்பில் மின்னிக் கொண்டிருப்பவர்கள். இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.

“இன்னைக்கு இவ்வளவு பேசுறியே, நேத்து சால் மொதல்ல ஏறுனது யாரு? நாங்க ரெண்டு பேரும்தானே? நீங்கெல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”

“அது நேத்து… இன்னைக்கு பேச்சப் பேசுங்கடி,” என்றாள் காத்தாயி.

“இவளுங்களுக்குக் கல்யாணம் ஆகலைக்கா. கல்யாணம் பண்ணாதான் இவளுங்க கொட்டம் அடங்கும்.”

“யாரு எங்களையா? வர்றவன் எங்களைப் பார்த்து பயந்து ஓடணும்..” என்றார்கள் செல்வியும், வள்ளியும்.

“எம்மாடி… நீ செஞ்சாலும் செய்வீங்கடி. வாய் பேசாம வேலையப் பாருங்க. வெயில் ஏறுது.” சொன்ன காத்தாயியும், கற்பகமும் குனிந்து கொத்த ஆரம்பித்தார்கள்.

பத்து பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். காத்தாயிதான் தலைவி. ஊரில் வயலில் வேலை இருப்பவர்கள் அவளிடம் மொத்தக் குத்தகைக்குப் பேசுவார்கள். பத்து நாளுக்கோ பதினைந்து நாளுக்கோ இவ்வளவு என்று மொத்தமாகப் பேசிக்கொள்வார்கள். காத்தாயி தன் குழுவுடன் வந்து முடித்துக் கொடுப்பாள்.

செல்வியும், வள்ளியும் பேசியதைக் கேட்ட காத்தாயிக்குச் சிரிப்பு வந்தது. அது வெற்றுச் சிரிப்பு.

அவளும் ஒரு காலத்தில் இவர்களைப் போலச் சொல்லிக்கொண்டு திரிந்தவள்தான். ஆனால் கடைசியில் என்ன ஆனது?

இருபது வயதில் கல்யாணம். முறைப் பையன்தான். அப்பனும், ஆத்தாளும் சேர்ந்து ‘நல்ல பையன், கட்டிக்கோடி, நல்லா சந்தோஷமா வச்சுப்பான்’ என்று சொல்லிச் செய்து வைத்த திருமணம்.

இருபது வயதில் கல்யாணம் ஆனவளுக்கு இருபத்தி ஐந்து வயதில் எல்லாம் முடிந்துவிட்டது.

காத்தாயிக்குப் புருஷன் இல்லை. மொடாக் குடிகாரன். குடித்தே குடல் வெந்து செத்துப் போனான்.

புருஷன் இல்லாதவளைச் சில வல்லூறுகள் வாலாட்டின. ஆனாலும் நெருப்பாக இருந்ததால் எல்லா வால்களும் கறுகிப்போயின.

ஆயிற்று. மணி ஒன்று ஆனது. பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது.

அந்த நேரம் அங்கு வந்தான் கதிரேசன். நிலத்தின் சொந்தக்காரன். முப்பத்தி ஐந்து வயது. ரொம்பவும் நல்ல குணமும், ஈர மனமும் கொண்டவன்.

“என்னா காத்தாயி… இன்னைக்கு வேலை முடிஞ்சிடுமா?”

“முடிஞ்சிடும் கதிரேசண்ணா. இந்த வயல் முடிஞ்சதும் அதோ முன்னால இருக்கிற ரெண்டு வயல்கள்தான். இன்னைக்கு நாலு மணிக்குலாம் முடிஞ்சிடும்.”

“சரி. ஒண்ணரை மணிக்குச் சாப்பிட வந்துடுங்க. இன்னைக்கு யாரும் சாப்பாடு எடுத்துட்டு வரலதானே?”

“அதெப்படி எடுத்துட்டு வருவோம்ணா? அதான் இன்னைக்கு சிக்கன் செய்யறதா சொல்லி இருக்கீங்களே. எப்படா ஒண்ணரை மணி ஆகும்னு பார்த்துட்டு இருக்கிறோம்.” செல்வி சொன்னாள்.

“யாரு வாயாடியா?.. வா வா… உனக்கு நிறைய போடறேன்.” சிரித்துக் கொண்டே சொன்னான் கதிரேசன்.

