ஒவ்வோர் இலையும்
ஒவ்வொரு செடியும்
என்றன் வேட்கை அறிந்திருக்கும்
தோட்டம் முழுதும் அறிந்த தகவல்
ஒற்றை மலரும் அறிந்திலதோ
இது குலாம் அலி பாடிய கஜல்களின் தொகுப்பில் தவிர்க்க முடியாத கஜல். குலாம் அலி மட்டுமல்ல, இந்த கஜலைப் பாடியவர்கள் அனைவரின் தொகுப்பிலும் இது தவிர்க்க முடியாத கஜல். ‘உலகம் அறிந்த என் காதலை இன்னும் ஒருத்தி மட்டும் அறியவில்லை’ என்னும் கருப்பொருளில் பாடப்பட்ட இவ்வரிகள் அறிவிக்கப்படாத காதலுக்கு உருது உரையாடல்களில் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
நிறைவேறாத காதல் நிரந்தரமாக மனதில் தங்கி அவ்வப்போது தலையைக் காட்டி அழிச்சாட்டியம் செய்யும். பெரும்பாலும் இப்பாதிப்பைக் கடந்திருப்பர். கடந்தவர் கவிஞராக இருப்பின் கவிதைகளில் அந்த வலி வெளிப்பட்டு இலக்கியமாகும். அப்படி வெளிப்பட்ட இரண்டு அடிகள்தான் இன்றைக்கும் கஜல் பாடகர்களின் காதலியாக வாழும் இவ்விரண்டு அடிகள்.
கவிதையின் கடவுள் – குதா-ஏ-சுகன் (God of Poetry) எனப் பெயர் பெற்ற மீர் தாகி மீர் எழுதிய கஜலின் இந்த முதல் இரண்டடிகளை விலக்கிவிட்டு உருது கஜல் இலக்கியத்தில் காதலைப் பேச முடியாது.
கவிதையின் கடவுள் எனப் பட்டம் பெற்றவனுடைய வாழ்க்கை நிம்மதியாக இல்லை. தன்னுடைய பதின்ம வயதில் உண்மையிலேயே பித்துப் பிடித்தவனாகத்தான் மீர் வாழ்ந்தான். மெல்ல மெல்லப் பித்தம் தெளிந்து இயல்பு நிலைக்கு வந்து கவிதைகளாக எழுதிக் குவித்தான். ‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’ என்பது சில கவிஞர்களுக்கு வாழ்வாக நிலைத்துவிடுகிறது. அவர்களுள் மீர் ஒருவன்.
ஓரளவு ஒழுங்காகச் சென்றுகொண்டிருந்த மீரின் வாழ்க்கையை நாதிர் ஷாவின் படையெடுப்பு புரட்டிப்போட்டது. தில்லி வீதிகளை நாதிர் ஷாவின் படைகள் சூறையாடின. தில்லியே வீழ்ந்த பின், தில்லியிலிருந்து மீர் பெற்ற உதவித்தொகை நிறுத்தப்படாமலிருக்குமா? தில்லியிலிருந்து லக்னௌ நகருக்குச் சென்றவனை ‘அவாத்’ பகுதியின் நவாப் ஆசிஃப்-உத்-தௌலா அவையில் ஏற்றுக்கொண்டார். அவருக்கு அப்போது நவாபிடமிருந்து கிடைத்த உதவித்தொகை ஒரு ரூபாய் எனச் சொல்வர்.
வறுமையும் புலமையும் மீரிடம் சேர்ந்திருப்பினும் மீர் சுதந்திரமான சிந்தனைகளைக் கொண்டவன். அவனுடைய கவிதைகளில் கோபம் வெடித்திருக்கிறது. குறிப்பாக அவனுடைய மதநம்பிக்கைகளைக் கேள்வி கேட்பவருக்குக் காட்டமான பதிலைக் கவிதையில் சொல்லியிருக்கிறான்.
அது இரண்டிரண்டு அடிகளாகப் பதினைந்து கண்ணிகளைக் கொண்ட கஜல். தொடக்க இரண்டடிகள் கஜலின் பாடுபொருளை நிர்ணயிக்கும்.
