ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)

தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே:

“சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக்கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனே ஒன்றாகி வாழ்பவனே கவி.”

அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் கவிதையைக் கவனியுங்கள்:

தீப்பட்டெரிந்தது:
வீழு மலரின் –
அமைதியென்னே!

இந்தக் கவிதைக்கான விளக்கத்தை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் புரிந்துகொள்ளக் கூடும். ஒரு அழகான ஜென் கதை படிக்கும் போது அந்தக் கதையின் ஜீவனை நாம் உள்வாங்கிப் படிப்பது போல. ஆனால் இதுதான் என்று விவரித்துச் சொல்ல ஆரம்பித்தால் அந்த ஜீவன் கெட்டுப் போகும்.

பாரதி அறிமுகப்படுத்தி கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழில் முதன் முதலில் ஒரு முழுமையான ஹைக்கூ நூல் வெளியானது. அது கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய ‘புள்ளிப் பூக்கள்’ என்னும் நூல். அதிலிருந்து சில கவிதைகள்:

அசைபோடும் மாடு
வயிற்றுக்குள்
புல்வெளி

வழிவிடுங்கள்
பாரம் சுமந்து வருகிறது
நத்தை

அதேபோல கவிஞர் நா. முத்துக்குமாரின் இந்த வரிகள் ஒரு நுட்பமான தத்துவப் பார்வையை முன்வைக்கின்றன:

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்

இப்படி மேற்சொல்லப்படும் கவிதைகள் ஏதோ ஒரு ஒற்றைக் காட்சியை மிக ஆழமாகச் சொல்லிச் செல்கின்றன. தற்போதைய தமிழ்ச் சூழலில் இந்த வடிவத்தின் உண்மையான வீரியத்தைப் புரிந்து எழுதப்படும் கவிதைகள் மிகக் குறைவான சொற்களில் மாபெரும் திறப்பை ஏற்படுத்துகின்றன.

ஜப்பானிய மரபில் ஹைக்கூ என்பது பெருமளவு இயற்கையையும், அதனூடே இழையோடும் தத்துவத்தையும் மட்டுமே பேசியது. ஆனால், தமிழ்ச் சூழலில் அது முற்றிலும் புதிய பரிமாணத்தை அடைந்தது. சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, சாதிய வன்முறைகள், அரசியல் நையாண்டிகள் மற்றும் நவீன மனிதனின் தனிமை ஆகியவற்றை விமர்சிக்கும் ஒரு கூர்மையான ஆயுதமாகத் தமிழ் ஹைக்கூ உருமாறியது. மேற்குலகில் ஜாக் கெரூவாக் எப்படி 17 அசைகள் என்ற இலக்கணத்தை உடைத்து எளிய வரிகளுக்குள் காட்சியைக் கொண்டு வந்தாரோ, அதேபோலத் தமிழிலும் கறாரான இலக்கணங்கள் தளர்த்தப்பட்டு, உள்ளடக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ஒரு சிறந்த தமிழ் ஹைக்கூ எப்படி இருக்கும் என்பதற்கு, தமிழ்க் கவிஞர் மித்ரா எழுதிய இந்தக் கவிதை ஒரு நேர்த்தியான உதாரணம்:

காணாமல் போன சிறுமி
சுவரொட்டியில்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்

இந்தக் கவிதையில் இயற்கை இல்லை, பருவகாலக் குறியீடு (கிகோ) இல்லை. ஆனால், ஹைக்கூவிற்கே உரிய அந்தப் பெரும் ‘மௌனம்’ இதில் இருக்கிறது. சிறுமி காணாமல் போன துயரத்திற்கும், சுவரொட்டியில் உறைந்துபோன அவளது புன்னகைக்கும் இடையே உள்ள அந்த இடைவெளிதான் வாசகனைத் துயரத்தில் ஆழ்த்துகிறது. கவிதை சொல்லாமல் விடும் அந்த மௌனத்தை வாசகன் தன் கற்பனையால் நிரப்புகிறான். இதுதான் ஒரு உண்மையான ஹைக்கூ செய்யும் வேலை.

ஒரு பழைய குளத்தில் தவளை குதித்த அந்தச் சிறு சத்தத்தில் தொடங்கிய ஹைக்கூவின் பயணம், இன்று உலகின் பல மொழிகளைக் கடந்து, தமிழிலும் தடம் பதித்து நிற்கிறது. முதல் கட்டுரையில் நாம் பார்த்த போலி ஹைக்கூக்களின் படையெடுப்பிலிருந்து இந்த அரிய கலையைக் காப்பாற்ற வேண்டுமானால், ஹைக்கூவின் அடிப்படை இலக்கணமான ‘குறைவான சொற்கள், ஆழமான காட்சிப் படிமம், உணர்வை மடைமாற்றும் இடைவெளி‘ ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் செய்திகளாகவும் நீதிகளாகவும் மூன்று வரிகளை மடக்காமல், இருவேறு படிமங்களை மோதவிட்டு ஒரு மாபெரும் திறப்பை ஏற்படுத்துவதே ஹைக்கூ. அந்தச் சூட்சுமம் பிடிபட்டுவிட்டால், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சிறு அசைவும் ஒரு ஹைக்கூவாகவே நம் கண்களுக்குத் தெரியும்.

முத்தாய்ப்பாக, இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒரு ஆழமான தரிசனத்தைக் கடத்தும் இந்த ஆங்கில ஹைக்கூவோடு இதை நிறைவு செய்கிறேன்:

A field of cotton–
as if the moon
had flowered.

நிறைவுற்றது.

Series Navigation<< ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 4 – ஹைக்கூ இலக்கணம்

Author

Related posts

ஆகச்சிறந்த சுயநலமி

எண்ட் டோஹ் த்ரெ – 8

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 2: அகதரிசனம்