- அசுரவதம் -1 முதல் சந்திப்பு
- அசுரவதம் : 2 – காலகேய தானவன்.
- அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன்
- அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்
- அசுரவதம் : 5 – புதுவரவு
- அசுரவதம் 6: – முந்திச் செல்லும் விதி
- அசுரவதம் -7: வழிநடத்தும் வல்வினை
- அசுரவதம்:- 8 – வீழ்ந்தக் காதல்.
- அசுரவதம் : 9 – வஞ்சின வஞ்சி.
- அசுரவதம்: 10 – பழியின் பயணம்.
- அசுரவதம்: 11 – நெடிது நின்ற நாயகன்.
- அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு
- அசுரவதம்: 13- சதியின் தொடக்கம்
- அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!
- அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்
- அசுரவதம்: 16- ஓ சீதா.. ஓ இலக்குவா
- அசுரவதம்: 17- சிரிக்கும் மூவர்
- அசுரவதம் :18 – கோடு போட்டு நிற்கச் சொன்னான்.. சீதை நிற்கவில்லையே.
- அசுரவதம்: 19 – பறக்கும் அதிசயம்.
- அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்
- அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.
- அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)
- அசுரவதம் பாகம் இரண்டு: (அத்தியாயம் – 2: மலைக்கோட்டை)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 4: மனைவி என்னும் மதியூகி )
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 5: விதியா? வஞ்சனையா?)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 7: அறுந்த மூக்கு
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 8: சபரி மோட்சம்)
- அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 9: புதிய நட்பு
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 10 – சொல்லின் செல்வன்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 11 – இணைந்த கைகள்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 13 – போகாதே.. போகாதே.. என் கணவா
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 14 – அறத்தின் விலையும் – தாரையின் சாபமும்
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 15: மீண்டும் ஒரு சதி
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
- அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 17: நீறு பூத்த நெருப்பு
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 18: இருட்குகையும் அகக்கண்ணும்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 19: நிழல் காவல்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 20: கந்தர்வ மகள்
- அசுரவதம் – பாகம் 2 – அத்தியாயம் 21: நீலக்கடலின் ஓரத்தில்
- அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 1: அச்சத்தில் அவள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 4: மனமும், மானமும் மனைவியும்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 5: பசித்த நிழல்.
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6: உடையும் அரண்கள்
- அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 7: உடைந்த உண்மை.
“ஆம், அவள் என் மகள்! நம் ரத்தம்! என் கருவறையில் உதித்த குழந்தை!”
மண்டோதரியின் அந்த வார்த்தைகள் இராவணனின் தலைக்குள் இடிமுழக்கங்களாக வெடித்துச் சிதறின. அவனுடைய நரம்புகள் ஒரு கணம் செயலிழந்தன.
தான் தூக்கி வந்தது தன் சொந்த மகளையா? அசோகவனத்தில் அத்தனை அரக்கியர் முன்னிலையிலும் தரையில் விழுந்து கால்களைப் பிடித்துத் தான் கெஞ்சியது, தான் பெற்றெடுத்த குழந்தையின் முன்பா?
இராவணன் மனம் சஞ்சலத்தின் உச்சத்தில் இருந்தது.
இந்த ஒற்றை உண்மை அவனது ஒட்டுமொத்த இருப்பையே, அவனது வீரத்தை, தவத்தை, ஆண்மையைச் சுக்குநூறாக உடைக்கும் ஒரு மாபெரும் பேரதிர்ச்சியானது.
வாளை வேகமாக உருவியபடி உறுமினான்.
“என்ன சொல்கிறாய் பெண்ணே.. எனக்குத் தெரியாமல் நமக்குப் பிறந்த குழந்தையா?” என்று கூச்சலிட்டான்.
அவள் அந்தக் கத்தியைக் கண்டு பதற்றப்படாமல் தீர்க்கமாகச் சொன்னாள்.
“ஆம், உண்மைதான்.” என்று அவனை உறுதியோடு உற்று நோக்கினாள்.
“என்ன உண்மை.. சொல் சீக்கிரம்” என்றான்.
அவன் முனிவர்கள் குருதியை வரியாக வாங்கியது, அதை அவளிடம் விஷம் எனச் சொன்னது, அதை அவள் குடித்ததும் குழந்தை உண்டானது, அந்தச் சமயத்தில் அவன் போருக்காகச் சென்றிருந்தது, குழந்தை பிறந்ததும் ஜோதிடர் அந்தக் குழந்தையால் அவனுடைய உயிருக்கு ஆபத்து எனச் சொன்னது, பின் அவள் அந்தக் குழந்தையைப் பெட்டியில் இட்டுக்கடலில் வீசியது என அனைத்தும் சொன்னாள்.
