வங்கிக்கடன்

சின்னாத்தாவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த ஒன்றை குடிசை என்று சொல்வதே பொருத்தம் என்றாலும், அப்படிச் சொன்னால் நீங்கள் சின்னாத்தாவின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அவளின் மண்சுவர் வசிப்பிடத்தை வீடு என்று சொல்லிவிடுவதே உத்தமம்.

அதுவும் இப்போது சரிந்துவிட்டது.

ஐப்பசி முடிந்து அடைமழையும் முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்த ஒரு கார்த்திகை மாத இரவில், அந்தக் கிராமத்தில் கொட்டித் தீர்த்தது ஒரு பெருமழை. வீசித் தீர்த்தது ஒரு கடும்புயல். ஓலைக்கூரை சரிந்து, மண்சுவர் கரைந்து இல்லாமல் போனது சின்னாத்தாவின் வீடு.

சின்னாத்தா ஒற்றை மனுஷி. பெற்றெடுத்த ஒற்றை மகனை அவளால் உச்சரிக்க இயலாத, வினோதப் பெயர் கொண்ட ஒரு நவீன வியாதிக்குப் பலியாகக் கொடுத்துவிட்டவள். மகனைக் கல்லூரியில் சேர்த்துவிட்டு அவன் படித்து முடித்து வேலைக்குச் சென்று முதல் சம்பளத்தில் தனக்கு வாங்கிக் கொடுக்கப்போகும் புதுச்சீலை என்ன நிறத்தில் இருக்கும் என்று கனவு கண்டபடி வீடு வந்து சேர்ந்தவளை வந்து சேர்ந்தது, கல்லூரியில் மயங்கி விழுந்த மகன் மருத்துவமனை எட்டும் முன்பே மரணித்துவிட்டான் என்ற சேதி.

ஆனாலும் சின்னாத்தாவைப் பார்த்தால் அவள் சோகத்தில் மிதப்பதாகத் தெரியவே தெரியாது. அவளின் அழுத்தமான முகபாவனை அப்படி. தூரத்துச் சொந்தத்திலிருந்து பத்து வயசு செல்வியைக் கூட்டிக்கொண்டு வந்து கூடவே வைத்துக்கொண்டாள். இப்போது அவள் கனவில் செல்வி சீலை வாங்கித் தருகிறாள்.

செல்விக்குப் பள்ளிக்கூடக் கட்டணம் கட்டுவதற்காகவே தனக்குக் காய்ச்சல் அடித்தாலும் அன்ன வயலுக்கு அறுப்புக்குப் போனாள் சின்னாத்தா. கூலி ஒரு நாள் கஞ்சிக்கு ஆகுமே? நாற்று நடவு, களையெடுப்பு என அனைத்து வித விவசாய வேலைகளும் அவளுக்கு அத்துப்படி.

சின்னாத்தாவுக்குச் சொந்தமாக விளைச்சல் நிலமில்லை. இருந்தாலும் வயல் வேலைக்கு யார் கூப்பிட்டாலும் தன் வயல் வெள்ளாமை போலவே பொறுப்போடு செய்வாள் எல்லா வேலைகளையும். குறிப்பாகக் கூலிக்குப் பேரம் பேசுகிற வழக்கம் அவளிடம் கிடையாது. அதனாலேயே எல்லாரும் அவளைத் தங்கள் பண்ணை வேலைகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு அழைத்தனர். அதனால் செல்வியும் அவளும் பட்டினி கிடக்கும்படி இதுவரை நேரவில்லை.

செல்வி ஆசைப்பட்டாள் என்று சின்னதாக ஒரு டிவி பெட்டி கூட வாங்கி வைக்க முடிந்தது. பிரச்சனை இப்போது புயல் காவுகொண்ட வீட்டை எப்படிச் சீர்செய்வது என்பதுதான்.

உப்புப் புளி வாங்க அண்ணாச்சிக் கடைக்குப் போனபோது அவர்தான் சொன்னார்: “காரை வீடா கட்டிப்புடேன் சின்னாத்தா? இப்பதான் இதுக்கெல்லாம் பேங்க்ல கடன் தர்றாங்கள்ல?” இப்படியாகத் தொடங்கியது சின்னாத்தாவின் வீட்டுக் கடன் விண்ணப்பப் படலம்.

