இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது.
வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் கோவில் போன்றவை ஒரு புறம் வரவேற்க.. மற்றொரு புறம், நட்டாத்தி நாடார் மருத்துவமனை, ‘என்ஆர்டி’ திருமண மஹால் போன்றவை உள்ளது. வாகன நெரிசலும் பரபரப்பும் நிரம்பிய பகுதியாக ‘என்ஆர்டி மெயின் ரோடு’ உள்ளது.
பெரியகுளம் – தேனி ரோட்டிலிருந்து பார்க்கையில் ‘என்ஆர்டி’ மெயின் ரோட்டின் மத்திப்பகுதி மலையின் உச்சியில் உள்ளது போலத் தோன்றும். நடப்பதற்கே சில சமயம் கடினமாகத் தோன்றும் மலை ஏற்றம். சைக்கிளில் ஏறி மிதிக்கவும் சிரமமானதும் கூட. சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு போய் உச்சியை அடைந்ததும் அங்கிருந்து இறக்கம். சல்லென சைக்கிள் சக்கரங்கள் உருண்டு ஓடிப்போய் பாரஸ்ட் ரோட்டில் போய் முட்டும்.
தேனி மாவட்டத்தின் வளர்ச்சிப் பாதையில் மலையையும் கரட்டுப்பகுதியையும் வெட்டி இன்று பாஷ் குடியிருப்பாகவும் தேனியின் முக்கியப் பகுதியாகவும் இது அமைந்துள்ளது எனலாம். மீதி மலைப்பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் தேனி பைபாஸ் ரோடாகவும் புது பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டிலும் டாஸ்மாக்கின் கண்ணாடி குவளைகளின் குப்பையிலும் சிக்கியுள்ளது.
பெரும்பாலும் நான், மலையின் உச்சியில் அமைந்துள்ள ‘ஐஎம்ஏ ஹால்’ அருகிலுள்ள எனது வீட்டிற்கு வாணி ஸ்வீட்ஸில் இறங்கி நடப்பது தான் வழக்கம். ‘என்ஆர்டி’ மெயின் ரோட்டை குறுக்கே வெட்டும் நேதாஜி ரோட்டிலுள்ள (பழைய ஜிஹச் ரோட்டின் தொடர்ச்சி) பள்ளியில் தான் என் மகனை தற்போது சேர்த்துள்ளதால்.. இடதுபுறம், வீட்டின் வழிப் பக்கம் திரும்பாமல் வலதுபுறம் திரும்பி மகனைக் கூட்டிக்கொண்டு பின் மீண்டும் மலையின் உச்சியை நோக்கி நடந்து வீட்டையடைவோம்.
காலையில் உச்சியிலிருந்து கீழே இறங்கும்போது ஒன்றும் தோன்றாது. மாலையில் அலுப்பில் வண்டிகளின் நெரிசலில் மேலே ஏறுவது மலைப்பாக இருக்கும்.
ஒருமுறை சுதா தான் எனக்கு வழிகாட்டினாள். “இது ஏத்தோ, ரொம்ப கஷ்டம் ஏறுறதுக்கும் நடக்குறதுக்கும்” என இந்த பாஷ் சாலையின் பின்புறம் இரயில்வே டிராக்கிற்கு மிகவும் அருகேயுள்ள பவர் ஹவுஸ் ரோட்டை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.
பையனை அழைப்பதற்காக கிளினிக்கை முடித்துவிட்டு பெரியகுளம் ரோட்டில் உழவர் சந்தை அருகில் சேர் ஆட்டோ ஏறினேன். “வாணி ஸ்வீட்ஸ்ல நிறுத்திருங்க அண்ணா” என ஆட்டோ ஓட்டுநரிடம் சொன்னேன். நான் அதுவரை அவளைப் பார்த்ததே இல்லை. அல்லிநகரத்தில் ஏறி ஏற்கனவே ஆட்டோவில் அமர்ந்திருந்தவள் அவளாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டு “உங்கள ஸ்கூல்ல பாத்துருக்கே! என் பையனும் அங்கத்தா படிக்கிறான்.. இதுக்கு பக்கத்துல இருக்குற சந்துல போனா ஈசியா இருக்கு” என்ற அவளை நான் அப்போது தான் நிமிர்ந்து பார்த்தேன். பின், அவளுடனேயே வாணி ஸ்வீட்ஸைக் கடந்து இரயில்வே கேட் அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸ் போகும் சாலையில் இறங்கிக்கொண்டேன். ஆட்டோகாரரிடம் நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லாததால் அவள் தான் எனக்கும் சேர்த்து பத்து ரூபாய் கொடுத்தாள்.