அவன் சட்டென்று அதிர்ந்து அங்கிருந்த மஞ்சத்தில் சாய்ந்தான். கையில் இருந்த உடைவாள் டணார் என ஓசை எழுப்பியபடி தரையில் வீழ்ந்தது. சிறிது நேரம் மௌனத்தில் இருந்தான்.
அவன் கண்களில் ஆயிரம் சந்தேகக் குறிகள். அவன் முகம் முழுவதும் உள்மன ஓட்டத்தின் சஞ்சலங்கள் என எல்லாம் உருண்டோடிக் கொண்டிருந்தன.
“அவள் உன் மகள் என்பதற்கு என்ன அத்தாட்சி?” என்றான்.
உன் மகள் என்று அவன் சொன்னபோதே அவன் அவளைத் தன் மகள் என ஏற்கவில்லை என்பதை மண்டோதரி உணர்ந்தாள். மேலும் விவாதிப்பதை அவள் விரும்பவில்லை.
அந்த விவாதம் போகும் திசையை அவள் உணர்ந்தாள்.
“உருவ ஒற்றுமை ஒன்று உரைக்கும் அத்தனைக் கதையையும்” என்பதோடு நிறுத்திக்கொண்டாள்.
சீதையின் முகத்தில் இருக்கும் அந்த வசீகரம், மண்டோதரியின் இளமைக்கால முகத்தை ஒத்திருப்பதையும் அவனது உள்ளம் ஒரு கணம் ஒப்புக்கொண்டது. இராவணன் அறை அதிரும்படி நகைத்தான். அவன் முகம் குழப்பத்திலிருந்து முழுவதும் விடுபடவில்லை.
“நிறுத்து!” என்று காட்டுச்சிங்கம் போல் கர்ஜித்தான் இராவணன். அந்தக் குரல் பிசகி அதில் லேசான நடுக்கம் இருந்தது. குனிந்து கீழே விழுந்து கிடந்த அவனது மாபெரும் வாளை அவன் கையில் எடுத்தான். அதன் கூர்மையான முனை மண்டோதரியின் வெண்ணிறக் கழுத்தை நோக்கி மீண்டும் நீண்டது.
வாளைப் பிடித்திருந்த அந்த மாவீரனின் கைகள், தன் வாழ்நாளில் முதல்முறையாக நடுங்கின. சில கணங்கள் அவளையே இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உள்மனம் அவள் சொல்வதை ஏற்கவோ மறுக்கவோ முடியாமல் தத்தளித்தது.
“எனக்குப் புரிந்தது பெண்ணே.. எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. உனக்குப் போட்டி என ஒருத்தி வந்துவிடுவாளோ என்று தந்தை மகள் என்ற மாபெரும் பழியைச் சுமத்துகிறாயா?” என்றான். அவன் மனம் மெல்ல மெல்ல ஓர் நிலைக்கு வரத் துடித்தது. அவன் இதற்கு ஏதோ ஒரு சதியின் பின்னணிக் காரணம் இருக்கும் என்று நம்பினான்.
இருந்தும் மண்டோதரியைக் காணக் கண்கள் கூசி மண்டபத்தின் வெளியே சாளரத்தின் வழியாகக் கண்களை ஓடவிட்டான். அங்கே தூரத்தில் விபீஷணன் மனைவி சுரமை சென்று கொண்டிருந்தாள்.
அவனுக்கு ஏதோ புரிந்தது போலவும், அவன் மனம் உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது போலவும் திரும்பினான். இதுவரை இருந்த நடுக்கமும் கண்களில் குடியிருந்த குழப்பமும் அடியோடு அகன்றுவிட்டிருந்தன. அவன் கண்கள் கருணையோடு மண்டோதரியை நோக்கின.
தன் வாளை உறையிலிட்டுக் கொண்டே சொன்னான்.
“இப்போது முழுதும் புரிந்துவிட்டது மண்டோதரி, என் பிரிய மனைவியே” என்றான். அவன் கண்களில் பழைய காமத்தின் துளிர்ப்பும் விஷமமும் நிறைந்திருந்தன.
“என்ன புரிந்தது?” என்றாள் மண்டோதரி, அவனின் திடீர் மாற்றத்தைப் புரிந்துகொள்ள இயலாமல்.
அவளைத் தோளில் கையிட்டுச் சாளரத்திற்கு அருகே அழைத்துச் சென்று சுரமையைக் காட்டிச் சொன்னான்.
