திருவை மு.இரா. கவிதைகள் -3

உதிர்த்த இலைகளில் பாக்கியுள்ளதென
பலமாக அடித்தது காற்று
உதிர்ந்ததும் உதிராததும் நனைந்தன மழையில்
உயிரற்றும் உயிரோடும்
பலத்த காற்றுக்கும் எதிர்ப்பில்லை
பலத்த மழைக்கும் எதிர்ப்பில்லை
கடும் வறட்சிக்கும் எதிர்ப்பில்லை
எப்படித்தான் வாழ்வாயோ

நகர்ந்து செல்ல முடிந்தால்
பல்லாயிரம் இறக்கைகள் முளைத்தால்
எல்லாரோடும் உரையாட முடிந்தால்
வெளிச்சத்தில் இருளைப் பார்க்க முடிந்தால்
உனக்கு நிகர்தான் யாரு.


உண்மையென்றால் குழப்பம்தான்
இருக்கலாம் அவ்வளவுதான்
ஆனால் இல்லை

கறைபடிந்த பற்களைத் தேனில் ஊறியது என்றேன்
எச்சிலைத் தேன் என்றேன்
வாயொழுகும் அமுதம் என்றேன்

வான் பொழியும் நீரென்றேன்
அன்பை விடாது ஒழியாது
வசனம் பேசியது எல்லாம்

உண்மையென்றால் குழப்பம்தான்
இருக்கலாம் அவ்வளவுதான்
ஆனால் இல்லை

காலந்தொட்டுக் கடந்துவந்த
காதலைப் பாடாத
கவிமனமொன்று உண்டா சொல்
காதலே நீயே வா
என்னோடு உரையாடு
என் சந்தேகங்களைத் தீர்த்துவிட்டு
கேள்விகளைக் கேட்டுவிட்டு
போகாதே
என்னோடே தங்கிவிடு
உனக்கு சொல்லவேண்டுமென்று இருக்கும் அல்லவா
என்னிடம் சொல்
என்னை நீ மனதார நம்பலாம்.

Series Navigation<< திருவை மு.இரா. கவிதைகள் -2

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

இறைவனின் இணையில்லாப் படைப்பு

5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)

கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம்!