// திட்டம் அனைத்தும் தலைகீழாயின
எம்மருந்துக்கும் கட்டுப்படவில்லை
பார்த்தபடி நிற்கிறேன்
மனதைப் பிடித்த இந்நோய்
கடைசியில்
நிறையவே செய்து முடித்தது //
கட்டுப்படாத மனதைப் பாடப்போவதாக அறிவித்து, மீர் எழுதியவை மதத்தைக் கேள்வி கேட்டன. இக்கேள்விகளின் உள்ளுறையாக சூஃபியிசப் பார்வையில் இன்னொரு பொருளை முன்வைத்து உரையாசிரியர்கள் மதத்தைப் பின்னிறுத்தினாலும், உள்ளுறையல்லாத பார்வையில் மீர் கேட்ட கேள்விகள் காத்திரமானவை.
// பள்ளிவாசலின் ஷேக்
இரவில் மதுச்சாலையில் ஆடையின்றி இருந்தார்
ஜிப்பாவையும் குர்த்தாவையும் தொப்பியையும்
கொண்டாட்டத்தில் பொற்கிழியாகத் தந்தார் //
// ஷேக் ஜோ ஹை மஸ்ஜித்மேன் நங்கா ராத் கோ தா மைகானே மேன்
ஜிப்பா கிர்க்கா குர்த்தா டோப்பி மஸ்திமேன் இனாம் கியா //
இப்படியாகச் செல்லும் கஜல் கடைசி இரண்டடிகளில் காத்திரத்தின் உச்சத்தை அடைகிறது. தனக் கேள்வி கேட்பவருக்குப் பொருத்தமான பதில், மேற்கொண்டு அவர்களால் கேள்வி எதையும் கேட்க முடியாத அளவிற்கு வெளிப்படுகிறது. மனிதனைக் கூனிக்குறுகச் செய்ய மக்கள் எவ்வகைச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்?
நீயெல்லாம் மனிதனா?
நீயெல்லாம் தமிழனா?
நீயெல்லாம் படித்தவனா?
இப்படியாக எந்தக் குழுவில் தான் இருப்பதை மனிதன் பெருமையாக நினைக்கிறானோ, அதிலிருந்து அவனைத் தனிமைப்படுத்த முயலும் சொற்கள் வலிமையானவை. மனிதனை மிரட்டக்கூடியவை. இச்சொல்லின் மீது தேனைத் தடவி, முன்னொட்டாக ‘தெரிந்துகொள்ளத்தான் கேட்கிறேன், நீ தமிழன்தானா?’ என்பதும் உண்டல்லவா? அப்படி ஒரு கேள்வி மீரின் முன் வைக்கப்படுகிறது.
“உன்னுடைய மதம் எது?”
மதத்தின் அடையாளத்தைச் சுமந்திருப்பவரைப் பார்த்துக் கேட்கப்படும் இக்கேள்விக்குக் கனம் அதிகம். இதன் பதிலாக, மேற்சொன்ன கஜலின் கடைசி அடியை மீர் எழுதியிருக்கிறான்.
// மீரின் மதநம்பிக்கை எதுவென
இப்போது வினவுவீரோ
நீறணிந்த நெற்றியுடன் ஆலயத்தில் அமர்ந்திருக்கிறான்
எப்போதோ இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டான் //
இவ்வரிகளுக்கு விளக்கம் சொல்வோர் இதன் பொருளை நேரிடையாகக் கொள்ளவில்லை. மீர் கடைசிவரையில் இஸ்லாமிய அடையாளங்களுடன்தான் வாழ்ந்தான். நெற்றியில் நீறணிந்ததில்லை. தன்னைச் சிறுமைப்படுத்தியவர்களைப் புறந்தள்ளும் முகமாக, இந்தக் கடைசி அடிகளை மீர் எழுதியிருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து.
// ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம், நான் இப்போது இஸ்லாமியன் அல்லன். என்ன வேண்டும் சொல்லுங்கள் // என மீர் கேட்டதாக இதனைச் சொல்கின்றனர்.
மீண்டும், விளக்கம் சொல்பவர் உரைக்கும் பொருள் ஒருபுறமிருக்க, முத்தாய்ப்பாக மீரின் காத்திரம் வெளிப்பட்ட கஜல் என்னும் அளவில் இது முக்கியமானதொரு கஜல்.
வறுமையில் வாழ்பவனின் எண்ணெய் விளக்கு பெரும்பாலும் எரிவதில்லை. விளக்கிற்கு எண்ணெய் ஊற்றப் பணமிருந்தால் அவன் உணவருந்திவிடுவான். வீட்டிற்குள் இருளினும் கொடிது பசி. அப்படி விளக்கிற்கு எண்ணெயில்லாத வறுமையைப் போல் தன் மனம் வெறுமையைக் கடப்பதாக மீர் அறிவிக்கிறான்.