சாலையில் நடக்கத் தொடங்கினோம். போஸ்ட் ஆபீஸைச் சென்று அந்த சாலை முட்டியது. எந்தப் பக்கம் போகப்போகிறோம் என்று நான் பார்த்துக்கொண்டிருக்கையில் ஒரு அம்மா மஞ்சப்பையுடன் போஸ்ட் ஆபீஸின் வலதுபுறம் உள்ள சந்தில் வெளியேறினார்.
மாநில மற்றும் மத்திய அரசுகளின் கருணையால்.. ஈபி ஆபீஸின் பின்புற காம்ப்பவுண்டுக்கும் போஸ்ட் ஆபீஸின் பக்கவாட்டு காம்ப்பவுண்டுக்கும் இடையே மிகவும் குறுகலான ஒரு நூறு மீட்டர் அளவிலான சந்து. சந்தின் நுழைவாயிலில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். உள்ளே செல்லச் செல்ல இருவர் நடக்கும் அளவுக்கு விரிந்தும் குறுகியும் வழிச் சென்று வலதுபுறம் வளையும். அங்கு ஒரு வீட்டின் கூரை மூடப்படாமலும் கதவு மாட்டப்படாமலும் இருக்கும். அதுவே இச்சந்தின் வெளியேற்றுப் பாதை. திடீரென்று புது ஊருக்குள் நுழைந்து வழி தெரியாது நிற்பது போல் சின்னாத்தேவர் தெருவின் முன் நின்றேன். பின், சுதா “இந்தப்பக்கம்” என இடப்பக்கமும் பின் வலப்பக்கமும் மீண்டும் இடப்பக்கம் திரும்பி கொண்டுராஜா லேனில் வளைந்து நான் பழகியிருந்த நேதாஜி ரோட்டை அடையச்செய்தாள்.
நடந்த அலுப்பே தெரியவில்லை. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்ட ஆர்வமா? இல்லை சாதாரணத்தின் சமதளப் பாதையோ? மர நிழலின் குளிர்ச்சியா? அல்லது அப்பகுதி மக்களின் “பாத்துப்போங்க” என்ற அன்பா? ஒருவேளை, வீட்டிற்கு வீடு வாசப்படி என்பது போல் சந்தில் நடக்கும்போது சுதாவின் கதையைக் கேட்டு, எல்லோரிடமும் பல சோகங்கள் உள்ளது என என் மனதைத் தேற்றிக்கொண்டதாலோ?
“நீங்க எங்க வேல பாக்குறீங்க? எனக்கு ஒரு வேல பாத்துக்கொடுங்க” என்றாள் சுதா. “நா அக்குபங்சர் கிளினிக் வச்சுருக்கேன் மா, கண்டிப்பா சொல்றேன்” என்றேன். பள்ளிக்கும் இருவரும் சேர்ந்தே நடந்து சென்று பையனை அழைத்துக்கொண்டு விடைபெற்றேன்.
அவள் காட்டிய பாதையில் தான் இறங்கி இப்போதும் தினமும் எளிமையாக நடக்கப் பழகுகிறேன். பின்னொரு நாள் பள்ளியில் நான் அவளைப் பார்த்தபோது, அவள் எனக்கு கொடுத்த பத்து ரூபாயைக் கொடுத்து நன்றி சொன்னேன். மறுக்காமல் வாங்கிக்கொண்டு புன்னகை செய்தாள்.