“ஆடு மாடு வாங்க, உரம் வாங்க, விதை வாங்க இதுக்கெல்லாம்தான் நாங்க கடன் தரலாம் சின்னாத்தா. வீடு கட்ட, அதுவும் லட்சக்கணக்கில் எல்லாம் கடன் வேணும்னா நீ டவுனுக்குத்தான் போவணும்..” – கையை விரித்துவிட்டார்கள் உள்ளூர் வங்கிக்காரர்கள்.

இப்படியாக அந்த நகரத்து வங்கிக்குள் சின்னாத்தா நுழைய நேர்ந்தது.

நுழைந்தவளை எதிர்கொண்டது பரிச்சயமில்லாத செயற்கைக் குளிர் மற்றும் அந்நியமாகத் தோன்றிய கண்ணாடிக்கதவுகள்.

அங்கிருந்த அனைவருமே மிகுந்த அறிவாளிகளாகவும், பணக்காரர்களாகவும், ஏதோ ஒரு வகையில் தன்னைவிட உயர்ந்தவர்களாகவும் தோன்றியது அவளுக்கு. அதனால் அவளுக்குள் விளைந்த அச்சமும் தயக்கமும் கொஞ்சம் அதிகமே.

இவள் நேரம் வரிசையாகக் கிடந்த நாற்காலிகளில் ஒன்று கூட காலியில்லை. எல்லாவற்றையும் ஆட்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். ஒதுங்கி ஒதுங்கி ஒரு மூலையில் நின்றவளை, யாரை அணுகுவது என்ற கேள்வி குடைந்தெடுத்தது.

அஞ்சு நிமிஷம், பத்தாகி, அரை மணி நேரம் ஆனாலும், போகிற வருகிறவர்களை மிரள மிரளப் பார்த்துக்கொண்டிருந்தவளை, “வெளியூராம்மா?”, விசாரித்தார் அந்த வாயில்காப்பாளர்.

“ஆமாங்க.”

“என்ன விஷயம்?”

“கடன் வேணும். வீடு கட்ட…”

“அந்தக் கடைசி கவுண்ட்டர் கிட்டக் கேளுங்க.”

“எந்தக் கவுண்டருங்க?”

“நாசமாப் போச்சு. கவுண்டருமில்லை, தேவருமில்லை. கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க, நீலச் சட்டைக்காரர், அவர்கிட்டக் கேளுங்க.”

கேட்டாள் சின்னாத்தா. அவரோ, “அக்கவுண்ட் இருக்கா?” சின்னாத்தாவை பதில் கேள்வி கேட்டார்.

“இல்லீங்க ஐயா.”

“இந்தாங்க. இதை ஃபில் அப் பண்ணி எடுத்துட்டு வாங்க. பத்தாயிரம் பணத்தோட வாங்க.”

சின்னாத்தா தன் கைகளில் வாங்கிய காகிதங்கள், “இதை நிரப்ப யாரிடம் உதவி கேட்பது?” கேள்வியால் கனத்தன.

ரமேஷ் ஞாபகத்துக்கு வந்தான். சின்னாத்தாவின் நாத்தனார் மகன். காலேஜ் படிக்கிற புள்ளை. அவனைக் கேட்கலாம். ஆனால் அவன் அம்மா மரகதத்தை எப்படிச் சமாளிப்பது?

கொட்டாயில் கிடந்த பசு மாட்டிடம் பாலைக் கறந்து, சுண்டக் காய்ச்சி, அதிகப்படியாய் வெல்லத்தை அள்ளிக்கொட்டி, இரண்டுக்கு பதிலாக நான்காக ஏலக்காய்களைத் தட்டிப்போட்டு, திரட்டிப்பால் செய்து, ஒரு தூக்குவாளியில் நிரப்பிக்கொண்டு, மரகதத்தின் வீட்டை அடைந்தாள் சின்னாத்தா.

