Home கட்டுரைஉயிரின் எடையும், அதற்கான விலையும்!

துகளுக்கும் தூசுக்கும் அதற்குரிய எடை இருக்கும். எனில், உயிருக்கும் ஏதாவது எடை இருக்கும்தானே?

ஒரு மாட்டுவாலில் ஒற்றை மயிர் பிடுங்கி, அதை நூறாய்த் தரித்து, அதில் ஒன்றை ஆயிரமாக்கி, அவற்றுள் ஒன்றை நூறாயிரம் ஆக்கிப் பார்த்தால் எது மிஞ்சுமோ, அவ்வெடைதான் உயிரின் எடை என்று கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே திருமூலர் யூகித்திருக்கிறார்.

சற்றொப்ப, 0.0000000001 மில்லிகிராம்!

அதாவது, உயிருக்கு ஓரெடையும் இல்லையென்பது அவராய்வு!

அதையே நாமும் வழிமொழியலாமெனில், வேதாத்திரி மகரிஷி குறுக்கிடுகிறார்.

“இருப்பிலிருந்து எள்ளளவு குறைந்தாலும், அவ்வெடை குறையத்தானே வேண்டும்? உயிரிழந்த உடம்பு, உயிரோடிருந்ததைவிட எடை மிகுகிறதே, ஏன்?” என்பது அவர் கேள்வி.

ஏனெனில், உடம்புக்குள்ளிருக்கும் உயிர், அதைச் சுமந்திருந்தது. தற்போது, உயிர் உடம்பைக் கைவிட்டுவிட்டதால் எடை கூடிவிட்டது! பிணந்தூக்குபவர் அதை அறிவர்.

அதுவரை, புவியீர்ப்பு உடலைக் கீழ்நோக்கி இழுக்க… உயிரெனும் காற்று அதனுள் இருந்துகொண்டு அதை விண்ணோக்கி இழுக்க… அந்தக் ‘கிண்’ணென்ற இழுவிசையால் ட்வைன் நூல்போல உடல் நடமாடித் திரிந்தது. (இருபுறமும் இழுபடும் ரப்பர் விரைத்திருப்பதுபோல!)

முதுமையோ, தீராநோயோ தாக்கும்போது அவ்விரைப்புத்தன்மை படிப்படியாய்க் குறைந்து இறுதியில் மறைந்துபோவது கண்கூடு.

எனவே, உடலை உயிர் சுமந்தலைவது புரிகிறது.

அந்த உயிரின் எடை எவ்வளவானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது, உடலின் எடையைச் சுமக்கும் அவ்வளவு வலிமைவாய்ந்தது என்பது அறிவியல்.

ஒரு ஆய்வின்படி, சுற்றுச்சூழலின் காற்றழுத்தம் உடலைத் தரையில் பாவவைக்கிறது. அதேவேளை, உடலில் புகுந்து புகுந்து வெளியேறித் திரியும் உயிர்(க்காற்று) அதை உள்ளிருந்துகொண்டு மேல்நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்போல் உடல் மிதக்கிறது. புவியீர்ப்போ அதைக் கீழிழுக்கிறது. இந்த ‘இழுபறியில்’ உடல் நிமிர்ந்தியங்குகிறது. (நுரையீரலின் காற்று முழுவதும் வெளியேறிவிட்டாலும், ஒவ்வொரு செல்லிலும் ஊதப்பட்ட பலூனுக்குள்ளிருப்பதுபோல் காற்று பதுங்கியிருக்கிறது.)

எனவேதான் காற்றில்லா நிலவில், உடல் எடையிழந்து மிதக்கிறது. மிதக்கும் உடலை நிலவில் நடக்கவைக்க, மிகுந்த எடையோடு கூடிய உடையணிய வேண்டியிருக்கிறது.

இத்தகைய உடலுக்கும் உயிருக்குமான உறவை வள்ளுவம் இரண்டு இடங்களில் விவரிக்கிறது.

“குடம்பை தனித்தொழியப் புல்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.” (குறள்: 338)

‘குடம்பை’ என்பது, கூடு. முட்டையெனப் பொருள்கொள்க. குறள் புரிகிறதுதானே?

இதே உவமையை,

“உடம்போ டுயிரிடை யென்ன மற்றன்ன
மடந்தையோ டெம்மிடை நட்பு.” (குறள்: 1122)

எனுங் குறளிலும் ஆள்கிறார்.

இருவேறு கருத்துக்களை விளக்க, ஒரே காட்சி. வள்ளுவருக்கே உவமைப் பஞ்சம்…!

முதற்குறளில், ‘தனித்தொழிய’ எனும் சொல்லால், உயிரைத் தவிர்த்த குடம்பை (புதையுண்டோ, எரிவாய்ப்பட்டோ, பிறவற்றுக்கு இரையாகியோ அன்றி மட்கியோ) அழியும் என்பதும், மறுகுறளில் ஆண்-பெண் காதல் பிணைவு எத்தனை நுட்பமானது என்றும் விவரிக்கப்படுகின்றன.