எனக்கு கஷ்டமாக இருக்கும்போது தான் அடுத்தவர்களின் கஷ்டங்களைப் பார்க்க பழகியிருக்கிறேன். சேர் ஆட்டோ ஓட்டுநரைப் பார்த்து பரிதாபப்படாத நாளே இல்லை. தேனிக்குள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். ஆனால் பத்து ரூபாய் தான். நியாயமாகப் பார்த்தால் அவர்களுக்குச் சேர்த்துத் தான் தர வேண்டும். எவ்வளவு எளிமை. கால் வலிக்க நடக்க வேண்டியதில்லை. ஃப்ரீ பஸ்ஸிற்காக காத்துக்கிடக்க வேண்டியதில்லை. பத்து ரூபாய் இவர்களுக்கு எப்படிக் கட்டும்? என்று பல முறை யோசித்திருக்கிறேன். சேர்த்துக் கொடுக்க பணமும் மனமும் இல்லை. எப்போதாவது சில்லரை இல்லை என்றால் மிச்சத்தை “இருக்கட்டும் வச்சுக்கோங்க ணா” என்பேன்.
●○●
தேனி – பெரியகுளம் ரோட்டில், இரயில்வே கேட் அருகில் அமைந்துள்ள பெத்தனாக்சி விநாயகர் கோவிலின் எதிர்புறம் இருக்கும் போஸ்ட் ஆபீஸிற்கு போகும் சாலையின் பெயர் ‘பவர் ஹவுஸ் ரோடு’. பெரியகுளம் ரோட்டிற்கு செங்குத்தாக, இரயில் தண்டவாளம் போல இரண்டு சாலைகள். ஒன்று ‘என்ஆர்டி மெயின் ரோடு’ மற்றொன்று ‘பவர் ஹவுஸ் ரோடு’.
சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான என். ஆர். தியாகராஜன் அவர்களின் பெயரால் ஏற்பட்டது என்ஆர்டி ரோடு, நகர், மண்டபம் போன்றவை. அதுபோல, ஈ.பி. ஆபீஸைச் சுற்றியுள்ள பகுதிக்கு ஈபி அலுவலகத்தின் பெயர் காரணமாகவே பவர் ஹவுஸ் தெரு, ரோடு என்ற பெயர் புழக்கத்தின் அடிப்படையில் வந்திருக்கக்கூடும். இதனை அச்சந்தில் உள்ள வீட்டின் பாட்டி ஒருவர் உறுதிசெய்தார்.
ஒன்று வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது இன்னொன்று உழைப்பின் மிச்சத்தைப் பிரதிபலிக்கிறது. ஒன்று நீண்டு பெருகி இறுக்கமடைந்திருக்கிறது வேறொன்று சிக்கி சுருக்கமடைந்து தளர்வாயுள்ளது. இரயில் சீராய்ப்போக தண்டவாளம் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை. அதனாலேயே இரயில் அவ்வப்போது விபத்துக்குள்ளாகிறது போலும்.
பவர் ஹவுஸ் ரோட்டில் இரயில்வே டிராக்கை ஒட்டியே இருக்கும் எல்லா வீடுகளும் பெரும்பாலும் தகரத்தாலும், மரப்பலகைகளாலும் அடைக்கப்பட்டிருக்கும். ஆங்காங்கே சிமெண்ட் வீடுகளும் இருக்கும்.. கொஞ்சம் பழைய காலத்து மண்ணால் ஆன வீடுகள் போல் காட்சியளிக்கும். வீடுகளில் புகை வெளியேறிக்கொண்டே இருக்கும். மரச்சக்கைகளைப் போட்டு எரியவிட்டு இரும்பு பாத்திரத்தில் எண்ணெயைக் காய்ச்சிப் பொரிக்கும் விதவிதமான வடிவங்களிலான அப்பளங்கள், அதிரசம், முறுக்குகள் தயாரிக்கும் குடிசைத்தொழில் இல்லை தகரத்தொழில் அங்கே நிறைய இயங்குகிறது.