அந்த ஊரிலேயே மூணு மாடிக் கட்டிடம் மரகதத்தின் வீடு மட்டும்தான். காம்பவுண்ட் கட்டி, வாசல்கேட்டில், ‘நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருந்தது. அது என்னவோ, “மரகதம் ஜாக்கிரதை” என்று எழுதியிருப்பதாகவே தோன்றியது சின்னாத்தாவுக்கு. இத்தனைக்கும் சின்னாத்தாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

“ரமேசு… உன்னத்தான் நம்பியிருக்கேன். இதைக் கொஞ்சம் எழுதிக் கொடுடா ராசா.”

ரமேஷ், தான் என்ன சொல்ல வேண்டும் என்ற பதிலைக் தன் அம்மாவின் முகத்தில் தேடினான். மரகதமோ சின்னாத்தாவுக்கு உதவுவதா வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

தூக்குவாளியை மரகதத்தை நோக்கித் தள்ளினாள் சின்னாத்தா.

“என்னாண்ணி இது?” – மரகதம்.

“திரட்டிப்பாலு. உனக்குப் பிடிக்கும்ல?” – சின்னாத்தா.

ஏலக்காய் வாசனை மரகதத்தை இளக்கியது. “என்ன ஏதுன்னு பார்த்து அத்தைக்கு எழுதிக் கொடுடா ரமேசு.”

அப்பாடா என்றிருந்தது சின்னாத்தாவுக்கு. பச்சைக் கொடி காட்டப்பட்டதும் ரமேஷும் அந்த விண்ணப்பப் படிவத்தை, ஒவ்வொன்றாக சின்னாத்தாவிடம் விவரங்கள் கேட்டு, நிரப்பிக் கொடுத்தான். கடைசியாக, “இந்தக் கட்டத்துல போட்டோ ஒட்டணும் அத்தை. இருக்கா?”

“போட்டோவா? என் கல்யாண போட்டோதான் இருக்கு.”

“அதில்லை அத்தை. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.”

சின்னாத்தா விழிக்க, “நம்ம பெரிய கடை வீதியில ஸ்டுடியோ கிடக்கு அண்ணி. அங்க எடுத்துக்கலாம் போட்டோ. நான் துணைக்கு வாரேன்.”

கூடுதலாகப் போட்ட இரண்டு ஏலக்காய்கள் நன்றாகவே மணத்தன.

இருப்பதிலேயே நல்லதாகப் பார்த்து ஒரு சீலையைக் கட்டிக்கொண்டாள் சின்னாத்தா. ஸ்டுடியோக்காரர் கொடுத்த பவுடர் பூசி, கேமராவை முறைத்தபடி எடுத்துக்கொள்ளப்பட்டது சின்னாத்தாவின் புகைப்படம்.

அடுத்ததாகப் பத்தாயிரம் பணம். உள்ளூர் வங்கிக்கு மீண்டும் ஒரு நடைப்பயணம். அங்கே கணக்கில் இருந்தன…

… மாட்டுச் சாணத்தில் சின்னாத்தா தட்டிய ராட்டிகள் … கறந்த பால், கடைந்த வெண்ணெய் … இடுப்பொடிய நட்ட நாத்து, வெட்டிய களைச்செடி … இராத்திரி பகல் பார்க்காமல், சலிப்புக் களைப்பைச் சட்டை செய்யாமல் அவள் உழைத்த உழைப்பு…

எல்லாமாக ஒரு தொகை இருந்தது. ஆனால் அது பத்தாயிரத்தை எட்டவில்லை. சில ஆயிரங்கள் குறைச்சல்.

“பழைய கடனே பாக்கிக் கிடக்கு..” – முனகிய மார்வாடிக்காரரை, “அடைச்சுடுறேன் சேட்டய்யா. எங்க ஓடிட்டேன்?”, ஒப்புச் சொல்லி, பற்றாக்குறையை எப்படியோ நிரப்ப முடிந்தது.

கல்லுச் சுவர் வச்சு, கான்கிரீட் ரூஃப் போட்டு, சிமெண்ட்டு தரை பூசி ஒரு வீட்டைக் கனவில் கட்டியபடி மீண்டும் அந்த நகரத்து வங்கிக்குள் நுழைந்தாள் சின்னாத்தா.

