பட்டாம்பூச்சிகளின் நடனம்

மலர்களின் இதழ்களில்
சுழலும் ஓவியமாய்
ஒன்றையொன்று தொடர்கின்றன
இரு நீலப்பட்டாம்பூச்சிகள்
நாட்டியத்தின் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு
ககன மேடையில்
பூக்களை உடலெனக் கொண்டு
தன்னை மறந்து சுழன்று நடனமிடும்
பட்டாம்பூச்சிகள்
சிறகுகளின் நீலத்தைப் பிழிந்து
காற்றில் ரகசியக் குறியீடுகளால்
நடனமொழிகளை வரைகின்றன

வளைவுகளை வரையும்போது மட்டும்
அவை அதியுற்சாகங்கொள்கின்றன
அவற்றில்
தளைகளை உடைக்கும் சுதந்திரமிருப்பதை
அவை
எப்போதோ கண்டுகொண்டுவிட்டிருக்கின்றன

மொழிகள் உறைந்துபோன ஒரு கணத்தில்
ஒரு வண்ணத்துப்பூச்சி
என் கடிகாரத்தின் முட்களை நிறுத்துகிறது
மலரும் ஆடாது காற்றும் நகராது
முட்கள் சிக்கிக்கொள்ள
அவற்றின் இடைவெளியில்
நடனம் மட்டும் துடிக்கிறது.

Author

Related posts

மருத்துவர் பக்கம் – 45:  மனப்பருமன்

வரலாற்றில் பொருளாதாரம் – 42

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16:  அணக்க நகரம்