திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 16

This entry is part 21 of 21 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா

மிருகம்

எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லை
இப்போது நடந்திருப்பதெல்லாம்
முன்பு அனுமானித்ததே.

கணிப்புகள் ஏதும் தப்பவில்லை
சரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயே
அது நிகழ்காலத்தை ஆளுகிறது.

ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லை
முன்பிருந்தே அதன் கோர வடிவத்தை
பகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது.

நமக்கெல்லாம் முன்பே தெரியும்
அதொரு மிருகமென்றும்,
வேட்டை அதன் சுபாவமென்றும்,
எல்லாம் தெரிந்தே காட்டை ஒப்புக்கொடுத்த பிறகு,
அதன் கோரைப் பற்களிலிருந்து வழிகிற
இரத்தச் சொட்டுக்களைக் கண்டு பயமெதற்கு?

எறும்புகளாய் ஒவ்வொரு மண்துகளாய்
துளித் துளியாய் ஜோடித்து
அழகாகக் கட்டி முடித்த புற்றுகளின் மேல்
அதன் சார்பு சர்ப்பங்களை ஊரவிடுகிறது.

அந்தத் துணிவிலேயே,
நரிகள் ஊளையிட்டுக்கொண்டு,
பாம்புகள் சீறிக்கொண்டிருக்கின்றன,
தின்று வீசப்பட்ட தேகங்களுக்காகப்
பருந்துகள் பார்த்துக்கிடக்கின்றன.

இப்போது காடெங்கிலும்,
பித்தூறிய மிருகங்களின்
இளம் இரத்த வாடை.

பயப்படவேண்டிய நேரமில்லை,
இப்போதும் மீறிப்போய்விட்டதென்று எதுவும் இல்லை.

நடக்கக் கூடாதது எவ்வளவோ நடந்துவிட்டன,
தடுத்து நிறுத்தவேண்டியது இன்னும் நிறையவே இருக்கின்றன.

எப்படியாயினும் சரி காட்டைக் காப்பாற்றியாக வேண்டும்,
காட்டைக் காப்பாற்றியாக வேண்டும்,
கொல்வதே அதன் கடைசி இலட்சியமாகியபோது,
போராடுவதே நமது கடைசி நிர்ணயமாக வேண்டும்.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 15

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

மருத்துவர் பக்கம் – 45:  மனப்பருமன்

வரலாற்றில் பொருளாதாரம் – 42

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 16:  அணக்க நகரம்