விசுவநாதபுரி – 3

This entry is part 3 of 3 in the series விசுவநாதபுரி

“எதுவானாலும் இனி வீட்டுக்குப் போய் முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்” என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, சற்றுத் தொலைவில் நிறுத்தியிருந்த தனது சிவப்பு நிற நானோ காரை நோக்கி வேக வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

இந்தக் கார் விசுவநாதபுரியில் அவளுடைய பயன்பாட்டுக்காக தாராவின் அம்மா அளித்தது.

மதுரா ஆண்ட்டி அன்பானவள், ஆனால் பழகுவதற்கு எளிமையானவள் அல்ல என்பதை இங்கு வந்த இத்தனை நாட்களில் தனு புரிந்து கொண்டிருந்தாள். மகளின் இஷ்டமான தோழி என்ற போதும், ஒரு குறிப்பிட்ட தொலைவில் வைத்தே இவளை அணுகுவது நல்லது என்று அந்த அன்னைக்கு ஏனோ தோன்றியிருந்தது. தன் எண்ணத்தை அவள் செயல்படுத்தியதோடு அதை தாராவும் புரிந்து கொள்ளுமாறு செய்ததில் அவளது புத்திசாலித்தனம் தெரிந்தது.

தாராவுக்கும் அது சரியெனப்பட்டதால் அவள் தனது எல்லை அறிந்தவளாக, அந்த ஆண்ட்டியின் விரோதத்தைச் சம்பாதிக்க விரும்பாத நல்ல பெண்ணாகவே நடந்து கொண்டிருந்தாள். இயல்பில் அவள் மிக நல்லவள் என்பதால் தான் இது சாத்தியமாயிற்று. இல்லையேல் சோமேஷ் வழிந்த வழிசலுக்கு இவள் என்றோ மதுராவின் கோபப்பார்வையைச் சந்தித்திருக்க வேண்டியவள். அதைத் தவிர்க்கவே வீட்டிலிருக்கையில் ஆண்ட்டியின் எதிரில் அவனைச் சந்திக்க நேர்ந்தால் கூடச் சிறு புன்னகையுடன் பேச்சைக் கத்தரித்துக் கொண்டு தானுண்டு, தன் வேலை உண்டு என்று ஒதுங்கிக் கொள்வாள்.

ஷைலா அப்படி அல்ல. என்ன இருந்தாலும் அவள் 16 வயதே ஆன இளம் கன்று அல்லவா? சோமேஷின் வழிசலை அவள் எப்படிப் புரிந்து கொண்டாளோ தெரியவில்லை. அவனது அருகாமையை அவள் விலக்காததோடு, அவனைத் தேடித்தேடிப் போய் உற்சாகமாக வேறு பேசத் தொடங்கியிருந்தாள். இதைத் தடுப்பதும் இப்போது தனுவின் வேலைகளில் ஒன்று என ஆகிவிட்டிருந்தது.

இதெல்லாம் மதுரா ஆண்ட்டியின் கண்களில் படாதிருக்க வாய்ப்பில்லை.

எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுக் கிளம்புகிறோமோ அவ்வளவு சீக்கிரம் தங்களது மரியாதைக்குப் பங்கமில்லாமல் இருக்கும் என்பதையும் தனு அறிந்தே இருந்தாள்.

இப்படி இருவேறு விதமான எண்ணங்கள் அவளைக் குழப்பியதால், அவள் உடனடியாக வீட்டை நோக்கிக் காரைச் செலுத்தத் தொடங்கினாள்.

அதற்குள் ஷைலா அழைக்கவே… அவளது அழைப்பை ஏற்றுப் பேசி நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் வீட்டுக்குப் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டு விட்டு டிரைவிங்கில் கவனமானாள்.

மலையடிவாரத்திலிருந்து கிளம்பி வீட்டை அடைய மேலும் முக்கால் மணி நேரம் பிடித்தது அவளுக்கு.

