தமிழே அமிழ்தே – 21

This entry is part 21 of 21 in the series தமிழே அமிழ்தே

சமயோசிதம் (Presence of mind) எனப்படும் மதிக்கூர்மை தக்க நேரத்தில் வெளிப்படுவது கவிஞர்/புலவர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று. அவர்களின் அம்பறாத்தூணியிலிருந்து சொற்கள் அம்புகளைப் போன்று எடுக்க எடுக்க வந்துகொண்டே இருக்கும். எந்தச் சூழலையும் வெல்லத் தெரிந்த சொலல்வல்லோர் ஆவாரவர்.

சான்றாக, எட்டயபுரம் அரசவையில் மிகவும் இளைஞனாக இருந்த பாரதியை அவமதிக்கும் நோக்கில் ‘பாரதி சின்னப் பயல்‘ என்ற ஈற்றடி தரப்பட்ட போது, பாரதியார் அதையே,

ஆண்டில் இளையவன் என்ற அகந்தையினால்
ஈண்டிங்(கு) இகழ்ந்தென்னை ஏளனம்செய் – மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பார்-அதி சின்னப் பயல்
என்று பாடி, ஈற்றடி தந்தவரை வாயடைக்க வைத்தாராம்.

பிறகு, என்ன இருந்தாலும் வயதால் மூத்தவரை அப்படிப் பாடியது தவறு என்று உடனே உணர்ந்து,

ஆண்டில் இளையவன் என்ற அருமையினால்
ஈண்டிங்கே என்றனை ஏந்தினையால் மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதர்க்கு
பாரதி சின்னப் பயல்
என்று, பெரியவர் என்ற மதிப்பு மரியாதை கொடுத்து மாற்றிப் பாடினாராம்.

மேலும் ஒரு சான்றாக, சதாவதானி செய்குத் தம்பி பாவலர் 20-ஆம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழறிஞருள் ஒருவர். இசுலாமிய சமயத்தவர்.

அவருடைய கவனக நிகழ்வு ஒன்றில் மற்றொரு புலவர் வம்புசெய்யும் நோக்கத்தில் துருக்கனுக்கு ராமன் துணை என்ற ஈற்றடியைத் தந்து வெண்பா வினவினராம். (துருக்கன் என்பது துலுக்கன் என்று இக்காலம் மருவியுள்ளது; முன்னொரு காலத்தில், இசுலாமியரின் சமயத் தலைமை நாடாக துருக்கி இருந்ததையொட்டி இப்பெயர் இசுலாமியர்க்கு ஏற்பட்டது. வசைச்சொல் ஆகாது )

துருக்கனுக்கு ராமன் துணை என்ற ஈற்றடியைப் பெற்றாலும் சதாவதனி செய்குத்தம்பி பாவலர் அயராமல் அருமையாக பரத யிலக்குவ-சத் துருக்கனுக்கு ராமன் துணை என்று முடியும் வண்ணம் வெண்பா யாத்து அவையோரை வியப்பில் ஆழ்த்தினாராம். (முழுப் பாடலும் அறிந்திலேன்).

தீநுண்மிக் கிருமியான கோவிட்19 காலத்தில் ஃபேஸ்புக்கில் அடேய் கோவிட் என்றோ அடியேய் கொரோனா என்றோ நண்பர்கள் நகைச்சுவை பெய்தனர்.

அப்போது அடியேன், அக்கிருமி ஆணா பெண்ணா என்னும் வினாவெழுப்பி இரண்டு சிலேடைகள் செய்தேன்.

கொரொனாவும் பெண்ணும்

தொற்றித் தொடரும் தொணதொணப் பேச்சுகளால்
உற்றவர் மற்றவர் உள்ளத்தில் பற்றுமச்சம்
வீட்டில் முடக்கிவைக்கும் வித்தையறிப் பெண்ணென்றே
ஏட்டில் கொரொனா எழுது

கோவிட்டும் ஆணும்

அடுப்படியில் தள்ளியதால் ஆதிக்கம் காட்டி
இடுப்பொடிய வைப்பதனால் இன்னும் எடுபடவே
எத்தனையோ சோதனைகள் ஏற்பதனால் ஆணென்று
சத்தியமாய் கோவிட்டைச் சொல்
.

குறள் போல இரண்டு அடிகள் எதுகை வரும் ஒரு கண்ணியாகக் கொண்டு, முதலாம் மூன்றாம் சீர்கள் மோனை பெற்று, ஈரசைச் சீர்கள் மட்டுமே அமைத்து, இறுதிச் சீர் ஏகாரத்தில் அமைவதாக, இறை மீது பல கண்ணிகளாக இயற்றப்படும் பாவகை ‘குறள்வெண்செந்துறை‘ எனப்படும். தளை நோக்கத் தேவையில்லை.

சான்று:

ஆதி அந்தம் இல்லான் அவனை
ஓதித் துதிப்போம் உணர்வுடன் நாமே

இறைவா அருள்வாய் இனிய தெல்லாம்
முறையாய் வாழ்க்கை முகிழ்த்திடு மாறே!

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 20

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

அறிவெழுச்சி: 2

தரிசனம்

சலாவுதீன் – ஜெருசலேமை வென்ற மாவீரன்

1 comment

ஊர் நேசன் July 12, 2026 - 10:43 pm
சமயோசிதம், சொல்லாட்சி, மரபுக் கவிதை என அனைத்தையும் சுவையாக இணைத்துள்ளீர்கள். அரிய தகவல்களும் அழகிய எடுத்துக்காட்டுகளும் நிறைந்த அருமையான பதிவு. இறுதியாக கொரொனா ஆண் பெண் உவமை அருமை
Add Comment