Home அறிவியல்ஏஐ உலகில் சீனாவின் ஏற்றம்!

ஏஐ உலகில் சீனாவின் ஏற்றம்!

by Arul Kumaran
0 comments

தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி!

2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் கே ஜீ, கூகுளின் DeepMind உருவாக்கிய AlphaGo எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) செயலியுடன் மோதினார். இது வெறும் விளையாட்டல்ல; மனித மூளைக்கும் இயந்திர மூளைக்கும் இடையே ஒரு புரட்சிகர சவால். மூன்று போட்டிகளிலும் AlphaGo வென்றபோது, கே ஜீயின் கண்ணீர் 280 மில்லியன் சீன பார்வையாளர்களின் இதயத்தை உலுக்கியது. அந்தத் தோல்வி ஒரு விளையாட்டோடு முடிந்த கதையல்ல; சீனாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை திருப்பிப் போட்ட ஒரு தொடக்கமாக அமைந்தது.

அந்தத் தருணம் சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்தது. இயந்திரம் மனிதனை வென்றது என்பது வெறும் தொழில்நுட்ப தோல்வி அல்ல; அது தேசிய பெருமையை இடறியது. அதே ஆண்டு ஜூலையில், சீன அரசு “புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு வளர்ச்சித் திட்டம்” (New Generation Artificial Intelligence Development Plan) எனும் பெரும் திட்டத்தை அறிவித்தது. 2030இல் உலகின் AI தலைமையாக மாற வேண்டும் என்பது அவர்களின் கனவு. இந்தியாவில் நாம் சீன பொருட்களை மலிவு விலை, குறைந்த தரம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் வேர்களை மண்ணில் ஆழமாக இறக்கிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த சில ஆண்டுகளில், சீனாவின் AI வளர்ச்சி உலகின் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்தது. உள்ளே, அவர்கள் ஒரு புயலை உருவாக்கிக் கொண்டிருந்தனர். Baidu, Alibaba, Tencent போன்ற பெரு நிறுவனங்கள் கோடிகளை முதலீடு செய்து, AI ஆராய்ச்சி மையங்களை எழுப்பின. 2023இல் DeepSeek எனும் தொடக்க நிறுவனம் தோன்றி உலகை திகைக்க வைத்தது. அவர்களின் R1 மாதிரி, OpenAIயின் மிக மேம்பட்ட மாதிரிகளுக்கு இணையாக விளங்கியது, ஆனால் வெறும் 6 மில்லியன் டாலர் செலவில், பல்லாயிரம் GPUகளுக்கு பதிலாக 2,048 GPUகளை மட்டுமே பயன்படுத்தி. இது அமெரிக்க மட்டுமல்லாமல் உலகையே சீனா பக்கம் திருப்பியது. சீனா மலிவு பொருட்களின் நாடு என்னும் பெயரைத்தாண்டி; அது தொழில்நுட்ப புரட்சியின் மையமாக மாறியிருந்தது.

சீனாவின் ஓப்பன் சோர்ஸ் தந்திரம்: “Scorched Earth” வியூகம்

ஒரு போர்க்களத்தில் எதிரிக்கு எதுவும் கிடைக்காமல் எல்லாவற்றையும் எரித்து விடுவது “Scorched Earth” எனும் பழைய தந்திரம். AI உலகில் சீனா இதைப் பின்பற்றுகிறது, ஆனால் ஒரு திருப்பம்; அவர்கள் அழிப்பதில்லை, தங்கள் சக்திவாய்ந்த ஆயுதங்களை இலவசமாக வழங்குகிறார்கள்! Meta போன்ற நிறுவனங்கள் கட்டண மாதிரிகளை சீர்குலைக்க கட்டற்ற நிரலாக (Open-Source) AIஐ வெளியிட்டது போல, சீனாவும் இதைப் பயன்படுத்தி உலக தொழில்நுட்ப அரங்கை மாற்றுகிறது. DeepSeek R1 போன்ற இலவச மாதிரிகளை வெள்ளமாக பாய்ச்சி, மேற்கத்திய கட்டண ச்சுவர்களை (Paywalls) உடைக்கின்றனர். மூடிய மாதிரிக்கு பணம் செலுத்த வேண்டிய அவசியம் என்ன, இலவசமாகவே சமமான சக்தி கிடைக்கும்போது?