காரைக் கராஜில் விட்டு விட்டு இறங்கி வீட்டுக்குள் காலெடுத்து வைத்தவளுக்கு வீட்டிலிருந்த அசாதாரண மெளனம் உறுத்தியது. ஆனாலும் தவறாக எதையும் யோசிக்க விரும்பாத மனம், வேக வேகமாக மாடிப்படியேறி ஷைலாவிடம் விரையத் தூண்டியது.

அவள் எதிர்பார்த்தது நிஜமே என்பதாக அங்கே ஷைலா அழுது கொண்டு தான் இருந்தாள்.

என்ன இருந்தாலும் அண்ணன் மகளாயிற்றே! அவளது அழுத முகம் கண்டதும் மனம் பொறுக்காது, “ஷைலும்மா… என்னாச்சுடா!” என்று விரைந்து சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

அத்தையின் அணைப்பில் ஆறுதலடைந்தவள் போலச் சற்று நேரம் தேம்பியவள், பிறகு மெல்லத் தலை உயர்த்திப் பார்த்து;

”அத்தை நாம கவுகாத்திக்கே திரும்பப் போயிடலாமே ப்ளீஸ். எனக்கு இங்க இனிமே இருக்க முடியாது” என்று கண் கலங்கினாள்.

“ஏன் ஷைலூ!”

அத்தையின் கேள்வியில் சற்றுத் தயங்கியவள், பிறகு மெல்ல உண்மை சொல்லத் தொடங்கினாள்.

“அத்தை நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு நல்லது எது? கெட்டது எதுன்னு தெரியாத வயசா என்ன? இந்த மதுரா ஆண்ட்டி அப்படிச் சொல்லி என்னை இத்தோட நாலஞ்சு தடவ வார்ன் பண்ணிட்டாங்க. நான் இதுவரை அதெல்லாம் பொருட்படுத்தல. ஆனா, இன்னைக்கு… ஐ காண்ட் டைஜெஸ்ட் இட்!” – என்றாள்.

அவள் இன்னும் முழுதாக எதையும் சொல்லி முடிக்கவில்லை என்பதை உணர்ந்தவளாக தன்மத்ரா;

”வயசுல பெரியவங்க இல்லையா? அவங்க ஏதாவது சொன்னா பெருசா எடுத்துக்கக் கூடாதுன்னு இங்க வந்த மறுநாளே உனக்குச் சொன்னேனே ஷைலு… இன்னைக்கு புதுசா என்ன ஆச்சு?” என்றாள்.

“சோம் இந்தச் சின்னப்பெண்ணிடம் எல்லை மீறிவிட்டானோ!” என்று நினைக்க வழியில்லை. அவனுக்கு அத்தனைக்கு தைரியம் இருக்குமா என்பதைக் காட்டிலும் குளத்து நீரை வெள்ளமாகக் கொண்டு போகக்கூடும் எனும் திண்ணக்கமும், சோம்பேறித்தனமும் மிக்கவனாயிற்றே அவன் என்பதும் தோன்ற… பிறகென்னவாயிருக்கக் கூடும் என யோசனை பறந்தது அவளுக்கு.

”இனஃப்… இனஃப் இஸ் இனஃப், பெரியவங்களாம் பெரியவங்க… பெரிய இவங்க” – என்று முணுமுணுத்தவளாக, ஷைலா தன் தேம்பலை நிறுத்தியதோடு அத்தையின் அணைப்பில் இருந்தும் விடுபட்டவளாக, வேக வேகமாகத் தனது பெட்டிகளை இழுத்துப் போட்டு தன்னுடையதும், அத்தையுடையதுமான உடமைகளை அடுக்கத் தொடங்கினாள்.

”ட்ரெயின் வேண்டாம் அத்தை. உடனே ஃப்ளைட் டிக்கெட் போடுங்க, அடுத்த ஃபிளைட்ல நாம கவுகாத்தி போயே ஆகணும், இனி இந்த வீட்ல என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது”

அவமானகரமான முகக் கன்றலுடன் சொல்லி முடித்த அந்தச் சிறுமியைப் பார்க்கையில் தனுவுக்குத் தன்னையே மீண்டும் பார்ப்பதைப் போலிருந்தது.

