திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 8

This entry is part 14 of 14 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்ஜாஃபர் பாஷா

அவனைத் தேற்றுங்கள்.

சோகம் ஆக்கிரமித்த உடலோடு
அமைதியாக நடக்கிறான்;
அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள்.

ஆயிரம் முறை உடைந்த மனதைத்
திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,
பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;
அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள்.

வலிந்து ஒரு சிறு புன்னகையை
முகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,
வெளியே மட்டும் சிரிப்பது போல் நடிக்கிறான்.
உடல் ஆழத்தில் சோகப் புயலின் தாக்கத்திற்கு ஆளாகி,
துக்க நதியில் எதிர்நீச்சலடிக்கிறான்;
ஆறுதல் வலை வீசி “அவனை அவனில்” இருந்து
இழுத்துக் கரையில் வீசுங்கள்.

நமக்குக் காணக் கிடைக்காதது அவனிலுள்ள ஆத்மார்ப்பணம்,
நமக்குக் கேட்காதது அவனிலுள்ள ஆர்த்தநாதம்;
ஆனால் அவன் உள்ளாழத்துள் சத்தமின்றி வெடித்த
“சோக மலையின்” லாவாவில் உருகிப்போகிறான்.
அவனது எரிந்த வாழ்க்கைக் காயங்களின் மேல்
“மூலிகைப்” பூக்களாய் மலர்ந்திடுங்கள்.

“பசி தீராத அவன் கண்கள்” கனவுகளுக்காகப் புலம்பும்போது,
தூக்கம் வராத இரவுகளில் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பான்.
அவனை உலுக்கும்போதெல்லாம் துக்க மேகமாகிக் கரைந்து கொட்டித்தீர்ப்பான்;
வினவி, இதயத்தில் வாழ்நம்பிக்கை நாற்றுக்களை நடுங்கள்.

அவன் உங்களுக்குக் காணக் கிடைப்பான்—
நசிந்துபோகும் நெஞ்சோடு நகரத்தின் நடுவீதியில் நடந்துகொண்டோ,
நாற்சாலைச் சந்திப்பில் நிலைகுலைந்துபோய்ப் புழுங்கிக்கொண்டோ,
எப்போதோ எங்கேயோ எந்த நிலையிலோ அவனை நீங்கள் பார்ப்பீர்கள்.

அப்போது சில தைரிய வார்த்தைகளை அரைத்து ஊற்றிவிட்டு,
ஆத்மார்த்தமான அணைப்புக்கு ஆட்படுத்தி,
அவன் தலையை உங்கள் தோளின் மேல் சாய்க்கவிடுங்கள்.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 7

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

ஆரோக்கியமே உண்மையான அழகு

கோஹினூர் – ஒப்பற்ற வைரத்தின் சுருக்கமான வரலாறு

திருக்குறளில் காணலாகும் அரண் குறித்த செய்திகள்