5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

This entry is part 5 of 5 in the series 5 நான்கள்

“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.”

கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில் வைத்திருந்த குண்டுகள், சில துப்பாக்கிகள், ஒரு குட்டி பாட்டில் வாட்டர், பின் ஓரிரு துண்டங்கள் ரொட்டி.

என் முன்னே இருளில் பனி பொழிந்துகொண்டிருந்த இரவினில் கொஞ்சம் பூதாகாரமாகத் தெரிந்த பாறைகள். சரியாக இல்லாமல் ஏற்றமாகப் பாறைகளுடன் சூழ்ந்திருந்த மலை. டோலோ லிங்க். கார்கில் அருகே இருந்த மலை.

என்னைச் சுற்றிலும் இருளில் கரும் நண்டுகளாக எனது ராஜபுதன ரைஃபிள் பட்டாலியனின் ஒரு பகுதி வீரர்கள். என்ன, ஒரு இருநூறு பேர் இருப்பார்கள். எல்லாம் அமைதியாய் ஒரு ஒழுங்குடன் ஏறிக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான் காதுகளில், நான் பொல்லாத்தனத்தைக் காட்ட வேண்டும் என உபதேசம். செய்தது குட்டிக் கிருஷ்ணனாம். என் முன்ஜென்மமாம். சிரிக்க முடியவில்லை, சிந்திக்கக் கூட முடியவில்லை. தெரிந்த ஒன்றே ஒன்று ‘இன்குலாப் ஜிந்தாபாத்’.

இந்த டோலோலிங்க் மலை மேல் இருக்கும் ஆக்கிரமிப்பை ஒழிக்க வேண்டும். ஏற ஆரம்பித்து பின் காத்துக் காத்து கமாண்டரின் கட்டளைப்படி செல்ல ஆரம்பித்தாகிவிட்டது.

ஆஹா, சொல்லவேயில்லை. நான் கருணா. இருபதைக் கடந்து சில வருடங்களே ஆன இளைஞன். அரும்பு மீசை, குறும்புப் பார்வையுடன் இருந்தாலும் கூட, நாடுதான் முக்கியம் என இருப்பவன். கூடவே நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்ட காத்யாவையும் விட்டு வந்தவன்.

காத்யா – காத்யா என் அத்தை பெண். இந்தப் போரின் முடிவில் உயிருடன் இருந்தால் மறுபடி அவளைப் பார்ப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

“ஆகே… மூவ்.”

டககடக டக டக டக டக…

மலை உச்சியில் யாரோ சுடுகிறார்கள். எதிரிகளாய்த்தான் இருக்க வேண்டும். நம் தேசத்தில் நுழைந்த எதிரிகள். விட முடியுமா என்ன?

டகடகடகடக…

மறுபடி நம்மவர்கள் சுடுவது உயரே காரிருளில் கொஞ்சம் வெளிச்சமாய்க் காண்பித்து மீண்டும் புகையாகப் புகையாக…

சுறுசுறுப்பாக ஏற ஆரம்பித்தவர்களை ஸ்லோ செய்யச் சொன்னார்கள். அப்படியே அந்தக் குளிரில் சில நிமிடங்கள் இருந்தோம். இல்லை, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். அசைவில்லை.

கொஞ்சம் குட்டையாக இருந்த பாறைக்குப் பின்னால் சற்றே படுத்தவண்ணம், கண்கள் உயரத்தைப் பார்த்தபடி, ஹெல்மெட்டின் வளையம் மோவாயில் இழுப்பதைப் பொருட்படுத்தாமல், முதுகின் கனத்தைப் பொருட்படுத்தாமல், கையில் பிடித்த மெஷின் கன்னின் வலியைப் பொருட்டாக நினைக்காமல் இருக்க இருக்க, கை மெலிதாய் மரத்துப் போனது.

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? நான் கோவில்பட்டிக்காரன். படித்தது அங்கேதான். சின்ன வயதிலேயே ராணுவத்தில் சேருவதென்பது என் சிந்தனையில், நாடி நரம்பினில் கலந்துவிட்டது. காரணம் பக்கத்து வீட்டு மேஜர் அங்கிள் ரவிக்குமார்.

