உருதுக் கவிதை உலகு 10: அக்பர் இலாஹாபாதி

This entry is part 10 of 10 in the series உருதுக்கவிதை உலகு

ஒரு கவிஞருக்கு, ஒரு கஜல், ஒரு புகழ்பெற்ற கஜல் பாடகரால் பாடப்பட்டால் அது நிலைத்த புகழுக்குப் போதுமானதாக இருக்கிறது. அந்த ஒற்றை கஜல் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இந்திய பாகிஸ்தானிய இசைத்தட்டு உலகில் கஜல்கள் புகழடையத் தொடங்கிய எழுபதுகளின் இறுதி முதல், இன்றைக்கு இணையத்தில் மிதந்து நொடிப்பிளவில் காதுக்குமிழ்களுக்கு வரும் இன்றைய காலம் வரையிலும், மதுவின் புகழைப் பாடும் போர்வையில் ரசனையைப் பருகுவதைக் குறிப்பால் உணர்த்தும் அந்த கஜல் ஒலிக்கிறது.

அறிவியலும் நுட்பமும் இணைந்து இதனினும் முன்னேறிய இன்னொரு ஒலிப்பயணத்தைத் தொடர்ந்தாலும், அதிலும் ஏறிச் சென்று கஜல் ரசிகர்களை அடையப்போகும் கஜல் அது.

// ஹங்காமா ஹைன் கியூன் பர்ப்பா தோடி சி ஜோ பீலீ ஹை
டாக்கா தோ நஹீன் டாலா சோரீ தோ நஹீன் கீ ஹை
//

// எதற்கு இத்தனை முழக்கம் கொஞ்சம்தானே குடித்தேன்
கன்னக்கோல் தான் இட்டேனா? களவும் கொள்ளையும் செய்தேனா
?
//

அக்பர் இலாஹாபாதி எழுதிய இந்த கஜல், குலாம் அலியால் பாடப்பட்டு நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறது.

உருதுக் கவிஞர்களின் பெயருடன் அவர்கள் பிறந்த ஊரை இணைத்துக்கொள்வதும் ஒரு மரபு. அதைப் பின்பற்றி கவிஞர் அக்பர் ‘அக்பர் இலாஹாபாதி‘யாகிறார். ஆங்கிலத்தில் அலஹாபாத் என்றழைக்கப்பட்டாலும் அது உருதுவில் இலாஹாபாத். போலவே அக்பர் அலஹாபாதி என அவர் ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் அவருடைய பெயரின் உருது ஒலிப்பு அக்பர் இலாஹாபாதி.

உருதுக் கவிதைகளில் நகைச்சுவை, நையாண்டியைக் கொண்டு வந்தவர் அவர். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் ஆங்கிலேயப் பாணியைப் பின்பற்றும் வழக்கத்தை நையாண்டி செய்தவர். மொழித் தூய்மையைப் பாதுகாக்க முனையும் ஆர்வலர்களின் நடுவில் தேவைப்படும் இடங்களில் தயக்கமின்றி ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியவர். அவர் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திய கவிதை வரிகள் நையாண்டியாக ஒலித்தன.

அரபியும் பாரசீகமும் உருதுவும் பயின்று ஆங்கில வழிக்கல்வி கற்று, பாரிஸ்டர் தேர்வெழுதி, ஆங்கிலேய ஆட்சியில் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்ற சையத் அக்பர் ஹுசைன், ஆங்கிலச் சொற்களைக் கவிதையில் ஆண்டு இந்தியர் சிலரின் ஆங்கிலேய மோகத்தை நையாண்டி செய்ததை அன்றைய கவிதை உலகம் ரசித்து ஏற்றது.

உருதுக் கவிதை உலகில் நிலைத்த புகழ்பெற்ற அக்பர் இலாஹாபாதியின் பெயரை இந்தித் திரையில் ஒரு கதாபாத்திரத்துக்கும் இட்டனர். அமர் அக்பர் அந்தோணி (1977) திரைப்படத்தில் வரும் அக்பர் கதாபாத்திரத்தின் முழுப்பெயர் அக்பர் இலாஹாபாதி. கவ்வாலிப் பாடகராகவும் கவிஞராகவும் சித்தரிக்கப்பட்ட அந்தப் பாத்திரத்தில் ரிஷி கபூர் நடித்திருந்தார்.