அண்ணன் மகள் என்றாலும் அவள் தனக்கும் மகள் போன்றவளே அல்லவா! சொல்லப்போனால் இவள் சாயலில் தன் அம்மாவைப் போலிருந்ததால் ஷைலு என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டாக வேண்டும் போலிருந்தது தனுவுக்கு.

அறியாச் சிறுமியாகக் கோபத்தில் தவித்துக் கொண்டிருந்த ஷைலுவின் கரங்களைப் பற்றித் தன் புறமாக அவளைத் திருப்பியவளாக;

“ஷைலும்மா, நீ இன்னும் நடந்தது என்னன்னே சொல்லலையேடா! வாட் ஹேப்பண்ட்ம்மா! மதுரா ஆண்ட்டி மேல அப்படி என்ன கோபம்?!” என்று சின்னவளின் முகம் பார்த்தாள்.

சுணங்கிச் சுருங்கிய அந்த அழகு முகத்தில் மீண்டும் கண்ணீர் மாலை மாலையாக வடியத் தயாரானது.

வேக வேகமாக மூக்கை உறிஞ்சியவளாக அவளை ஏறிட்டு நோக்கிய ஷைலா;

”அத்தை, அந்த ஆண்ட்டிக்கு நம்ம ரெண்டு பேர் மேலயும் சுத்தமா மரியாதையே இல்லை. எப்போ பார்த்தாலும் நாம என்னவோ ஆண்களை வலை போட்டுப் பிடிக்கறதுக்காகவே அஸ்ஸாமில் இருந்து இங்க வந்திருக்கோம்ங்கற மாதிரியே குத்திப் பேசி எரிச்சலூட்டிக்கிட்டே இருப்பாங்க. நமக்கும் தான் யார் இருக்காங்க? இந்த தாரா அக்கா அன்பாக அழைக்கிறாங்களேன்னு தானே இங்கே வந்தோம். அதைக்கூடப் புரிஞ்சுக்காம ஏதோ அவளை நாம ரெண்டு பேரும் ஏதோ மந்திரம் போட்டு மயக்கி நம்ம கைப்பிடிக்குள் வச்சிக்கிட்டு இருக்கிறாப் போலவே இந்த ஆண்ட்டி கற்பனை பண்ணிக்கிறாங்க. அதையே சதா பேசிப் பேசி என்னையும் கொலையா கொல்றாங்க. எனக்குப் புரியவே இல்லை அத்தை, இதெல்லாம் உங்களுக்கும் தெரியாமலா இருக்கும்? அப்புறமும் நீங்க ஏன் இங்கிருந்து கிளம்பறதைப் பற்றி இன்னும் யோசிக்காம இருக்கீங்க?!” – என்று குமுறியவள், தனு மேலே ஏதோ கேட்கும் முன்பாக,

“என் பேஸ்ட், சோப், பிரஷ் எல்லாத்தையும் பேக் பண்றேன்” என்று பாத்ரூம் பக்கமாகச் சென்று விட்டாள்.

தன் கேள்விக்கான பதிலைச் சொல்லும் எண்ணமே இன்றி மீண்டும், மீண்டும் இங்கிருந்து கிளம்புவதைப் பற்றி மட்டுமே சிந்திக்குமாறு தன்னை ஊக்கும் அண்ணன் மகளை எண்ணி தனு சற்றுக் குழம்பிப் போனாள்.

இந்த நிலையில் இவளைத் தனியே கவுகாத்திக்கு அனுப்ப நினைக்கும் தன் முடிவு பற்றித் தெரிந்தால் இவள் மேலும் கொதித்துப் போவாளே! – என்று தோன்றியதால், தனது முடிவை உடனடியாக மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையோ என்ற அச்சம் வந்தது அவளுக்கு.

மலைச்சுனை, கழலணிந்த அந்த பொற்பாதங்கள்… அம்பிகா யட்சி… காத்தாடியில் தொங்கிய அம்மாவின் கொலுசணிந்த பாதங்கள்… நூபுர கங்கையின் மென் சிதறலாகச் சதா தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் அம்மாவின் தற்கொலைக்கான மர்மப் புதிர். அதை எப்பாடு பட்டேனும் அறியத் துடிக்கும் தனது வேட்கை. அனைத்துக்குமான விடையைத் தன்னுள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு பூச்சாண்டி ஆட்டம் காட்டும் இந்த விசுவநாதபுரி!

