“யூ ஸ்டுப்பிட் இடியட்!”
அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள் என் முகத்தில் இருந்த புன்னகை பார்த்துப் புதிராய்ப் பார்த்தாள்.
அடடா, வாய் விட்டுச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது.
“உங்களை இல்லீங்க” – என்றேன் ஹிந்தியில். ஏனெனில் நான் இருந்தது மும்பை விமான நிலையம். அதனுள் இருந்த உணவுக் கடை.
மறுபடியும் உதயகுமாரனின் நினைவு வந்தது. கிளம்பும் முன் டெலிபோனில் ட்ரங்க்கால் போட்டுவிட்டுத்தான் பேசியிருந்தேன்.
“உது, நானெல்லாம் பத்திரமா வந்துடுவேண்டா.”
“அது சரி, நீ நீயா இருந்தா மட்டும் ஓகே மாயா வினோதினி. இப்ப உன்கிட்ட என் வாரிசு இருக்கே. ஒரு நிமிஷம், ஒரு தாலாட்டுப் பாட்டுகூட ரெடி பண்ணிட்டேனாக்கும்.
கண்ண விரிச்சுபுட்டு
கண்ணாடி பார்த்துபுட்டு
கண்ணா ஏனழறே?
கண்பட்டுத் தான்போச்சா?
மண்ண அளைவதற்கும்
மனங்குளிர வைப்பதற்கும்
புண்ணியமாய் வந்தாயே
பொன்னே ஏனழறே?
அன்ன நடைநடக்க
அம்மாபோல் முடியலைன்னு
கலங்கித்தான்
போயிங்கே
கண்ணா நீ அழுதாயோ?
வண்ணப் பூஞ்சிரிப்பாய்
வாய்நிறைந்து
சிரிக்காமல்
எண்ணம்போல் கோணி
இங்கே அழலாமா?
கடைசி வரி சரியா வந்துருக்கான்னு தெரியலை.” என்று பேசியிருந்தான் உதய். என் கணவன். சென்னையில் வேலை பார்க்கிறான் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில்.
அப்ப நானு?
நான், மாயா வினோதினி. பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரை. பி.எஸ்.ஸி மேத்ஸ் கோல்ட் மெடலிஸ்ட் இன் ஃபாத்திமா காலேஜ். ம்.. மறத் தமிழச்சியாக்கும்.
பிறகு ஏன் சிரித்தேனாக்கும்? ஏன் ஸ்டுப்பிட் இடியட் சொன்னேனாக்கும்?
இந்த உது இருக்கே படிச்சது எம்.எஸ்.ஸி பிசிக்ஸ் கோல்ட் மெடலிஸ்ட் ஃப்ரம் மதுரை யுனிவர்சிட்டி; இடிக்கிறது பேங்க் வேலை. போன் எனக்கு பாம்பேக்கு. அதுவும் கிரண்ட்லேஸ் பேங்க் நான் வேலை செய்யும் பேங்கிற்கு.
ஹலோ, நான் போரடிக்கறேனா என்ன?
என் அப்பா ஞானப்பிரகாசம் அங்க பேங்க் மேனேஜர். அடுத்த லைன் நான் சொன்னா உங்களுக்கு அழுகை வரும். இந்தாங்க கர்ச்சீப்.
ஒரு நல்ல நாளில் நான் சமர்த்தாய் மேலே எல்லாம் படிக்காமல் மாதுங்கா வந்து வேலை தேடிக்கிட்டு இருந்தப்ப பொசுக்குன்னு ஹார்ட் அட்டாக் அவருக்கு. ஃபாரின் கொலாப்ரேஷன் பேங்க் அண்ட் ஏ.ஜி.எம் அங்கிள் என் அப்பாவின் நண்பர் அண்ட் அம்மாவோட காபி டிகாக்ஷனுக்கு அடிமை எனில் எனக்குச் சுலபமா வேலை கிடைச்சது.