அப்போதுதான் அங்கு வந்து நின்றான் கனகலிங்கம்.

அவனைப் பார்த்ததும் அவ்வளவு பெண்கள் முகமும் மாறியது. காத்தாயி முகமோ வெறுப்பையும், கோபத்தையும் கக்கியது.

கதிரேசனின் நண்பன்தான் இந்த கனகலிங்கம். ஆனால் குணத்தில் அப்படியே கதிரேசனுக்கு நேரெதிர். இருவருக்கும் ஒரே வயது. பத்து ஏக்கர் பூமிக்குச் சொந்தக்காரன்.

ரொம்பவும் மோசமான குணம். பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் மோசமான ஆள். தான் விரும்பிய பெண்ணை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற வெறி பிடித்தவன்.

தான் விரும்பிய பெண்களை ஏதாவது ஆசை காட்டி தன் வலையில் விழ வைப்பதில் மன்னன்.

அவன் வாங்கித் தரும் சாராயத்துக்கு அதைச் செய்ய அவன் பின்னால் ஐந்து பேர் எப்போதும் உண்டு. இவனும் மொடாக் குடிகாரன்.

அவன் அப்பாதான் ஊர் பிரசிடென்ட் என்பதால் ஆடிக்கொண்டிருந்தான்.

இன்னும் கல்யாணமாகவில்லை. இவன் குணம் தெரிந்து எந்தப் பெண்ணும் இவனைத் திருமணம் செய்ய விரும்பவில்லை.

அவன் கொஞ்ச நாளாகவே காத்தாயி பக்கம் சுற்றிக் கொண்டிருந்தான். அவள் வேலை முடிந்து வரும்போதோ அல்லது ஏதாவது கடை கண்ணிக்குப் போய்விட்டுத் திரும்பும்போதோ அவளைக் கிண்டல் செய்வான்.

“என்ன காத்தாயி… தனியா போற? நானும் வரட்டுமா?” என்பான்.

“காத்தாயி… இந்த மாமனையும் கொஞ்சம் கண்டுக்கலாம்ல? நான் பாவமில்லயா?” என்பான். அவளுக்கு ஆத்திரமாக வரும்.

கண்டும் காணாமல் போய்விடுவாள்.

‘இன்னைக்கு என்ன… வேலை செய்யற இடத்துக்கே வந்துட்டான்..’ கடுப்பாக இருந்தது அவளுக்கு.

குச்சிக்கிழங்குச் செடி ஒன்றின் அடியில் அவன் கண்ணுக்குத் தெரியாமல் உட்கார்ந்துகொண்டாள்.

“என்ன கதிரேசா… காட்டு வேலை நல்லா நடக்குது போல..” என்றான். நன்றாகக் குடித்திருப்பான் போல. வாய் குழறியது.

“ஆமா கனகலிங்கம். குடிச்சிட்டு நீ எதுக்கு இங்க வந்த? வீட்டுக்குப் போப்பா.”

“இல்லப்பா… நா.. நா.. சரியாத்தான் இருக்கேன்..” அவன் வாய் குழறியது. அவன் கண்கள் காத்தாயியைத் தேடின.

அவன் அந்தப் பக்கம் திரும்பிப் பேசிக்கொண்டிருக்கும்போதே வேறு வழியில் கதிரேசன் வீட்டுக்குப் போய்விட்டாள் காத்தாயி.

அடுத்த நாள். காலை மணி பத்து, பத்தரை இருக்கும்.

கனகலிங்கமும் அவன் கூட்டாளிகளும் ஆறுமுகம் டீ கடையில் உட்கார்ந்திருந்தார்கள்.

ஆறுமுகம் டீ கடை முன்பாகப் பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. ரொம்ப வருஷத்து மரம் அது. அதன் அடியில் நூறு பேர் கூட உட்காரலாம். எப்போதும் அதன் அடியில் பத்து பேர் உட்கார்ந்துகொண்டு ஆறுமுகம் கடை டீ, வடை, போண்டா சாப்பிட்டுக் கொண்டு, பேப்பர் படித்துக் கொண்டு உலக அரசியல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

பஸ் ஸ்டாண்டுக்குப் போகும் வழி அது என்பதால் ஆட்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

நாய் ஒன்று எப்போதும் போடுவதைத் தின்றுவிட்டு ‘எப்படியாவது போங்கடா’ என்று தேமேவெனப் படுத்துக் கிடக்கும்.