  • எல்லாமும் ஒவ்வொன்றாகக் கண்முன்னே வந்து செல்ல ஹோவென்று மூச்சடைத்தது தன்மத்ராவுக்கு.

ஷைலுவை சமாதானப்படுத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவள், மெல்லக் கதவு தட்டப்பட்ட ஓசையில் அந்தப்புறமாகத் தலையை உயர்த்திப் பார்த்தாள்.

மதுரா ஆண்ட்டி தான் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு திரும்பி நின்று கொண்ட ஷைலுவை அவள் மதித்ததாகத் தெரியவில்லை. நேராக தன்மத்ராவின் எதிரில் வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டு மென்குரலில் பேசத் தொடங்கினாள்.

“தன்மத்ரா… உன் மேல் எனக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு. அதன் பேரில் கேட்கிறேன். நாளை நீங்கள் ஊர் திரும்புகிறீர்கள் தானே! எந்த ட்ரெயினில் புக் செய்திருக்கிறீர்கள்? அல்லது விமானமா?” என்றாள்.

தனுவுக்கு வேதனையாக இருந்தது.

என்ன ஒரு நெஞ்சழுத்தம், ஒரு சிறு பெண்ணை இப்படி அழ வைத்துவிட்டு, மேலே வந்து ஒன்றும் அறியாதவர் போல இவர்களை இந்த இடத்தை விட்டு கிளப்புவதில் குறியாக இருக்கிறாரே! இந்த அம்மாளின் வீட்டில் இனியும் இருந்து தானாக வேண்டுமா? அப்படி இங்கிருந்து தான் கண்டறியப்போகும் உண்மைகள் தான் என்ன? அதனால் ஏதேனும் பைசா பிரயோஜனம் இருக்கப் போகிறதா?

பேசாமல் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தால் தேவலை என்றாகிவிட்டது அவளுக்கு.

எனவே அவரை கண்ணுக்குக் கண் நேராகப் பார்த்து;

“ஆம், ஆண்ட்டி நாங்கள் எங்கள் ஊருக்குக் கிளம்பிக் கொண்டு தான் இருக்கிறோம். ட்ரெயினில் இல்லை, இண்டிகோ விமானத்தில் புக் செய்யவிருக்கிறேன். நாளை இந்நேரம் நாங்கள் எங்கள் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் எங்களது சுயமரியாதையைத் தேவையற்று அந்நியர்கள் யாரும் நோகடிக்கத் துணியாத வகையில் பத்திரமாக இருப்போம்.” – என்று முடித்தாள்.

தன்மத்ராவின் பதிலில் சுருக்கென்று நெஞ்சில் முள் தைத்தாற்போல் உணர்ந்தபோதும், அந்த ஆண்ட்டி எதையும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதவராக, கொஞ்சம் தண்மையாகக் கூட மீண்டும் ஏதோ சொல்ல வந்துவிட்டு, பிறகு சற்று நிறுத்தி அதெல்லாம் தேவையில்லை என்பதை உணர்ந்தவளாக,

“அப்படியானால் சரி, ஏர்போர்ட்டுக்குச் செல்லும் நேரத்தைச் சொன்னீர்கள் என்றால் டிரைவர் சின்னக்கண்ணுவை தயாராக இருக்கச் சொல்வேன். அவன் கொஞ்சம் புத்திசாலி, உங்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று விடுவான்.” – என்றுவிட்டுப் பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறத் தொடங்கினாள்.