ஜாயின் பண்ணின ரெண்டு வருஷத்துல என் அம்மாவோட ஓர்ப்படியோடு நாத்தனாரோட ஒண்ணுவிட்ட சித்தி பையன் இந்த உதயகுமாரனைப் பிடிச்சுக் கல்யாணம் கட்டி வச்சுட்டார் என் அன்னை. வேலை விட மனசு வரலை. மெட்ராஸுக்கும் ட்ரான்ஸ்பர் கிடைக்கலை. ஸோ, ஒருத்தரை ஒருத்தர் மூணு மாசத்துக்கு ஒருமுறை ஒருவார லீவ்ல பார்த்துண்டோமா, இந்த ரெண்டு வருஷத்துல.
என்னாச்சுன்னாக்க நான் இப்போ மூணு மாசம். போங்க சார் வெக்கமா இருக்கு.
“என்ன வெக்கம்?”ன்னார் குட்டி கிருஷ்ண சுவாமிகள். இந்த ஆளோட பார்வையே சரியில்லை. அப்பப்ப முழிச்சுண்டுருந்தாலும் கண்ணுக்குள்ள ஒரு பிம்பமா அன்ஷேவண்ட் அண்ட் அன்ஈவன் ஃபேஸோட வந்து பயமுறுத்துவார்.
உதுகிட்ட சொன்னப்ப சிரிச்சான். “வினு, பேருக்கேத்த மாதிரி வினோதமா கற்பனை பண்ணிக்காத. ட்ரான்ஸ்பர் என்னாச்சு?”
“வரும் கண்ணா, ஆனாக்க?”
“ஆனாக்க?”
“டெஸ்ட் ரிசல்ட் வந்துடுத்துடா என் ராசா. இப்ப நான் ஒரு ஆளில்லை.”
வாஹ், வாரே வாஹ்னு சொல்லிட்டு ஒரு ஜோக் சொல்றேன் பேர்வழின்னு அது என் காதைக் கடிச்சுதா, அது நினைவுக்கு வந்ததா, அதனால்தான் இந்த ஸ்டுப்பிட் இடியட்.
பாம்பே சாண்ட்டாக்ரூஸ்லருந்து இதோ இந்த இந்தியன் ஏர்லைன்ஸ் “க்ருபயா த்யான் தீஜியே” ஐசி 120 டு பாம்பே டு மெட்ராஸ் இந்த அக்டோபர் 1976-ல் கிளம்பிட்டேன். பின்ன கிரண்ட்லேஸ் சென்னையில் ட்ரான்ஸ்பர் இந்த வினுப்பாப்பாக்குக் கிடைச்சாச்ச்சே.
அவ கொடுத்த சமோசாவைச் சாப்பிட்டா கொஞ்சம் தலை கிறுகிறுன்னு வந்துச்சு. கொஞ்சம் ட்ராலி பேக் தள்ளி நடக்கப் பாவனி முன்னால் வந்தா. அவளும் என் முன் ஜென்மமாம். மாயா வினோதினி இவளே டோண்ட் கோ இன் திஸ் பிளைட்.
“பாவிக் கண்ணம்மா, மீ வோண்ட் அஃப்ரெய்ட் ஆஃப் எனி திங். ஐயாம் கோயிங் டு மீட் உது” (பாவனியைப் பாவின்னு சுருக்கினா கொஞ்சம் சிரிப்பாத்தான் இருக்கு).
“உதை படுவே மாயா. அந்த பிளைட்ல என் முன் ஜென்மத்தைக் கொன்னவன் வர்றான். ஆதி, வந்து நீ சொல்லேன்” எனப் பாவனி சொல்ல ஆதி, ஷேவ் பண்ணாத தாடி மூஞ்சோட “மாயா வினோதினி, அன்பே நான் தான் நீ இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால்…”
வேகமாய் நடக்க ஆரம்பித்து மோதிக்கொண்டேன். உடனே விழி அகன்றேன். காரணம் ராணி சந்திரா. சில பல தமிழ்ப் படங்களில் பார்த்திருக்கிறேன்.
