ஈற்றடிக்கோர் பாட்டு – 8

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.

உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:

கற்ற அறிவே கவசமாய் நின்றுநம்
முற்றாத் துயரை முடித்திடும் – நற்றமிழின்
சீர்மிகு நல்லறிவும் சிந்தையில் சேர்ந்திடின்
கார்முகில் நீங்கும் கரைந்து.

இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.

சின்னக்கண்ணன்:
களிப்புடன் காலையில் கண்மயக்கும் வண்ணம்
அளித்திடும் ஆதவனின் பல்நிறத் தோற்றத்தில்
ஆர்வமாய் ஒன்றி அழகாக அன்புடன்
கார்முகில் நீங்கும் கரைந்து

இப்னு ஹம்துன்:
இதயத்தில் கேட்கும் இடிமின்னல்; கண்ணோ
விதவிதமாய் மாரி உகுக்கும் – பதறாமல்
வேர்தேடிச் சிக்கலை வெட்டிவிடின் அக்கவலைக்
கார்முகில் நீங்கும் கரைந்து

மாலா மாதவன்:
கீழ்வானம் மின்னலிடும் கீற்றாய் வெளிச்சமிடும்
சூழ்ந்திடும் காற்றில் மழைவாசம் – பாழ்நிலத்தில்
ஏர்பிடித்த கைகளது ஏந்தும் முகங்களில்
கார்முகில் நீங்கும் கரைந்து

நளினி:
மரங்கள் கோடி வளர்த்தால் – நம்
மண்ணில் வளமை கொழிக்கும்!
புகையின் திரையை கிழித்தால் – தினம்
வானில் நீலம் மிளிரும்!
நெகிழிப் பயன்பாடு தவிர்த்தால் –
நாளும்
இயற்கை மாசின்றிச் சிரிக்கும்!
காற்றின் கதிரின் ஆற்றல் – தரும்
மாற்று சக்தி பெரிதாகும்!
உயிர்கள் அனைத்திற்கும் புவி – என்றும்
போற்றுவது நம் கடமையாகும்!
வளங்கள் அழியாது காத்தால் – சூழும்
கார்முகில் நீங்கும் கரைந்து!

கண்மணி பாண்டியன்:
ஆர்ப்பரித்து கொட்டிய மழையில்
ஆலிங்கனம் செய்தன நீரும் நிலமும்
ஆறும் அருவியும்
ஆபத்தாக பொங்கின
ஆக்ரோஷம் தாங்காமல்
ஆலும் மலையும் சரிந்தன
ஆவேச நர்த்தனம் முடிந்து
கார்முகில் நீங்கும் கரைந்து

ராமலக்ஷ்மி:
மழைக்குப் பின்
இரவெல்லாம்
சன்னலில்
சொட்டும் நீர்
தட்டும் ஓசை—
துளிக்குப் பின் துளியாக
இருளிடம் சொல்ல
இன்னும் ஏதோ இருப்பது போல்
அசைவின்றி நிற்கும் மரங்கள்—
இரவின் பாரத்தை சுமந்தபடி
அவற்றின் இலைகள்
அதிகாலைக்குள்
மண் செவிமடுப்பதை
நிறுத்தியிருக்கும்
மேகங்களின் ஊடே
நழுவி வரும் மெல்லிய வெளிச்சம்
ஈரமான கூரைகளில் படியும்
எங்கோ ஒரு பறவை
எழுப்பும் குரலில்
இருப்பதில்லை வாக்குறுதி ஏதும்
கிடைப்பதில்லை விளக்கம் எதுவும்
மெல்ல மெல்ல
வானம் வெளுக்கையில்—
கார்முகில் நீங்கும் கரைந்து

ஹேமா செந்தில்:
பிரசவ வலியில்
பரிதவிக்கும் தாயின்
கதறலும் கண்ணீரும்
உயிர் போகும் வலியும்
சேயின் அழுகுரல் கேட்ட நொடி
கார்முகில் நீங்கும் கரைந்து.

பவளமணி பிரகாசம்:
சந்தர்ப்பம் சூழல் செய்யும் சதி
சந்தேக சாத்தான் ஆடும் சதிர்
சமயம் வரும் உண்மை புரியும்
கார்முகில் நீங்கும் கரைந்து

வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.

Author

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 6:  உடையும் அரண்கள்

ராம நாமமொரு வேதமே

ஞான நூல்கள் – 12 & 13