ஆண்-பெண் உறவை, ஆண்டான்-அடிமை உறவாகக் கருதிக்கொண்டிருந்த அபத்தக் காலத்தில் பிறந்த வள்ளுவம், அதை ஏற்காமல், அவ்வுறவைப் புனிதமென்று (பம்மாத்துப் பண்ணிப்) போற்றித் தொலைக்காமல், நட்பென்று கறாராக வரையறுத்துள்ளமை பெருவியப்பு!

மார்க்ஸியம் முதல் பெரியாரியம் வரை ஆய்ந்தவர் ஏற்கின்ற ஆண்-பெண் உறவு முதிர்ந்தடைய வேண்டிய நிறைவெல்லையும் அதுவே!

மனிதகுலம் சென்றடைய வேண்டிய இறுதி இலக்கை வள்ளுவம் ஏற்கனவே அடைந்துவிட்டது!

அதுகிடக்க…

இத்தனைத் தூல உடம்பை அத்தனை மெல்லிய உயிர் சுமந்தலைகிறதே, அந்தச் சுமைதூக்குக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டாமா? ரிக்ஷாவில் அமர்ந்து சவடாலாய்ப் பயணிப்பவன், இறங்கும்போது சவாரிக்கூலி கொடுக்காமலிருக்க முடியுமா?

உழைத்தவனுக்கு ஊதியம் வழங்கப்படுதலே அறம்!

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.” (குறள்: 231)

“பிறர்க்கீதலும் (அதனால்) புகழ்பெறுதலுமே அல்லாது, ஒருவன் தன் உயிருக்கு ஊதியம் வழங்க வேறொன்றும் வழியில்லை!” என்று வள்ளுவன் வரையறுத்திருப்பது சிந்தனையின் கொடுமுடி (சிகரம்!)

உடலெடையைக் കൂട്ടவும் குறைக்கவும் உணவே ஒரே (நிரந்தர) வழி.

அவ்வாறே, உயிரின் எடை எவ்வளவானாலும் அதை மேலும் மிகுப்பதும் மெலிப்பதும் அவரவர் ஈயும் அளவாலும், (அதனால்) பெறும் புகழின் அளவாலும் கணக்கிடப்படும்.

இந்த அளவுகோல், அறிவியலும் அறவியலுமாம்!

குறள் இங்கு ‘ஈதல்’ எனச் சுட்டுவது, வெறும் பொருளை (செல்வத்தை) மட்டுமன்று. அறிவு, உழைப்பு, ஒத்துழைப்பு என மேலும் மூவகையானும் ஒருவர் பிறர்க்கு ஈய முடியும்!

“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.” (குறள்: 228)

இங்கு ‘வன்கணவர்’ என்பது கணவரைக் குறிப்பதல்ல; (ஆண்களுக்கு நிம்மதி.) ‘கொடியவர்; அருளற்றவர்’ என்பதைக் குறிப்பது!

“தன் அறிவைப் பிறர்க்குப் பகிராமையும் தன் உயிருக்கு எதிரான குற்றம்!” என்பது குறளின் அறம். அறிவுசார் சொத்துரிமைக்கெதிரான கலகக் குரலிது. பகிர்வதிலிருக்கும் இன்பத்தை அனுபவித்து வலியுறுத்தும் குரலுமிது.

இன்றைய கார்ப்பரேட் கம்பெனிகளின் மூல முதலீடும், உலக வணிகத்தின் கோட்பாடும் இவ்வறத்திற்கு நேர் எதிரானது!

அறிவைப் பதிவுசெய்துகொள்கிறார்கள். கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுகிறார்கள். (சில நேர்மையர்கள், மனிதம் மிக்கவர்கள் விதிவிலக்கு. அவர்கள் அறிவைப் பொதுமைசெய்வர்!)

எழுத்துகளுக்கும் காப்பிரைட் சட்டமுண்டு! பலர் கடைப்பிடிக்கின்றனர்; தம் படைப்புகளிலும் கறாராக அச்சிடுகின்றனர்.

இந்நடைமுறை சரியென்றால், தமிழின் அறிவிலக்கியங்களையும் அறவிலக்கியங்களையும் நாம் கையாளுவதும் கையாடுவதும் எத்தனை தவறு? எத்தனைப் பெருங்குற்றம்?

வள்ளுவம் வழிகாட்டுகிறது: “அறிவைப் பதுக்குவது குற்றம்! அறிவைப் பகிர்வது கடமை!”

அதை விளக்கவே இக்கட்டுரை.

நான் கண்டுகொண்டேன்: அறிவைப் பகிர்தலே உயிர்க்களிக்கும் ஊதியம்

Author

You may also like

Leave a Comment