என் அப்பா வணிக குலம். கோவில்பட்டியில் ஒரு மளிகைக் கடை வைத்து நன்றாக வியாபாரம் செய்துகொண்டிருந்தார். சின்ன வயதில் பக்கத்து வீட்டிற்குச் சென்று வந்திருந்தேன். ரிட்டயர்ட் மேஜர் என்பதால் எனக்கு டிசிப்ளின், எக்சர்சைஸ் எல்லாம் போதித்தார். பள்ளியில் NCC. பின் பிளஸ் டூ முடித்த பிறகு, “காலேஜில் சேர்க்கலாம்” என என் தந்தை சொல்ல, “ம்ஹும். இவன் நல்லா ஹைட் அண்ட் வெயிட்டா இருக்கான். டெல்லிக்கு அனுப்புங்கள்” எனச் சொல்லிச் சம்மதம் வாங்கி, என்னை அப்ளிகேஷன் அனுப்பச் சொல்லி, நான் அனுப்ப, பின் பிஸிகலுக்குச் சென்று நான் செலக்ட் ஆகி சோல்ஜர் ஆகி வேலை பார்க்க ஆரம்பித்து அது ஆயிற்று சில வருடங்கள்.

அம்மாவிற்கு உடன்பாடில்லை. எந்த அம்மாதான் ஒப்புக்கொள்வார்கள்? இருந்தாலும் சென்று சில வருடங்களில் முறுக்கேறிய வாலிபனாக விடுமுறையில் வந்தபோது, என் அத்தை பொண்ணைக் கட்டி வைத்துவிட்டார்கள். “அம்மா நாள் போகட்டுமே.” “வேண்டாம்டா. இருபத்தோரு வயசாச்சு. இவ உனக்குன்னே வளர்ந்தவ!”

காத்யா எனப்படும் காத்யாயினி அழகி. அவள் அப்பா, அதாவது என் மாமா, கவர்ன்மெண்ட் ஸ்கூலில் தமிழாசிரியர் என்பதால் அந்தப் பெயர்க்காரணம். காத்யாவுடன் திருமணத்திற்குப் பின் இருந்த சில நாட்கள் அற்புதமானவை. கல்யாணம் ஆகி பதினைந்து நாளில் மறுபடி வந்துவிட்டேன்… இன்னும் செல்லவில்லை. இரு வருடம் ஆகிவிட்டது. கடிதங்கள் மட்டுமே வாழ்க்கை. கடிதங்களில் அவள் கடும் விரதம் இருப்பது நான் இருக்கும் குளிர் மலையிலும் என்னைச் சுடும். இருந்தாலும் பரவாயில்லை, செய்வது தேச சேவை.

காத்யாவுடனான முதல் கான்வர்சேஷன்… அப்போது அவள் பத்தாம் கிளாஸ் முடித்திருந்தாள். டெல்லி போவதற்கு முன் சந்தித்தேன்.

“மாமா, அவசியம் போகத்தான் வேண்டுமா?” “ஏன்?” “இங்கேயே ஏதாவது வேலை…” “ம்ஹும்… போவது தேச சேவை இவளே. கவலைப்படாதே. உனக்கு நல்ல மாப்பிள்ளை மாமா பார்ப்பார்.”

முறைத்தாள்.

“ம் சரி, நாளை வாங்க. நான் உங்களுக்குச் சேவை செய்கிறேன். வித் மோர்க்குழம்பு.”

விழித்தேன்.

“எல்லாம் எங்கள் எதிர் வீட்டு மாமி சொல்லிக்கொடுத்தார். நமது இடியாப்பம் தான்… அவர்கள் சேவை என்று சொல்வார்கள்.” சிரித்துக் கன்னத்தைத் தட்டினாள்.