”அட, இந்த ஆண்ட்டி எவ்வளவு அநியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்று நீங்களும் தான் பாருங்களேன் அத்தை. ஏதோ நாம் வேண்டாத விருந்தாளிகள் போல அல்லவா ஆகிவிட்டோம். இவ்வளவு பாரபட்சமாக யோசிப்பவர்கள்… இவரது மகள் நம்மை இங்கே அழைத்தபோதே தடுத்திருக்க வேண்டியதுதானே. அப்போதெல்லாம் அமைதி காத்துவிட்டு இப்போது ஏன் நம்மேல் காய்கிறார்கள்? அதைப்பற்றி நறுக்கென்று நாலு வார்த்தை கேளுங்களேன் அத்தை.” என்று ஷைலு குமுறத் தொடங்கவே;

அதைக் கேட்டு மதுரா எரிச்சலுடன் நிமிர…

“அம்மா, அவள் சிறுபெண். இன்னும் உலகமறிந்தவள் அல்ல. உங்கள் பிரச்சினை என்ன? நாங்கள் இங்கே மேலும் தங்கக் கூடாது என்பது தானே! அது முடிவுக்கு வந்துவிட்டது. இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறோம். கார் கூடத் தேவையில்லை. இங்கு தான் வாடகை டாக்ஸி கிடைக்கிறதே, அது போதும் எங்களுக்கு. தயவுசெய்து நீங்கள் கிளம்புகிறீர்களா? நாங்கள் பெட்டி அடுக்க வேண்டும்” – என்று குனிந்து தரையைப் பார்க்கத் தொடங்கினாள் தனு.

காரணம், அவளது கண்களில் தளும்பத் தயாராக நின்று கொண்டிருந்த கண்ணீர் இந்த அம்மாளின் முன்னால் நேரம் கெட்ட நேரத்தில் வெளியேறி மானத்தை வாங்கிவிடக் கூடாது என்பதாலேயே!

இவளது மகன் என்னடாவென்றால் லிவிங் டுகெதராக வாழக் கேட்கிறான். இவளோ என்னை இங்கிருந்து கிளப்பினால் போதும் என்று துடிக்கிறாள். மகளோ, அருமைத் தோழியாக இங்கே வரவழைத்துவிட்டு அவள் எங்கோ புராஜெக்ட் வொர்க் என்று டெல்லியை விட்டு நகராமல் அங்கிருந்தே எல்லோருக்கும் ஆணையிட்டுக் கொண்டிருக்கிறாள்.

இதெல்லாம் என்ன? தன்னைச் சுற்றி என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?

தன்மத்ரா தன் சக்தி எல்லாம் வடிந்து சக்கையாகிப் போனவளாக உணர்ந்தாள். அப்படியும் பேக்கிங் எல்லாம் முடித்து அதிகாலை ஃபிளைட்டில் கவுகாத்தி செல்லும் மன உறுதி மட்டு குலையாமல் பார்த்துக் கொண்டாள்.

அம்மாவின் தற்கொலைக்கும் இந்த விசுவநாதபுரிக்கும் அப்படி என்ன தொடர்பு இருந்து விடப்போகிறது? தடயம் என்று எதுவுமே கிடைத்திடவில்லை. உண்மையைக் கண்டறிய வெறும் மன உணர்வுகளும், யூகங்களும் மட்டுமே போதுமா?

மலை உச்சிகள் இந்தியாவெங்கிலும் தான் நிறைந்து கிடக்கின்றனவே! அம்பிகா யட்சியும் கூட இங்கு மட்டும் தான் இருக்கக் கூடுமா என்ன? அவளும் தன் காற்சதங்கையில் கொட்டும் அருவியுடன் இன்னும் எங்கெல்லாமும் கொலுவீற்றிருக்கிறாளோ! அங்கெல்லாம் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் அப்போதும் கூட தான் இப்படித்தான் உணரக்கூடுமோ என்னவோ?!

பிறகு எதற்காக விடுமுறை முடியும் தறுவாயிலும் ஒரு பொய்க்கால் குதிரையை நம்பிக் கொண்டு, தன் ஒட்டுமொத்த மானம், மரியாதையை அடகு வைத்துவிட்டு இங்கே தங்கி விடலாமா என்றெல்லாம் கூட முடிவெடுக்கத் தொடங்கிவிட்டோமே. இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது?!