வெயிலில் அந்த எண்ணெய் மற்றும் தகரத்தின் வெக்கையில் நாள் முழுக்க குடும்பம் குடும்பமாகவோ வேலைக்கோ ஆள் வைத்து உழைக்கிறார்கள். பாதை நெடுக கடுமையாக உழைப்பவர்களின் அடையாளங்களான லாரி சுமை ஏற்றுவோர் இறக்குவோர் (Load Men) சங்க அலுவலகம், தொழிலாளர்கள் சங்க அலுவலகம் உள்ளன. அவையும் சாதாரணமாகவே உள்ளன.
தேனி நகராட்சியில் கிராமத்தைப் பிரதிபலிக்கும் மாடுகளும் மாட்டுச் சாணத்தின் நெடியும்.. கோழிகளும் மண்ணைக் கிண்டிக்கொண்டுச் சுற்றுகிறது. இந்தப் பகுதிக்கு ஏற்ற சிறிய நர்ஸிங் ஹோம், இரண்டொரு இஸ்திரிக் கடைகள், போவோர் வருவோருக்கு டேபிளில் டிஸ்பிளேவில் அதிரசம் முறுக்கு போன்றவை ஐந்து ரூபாய் முதல் அறுபது ரூபாய் வரை பாக்கெட்டில் சில்லரையாகவோ மொத்தமாகவோ விற்பனைக்கு உள்ளது.. வெயிலில் மக்களின் தாகத்தைத் தணிக்க மண்பானையில் தண்ணீர் வைத்ததும் வரவேற்கிறது பவர் ஹவுஸ் தெரு.
தினமும் நூற்றக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள், நடக்க மட்டும் தெரிந்த பொது மக்களுடன் பவர் ஹவுஸ் ரோட்டிலும் போஸ்ட் ஆபீஸ் சந்திலும் கொண்டுராஜா லேன் வழியாகவும் கடக்கிறார்கள். டிராஃபிக் இல்லை. நெரிசல் இல்லை. கசகசப்பான புகையின் வண்டிகள் உரசலில் ஓரம் செல்கையில்.. எங்கே சாக்கடைக்குள் விழுந்து விடுவோமோ என்ற பயம் இல்லை. மழை பொழிந்தாலும் நீர் தேங்கவில்லை, வெயிலிலும் அந்த வழியாகச் சென்றால் வாட்டம் இல்லை. நடந்து நடந்து பாதையில் புற்கள் இல்லை. கற்கள் மட்டும் உடைந்திருக்கும். ஒருவர் நடந்து போய்க்கொண்டிருக்கையில் இன்னொருவர் எதிரில் வந்துவிட்டால் நின்று வழி கொடுத்துப் போகச் சொல்வது அங்கெங்கும் எழுதப்படாத விதியாகத் தானாக வந்துவிடுகிறது…
இக்கட்டான சூழலில் தான் நல்வழிகளும் நற்சிந்தனைகளும் நற்செயல்பாடுகளும் தோன்றவேண்டுமா? என்று சிந்திக்கையில் அப்படியே மனித மனங்கள் பழகிவிட்டதோ? என்று தோன்றுகிறது.. நேரமின்மை, வேலைப்பளு என கண் முன்னால் இருக்கும் நிறைய விஷயங்களைக் கவனிக்கத் தவறுகிறோம். இரண்டு புறமும் அடைத்த கான்கிரீட் காம்பவுண்டுக்கு நடுவில் நடக்கும்போதும் எளிய மக்களின் வாழ்க்கையைக் கடக்கும்போதும் உள்ள இனிமையும் நம்பிக்கையும் ஆடம்பரங்களான வணிக வளாகங்களைக் கடக்கும்போது இல்லை. ஒருவேளை, என் சூழலால் இருக்கலாம். ஆனால் குழந்தைகளை அவை ஈர்க்கின்றது.