ஆலமரத்தடியில் கனகலிங்கம் உட்கார்ந்திருக்க, அவனைச் சுற்றி அவன் கூட்டாளிகள் ஐந்து பேரும் உட்கார்ந்திருந்தார்கள். ராத்திரி அடித்த போதை தெளியவில்லை ஆறு பேருக்கும்.

கனகலிங்கம் ஏதோ யோசனையில் அமைதியாகத் தூரத்துப் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருக்க,

“என்ன கனகு… எப்பவும் அமைதியா இருக்க மாட்ட. இன்னைக்கு என்ன அதிசயமா அமைதியா இருக்க? காத்தாயி ஞாபகமா?” ஆரம்பித்தான் மாணிக்கம்.

“இருக்கும்… இருக்கும்… அவதான் வலையில சிக்காத மீனு மாதிரி இவர் கையில சிக்காம இருக்காளே.” என்றான் வடிவேலன்.

“ஸ்.. சும்மா இருங்கடா..” கனகலிங்கம் அதட்டினாலும் உண்மையில் அவன் காத்தாயி நினைப்பில்தான் இருந்தான்.

அந்தக் கட்டுமஸ்தான உடலும், சிலை போன்ற உருவமும், அதிகாலை சூரியன் போல தகதகவென மின்னும் முகமும், அவளின் இளமையும், உடல் வனப்பும் அவனை என்னமோ பண்ணிக்கொண்டிருந்தன. எவ்வளவோ முயன்றும் அவளை அடைய முடியவில்லையே என்ற கோபம் அவன் கண்களில் தெரிந்தது.

“மத்த பொம்பளைங்கள மயக்குன மாதிரி இவள உன்னால மயக்க முடியலயே கனகு. அதிகபட்சம் ஒரு வாரத்துல வேற பொம்பளைங்களா இருந்தா உன் வலையில விழ வச்சுடுவ. மூணு மாசம் ஆகியும் இவள ஒண்ணும் பண்ண முடியலயே. அப்போ அவ்வளவுதானா நீ?” கணேசன் நக்கலாகக் கேட்டு ஏளனமாக மற்றவர்கள் சிரித்ததும் அவன் கோபம் உச்சிக்குப் போனது.

தன் ஆண்மைக்கு அவள் விடுத்த சவாலாக நினைத்தான் கனகு.

“யாரைப் பார்த்து என்னடா பேசுறீங்க? இன்னும் ஒரே வாரம். அவளை என் வலையில விழ வைக்கலைனா… நான் கனகலிங்கம் இல்லைடா..” சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தான் கனகலிங்கம்.

இரண்டு நாள் ஓடியிருந்தது. சாயங்காலம் மணி மூன்று இருக்கும்.

காத்தாயிக்கு வேலை இல்லை. மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டினுள் படுத்திருந்தவள் வெக்கை தாளாமல் வெளியே எழுந்து வந்தாள்.

வெளியே இரண்டு வேப்ப மரங்கள் இருந்தன. காற்று குளுகுளுவென வீசிக்கொண்டிருக்க, அதனடியில் பெரிய கல் ஒன்று இருந்தது. அதன் மேல் வந்து உட்கார்ந்தாள்.

ஐந்து நிமிடம் போயிருக்கும், அங்கு வந்தாள் கற்பகம். இரண்டு பேர் வீடுகளும் பக்கம் பக்கமே.

“உள்ள வெக்கை தாங்க முடியல காத்தாயி.”

“ஆமா கற்பகம். இல்லாதவன் மனசுல இருக்கிற ஏக்கம் மாதிரி அவ்வளவு வெக்கையா இருக்கு. சாப்பிட்டியா?”

“சாப்பிட்டுதான் வர்றேன் காத்தாயி. நீ சாப்பிட்டியா?”

