தமிழே அமிழ்தே – 13

This entry is part 13 of 20 in the series தமிழே அமிழ்தே

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று.

அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை, புதுக்கவிதை போன்ற பல இலக்கிய வடிவங்களைத் தமிழில் கொணர்ந்ததில் பாரதியை இதிலும் ஒரு முன்னோடியாகச் சொல்லலாம்.

அமெரிக்கக் கவி வால்ட் விட்மனைப் பின்பற்றி பாரதி தொடங்கி வைத்த புதுக்கவிதை, பின்னர் ந. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா போன்ற எழுத்தாளர்கள் முன்னெடுக்க மணிக்கொடி, எழுத்து, வானம்பாடி ஆகிய இதழ்களின் வழி பெரும் இயக்க மாற்றத்தை நம் இலக்கியப் பரப்பில் நிகழ்த்திற்று.

ஆங்கிலம் விடுத்துப் பார்த்தால், ஜப்பானின் ஸென் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வகைமையான ஹைக்கூ கவிதைகளும் நல்ல வரவேற்புடன் தமிழில் மிகுந்து வருகின்றன. (அவற்றில் பலவும் ஹைக்கூவின் சரியான இலக்கணத்தோடு இருப்பதில்லை என்பதும் சொல்லத்தக்கது).

இயற்கையாக நிகழும் கவித்துவமான ஒரு காட்சியை அல்லது மனஉணர்வைச் சொல்ல வேண்டும். சுருக்கமாக, படக்கருவியின் வேலையைத் தான் கவிஞன் தன் எழுத்தின் வழி சுருக்கமாகவும் சுவையாகவும் தர வேண்டும். அதாவது அஃதொரு காட்சிப் படிமமாக அமைய வேண்டும்.

பொதுவாக, ஜப்பான் மொழியில் 17 (அசை) சொற்களுக்குள் (5, 7, 5) என்ற அளவில் மூன்றே அடிகளுக்குள் ஒரு தத்துவத்தை அல்லது ஒரு சிந்தனையை, தான் பார்க்கும் ஒரு காட்சியை மட்டும் காட்டிச் செல்லும் கவிதையே ஹைக்கூ எனப்படும் துளிப்பா.

இந்த அசைகள் எண்ணிக்கைக்குத் தமிழில் விலக்கு உண்டு எனலாம். தொடக்கத்தில் ஹைக்கூ ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டதாம்.

ஹைக்கூ தன் அடுத்தடுத்த வகைகளாக ஹைபுன், சென்ரியூ, டாங்கா என்று விரிவுபடுகிறது.

ஹைக்கூ பெரும்பாலும் இயற்கையில் காணும் காட்சிப் படிமம் தான். இதில் உவமை உருவகங்கள் கூடாது என்பதே பொதுவான நியதி.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹைக்கூ, பொய்க்கூ பற்றி நட்புள்ளம் ஒருவருடன் மின்னரட்டையில் அடியேன் சொன்னது கீழே:

“இந்த ஹைக்கூ, பொய்க்கூ பத்தி சொல்லுங்களேன்”

“அள்ளி எடுத்த பின்பும்
அடியில் தங்கி விடுகிறது
கிணற்றில் நிலா”

அப்படின்னு எழுதினீங்கன்னா அது ஹைக்கூ

அள்ளி எடுத்த பின்பும்
அடியில் தங்கி விடுகிறது
அவள் நினைவு

அப்படின்னு எழுதுனீங்கன்னா அது பொய்க்கூ.

அவ்வளவே.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 12தமிழே அமிழ்தே – 14 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள்

தின்று செரித்தாலும் தீது

காலத்தை வென்றவன் கண்ணதாசனே

1 comment

ஊர் நேசன் May 17, 2026 - 5:51 pm
ஹைக்கூ, பொய்க்கூ -க்கான உவமை அருமை. ஹைக்கூ, பொய்க்கூ -க்கான உவமை அருமை. அந்த பொய்(Lie)க்கூ-க்கு ஐயமே இல்லை "ஐ யம் வெரி லைக்கூ"
Add Comment