“ஹாய்”
“ஹாய்…”
“நான் மாயா வினோதினி, நீங்க?” எனச் சொல்லித் தள்ளாடினேன். ராணி பிடித்துக்கொண்டார்கள். உடன் கூட வந்தவள் தாங்கினாள்.
“என்னாச்சுங்க?”
“ஸாரி, இவங்க சில படங்கள்ல பார்த்திருக்கிறேன். அவங்க தானே?”
“எஸ்.” என்றாள் உடன் வந்திருந்த பெண். “என் பெயர் ஓமனா, ராணியிண்ட செக்ரட்டரி. நிங்ஙள்?”
“ஞான் மாயா. கொஞ்சம் கேட் கூட்டிப் போறீங்களா?”
“ஓயெஸ், செக்யூரிட்டி கேட் எல்லாமே போகலாம்.”
நடக்கும்போது தெரிந்து கொண்ட விஷயங்கள். ஓமனா, ராணி தோழிகளாம். பெர்சனலாக நன்கு அறிந்தவர் வேண்டுமென அவளை பி.ஏ வாக வைத்திருக்கிறாளாம். தமிழில் ஒரு படம் முடியும் தருவாயில் இருக்கிறதாம். “வந்தா ராணி எங்கிட்டோ போகும். கமல் ரஜினி எல்லாத்துக்கும் ஹீரோயினி ஆகிடும்.”
“சரி, நீ?” என்றேன். “அது ப்ராப்ளம் இல்லா. ஹச்சோ ராணி வேகமாப் போகுது. சொல்லிட்டு வர்றேன்.”
சாண்டாக்ரூஸ் ஏர்போர்ட் செக்யூரிட்டி எல்லாம் ப்ராப்ளம் இல்லை. மெல்ல ஸ்க்ரீனில் போட்டுவிட்டு உள் சென்று பெண் போலீஸில் கையுயர்த்த… தடவியவள் “ஆர் யூ பிரெக்னண்ட்? கங்க்ராட்ஸ்” எனச் சிரிக்க, எப்படிக் கண்டுபிடித்தாள் என வியந்து வெட்கி வெளியில் வந்தேன்.
ஓமனை, “வாங்க போகலாம், கேட் 2.”
“நான் போய்க்கறேன் ஓமனா.” என உட்கார்ந்தால் வந்துவிட்டான் ஆதித்தன்.
“அன்பான நானே, சொல்வதைக் கேள். இங்கு சென்றால் ஆபத்து. என்னைக் கொன்ற நபரும் விமானத்தில் வருகிறார்.”
“என்ன விதமான ஆபத்து ஆதி?”
கண்ணை மூடி மனதுள் பேசினேன்.
“தெரியாது, பட் நீ இறப்பது நிச்சயம். குட்டி கிருஷ்ண சுவாமிகளே, நீங்களே சொல்லுங்கள்” என அவரைத் துணைக்கழைத்தான்.
விமானம் புறப்படும் அழைப்பு வர எழுந்து நடந்தேன். சுவாமிகள் காதில் பேசியவாறு உடன் வந்தார்.
“முன் ஜென்மப் பகை எல்லாம் கூடாது என்றுதான் நானும் நினைத்தேன் குழந்தாய். இன்பேக்ட் விரோதியையே குணமாக்கி அவளையே மனைவியாகக் கொண்டவன் நான். எல்லா விஷயங்களும் அந்த ஜென்மத்தில் மறந்து போயின. அவளுடன் வாழ்ந்தது சில வருடங்கள். நன்கு வாழ்ந்தேன். மிட் ஃபார்ட்டிஸ் வருவதற்குள் மரணம், நோயினால். ஐம்பத்து இரண்டாம் வருடம். ஆனால் மேலே வந்து இவர்கள் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தெரியவந்தது. எனில் நீ போகாதே இப்போது.”