நல்ல வேளை, சின்னவள் என்றாலும் ஷைலுவுக்கு இருந்த தெளிவு தனக்கு இல்லையே என்று பலவாறாக நொந்து போனவளாக ஒருவழியாக 12 மணிக்கு மேல் சற்றுக் கண்ணயர்ந்தாள் தனு.

அதிகாலை 5 மணிக்கு ஃப்ளைட் என்பதால் 3 மணிக்கெல்லாம் ஏர்போர்ட்டில் இருந்தாக வேண்டும் என அலார்ம் வைத்துவிட்டுத்தான் படுத்தாள்.

அந்த நினைவிலேயே இருந்ததாலோ என்னவோ முழுமையான தூக்கமின்றி, தூக்கமும் விழிப்புமாகவே படுக்கையில் கிடந்தாள்.

இவள் ஆழ்ந்து உறங்குகிறாள் என்ற நம்பிக்கையில் அருகிலிருந்த ஷைலு மெல்ல எழுந்து, தன் அத்தையின் மரகத நிற கைப்பையை ஓசையின்றி மெதுவாகத் திறந்து, அதன் உட்புற ஜிப்பைத் திறந்து ஏதோ ஒரு பொருளை வைத்து மெல்ல மூடி, அதை மீண்டும் அதன் இடத்திலேயே வைத்துவிட்டு வந்து, ஒன்றுமறியாதவளைப் போலவே படுத்துக் கொண்டாள்.

தூக்கக் கலக்கத்தில்… “ஷைலு எதை தன்னுடைய கைப்பையில் வைத்துப் பூட்டுகிறாள்? அவளது கைப்பைக்கு என்ன ஆயிற்று? என்னுடையதில் ஏன் வைக்கிறாள்?” என்றெல்லாம் தனுவுக்கு யோசனை கிளம்பினாலும் கூட, இருந்த அசதியில் அவளால் அந்நேரத்தில் எழுந்து உட்கார்ந்து இதையெல்லாம் அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. மூளை என்றுமில்லாத வழக்கமாக அன்று அத்தனை சோர்ந்திருந்தது. “அதனால் என்ன இப்போது, அலார்ம் அடித்த பிறகே எழுந்து கொண்டால் போதும்….” என்ற சுயசமாதானத்துடன் அவள் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

கைப்பையை அதனிடத்தில் வைத்துவிட்டு வந்த ஷைலுவோ, பரம திருப்தியாக அத்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ”வெரி ஸாரி அத்தை. இதனால் நேரப்போகும் துன்பத்தை என்னால் இனியும் தாங்க முடியும் என்று தோன்றவில்லை. நாளை அந்தப் பிசாசு ஆண்ட்டி வந்து மறுபடியும் எதைப்பற்றியேனும் கேட்டால் எனக்கு அவளை எதிர்த்துப் பேச ஒரு தைரியம் வேண்டும். அவள் என் கைப்பையைச் சோதனை இட்டால் நான் மாட்டிக் கொண்டு முழிக்க நேரும். அதனால் தான் உங்கள் பையில் மறைத்து வைத்திருக்கிறேன். நாளை விமானநிலையம் செல்லும் வழியில் உங்களுக்கே தெரியாமல் நான் அதை அப்புறப்படுத்தி விடுவேன். உங்கள் செல்ல மருமகளுக்காக இந்த ஒரு சிறு தவறை மட்டும் மன்னித்து விடுங்களேன்!” என்றவாறு அத்தையின் மேல் சலுகையாகத் தன் கைகளைப் போட்டுக்கொண்டு, நிம்மதியாக அவளுமே சில நிமிடங்களில் தூக்கத்தில் ஆழ்ந்து தான் போனாள்.

விடிந்ததும் தங்களைத் தொடரவிருக்கும் பேராபத்தை அறிந்திருந்தால், ஷைலு நிச்சயம் அந்தத் தவறைச் செய்யத் துணிந்திருக்கவே மாட்டாள்.

ஆனால், விதி வலியதல்லவா?!

(தொடரும்)

Series Navigation<< விசுவநாதபுரி – 2

Author

Related posts

ஞான நூல்கள் – 6 & 7

அறிவெழுச்சி: 4

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)