அவர்கள் திருவிழாக் கூட்டத்தின் கடைகளின் வசீகரிப்பால் வசீகரிக்கப்பட்டு எல்லாவற்றையும் கேட்கிறார்கள். ஸ்பைடர் மேன் கேக் என்ற சிவப்பு கலர் கேக்கின் நிறத்தைப் பெற என்னென்ன இரசாயனங்கள் பயன்படுத்தப்படுமோ தெரியவில்லை.. பளபளப்புடன் எண்ணெய் கக்கு வாடையுடன் ஈர்க்கிறது. ஏற்கனவே ரோட்டில் போகும் வண்டிகள் போதாது என்று வீட்டினுள்ளும் ஓட்ட குழந்தைகளுக்கான மினியேச்சர் கீர் பைக், ரேஸ் கார்.. பேட்டரி மற்றும் சார்ஜ் போட்டுப் பயன்படுத்தலாம் என பெரியவர்களைப் பின்தொடர வேண்டி குழந்தைகளுக்காக எல்லாமும் விற்பனைக்கு உள்ளது.
இவற்றின் பரபரப்பால் “எனக்கு வேணும்” என்ற அடம்பிடிப்பில் என் நடையின் வேகம் குறைகிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளின் கண்ணிலிருந்து மறைப்பதற்கு பவர் ஹவுஸ் தெரு போன்றதொருச் சுற்றுப்பாதை தேவையாகத்தான் உள்ளது.
மேட்டுக்குடியின் சாராயக் கலாச்சாரம் இப்போது சாதாரண மக்களையும் டாஸ்மாக் மூலம் எளிமையாக அடைந்திருக்கிறது. பள்ளிகள் அமைந்திருக்கும் நேதாஜி ரோட்டிற்கு மிக மிக அருகே கூட இந்த பாஷ் ஏரியாவில் டாஸ்மாக் ஒன்று இயங்குவதைப் போலவே பவர் ஹவுஸ் ஹீரோக்களின் தெருவிலும் ஒரு ரீகிரியேஷன் கிளப் கண்ணில் பட்டது. அது ஆனால் டாஸ்மாக்கின் அழுக்குத்தோய்ந்த நிலையைப் போல் காணப்படவில்லை. வெளியில் இருந்து பார்க்கச் சுத்தமாக ஸ்பேசியஸாக இருந்தது. அப்பகுதிவாசிகளுக்கு அது தேவையும் இல்லை என்று தோன்றியது. காசு வைத்துள்ளவனே அங்கும் சென்று குதூகலிக்கிறான்.
இங்கிருக்கும் வறியவர்களின் கடின உழைப்பில் வரும் வருமானமும் பின் டாஸ்மாக்கிற்கோ ரீகிரியேஷன் கிளப்பிற்கோ எங்கு போகுமோ எனத் தெரியவில்லை. இல்லை, வசதி படைத்தவர்களின் வீட்டிற்குள்ளேயே குடிக்கும் கலாச்சாரமும் இருப்பது போல இங்கேயும் வந்திருக்குமா தெரியாது. ஆனால் பெண்களை வீட்டினுள்ளேயே அழகு பொம்மைகளாக வைக்கிற பந்தா கோஸ்டிகளைப் போல இப்பகுதி இல்லை. தேவைக்குப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இயக்கம் நிற்கவில்லை. தகரத்தினுள்ளே உற்பத்தியாகும் பொருட்களும் உழைப்பும் பிரதானத்திலும் அறுவடை ஆகிறது. ஒரு பயணத்தின் இருவேறு முகங்கள். ஆனால், ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் அறியப்படாத இயக்கங்கள்.
அந்த மலை உச்சிக்கு கீழ் சமதளப் பள்ளத்தில்.. அந்தப் பெரிய கட்டிடங்களுக்கு பின்புறம் சிறிய ஓரிரு அறை கொண்ட தலைதட்டும் வீடுகளின் முன்பும் அழகான பூச்செடிகள் அலங்கரிக்கின்றன. ஒரு வீட்டின் முன் வெற்றிலை இலைக்கு நடுநடுவே பிளாஸ்டிக் ரோஜாப்பூக்கள் அலங்காரம் செய்திருந்தது. உயிரோட்டத்தின் நடுவில் மலர்ச்சியற்ற வாசமில்லாதவை. எதைப் பிரதிபலிக்கிறதோ? வசதியைப் புழுக்கத்தை நகலெடுக்கப் பார்க்கிறதோ