வாயில்காப்பவருடன் ஒரு புன்னகை பரிமாற்றம். பின் கண்ணாடிக்காரரைப் பார்த்தும் ஒரு புன்னகை. அவரிடமோ, காரணம் என்ன என்று கண்டுபிடித்துவிட முடியாத ஒரு உம்மணா மூஞ்சி முகம். சின்னாத்தா நீட்டிய காகிதங்களை வாங்கியவர், “இங்க கைநாட்டு வைங்க..”, சின்னாத்தா முன் ஸ்டாம்ப் பேடை நீட்டினார்.

திடீரென்று ஒரு கர்வம் சின்னாத்தாவிடம். “நான் கையெழுத்துப் போடுவேன் சார்…”

நீட்டப்பட்ட பேனாவை வாங்கியவளுக்கு மூடியைத் திறக்கத் தெரியவில்லை. தெரியவில்லையோ? இல்லை நடுங்கிய விரல்களால் முடியவில்லையோ? திணறினாள். கண்ணாடிக்காரரே பேனாவின் பட்டனை அழுத்தித் திறந்து கொடுத்தார்.

கையெழுத்து, உள்ளூரில் தொடங்கி ஏழூர் தாண்டி அயல் தேசத்தில் போய் முடிந்தது. பெருமிதத்தோடு சின்னாத்தா நிமிர, கண்ணாடிக்காரர் அவளையும் அவள் போட்டிருந்த கையெழுத்தையும் விசித்திரமாகப் பார்த்தார்.

இச்சமயத்தில் தனக்குக் கத்தைக் கத்தையாகப் பணம் தருவார்கள் என்கிற சின்னாத்தாவின் ஆசையான எதிர்பார்ப்பு அதிகமான ஏமாற்றமானது.

பணத்திற்குப் பதில் மற்றொரு காகிதக் கத்தைதான் நீட்டப்பட்டது.

“லோன் அப்ளிகேஷன் ஃபார்ம். ஃபில் அப் பண்ணிட்டு வாங்க.”

சின்னாத்தாவிடம் அயர்ச்சியின் முதல் அடையாளம்.

தூக்குவாளியில் திரட்டிப்பாலுக்குப் பதில் இந்த முறை சேறு சேறாக வெண்ணெய்.

“வீடு கட்ட நிலம் இருக்கான்னு கேட்டிருக்கு அத்தை இதுல..”, ரமேஷ் அறிவித்தான்.

“இருக்கே ரமேசு. இருக்குன்னு போடு.”

“எவ்வளவுன்னு கேட்டிருக்கு.”

“இருக்கும்ப்பா.. ஒரு கால் ஏக்கரு.”

அப்படி இப்படி என்று எப்படியோ எல்லாவற்றையும் நிரப்பிக் கொடுத்தான் ரமேஷ்.

மறுபடி நகர வங்கி விஜயம்.

இம்முறை வாயில்காப்பாளரின் புன்னகையோடு அங்கே தரையை மாப் போட்டுக்கொண்டிருந்த பெண்மணியின் புன்னகையும் கிட்டியது. இரண்டு தடவைகள் வந்ததில் அவளும் பரிச்சயமாகிவிட்டிருந்தாள் சின்னாத்தாவுக்கு.

கண்ணாடிக்காரரின் ‘உம்’மென்ற மூஞ்சி இப்போதும் ‘கம்’மென்றே கிடந்தது. சின்னாத்தா நீட்டிய காகிதங்களை வாங்கியவர், புரட்டிப் பார்த்தார். சின்னாத்தாவை நோக்கி மறுபடியும் கையை நீட்டினார்.

‘இன்னும் என்ன?’ என்பது போல் சின்னாத்தா பார்க்க, அவரோ, “லேண்ட் டாக்குமெண்ட்?” என்றார் சிக்கனமாக.

ஆயாசம் அவளைப் பிடித்துக்கொண்டது. இன்னும் எத்தனை தடவை இந்த வங்கிக்கு தான் வர வேண்டுமோ என்ற பீதி தொடங்கியது.

தாசில்தார் அலுவலகம் சென்று, சர்வே எண் வாங்கி, தொலைந்துபோன நிலப் பத்திரத்துக்கு நகல் வாங்கிக்கொண்டு கண்ணாடிக்காரர் முன் போய் நின்றால், அவர்,

“உங்க பேர் என்ன?”