// மாலையிலிருந்து ஒளியிழந்த உணர்வு
இதயம்
தரித்திரனின் எண்ணெய் விளக்கானது //
//ஷாம் கே குச் புஜாசா ரஹ்தா ஹூன்
தில் ஹுவா ஹை சராக் முஃப்லிஸ்கா //
இன்னொரு கவிதை, இதயம் எப்படி வெறுமையடைந்தது என்பதன் விளக்கமாக அமைகிறது. இதயம் எப்படிப் பாழடைந்த இடமாக மாறிப்போனது? என்னும் கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறான்.
மீர், பல கொள்ளைகளைப் பார்த்தவன். அவன் கண்முன்னே தில்லியின் வீதிகள் சூறையாடப்பட்டன. அவன் கண்முன்னே மாளிகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆட்சியாளர்கள் அழிக்கப்பட்டது அவனையும் பாதித்தது. கொள்ளையின் கொடுமைகளை நேரில் கண்டவன் அவன். ஒவ்வொரு படையெடுப்பிற்குப் பின்பும் வீதிகள் சூறையாடப்படுவது விதியாக அமைந்த காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞன் கொள்ளையைப் பற்றிக் கவிதையில் குறிப்பிடுகையில் அதன் கனம் கூடுகிறது.
// உள்ளம் பாழடைந்ததை எப்படிப் பதிவுசெய்ய?
இந்நகரம் நூறுமுறை சூறையாடப்பட்டது //
// தில் கி வீரானி கா கியா மஸ்கூர் ஹை
ஏ நகர் சௌ மர்த்தபா லூட்டா கயா //
ஒரு கவிஞனின் மனப் புதையல் வாழும் காலத்தில் வெளிப்படாமல் அவன் மறைவுக்குப் பின் ஆய்வாளர்களின் வழியாக வெளிப்படுவது இயல்பு. மீரின் முதற்காதலும் ‘மறைக்கப்பட்ட நந்தவனம்‘ என கோபி சந்த் நாரங்க் உருதுவில் எழுதிய புத்தகம் வெளிவந்த பின் பரவலாகப் பேசப்பட்டது. மீரின் முதற்காதல் அவனுக்கு நன்கு அறிமுகமான பெண்ணிடம் உண்டானதாகவும், அந்தப் பெண் மீரின் முன் வருகையில் ‘முகத்திரை’ இல்லாமல்தான் வருவாள் என்றும் சொல்லப்படுகிறது. சிறகு முளைக்குமுன் பறக்க முயலும் பட்டாம்பூச்சியைப் போல மீரின் காதலும் வெல்லாத காதலாக நிலைத்து பல கவிதைகளை உருது மொழிக்கு அளித்தது.
தன்னுடைய சமகாலக் கவிஞர்களுக்கு இருந்த மொழித் தேர்வு மயக்கம் மீரிடமும் இருந்தது. மீர்ஸா காலிபும் மீர் தாகி மீரும் பாரசீகம் – ரேக்தா என அழைக்கப்பட்ட அன்றைய புதிய மொழி உருது இரண்டிலும் எழுதியவர்கள். பாரசீகத்தின் தாக்கம் இன்றைக்கும் உருதுவில் உள்ளது எனில், மீரின் காலகட்டத்தில் முழுமையாக இருந்திருக்கும். பாரசீகத்தில் எழுதிய காலிப் போன்றோரும், தெற்கிலிருந்து எழுந்த உருதுக் கவிதைகளுக்குப் பின் உருதுவில் அதிகமாக எழுதினார்கள்.
தன் கவிதையில் மீர்ஸா காலிப், மீர் தாகி மீரின் புகழைப் பாடியதை இதற்கு முந்தைய தொடரில் படித்திருக்கிறோம்.
// உருதுமொழியில் பெரும்புலவன் நீ என நினைக்காதே, காலிப்
வருங்கால சந்ததியினர் மீர் என ஒருவன் வாழ்ந்ததையும் சொல்வர் //
ரேக்தா கே தும்ஹீன் உஸ்தாத் நஹீன்ஹோ காலிப்
கஹ்த்தேன் ஹை அக்லே ஸமானே கோயி மீர் பி தா //
காலிபால் புகழப்பட்ட பெருமையைக் கொண்டவன் மீர். காலிப் மீரை உருதுக் கவிஞன் வரிசையில் வைத்து வருங்காலச் சந்ததியினர் புகழ்வர் எனச் சொன்னது முக்கியமான ஒன்று. பாரசீகமும் அரபியும் அறிந்த அவர்கள் இருவரும் ரேக்தா (உருது) மொழிக் கவிதைக்காகப் பாராட்டப்படுவார்கள் என எழுதிக்கொண்டது பாரதியின் ‘யாமறிந்த மொழிகளிலே’ எனத் தமிழின் பெருமையைப் பாடியதற்கு இணை.