“ம். ஆனா இந்த வயிறு இருக்கே… நன்றிகெட்டது கற்பகம். காலையிலதான் ரொப்ப போட்டாங்களே… கொஞ்சம் அமைதியா இருப்போம்னு இருக்கா பாரு. உடனே மதியத்துக்கும் கேக்குது..”

“நன்றிகெட்ட வயிறுதான்.” சொல்லிச் சிரித்தாள் கற்பகம்.

“பசியே இல்லாம இருந்தா நல்லாருக்கும்ல காத்தாயி?”

“இல்ல கற்பகம். பசி இல்லைனா இந்த உலகம் இல்லை. இந்த உலகம் தொடர்ந்து இயங்கணும்னா பசி இருக்கணும். அந்தப் பசியைப் போக்கத்தானே மனுஷனோட இத்தனை போராட்டமும் ஓட்டமும்? கொஞ்சம் யோசிச்சுப் பாரு. இந்தப் பசி மட்டும் இல்லைனா அதைப் போக்க யாரு வேலைக்குப் போவாங்க? வேலைக்குப் போகாட்டி தொழில் ஏது? தொழில் இல்லாட்டி உலகம் ஏது? என்னைக் கேட்டா இந்த உலகம் இயங்குறதுக்கான அச்சாணியே பசிதான். இந்த உலகம் உயிரப்போட இருக்கக் காரணம் பசிதான்.”

“ஆமால்ல..”

அப்போது எங்கிருந்தோ ஒரு புழு வந்தது. மண்புழு.

கற்பகம் ஒரு குச்சி எடுத்து அதை லேசாகச் சீண்டினாள். அமைதியாக நகர்ந்து போனது. இரண்டாவது முறை லேசாகக் குத்தினாள். அப்போதும் அமைதியாகவே நகர்ந்து போனது. மூன்றாம் முறை திரும்பவும் குத்தினாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த புழு தலையைத் தூக்கி ஆட்டியது… வலமும் இடமுமாகத் தன் எதிர்ப்பைத் தெரிவிப்பது போல..

“இந்த புழுவுக்குக் கூட கோபம் வருது பாரு காத்தாயி. ரெண்டு முறை அமைதியா இருந்தது மூணாவது முறை கோபம் வந்து எழுந்து தலையை ஆட்டுது.”

“எல்லா உயிரோட இயல்பும் அதுதான் கற்பகம்.. இந்த புழுவும் அதைத்தான் செய்யுது. தனக்குத் தெரிஞ்ச அளவு, தன்னால முடிஞ்ச அளவு எதிர்க்குது. தன்னைக் காப்பாத்திக்கப் போராடுது பாரு. அதை விட்டுரு..” என்றாள் காத்தாயி.

இரண்டு நாள்கள் போயிருந்தது.

மணி மாலை நான்கு இருக்கும். காத்தாயி வேலை முடிந்து வந்துகொண்டிருந்தாள். அன்று தனக்கு உடம்பு சரியில்லை என கற்பகம் வரவில்லை.

காத்தாயி வந்த வழி முழுவதும் விவசாய நிலங்கள் சூழ்ந்த பாதை. ஆளுயரத்துக்குக் கரும்பும், குச்சிக்கிழங்கும், வாழையும் விளைந்து நிற்கும் வயல்கள். ஆள் உள்ளே இருந்தாலும் தெரியாது.

இன்னும் பத்து நிமிட நடை. அப்புறம் காளியப்பன் வீடு வந்துவிடும். அதிலிருந்து ஊர் துவங்கிவிடும்.

ஆள் நடமாட்டம் இல்லாமல் கருமியின் மனம் போல வெறிச்சோடிிக் கிடந்தது பாதை.

காலை எட்டி வைத்து நடந்தாள்.

நடராஜன் வயலைத் தாண்டி, சாமிக்கண்ணுவின் குச்சிக்கிழங்கு வயலில் காலை வைக்கும்போது, உள்ளிருந்து யாரோ வரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டுப் போய் நின்றாள்.

உள்ளே இருந்து வந்தவனைப் பார்த்துத் தலையில் இடி இறங்கியது போலிருந்தது. அவன் கனகலிங்கம்.

அவன் கூட்டாளிகள் யாருமில்லை. குடித்திருப்பான் போல. வாடை குமட்டியது.

