தமிழே அமிழ்தே – 12

This entry is part 12 of 12 in the series தமிழே அமிழ்தே

கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும்.

கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே.

காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:
ஒரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் எல்லா வண்டிகளும் ஓட்டம் தடையாகி நிற்கும்போது, ஓர் ஓட்டுநர் கண்ணில் சாலையோரம் வரப்பில் ஒரு நூறுகாலி (மரவட்டை அல்லது பூரான்) எவ்விதத் தடையுமின்றி தன் பாட்டுக்கு ஊர்ந்து செல்வதைப் பார்க்கிறார் என்றால் அங்கே ஒரு கவிதை உணர்வு பிறக்கிறது

சாலை நெரிசலிலும்
நிற்காமல் சென்றுகொண்டிருக்கிறது
ஓரத்தில் மரவட்டை

என்று இதனைத் துளிப்பா(ஹைக்கூ)வாகச் சொல்லலாம். வாசகன் தமது வாசிப்பின் வழியே இதில் உள்ளுறைந்திருக்கும் உவமத்தை உணர முற்படுவான். அப்போது அவனுக்கு ஓர் இன்பம் வாய்க்கிறது.

இதையே மரபு என்கிற இலக்கணக் கட்டுக்குள் வைத்தும் அக்கருத்தை அல்லது செய்தியை வெளிப்படுத்துவது மரபுக் கவிதை என்றாகி விடும்.

மரபின் வழிப்படி காட்சியை மட்டும் சொல்லாமல் கூடவே ஒரு கருத்தையும் வைத்துவிட வேண்டும்.

உலக வாழ்வில் உள்ளம் ஒன்றி
சலன மின்றி சாலையில் தன்வழி
மெல்ல விரையும் மரவட்டை
சொல்லிப் போவதைக் கேட்டல் நன்றே.

இது ஓர் ஆசிரியப்பா

தமிழின் பழம் இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் முதலியன ஆசிரியப்பாவால் ஆனவையே. ஆசிரியப்பா அகவுதலின் ஓசை உடையது என்பதால் அகவற்பா என்றும் சொல்லப்படும்.

முதல்அடியும் கடைசி அடியும் ஒரே எண்ணிக்கை சீர்களைக் கொண்டும் மற்ற அடிகளில் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்டும் அமையும்.

ஆசிரியப்பா
நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறிமண்டிலம் என நான்கு வகைப்படும்.

குறைந்தது மூன்றடிகளிலும் அதிக அளவாக வரம்பின்றியும் அமையலாம் நேரொன்றாசிரியத் தளை, நிரையொன்றாசிரியத் தளை மிகுந்து வரும். முடிவில் கடைசி அடியின் கடைசிச்சீர் பெரும்பாலும் ‘ஏ’ காரத்தில் முடியும். ஓ, ஈ, ஆய், ஐ, என், போன்றும் அமையலாம்

நேரிசை ஆசிரியப்பா என்பது நாற்சீர் அடியாக வந்து, இடையில் ஏதேனும் ஒரு அடி (பொதுவாக ஈற்றுக்கு முந்தைய அடி) முச்சீராய் அமைந்து, கடைசியில் நான்கு சீர்களில் முடியும்.

இணைக்குறள் ஆசிரியப்பா என்பது
முதல் அடியும் ஈற்றடியும் நாற்சீராய் (அளவடி) அமைந்து, இடையில் உள்ள அடிகள் இருசீர் (குறளடி) அல்லது முச்சீராய் (சிந்தடி) வரும்.

நிலைமண்டில ஆசிரியப்பா என்பது எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு முடிவது.

அடிமறிமண்டில ஆசிரியப்பா என்பது எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு, எந்த அடியை எங்கே மாற்றினாலும் பொருள் மாறாமல் வர வேண்டும்.

நேரொ‌ன்றா‌சி‌ரிய‌த் தளை (நேர் ஒன்றும் ஆசிரியத் தளை) எ‌ன்பது மாமு‌ன்‌ நே‌ர் ஒ‌ன்‌றி வருவது ஆகு‌ம். அதாவது நேரசையில் முடிந்து நேரசையில் தொடங்குவது.

நிரையொ‌ன்றா‌சி‌ரிய‌த் தளை எ‌ன்பது ‌விள‌ம்மு‌ன் ‌நிரை ஒ‌ன்‌றி வருவது ஆகும்.

முன்னரே சொன்னது போல வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய இனங்கள் உண்டு.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 10.

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி

வரலாற்றில் பொருளாதாரம் – 28

இறைவனின் இணையில்லாப் படைப்பு

1 comment

ஊர் நேசன் May 10, 2026 - 10:48 pm
"ஆசிரியப்பா" இத்தனை இன்ப தேன் அருவிகளை தன்னகத்தே வைத்துள்ள தமிழே அமிழ்தே ஆசிரியரப்பா.. அவர் எழுத்தை படிப்பதில் எத்தனை ஆச்சிரியமப்பா.. அருமை!
Add Comment