குலாம் அலி பாடிய கஜல்களும் எப்படி மீரின் ‘பத்தா பத்தா பூட்டா பூட்டா’ (ஒவ்வோர் இலையும் ஒவ்வொரு செடியும்) ஒரு முக்கியமான கஜலோ, அதைப்போல ஹரிஹரன் பாடிய கஜல்களிலும் மீரின் முக்கியமான கஜல் ஒன்று உள்ளது.
// என் வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது
இந்தத் தோற்றம் கானல் போன்றது //
// ஹஸ்தி அப்னீ ஹபாப் கி சீ ஹை
ஏ நுமாயிஷ் சராப் கி சீ ஹை //
முதல் அடி சோகமாகத் தொடங்குவது போலத் தோன்றலாம், ஆனால் இது சொல்வது காதல் போதையில் கிடக்கும் மனதின் நிலையைத்தான். ஹரிஹரனின் கஜல்களில் ஆர்வமிருப்போர் தவறவிடக்கூடாத கஜல் இது.
கவிதைகளில் வாழ்ந்த மீரைக் காலம் விடாமல் விரட்டியது. தில்லியின் வீழ்ச்சிக்குப் பின் லக்னௌவிற்குக் குடிபெயர்ந்த மீருக்கு ஆசிஃப்-உத்-தௌலாவிடமிருந்து உதவி கிடைத்தாலும் அது நீண்ட நாள்கள் தொடரவில்லை. மீர்ஸா காலிப், ஸௌக் போன்ற பெரும்புலவர்களின் கவிதைகளுக்கு இணையாகச் சொல்லப்பட்ட மீரின் கவிதைகள், லக்னௌவில் நவாபின் எல்லைக்கு உட்பட்ட இலக்கிய வட்டத்தில் பெரிய அலையை உண்டாக்கவில்லை. மீரும் லக்னௌவில் வாழ்ந்த கவிஞர்கள் இயற்றிய கவிதைகளை மேலோட்டமானவை என நிராகரித்தார்.
தனக்கு நெருக்கமானவர்களின் கவிதையில் ஆழமில்லை என்று சொல்லும் கவிஞரை எந்தக் கவிஞரையும் எந்த நவாபும் விரும்பமாட்டார். மீரின் உதவித் தொகையும் இதனால் பாதிக்கப்பட்டது.
நாதிர்ஷாவின் படையெடுப்பால் இழந்தது பாதியும், தன் நாவின் படையெடுப்பால் இழந்தது மீதியுமாக மீர் இழந்தவற்றின் நடுவே வாழ நேரிட்டது. குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்கள் மீரைத் தனிமையாக்கிப் பின்னரே மரணத்தைத் தழுவ வைத்தன.
மீரின் புகழைப் பாடியதில் காலிப் ஒரு படி மேலே செல்கிறார்.
// என் புனைபெயர் மீது ஆணை
‘காலிப்’ எந்தன் தீர்ப்பு இது
நீர் மீரைப் படிக்காதவரையில்
ஒடுக்கப்பட்டவராவீர் //
(மீர்ஸா அசதுல்லா பேக் கானின் புனைபெயர் ‘காலிப்’ என்னும் மீர்ஸா காலிப். அவர் தன் புனைபெயரின் மீது ஆணையிட்டு, மீரின் கவிதைகளை ஒதுக்குபவர்கள் அனைவரும், ஒரு பார்வையில் ‘ஒடுக்கப்பட்டவர்’ எனத் தீர்ப்பு சொல்கிறார்)
மீரின் கவிதைகளைப் புறந்தள்ளியோர் சமகாலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். ‘புலவர்களிடையே போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக்கூடாது’ என யாரோ ஓர் அவைத் தலைவன் வடக்கிலும் சொல்லியிருக்கக்கூடும். அப்படிப் புறந்தள்ளியோருக்காக மீர்ஸா காலிப் இந்த வரிகளை எழுதியிருக்கக்கூடும் என ஒரு கருத்து உண்டு.
கவிஞர்களின் கவிஞராக வாழ்ந்த மீரின் புகழ் கஜல்கள் நிலைக்குமளவில் இவ்வுலகில் நிலைக்கும்.
(தொடரும்)