ச்ச்… தோளில் ஏதாவது எறும்பு ஊறுகிறதா என்ன? மேலே பார்த்துக்கொண்டிருந்த கண்களுக்கு இருள் பழகிவிட்டது. காதுகளில் மறுபடி என் போன ஜென்மக் குரல்கள். அப்படித்தான் விட்டு விட்டு வரும். ஆரம்பத்தில் பொல்லாத்தனத்தைப் பற்றிச் சொன்னது குட்டிக் கிருஷ்ண ஸ்வாமிகள் தான். பின் இப்போது குரல். பேசுவது மாயா. மாயா வினோதினி. என்ன பெயரிது? என் காத்யா அளவுக்கு அழகில்லை.

“நானும் அழகிதான்” என்றாள் மாயா. “ஆனால் அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை கருணா. பாழாய்ப்போன விமான விபத்து. ஒருவர் கூடப் பிழைக்கவில்லை. பின்தான் வாழ்க்கை பற்றி எனக்குப் புரிந்தது. விந்தையாய் இல்லை? வாழ்க்கை பற்றி எனக்குப் புரிந்தபோது நான் இல்லை கருணா!”

மேலே மறுபடி டகடக. எங்களுக்கு – ராஜ்புத் பட்டாலியனின் இரண்டாவது பிரிவான எங்களுக்கு – எதுவும் உத்தரவு வரவில்லை… அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டேன்.

“இப்போது உனக்கு உத்தரவு வரும் கருணா. மேலே போ. மேலே நமது முன் ஜென்மமான ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் இருக்கிறான். நீதான் கொல்ல வேண்டும்.”

“யாராயிருந்தாலும் கொல்வேன் மாயா” – என்றேன் நான். “நமது தேசத்தை ஊடுருவியவர்கள். என் கமாண்டர் சொல்படி. நீ சொல்லத் தேவையில்லை” – வாய்விட்டுச் சொல்லவில்லை, என் சிந்தனையில் ஓடிய எண்ணங்கள் அவளிடம் சொல்லின.

“இல்லை அப்படி இல்லை” என ஆதித்த கரிகாலன் முன் வந்தான். “கருணா, என்னைக் கொன்றவன் மேலே பங்க்கரில் இருக்கிறான் எதிரி நாட்டு சோல்ஜராய். இத்தனை ஜென்மங்களில் நான் இப்போது நீயாக இருப்பதுதான் எனக்கு மகிழ்வாய் இருக்கிறது.”

சைகைகள் எனக்கு இருளில் காட்டப்பட, நாங்கள் மேலே முன்னேறினோம். சரசரவெனச் சத்தம் கூடச் சன்னமாகவே ஒலித்தது.

“அது யாரென்று சொல்லட்டுமா?”

“சொல்லித் தொலையேண்டா” என மனதிற்குள் முனகியபடியே ஏறிக்கொண்டிருந்தேன். நன்றாகவே அரை மணிப்பொழுதில் உச்சியின் அருகாமையில் வந்தாகிவிட்டது. இந்தப்பக்கமிருந்த மேஜரின் சோல்ஜர்கள் ‘பார்டர்’ படத்தின் பாடல்களைச் சன்னமாகப் பாடிக்கொண்டிருந்தனர். எனக்குக் கண்ணதாசனின் “பனிபடர்ந்த மலையின் மேலே” பாடல் ஒரு கணம் மூளைக்குள் மின்னலடித்து மறைந்தது.

அவன் சொன்ன அதிர்ச்சித் தகவல் என் மூளையில் உறைக்கவே இல்லை, கேட்கவும் இல்லை. காரணம் துப்பாக்கிகளின் சத்தம். சண்டை மும்முரமானது. மேலே இருந்த பார்பாட் பங்க்கரில் இருந்த எதிரிகள் மீது குண்டு மழை பொழிந்தோம். அவர்களும்தான்.

என் முன்னால் லெப்டினன்ட் ஓடினார். நானும் தொடர்ந்தேன் சுட்டுக்கொண்டே. ஒரு கணம் திரும்பிய லெப்டினன்ட், ”யார், கருணாவா? பீச்சே ஜாவ். நான் பார்த்துக்கொள்கிறேன்.”