“உன் தந்திரம் எனக்குப் புரியாது என்று நினைத்தாயா மண்டோதரி? இன்று நீ சொல்லும் இந்தக் கதை உன்னுடையதல்ல. இன்று உன் அந்தப்புரத்திற்கு வீடணனின் மனைவி சுரமை வந்திருந்தாள் அல்லவா?” என்றான் அதே விஷமம் மின்னும் கண்களுடன்.
அவள் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
“போரைக் கண்டு அஞ்சும் தம்பி வீடணன், ஆகவே மனைவியின் மூலம் உன்னிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறான்.”
என்று நகைத்தான்.
“வீடணனுக்குத் தெரியும், இராவணன் எதற்கும் அஞ்சாதவன் என்று. ஆனால் அவனுக்கு இதுவும் தெரியும், ஒரு பெண்ணாக, என் பிரியசகியான உன்னால் எளிதில் என்னை மூளைச்சலவை செய்துவிட முடியும் என்று.”
அவள் திகைத்துப் பேச்சற்று நின்றாள். இராவணன் தொடர்ந்தான்.
“பெண்ணே, ஆயிரம் பெண்கள் என் வாழ்வில் வரலாம், ஆனால் நீ என்றுமே எனக்கு முதன்மையானவள். அதைப் புரிந்துகொள்…” என்றான் உறுதியான குரலில்.
“ஆனால் சீதையை நான் அடையக்கூடாது என்பதற்காக, அவளை என் மகள் என்று சொல்லும் அளவுக்கு உன் புத்தி தரம் தாழ்ந்துவிட்டது. என்ன ஒரு அருமையான நாடகம்!” என்று கூறி வெடித்துச் சிரித்தான்.
மண்டோதரி விக்கித்து நின்றாள்.
“என் வார்த்தைகளை நம்புங்கள்…” என்று ஆரம்பித்த மண்டோதரியின் வாயைக் கைகளால் பொத்தினான்.
“பெண்ணே, இதுவே வேறு நேரமாக இருந்தால் என் கைகளால் உன் வாயை மூடும் தேவை இருந்திருக்காது…” என்று கண்களில் காமம் மின்ன அவளை நோக்கிச் சிரித்தான்.
“மீண்டும் சொல்கிறேன், நீதான் என் முதன்மையானவள். என் பட்டத்தரசி. ஆகவே மனம் குழம்பாமல் அந்தப்புரம் செல்” என்றான். அவன் சொல் உறுதியாகவும் கட்டளையாகவும் இருந்ததால், அவள் வேறு வழியின்றி கதவைத் திறந்துகொண்டு வெளியே கிளம்பினாள். தன் இரு கரங்களையும் முகத்தில் மூடிக்கொண்டு, கண்ணீர் பெருக அந்த அறையை விட்டு வெளியேறினாள் மண்டோதரி.
அவள் சென்றதும், இராவணன் தளர்ந்துபோய் அரியணையில் அமர்ந்தான். மீண்டும் மதுக்கோப்பையைக் கையில் எடுத்தான். சரியாக அந்தத் தருணத்தில், அரண்மனையின் கதவுகள் அவசரமாகத் தட்டப்பட்டன.
“உள்ளே வரலாம்” என்றான் சற்று சீற்றத்துடன்.
இலங்கையின் தலைமை ஒற்றர்கள் மூச்சிரைக்க உள்ளே ஓடிவந்தார்கள். அவர்களின் முகத்தில் மரண பயம் உறைந்திருந்தது.
“அரசே ஆபத்து! ஆபத்து!” என்று அவர்கள் அவன் காலடியில் விழுந்தனர்.
இராவணன் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தான்.
“ம்ம் சொல், இரவின் இந்த வேளையில் அரசனின் தனி அறைக்குள் நுழையும் அளவுக்கு என்ன ஆபத்து வந்துவிட்டது?” என்றான் இராவணன்.
“பிரபு… வடக்குக் கோட்டையில் கலவரம், காவல் தேவதை இலங்கிணியை வீழ்த்திவிட்டு, ஒரு வானரம்… குரங்கு நம் இலங்கைக்குள் நுழைந்திருக்கிறது.”
என்று பதற்றத்துடன் கூறினான் ஒற்றன்.
அவர்கள் இராவணனின் முகத்தில் அதிர்ச்சியையோ, கோபத்தையோ எதிர்பார்த்தார்கள்.
ஆனால், இராவணனின் இதழோரத்தில் ஒரு மெல்லிய, குரூரமான புன்னகை விரிந்தது. இராவணனின் கண்கள் இப்போது போதை தெளிந்து போட்டிக்குக் காத்திருக்கும் மிருகத்தின் கண்களாக மாறியிருந்தன.
(தொடரும்)