திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 14

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா

ஊர் ஞாபகம்
பட்டப்பகலிலோ நடுமதியத்திலோ
எந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,
ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்
என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்
மயக்கத்தில் எழும்பும்!

“மோயதும்மெ” ஆற்றில் மூழ்கிய
காயாத நினைவு,
கண்களிலிருந்து
துளித்துளியாய் வழிகிறது!

ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்
திண்டின் மேல் விளையாடிய
தோழர்களின் நினைவு,
சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது!

பன்முகக் கலாச்சாரப் பின்புல மனிதர்கள் ஒன்றுகூடி,
“பீர்ல பண்டிகை” அசைதுல் தாளத்திற்கு
அடியெடுத்து வைத்த காற்சிலம்பின் ஒலி,
இன்னும் காதுகளில் மாறி மாறி ஒலிக்கின்றது!

“அரியணை ஏறிய வெறுப்பை”த் தரையிறக்கி,
ஊரெல்லையில் தூக்கிலிட்ட
மண்ணின் மைந்தர்களின் சமூகமே
எங்கள் ஊர்!

ஊர் என்றால்—
“உகாதி பச்சடி, ஈத் சேமியா”வின் கலவை போன்ற,
கள்ளங்கபடமற்ற மண்ணின் மைந்தர்களின்
முகத்தில் விரிகிற புன்னகைப் பூ!

ஊர் என்றால்—
மல்லம்மா அத்தை பாசமாக ராக்கி கட்டியபோது,
அப்பாவின் உதட்டில் மலர்ந்த நந்திவர்த்தனப் பூ!

ஊர் என்றால்—
எப்போதும் வற்றாத இதய ஏரி நிறைந்து,
வார்த்தைகளில் பொங்குகிற “மமதையின் மயக்கம்”!

சுதீர்க்கக் காத்திருப்புக்குப் பின்
ஊர் என்னை அழைத்தது;
நான் இப்போது
பாலைவனத் தேசத்திலிருந்து பறந்து செல்வதற்கு,
முளைத்திருக்கும் ஆசை இறக்கைகளை
ஆர்வமாகத் தடவிக்கொண்டிருக்கும்
அறுபது நாள் விருந்தாளி!

நான் ஊரை மறந்த அந்நியன்,
ஊரை விட்டுவிட்ட “பரதேசி”…
ஆனால், ஊர் மட்டும் என்னை மறக்காத
பெற்றெடுத்த தாய்.

திருவை. மு. இரா. மொழியாக்கக்கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

Related posts

உயிர்ப்பு

அறிவெழுச்சி: 14

ஞான நூல்கள் – 26 & 27