இல்லை எனச் சொல்ல முடியவில்லை. காரணம் துப்பாக்கிகள் வெடித்தன. நான் என் முதுகுப்பையிலிருந்து எடுத்தேன், கைவெடிகுண்டு. வயரை இழுத்து எறிந்தேன். பங்க்கரில் சென்று குறி தவறாமல் அது வெடிக்க, வெடித்த வேகத்தில் ஒரு எதிரி ஆள் துள்ளி விழுந்தான். நெருப்புப் பிழம்பு.

”குட்” என்ற லெப்டினன்ட் மேலும் முன்னேற, அவர் தோளில் ஒரு குண்டு பாய அவர் சரிய, நானும் என் இடம் வலமிருந்த சோல்ஜர்களும் சுட ஆரம்பிக்க, அங்கிருந்தும் பதிலுக்குத் தோட்டாக்கள் வந்து விழ, அருகிலிருந்தவர்கள் விழ… இது என்ன? என் மீதும் பாய்ந்துவிட்டதா என்ன?

கீழே சரிந்த லெப்டினன்ட் எப்போது எழுந்தார் எனத் தெரியாது. அவருடையது வழிநடத்துவது… எங்களிடம் ”டேக் கேர் கைஸ்” எனச் சொல்லி அவரும் போரில் ஈடுபட்டார். என் அருகே இருந்த சோல்ஜர்கள்… ஒருவன் பெயர் நினைவில்லை. ஹிந்தியில், ”டோண்ட் வொர்ரி, யூ வில் பீ ஆல்ரைட்” எனச் சொன்னான்.

எனக்கோ உற்சாகமாகத்தான் இருந்தது. வலி தெரியவில்லை. பையை மட்டும் கழற்றினேன். ரத்தம் மார்பில் வந்தது, அந்த அதிகாலையில் கொஞ்சம் பரவ ஆரம்பித்த வெளிச்சத்தில் தெரிந்தது.

மறுபடியும் குண்டுகள், சத்தங்கள். இறுதியில் ‘இந்தியா ஜீத்கயா’. ‘ஜெய் ஹிந்த்’ என ஒட்டுமொத்தக் குரல்கள். எங்கள் சோல்ஜர்களின் குரல்கள் ஒலித்தன.

கூடவே ஆதி, பாவனி, கிருஷ்ணஸ்வாமி, மாயா வினோதினி – “கருணா, வீ ஆர் ப்ரௌட் ஆஃப் யூ.”

ஆதித்த கரிகாலன்… “ஒரு இளவரசனாய் இருந்து மரணித்ததை விட, உன்போன்ற வீரனாய் இருந்தேனே அதுவே பெருமை எனக்கு. நீ குண்டெறிந்ததில் துண்டானவன் தான் என் ஜென்மத்தில் என்னைக் கொன்றவன். நன்றி கருணா…”

பாவனியும் மாயாவும் என் கன்னங்களில் முத்தமிட, “பொல்லாதவர்களை ஒழித்துவிட்டாயடா. நீ பொல்லாத சோல்ஜர். கடமை தவறாதவன்” எனக் கிருஷ்ண ஸ்வாமியின் குரல்…

இவையெல்லாம் மீறித் தெரிந்தது தேசியக் கொடி. அதன் பின்னால் புகையாய்க் காத்யாவின் முகம். ஸாரி காத்யா.

“ஓ நோ, காத்யா மட்டுமல்ல, எதிர்காலமே உனது சாம்பலைத் தரிசிக்கும் கருணா. வீரனின் ஆஷஸ் எனப் பத்திரமாய் இருக்கும். கவலை கொள்ளாதே எழுந்து வா” என்றான் ஆதித்த கரிகாலன்.

மெல்ல என் உயிர் எழும்பியது மேலே.

(முற்றும்)

Series Navigation<< 5 நான்-கள்: அத்தியாயம் நான்கு

Author

Related posts

இறைவனின் இணையில்லாப் படைப்பு

திருவை மு.இரா. கவிதைகள் -3

கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!