“சின்னாத்தா சார்.”

“மாரிமுத்து யாரு?”

“என் வீட்டுக்காரர் சார்.”

“அவர் பேர்ல நிலம் இருந்தா உங்க பேர்ல எப்படி கடன் கொடுக்க முடியும்?”

செத்துப் போன மாரிமுத்துவை எப்படி உயிரோடு கொண்டுவருவது?

அந்த வங்கி வளாகத்தில் முதல்முறையாக தலைசுற்றியது சின்னாத்தாவுக்கு.

தாசில்தார் அலுவலகம் – நகர வங்கி, நகர வங்கி – தாசில்தார் அலுவலகம் சில பல தடவைகள் பயணிக்க வேண்டியதாயிற்று சின்னாத்தாவுக்கு.

கைக்காசு குறைந்துகொண்டே போனது. வங்கி சமாச்சாரங்களால் கூலி வேலைக்கும் பல நாட்களாகப் போக முடியவில்லை. நிலைமை மோசத்திலிருந்து படுமோசத்தை நோக்கி வீழ்ச்சியடைந்தது.

“லோன் ரிஜெக்டெட்.”

“அப்படீன்னா?”

“உங்களுக்குக் கடன் கிடையாதும்மா.”

“ஏன்?”

“ரூல்ஸம்மா. இப்படி மறுபடி மறுபடி வந்து வந்து தொந்தரவு பண்ணாதீங்க.”

எளியவர்களுக்கு எளியவர்களே இணக்கம். “எதுக்கும் மேனேஜரை ஒருவாட்டி பார்த்துட்டுப் போம்மா. அவரு மனசு வச்சா எல்லாம் நடக்கும்.” வாயில்காப்பாளர் கிசுகிசுத்தார் சின்னாத்தாவின் காதில்.

மேனேஜரை சுலபத்தில் பார்த்துவிட முடியவில்லை. காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்த சின்னாத்தாவுக்குப் பசி வந்ததும்தான் முற்பகல் கடந்து பிற்பகல் பிறந்துவிட்டிருந்ததை உணர முடிந்தது.

“அடுத்தது நீங்க போங்க”, ஒரு அதிகாரி சொல்லத் தயாராக இருந்தாள் சின்னாத்தா.

மேனேஜர் அறைக்குள் இருந்து ஒரு பட்டுப்புடவை, வைரக்கம்மல், லிப்ஸ்டிக் பெண்மணி வெளியேறியதும், சின்னாத்தா அறைக்குள் நுழையும் முன், “கொஞ்சம் வெயிட் பண்ணும்மா”, தடுக்கப்பட்டாள். ஏழை என்றால் ஒருமையில் அழைப்பு. கொஞ்சம் பசையுள்ளவர் என்றால் பன்மையில் விளிப்பு. தொல்காப்பியர் எழுதாத இலக்கணம்.

கோட்டும் சூட்டுமாக பளபளவென்று ஒருவர். அவரும் மேனேஜரும் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். உரையாடலைக் கண்ணாடிக்கதவு வழியே காண நேர்ந்தது சின்னாத்தாவுக்கு. ‘இன்னும் எவ்வளவு நேரம்தான் பேசுவாங்களோ?’

மனக்களைப்போடு, உடல் களைப்பும் சேர்ந்துகொண்டது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் கிடந்த பட்டினி வயிறு பாடாய்ப்படுத்தியது.

ஒரு வழியாகக் கோட்டு-சூட்டு ஆசாமி மேனேஜர் அறையை விட்டு வெளியே வந்தார். அவர் பின்னாலேயே வந்த மேனேஜர், அவருக்குக் கைகுலுக்கிப் பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தார். மேனேஜர் முகத்தில் மாறாத சிரிப்பு.

மேனேஜர் சைகை செய்ய, அவர் அறைக்குள் அதிகாரி நுழைந்தார். நுழைந்த அதிகாரி வெளியே வந்தார்.

“நான் உள்ளே போலாமா?” கேட்ட சின்னாத்தாவை, “மேனேஜர் இப்ப கிளம்புறார். ஃபீல்ட் வொர்க். இன்னைக்குப் பார்க்க முடியாது. இன்னொரு நாள் வாங்க”, வார்த்தைகள் வாடச்செய்தன.