“கிருஷ்ண சுவாமி…” என மனதுள்ளே சிரித்து நடந்தேன். பேசவும் செய்தேன் மனதுள். “இந்த ஜென்மப் பகையே தவறு என நினைப்பவள் நான். நீங்கள் முன் ஜென்மப் பகை என்கிறீர்கள். இதோ சமர்த்தாய் பிளைட் பிடித்து உது பார்க்கப் போகிறேன். ஆமாம், எனக்குப் பிறக்கப் போவது பொண்ணா பையனா? அதைச் சொல்லும். பிறந்த பிறகு உம்மை நம்புகிறேன்.”
சுவாமிகள் சொன்னார், “ஏய் நில்.” நின்றேன் ஒரு நிமிடம். முழித்தேன். “உனக்குக் குழந்தை பிறப்பதற்குள் நீ சாகக் கூடாதுதானே?”
“ஏன் பயமுறுத்துகிறீர்கள்?”
“அதெல்லாமில்லை போ கா தே.”
பிளைட்டில் ஏறும்போது இரு ஆடவர்கள் கை குவித்தனர். ஒருவர் பைலட் போல. ஏன் பைலட் எல்லாம் கைகுவிக்கிறார்? கே.டி. குப்தா என எழுதியிருந்தது. கூட இருந்தவனின் பேட்ஜ் ராம் வர்மா. ம்ம்.
உள்ளே செல்ல அருகில் அமர்ந்திருந்தவர் நெற்றி நிறைய சூரணம்… சிவப்பு மெல்லிய கோடு. பக்கா அய்யங்கார் போல. ராணி அந்தப் பக்கம் அமர்ந்திருந்தாள் வித் ஓமனா. என்ன ஒரு சிம்ப்ளிசிட்டி. எகனாமி கிளாஸ்.
“ஐயாம் கே.டி குப்தா வெல்கம் டு இந்தியன் ஏர்லைன்ஸ் பிளைட்…” எனச் சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கக் கண்ணை மூடினேன்.
விமானம் எழுந்தது மெல்ல. காதுக்குள் இரைச்சல். “மாயா எழுந்திரு, தப்பிவிடு ஷ்ஷ்.”
கண் திறந்தபோது விமானம் ஓட ஆரம்பித்து ர்ர்ர்ர்ர் என ஆகிக் குலுங்கக் குலுங்க ஆடியது. மற்றவர்கள் பதறினார்கள்.
என் மனதிற்குள் குழப்பம். “ஹச்சோ, போய் உதுகூட படகோட்டி – ஒரு அவன் ஊரான பசுபதிகோவில் போய் டூரிங் தியேட்டர்ல பார்க்கலாம்னு இருந்தோமே. ஹச்சோ, டூரிங் தியேட்டர்ல ரியலாவே மடில படுத்துக்கலாம்னு அவன் சொல்ல, அப்படியான்னு நான் முழியகலக் கேட்க அவன் சொன்னானே, நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை பாட்டு சீனோடு அந்தப் பாட்டுப் பாடலாம்னு. நான் மறுபடி ஓ அப்படியான்னு கேட்டா சிரிச்சானே. இந்த ஆதி சொன்னது உண்மையா? ஹச்சோ.”
விமானம் ரன்வேயில் மேலும் ஓட ஆரம்பித்து எழும்பப் பார்த்தது. முடியவில்லை. பின் டமால் என வெடிச்சத்தம்.
இன்ஜின் வெடித்திருக்க வேண்டும். என்ன இது? காதில் குரல் “சொல்லச் சொல்லக் கேக்கலை நீ. அவன் வஞ்சம் தீர்த்துண்டான். வைஸ் கேப்டன் ராம் வர்மா. முன் ஜென்ம விரோதி.” எனப் பாவனி சொல்ல, “சும்மா பொய் சொல்லாதே பாவனி. ஏதோ எந்திரக் கோளாறு” என நான் மனதில் பேசவும் தீப்பிழம்பு கரும்புகையோடு என்னைச் சூழவும் சரியாக இருந்தது.
(தொடரும்)