அக்பர் இலாஹாபாதிக்குப் பெயர் கொடுத்த அலஹாபாத், அலுவலக ரீதியாக இப்போது பிரயாக்ராஜ் என அழைக்கப்படுவது வரலாறு.

// நானென்ன சொல்ல நண்பர்களே
எதைச் சாதித்தேன் எனச் சொல்ல?
பி.ஏ. படித்தேன்
வேலை கிடைத்தது
பென்ஷன் கிடைத்தது
பின்னர் இறந்துவிட்டேன்
//

// ஹம் கியா கஹேன் அஹ்பாப்
கியா கார்-ஏ-நுமாயான் கர்கயே?
பி.ஏ. ஹுவே
நௌகர் ஹுவே
பென்ஷன் மிலி
ஃபிர் மர்கயே
//

அன்றைய காலகட்டத்தில் (1900+) அரசுப்பணி இலக்கும் அதைப் பெரும் வெற்றியெனக் கொண்டாடிய அணுகுமுறையும் அவருக்குச் சலிப்பை உண்டாக்கியிருக்கலாம். அதன் வெளிப்பாடாக இச்சொற்கள் பிறந்திருக்கலாம்.

வேடமிடும் கட்டாயமும் சில நேரங்களில் வாழ்க்கையில் அமைந்துவிடுகிறது. விருப்பமில்லாவிட்டாலும் கட்டுப்படுவது அவசியமாகிறது. தீர்க்கமான முடிவுகளில் நிற்காமல் இங்கும் அங்குமாக – மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டும் சூழல் விரும்பியோ விரும்பாமலோ வாய்க்கிறது. இந்த இரண்டும் கெட்டான் நிலையின் அவலத்தை அக்பர் தன்னுடைய கவிதையில் ‘மதுவையும் குடி, பள்ளிவாசலுக்கும் தொகை செலுத்து’ எனச் சொல்கிறார்.

// ஹோட்டலுக்குச் சென்று மதுவருந்து
பள்ளிவாசலுக்குச் சந்தா செலுத்து
மதகுருவும் மகிழ்ச்சியடையட்டும்
ஷைத்தானும் ‘பேஜார்’ ஆகாமலிருக்கட்டும்
//

// மை பி ஹோட்டல் மேன் பியோ
சந்தா பி தோ மஸ்ஜித் மேன்
ஷேக் பி குஷ் ரஹேன்
ஷைத்தான் பி பேஸார் நா ஹோ
//

(பேஜார் – தொல்லை, பொரித்தெடுத்தல், boredom. சென்னைத் தமிழின் ‘பேஜார்’ என்னும் சொல் உருதுவிலிருந்து வந்தது)

தமிழில் காதலர் பிரிவதையும் கூடுவதையும் பாடுவதைப் போலவே, உருதுவிலும் பாடுவது உண்டு. இது முந்தைய கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டது.

ஷப்-ஏ-ஃபிராக் பிரியும் இரவென்றும், ஷப்-ஏ-வஸ்ல் சேரும் இரவென்றும் வழங்கப்படுதல் மரபு. ஷப் – இரவு, ஃபிராக் – பிரிவு, வஸ்ல் – இணைதல். பிரிவதையும் இணைவதையும் உருதுக் கவிதைகளில் ஃபிராக், வஸ்ல் எனத் தனியாகவும் குறிப்பிடுவர். இணையும் இரவைக் குறிப்பிட்டு, அதில் மூட்டைப்பூச்சிகளையும் இணைத்து, ஏழ்மையைக் குறியீடாகக் கொண்டு வேறு எதையோ நகைச்சுவையாகச் சுட்டுகிறாரா? ஏழ்மையின் அவலத்தைத்தான் பாடுகிறாரா! என யோசிக்க வைக்கும் இரண்டடிக் கவிதை ஒன்று.