அன்று சோர்வுடன் வீடு திரும்பினாலும், தன் கூரை வீடு காரை வீடாக வங்கிக் கடன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறு இன்னும் இருப்பதாகவும் அது அந்த மேனேஜரின் கைகளில் இருப்பதாகவும் சின்னாத்தா நம்பினாள்.

இரண்டு மூன்று பயணங்களுக்குப் பின், சில பல மணி நேரக் காத்திருத்தல்களுக்குப் பின் மேனேஜர் அறைக்குள் நுழையும் பாக்கியம் கிட்டியது.

“வாங்கம்மா. உட்காருங்க.” இவர் இந்த சிரிப்புடனேயே பிறந்திருப்பாரோ?

“ஐயா மனசு வச்சீங்கன்னா..”, குரல் கெஞ்ச சின்னாத்தா நீட்டிய காகிதங்களை வாங்கிய மேனேஜர் அவற்றை ஒரு விரைவுப் பார்வை பார்த்தார்.

அடுத்த நொடியே காகிதங்களை சின்னாத்தாவிடமே திருப்பிக் கொடுத்தார்.

“உங்களுக்குக் கடன் கொடுக்க எங்க பேங்க் ரூல்ஸில் இடமில்லையேம்மா?”

குரல் மறுத்தாலும், அந்த மறுப்பையும் ஒரு புன்னகையுடனேதான் சொன்னார் அந்த நிர்வாகி.

“இல்லீங்க ஐயா. எப்படியாவது பார்த்து உபகாரம் பண்ணா…” – சின்னாத்தா சொன்னது அவர் காதில் விழுந்ததா என்பதே சந்தேகம்தான். தலையாட்டினாரே தவிர கவனித்ததாகத் தெரியவில்லை.

அவளின் வார்த்தைகளுக்குப் பதில் ஏதும் சொல்லாமல் பஸ்ஸரை பலமாக அழுத்தினார்.

“வாட்ச்மேன்!”

வாயில்காப்பாளர் அறைக்குள் நுழைந்தார்.

“உங்களுக்குக் கடன் கொடுக்க முடியாதும்மா. மன்னிச்சிடுங்க”, சின்னாத்தாவை நோக்கி கையைக் குவித்த மேனேஜர், வாயிற்காப்பாளரை நோக்கி, “இந்தம்மாவை பத்திரமா வெளியே அழைச்சுக்கிட்டுப் போப்பா. பாவம், வயசானவங்க, பார்த்துப்பா.”

சின்னாத்தாவுக்கு ஏனோ பெரிதாகக் கவலை தோன்றிடவில்லை. பேசாமல் வெளியே வந்துவிட்டாள்.

வீட்டுக்கு வந்ததும், அடுக்களைக்குப் போனாள். கிடந்த நீராகாரத் தண்ணியை வயிறு முட்டக் குடித்தாள்.

வாசப்பக்கம் வந்து அங்கே கிடந்த தென்னை மட்டைகளை ஆராய்ந்தாள். ஒவ்வொன்றாக எடுத்து முடைய ஆரம்பித்தாள். தன் குடிசைக்குக் கூரை வேய எத்தனை கீத்து தேவைப்படலாம் எனக் கணக்கிட்டது மனசு.

ஒரு மாலை, செல்வி டிவி பெட்டியைப் பார்த்துக்கொண்டிருக்க, இங்கேயும் அங்கேயுமாக நடந்து கொண்டிருந்த சின்னாத்தாவின் காதுகளைத் தொட்டது அந்தத் தொலைக்காட்சிச் செய்தி:

“பிரபல தொழிலதிபர் தேசிய வங்கியில் வாங்கிய 2500 கோடி ரூபாய் கடனைத் திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓட்டம்.”

திகைத்து நின்றுவிட்டாள் சின்னாத்தா.

“அந்தாளுக்கு மட்டும் எப்படி அம்புட்டு ரூபா கடன் கொடுத்தாங்க பேங்க்ல?”

Author

Related posts

இடும்பை

மோக வலை

புழுக்கள்