“வா காத்தாயி. இந்த நாளுக்காகத்தான்டி எதிர்பார்த்துட்டு இருந்தேன். எத்தனையோ முறை என் ஆசையை உன்கிட்ட சொன்னேன். நீ ஒத்துக்கல. இன்னைக்கு என்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறயோ பார்க்குறேன்..” சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்தான்.

“வேணாம் கனகலிங்கம், வேணாம். அமைதியா போயிடு..” சொல்லிக்கொண்டே பின்னால் நடந்தாள் அவள்.

அவன் அவள் பேச்சைப் பொருட்படுத்தாமல் முன்னே வந்தான்.

“வாடி..” அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை.

அவன் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைந்தாள்.

அதிர்ந்து போனான் அவன். இதுவரை யாரும் செய்யாதது அது. எதிர்பாராத அதிர்ச்சியில் அவள் கையை விட்டுவிட்டான்.

“என்னடா நினைச்சுட்டிருக்க உன் மனசுல? தனியா ஒரு பொம்பளை வந்தா கைய பிடிச்சு இழுப்பியா? நீ என்ன பெரிய இவனா? தனியா புருஷன் இல்லாத பொம்பளைனா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா? பொம்பளைங்கள பார்த்தா அவ்வளவு இளக்காரமா உனக்கு? உடல் சுகத்துக்கு அலையறவனு நினைச்சியா? ஜாக்கிரதை!” உறுமினாள்.

அவளின் பத்ரகாளி உருவம் கண்டு திகைத்துப் போய் நின்றவனை அலட்சியம் செய்தவள், வேகமாக வீடு நோக்கி நடந்தாள்..

அன்று மாலை மணி ஆறுக்கு மேல் இருக்கும். வீட்டுக்கு வந்த கற்பகத்திடம் எல்லாமும் சொன்னாள் காத்தாயி. அதிர்ந்து போய் நின்றாள் கற்பகம்.

“ஏண்டி அவனை அடிச்ச?”

“அந்தப் புழு அன்னைக்கு தனக்கு ஆபத்து வந்தப்ப என்ன பண்ணுச்சுனு நீ பார்த்ததான கற்பகம்? தனக்குத் துன்பம் தர்றவங்கள எதிர்த்து நின்னுச்சு. தன்னைக் காப்பாத்திக்கப் போராடுச்சு. தன் எதிர்ப்பை அதால முடிஞ்ச அளவு காட்டுச்சு. கேவலம் அந்தப் புழுவுக்கு இருக்கிற கோபமும், உணர்ச்சியும் மனுஷங்க நமக்கும் இருக்கணும்தானே கற்பகம்? அப்படி இல்லைனா நாம அந்தப் புழுவை விடக் கேவலம்னு அர்த்தம்.

தனக்கோ, தன் உயிருக்கோ, உடைமைக்கோ, தன்மானத்துக்கோ, சுயத்துக்கோ ஆபத்து வரும்போது எதிர்த்து நிக்கணும். எதிராளி எவ்வளவு பெரியவன்ங்கிறது விஷயமில்லை. தான் அடுத்தவங்களை தொந்தரவு செய்யாதப்ப, தன்னை யாராவது தொந்தரவு பண்ணா, ஆபத்து விளைவிச்சா, தன்மானமுள்ள எந்த உயிரும் எதிர்த்துதான் நிக்கும். இல்லைனா அது செத்துப் போன பொணத்துக்குச் சமம்..

ஒண்ணு சொல்லவா? எனக்கு இப்ப அந்தப் புழுவா மாறுன திருப்தி.”

“அது சரி, தனியா இருக்கிற உன்கிட்ட திரும்பவும் வம்பு பண்ணா என்ன பண்ணுவ?”

“கண்டிப்பா இனி என் வழிக்கு அவன் வரமாட்டான்..” சொல்லி நிறுத்தியவள், அவளைச் சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

“அப்படி வந்தான்னா… இப்ப புழுவா மாறின எனக்கு, பாம்பா மாற ரொம்ப நேரம் ஆகாது கற்பகம்!”

சொல்லிவிட்டு கம்பீரமாக நடக்க ஆரம்பித்தாள் காத்தாயி..

Author

Related posts

இடும்பை

மோக வலை

வங்கிக்கடன்