// இந்த அழகில் மூட்டைப்பூச்சிகள் படுக்கையில் நிறைந்தன
சேரும் இரவின் ஏக்கம் மனதிலிருந்து விடைபெற்றது
//

// இஸ் கதர் தா கட்மலோன் கா சார்ப்பாய் மேன் ஹுஜூம்
வஸ்ல் கா தில்சே மேரே அர்மான் ருக்சத் ஹோகயா
//

குறும்பாக்களைப் போல் நகைச்சுவை தெறிக்கும் பா வகை உருதுவில் மஸாஹியா (mazahiya) எனப்படும். அதில் நகைச்சுவையாகச் சமூக அவலங்களும் குறிப்பிடப்படும். அக்பர் இலாஹாபாதி தன்னுடைய மஸாஹியாக்களுக்காக மட்டும் பேசப்படுகிறாரா என்னும் கேள்வியும் உண்டு.

// ஒரு வழக்கறிஞன் பிறந்தான்
ஷைத்தான் சொன்னான்,
‘இதோ நானும் பிள்ளையைப் பெற்றவனானேன்’
//

// பைதா ஹுவா வக்கீல் தோ ஷைத்தான்னே கஹா
லோ ஆஜ் ஹம்பி சாஹிப்-ஏ-அவ்லாத் ஹோகயே
//

தானே பாரிஸ்டராக இருந்துகொண்டு வழக்கறிஞர்களை இப்படி நையாண்டி செய்யும் துணிவு அவருக்கு இருந்திருக்கிறது. தன்னுடைய பட்டப்படிப்பையும் இப்படிக் கேள்வி கேட்டிருக்கிறார்.

// நானும் பட்டதாரி நீயும் பட்டதாரி
அறிவு தொடர்பான உரையாடலெனில் அருகில் வந்து படுத்துறங்கு
//

// மை பி கிராஜுவேட் தும் பி கிராஜுவேட்
இல்மி முபாஹிசே ஹோன் பாஸ் ஆக்கே லேட்
//

மேற்சொன்னது போல், தன்னுடைய மஸாஹியாக்களுக்காக மட்டும்தான் அவர் பேசப்படுகிறாரா?

ஒரு கவிஞன் தன்னுடைய நகைச்சுவை உணர்வுகளை மட்டுமே முன்னிறுத்திக் காலத்தை வென்று நிற்கும் புகழை அடைந்துவிட முடியாது. சமகால நிகழ்வுகள் தொடர்பான அறச்சீற்றத்தை ஒவ்வொரு கவிஞரும் தங்கள் கவிதையில் வெளிப்படுத்தித்தான் இருக்கின்றனர்.

மக்களின் குரலாக எளிமையாகவும் நகைச்சுவையாகவும் ஒலித்த அக்பர் இலாஹாபாதியும் தேர்ந்த சொற்கள் கொண்ட உருதுவில் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.

// வாழ்வின் ஆன்மா கல்வி அனைவரும் அறிவர்
கல்வியிலான் என்றும் முழுமனிதன் ஆகான்
கல்வியும் உணர்வும் இல்லாத் தலைமுறை
தன்னியல்பாகவே அடிமைத்தனத்தை ஏற்கும்
//

சப் ஜான்தே ஹை இல்ம் சே ஹை ஸிந்தகி கே ரூஹ்’ எனத் தொடங்கும் இந்த நீண்ட செய்யுளில் அக்பரின் உருதுப் புலமை வெளிப்படும். இதிலும் அவர் தன்னுடைய முத்திரையான ஆங்கிலச் சொற்களை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.

நேச்சர், காலேஜ் என்னும் இரண்டு ஆங்கிலச் சொற்கள் தவிர்த்து மற்ற அனைத்துச் சொற்களும் அகராதியைப் பார்த்துப் பொருள் புரிந்து செய்யுளை அணுகவேண்டிய அளவுக்கு இருக்கும்.

வாழ்க்கையின் முரண்களைப் பாடுவது உருதுக் கவிதைக்கு மட்டுமே உரியதல்ல. தமிழிலும் புதுக்கவிதையும் திரைப்பாடல்களும் அதையே தத்தம் மொழியில் பதிவு செய்திருக்கின்றன.

