வரலாற்றில் பொருளாதாரம் – 39

ஒரு போரை வெல்வதும் ஒரு பொருளாதாரத்தை வெல்வதும் ஒன்றல்ல.

இரண்டாம் பியூனிக் போரில் ஹனிபால் பார்கா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ரோம் ராஜ்ஜியம்தான்.

பல நேரங்களில் போர்க்கள வெற்றி என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இரு வெவ்வேறு படைகள் தங்களது வலிமையை வெளிக்காட்டிய இடமாகத்தான் போர்க்களம் இருக்கும். ஆனால், வணிக மையங்களை வசப்படுத்தி, பொருளாதார ரீதியாகக் கிடைக்கும் வெற்றி மட்டுமே நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

உலகத்திற்கு இதனை ரோம் ராஜ்ஜியம் சொல்லிக் கொடுத்த பின்னர், வணிகம் சென்ற இடமெல்லாம் வணிகப் பொருளாதார அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன.

இத்தாலியில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக படையுடன் இருந்த ஹனிபால் பார்கா, ரோம் ராஜ்ஜியத்திற்குப் பல தோல்விகளைக் கொடுத்தார். ஆனால், அந்தத் தோல்விகள் எல்லாம் ரோம் ராஜ்ஜியத்தை ஒன்றும் செய்யவில்லை. காரணம், அந்தத் தோல்விகளை எல்லாம் தாங்கிக்கொள்ளக்கூடிய பொருளாதார அமைப்பு ரோம் ராஜ்ஜியத்திடம் இருந்தது. அதுவே அவர்களைப் பியூனிக் போர்களின் பொழுது காப்பாற்றியது.

போர் வலிமையை மட்டும் முன்னிறுத்தி வளர்ந்த கார்த்தேஜ் ராஜ்ஜியம் வணிகம் செய்து செல்வச் செழிப்புடன் இருந்தாலும், அந்தச் செல்வத்தை ஒரு நீடித்த அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பாக வளர்த்தெடுக்கவில்லை.

ரோம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்து கொண்டார்கள். ஹனிபால் பார்காவை இத்தாலியில் எதிர்த்துக்கொண்டே இருந்தால் போர் முடிவே இல்லாமல் நீளும். எனவே, அவர்கள் எதிரியை எதிர்ப்பதை விட, எதிரியின் வருமானத்தை எதிர்கொள்ள முடிவு செய்தார்கள். அதன் விளைவாக, கார்த்தேஜின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பெயின் பகுதிகளை நோக்கி ரோம் படைகள் நகர ஆரம்பித்தன.

ஏனென்றால், கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் வெள்ளிச் சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் முக்கியமான வணிக நகரங்கள் அனைத்தும் அங்குதான் இருந்தன. ஹனிபால் இத்தாலியில் போரிடப் பயன்படுத்திய பெரும்பாலான நிதி அங்கிருந்தே வந்தது.

ஒரு நாட்டின் தலைமை மையத்தைத் தாக்குவதை விட, அதனுடைய பணப்புழக்கத்தை நிறுத்தினால் அது விரைவாகப் பலவீனமாகும். இதை ரோம் ராஜ்ஜியம் சரியாகக் கணித்தது.

கி.மு. 210-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ரோம் படைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கார்த்தேஜின் ஸ்பெயின் நகரங்களைக் கைப்பற்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு நகரமும் கைப்பற்றப்பட்டபோதும் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் வருமானம் குறைந்துகொண்டே போனது. போரில் வீரர்களை இழப்பதை விட, வருமானத்தை இழப்பது மிகப்பெரிய இழப்பு என்பதைக்கார்த்தேஜ் ராஜ்ஜியம் அப்போது உணர ஆரம்பித்தது.

ஒரு நாட்டின் கருவூலம் காலியாக ஆரம்பித்துவிட்டால் அதன் இராணுவமும் பலவீனமாக ஆரம்பிக்கும். வீரர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது; புதிய ஆயுதங்களை வாங்க முடியாது; கப்பல்களைப் பராமரிக்க முடியாது; சிற்றரசு நாடுகளின் ஆதரவும் குறைய ஆரம்பிக்கும். இதுதான் கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் நடந்தது.