புதுக்கவிதை:
// சமாதி அசைந்தது தொட்டிலாய்
நீலாம்பரி இமைக்குள் பூபாளக் கனவுகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் //

திரைப்பாடல்:
// இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேரப் பூபாளம்

இயக்குநர் டி. ராஜேந்தர் //

இலாஹாபாதியின் கஜல், ‘துனியாமேன் ஹூன் துனியாகா தாலப்கார் நஹீன் ஹூன்‘ எனத் தொடங்கும் கஜல், வாழ்க்கையில் பற்றற்று வாழும் மனிதனின் முரண்களைப் பேசுகிறது.

நான்
உலகில் வாழ்பவன்;
அதனிடம் எதையும் யாசிக்காதவன்
கடைவீதி செல்பவன்;
எதையும் கொள்ளாதவன்
உயிரோடிருப்பவன்;
வாழ்வின் சுவையறியான்
ஒவ்வோர் நொடியும் உணர்வோடிருப்பவன்;
திறனற்றவன்
சதுரங்கத்தில் நுழைந்து கடப்பேன்;
எந்த விளைவும் இன்றி
நிழல் நான்;
எங்கும் எனக்குத் தடமில்லை
வாழ்ந்து கெட்டவன்;
அறிவுரை கேட்க ஆயத்தமில்லான்
துயர் நிறைந்தவன்;
நோயுற்றவன் அல்லன்

நகைச்சுவையும் நையாண்டியுமாக எழுதிய அவருடைய எழுத்தின் இன்னொரு பக்கம் துயரத்தைக் கவியாக்கியது. பதினாறு அடிகளைக் கொண்ட இந்த கஜல் பேசும் முரண்களும், வாழ்க்கையின் வலியும் நா. முத்துக்குமாரின் ‘கற்றது தமிழ்’ திரைப்பாடலையும் நினைவுபடுத்துகிறது.

// உயிருடன் இருப்பது இப்போதெல்லாம் வலித்தால் மட்டும் தெரியும்
உன்னுடன் நானும் இல்லை என்பது விழித்தால் மட்டுமே புரியும்

கவிஞர் நா. முத்துக்குமார் // (பாடல்: இன்னும் ஓர் இரவு)

அவருடைய சொந்த வாழ்க்கை ஒரு மனிதனின் சராசரி எதிர்பார்ப்புகளும் கிடைக்கப்பெறாத வாழ்க்கையாக அமைந்தது. ஆங்கிலம், உருது, அரபி, பாரசீகம் என மொழிக்கல்வியும், சட்டக் கல்வியும் அவரை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக்கின.

இலக்கியத்தில் தன் கவிதைகளுக்கான தடத்தைப் பதித்தார்.

அரசுப் பணி, கவிதை இரண்டும் கைவரப்பெற்றவரின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்திருக்கிறது. தன்னுடைய அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். இரண்டாவது திருமணம் வெற்றி எனினும், லண்டனுக்குச் சட்டக் கல்வி பயிலச் சென்ற மகன் அங்கேயே தங்கியதும், சட்டம் பயின்றும் வழக்கறிஞராகாததும் அவர் விரும்பாதவை. வாழ்க்கையில் அனைவரையும் இழந்த பின்னர் அவருடன் கடைசி வரையில் இருந்தது, அவருடைய இரண்டாவது மகன்.

நையாண்டிக்குப் பெயர் பெற்ற கவிஞர்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அக்பர் இலாஹாபாதியின் வாழ்க்கையின் பெரும்பகுதி அவரை அலைக்கழித்து வேடிக்கை பார்த்திருக்கிறது. அதையும் தன் கஜலில் எழுதி நிலைத்த புகழ் பெற்று ‘காலக் கவிஞன்’ (உருது மொழியில்: லிஸானுல் அஸ்ர்) என்னும் பட்டப் பெயராலும் அழைக்கப்பட்டார்.

ஹங்காமா ஹை கியூன் பர்ப்பா‘ ஒலிக்கும்போதெல்லாம், அதன் பின்னால் நின்று சிரித்துக்கொண்டிருக்கும் அக்பர் இலாஹாபாதியும் நினைவுக்கு வருவார்.

(தொடரும்)

Series Navigation<< உருதுக் கவிதை உலகு – 9:  குல்ஸார்

Author

Related posts

அறிவெழுச்சி: 2

தரிசனம்

சலாவுதீன் – ஜெருசலேமை வென்ற மாவீரன்