இதற்கிடையில் ரோம் ராஜ்ஜியம் தனது பொருளாதாரத்தைப் புதிய வரிகளை விதிப்பதன் மூலம் மீண்டும் கட்டமைத்துக் கொண்டிருந்தது. சிற்றரசு ராஜ்ஜியங்களிடமிருந்து பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கடல் வணிகத்தை மீண்டும் வலுப்படுத்தியது. போர் நடந்துகொண்டிருந்தாலும் வருமானம் தொடர்ந்து வந்ததால், புதிய படைகளை உருவாக்க முடிந்தது.

இதுதான் ரோமிற்கும் கார்த்தேஜிற்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம்:

  • கார்த்தேஜ் போருக்காக வருமானத்தைத் தேடியது.
  • ரோம் வருமானத்தைத் தரும் அமைப்பைப் பாதுகாத்தது.

இறுதியில் ரோம் ராஜ்ஜியத்தின் தளபதியான ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்த கார்த்தேஜ் மீது நேரடியாகப் படையெடுத்தார். தன் தாய்நாட்டைக் காப்பாற்ற ஹனிபால் பார்கா இத்தாலியை விட்டுத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கி.மு. 202-இல் நடந்த ஜாமா போரில் ஹனிபால் பார்கா தோல்வியடைந்தார். அந்தத் தோல்வி, தனது வருமான ஆதாரங்களைப் பாதுகாக்கத் தவறிய ஒரு ராஜ்ஜியத்தின் பொருளாதார அமைப்பின் தோல்வியாக இருந்தது.

ஒரு நாட்டின் செல்வம் அதன் கருவூலத்தில் இருப்பது இல்லை; அது தொடர்ந்து வருமானத்தை உருவாக்கும் திறனில்தான் இருக்கிறது. கருவூலத்தில் இருக்கும் செல்வம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், வருமானத்தை உருவாக்கும் திறன் இருந்தால், அந்தச் செல்வம் மீண்டும் மீண்டும் உருவாகும்.

அதனால்தான் ஒரு நாட்டின் உண்மையான வலிமையை அதன் தங்கக் குவியலால் அளக்க முடியாது. அந்த நாடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் பணத்தை உருவாக்க முடியுமா என்பதுதான் முக்கியம். செல்வத்தையும், வருமானத்தையும், பணப்புழக்கத்தையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.

வரலாறு இதை பலமுறை நிரூபித்திருக்கிறது.

இரண்டாம் பியூனிக் போரின் முடிவில் ரோம் ராஜ்ஜியம் மத்தியதரைக் கடலின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தது. ஆனால், ரோம் அதில் திருப்தி அடையவில்லை. கார்த்தேஜ் மீண்டும் எழுந்து நிற்கக் கூடாது என்று முடிவு செய்தது.

இப்போது ரோம் எதிரியை வென்றுவிட்டது. ஆனால், ஒரு கேள்வி மட்டும் மீதமிருந்தது: ஒரு எதிரியைத் தோற்கடித்தால் மட்டும் போதுமா? அவன் மீண்டும் ஒருபோதும் எழ முடியாத அளவுக்கு அவனுடைய பொருளாதார அடித்தளத்தையே அழிக்க வேண்டுமே?

இந்தக் கேள்விக்கான ரோமின் பதில் மிகவும் கொடூரமானதாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில், “கார்த்தேஜ் ராஜ்ஜியம் மீண்டும் எழக்கூடாது” என்ற ரோம் ராஜ்ஜியத்தின் முடிவு எப்படி ஒரு ராஜ்ஜியத்தின் அழிவை மட்டுமல்லாமல், அதன் பொருளாதார அழிவாகவும் மாறியது என்பதைப் பார்ப்போம்.

ஏனென்றால், வரலாற்றில் சில போர்கள் எதிரியைத் தோற்கடிப்பதற்காக நடத்தப்படுகின்றன. ஆனால், சில போர்கள்—எதிரி மீண்டும் உருவாக முடியாதபடி அவனுடைய பொருளாதாரத்தை அழிப்பதற்காக நடத்தப்படுகின்றன; சோழனது கலிங்கத்துப் பரணி போல!

(தொடரும்…)

Author

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

விசுவநாதபுரி – 7