சீனா ஏன் இந்த வழியை ஏன் எடுத்தது? இது வெறும் பெருந்தன்மை அல்ல. கட்டற்ற எடுத்தத AI, அமெரிக்க தடைகளை மீற ஒரு வழியாக அமைகிறது. அவர்கள் மாதிரிகள் திறந்திருக்கும்போது, உலக நிரலாளர்கள் (Developers) அவற்றை மாற்று வன்பொருளில் மேம்படுத்த முடியும், Nvidia போன்ற கட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சார்ந்திருப்பது குறைகிறது. இது ஒரு புத்திசாலித்தனமான பொருளாதார விளையாட்டு—உலக விநியோக சங்கிலியின் பலவீனங்களை பலமாக மாற்றுவது. இது உங்கள் வீட்டு அடித்தளத்தை உலகத்துக்கு திறந்து வைப்பது போல, ஒவ்வொரு பங்களிப்பும் உங்கள் கட்டடத்தை உயர வைக்கிறது.

சீனாவுக்கும் உலகத்துக்கும் பலன்கள்: பகிர்ந்த புரட்சி

சீனாவுக்கு இந்த திறந்த மூல வியூகம் பெரும் பலன்களை தருகிறது. இது தடைகளை உடைப்பது மட்டுமல்ல; சந்தை சீர்குலைவு (Market Disruption) மற்றும் மென்மையான அதிகாரம் (Soft Power) பற்றியது. இலவச AI கருவிகள் மூலம், அமெரிக்க பெரு நிறுவனங்களின் டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புக்கு எதிரான சவால். DeepSeek வெற்றி, அமெரிக்க பங்குகளை வீழ்ச்சியடையச் செய்தது, முதலீட்டாளர்கள் விலையுயர்ந்த மூடிய மாதிரிகளை கேள்விக்குள்ளாக்கினர். பொருளாதாரத்தை தாண்டி, சீனா உலக மரியாதையை பெறுகிறது, தொழில்நுட்ப ஜனநாயகத்தில் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

உலகமும் பயனடைகிறது. குறைந்த வள நாடுகள், மேற்கத்திய மாதிரிகளின் பெரும் விலையின்றி மேம்பட்ட AIஐ அணுகுகின்றன. கல்வி நிறுவனங்கள், சிறு வணிகங்கள் புதுமை செய்ய செயலிகளைப் பெறுகின்றன, டிஜிட்டல் பிளவை (Digital Divide) குறைக்கின்றன. கட்டற்ற நிரல்கள் AI உலக ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது, முன்னேற்றத்தை விரைவாக்குகிறது. இது அனைவருக்கும் வெற்றி நிலை—சீனா செல்வாக்கை பெறுகிறது, உலக AI அட்டவணையில் இடம் பெறுகிறது. ஆனால் ஒரு பிடிப்பு: இந்த தாராளம் எப்போதும் தொடருமா? சீனா தனது இலக்குகளை அடைந்தால், கட்டுப்பாடுகளை இறுக்கலாம் என சிலர் ஊகிக்கின்றனர்.

மாற்றத்தின் பின்னணி என்ன?

இந்த மாற்றத்திற்கு முதல் காரணம், அரசின் மூலோபாய திட்டமிடல் (Strategic Planning). 2017 திட்டம் மட்டுமல்ல, தேசிய கணினி சக்தி கட்டமைப்பு (National Computing Power Grid) போன்ற உள்கட்டமைப்புகள் AI நிறுவனங்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்தன. அமெரிக்காவின் தடைகள், எதிர்விளைவாக, சீனாவை மேலும் துரிதப்படுத்தின. 2022 முதல் Nvidia சிப்புகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், சீன நிறுவனங்களை சொந்த தொழில்நுட்பங்களை உருவாக்கத் தூண்டின. Huawei சொந்த AI சிப்புகளை உருவாக்கி தடைகளை மீறியது. இது புயலில் படகை வலுப்படுத்துவது போல—அவர்கள் புயலை எதிர்கொண்டு மேலும் வலுவடைந்தனர்.

இன்னொரு பெரிய காரணம், அரசியல் ஸ்திரத்தன்மை (Political Stability). சீனாவில் ஒரே ஆட்சி, ஒரே தலைமை. பதவி இழப்பு பயம் இல்லை. நாடு அவர்களுடையது; அதன் வளர்ச்சி அவர்களின் வளர்ச்சி. இது நீண்ட கால திட்டங்களையும் பெரு முதலீடுகளையும் சாத்தியமாக்குகிறது. இந்தியா போன்ற பல நாடுகளில் தேர்தல் அரசியல், பதவி மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அரசியல்வாதிகள் பெரும்பாலும் சொந்த நலனையே முன்னிறுத்துகின்றனர். சீனாவில் நாடு ஒரு குடும்பமாக பார்க்கப்படுகிறது; அதை முன்னேற்றுவது அவர்களின் பெருமை.

சீனாவின் AI தயாரிப்புகள்:

சீனாவின் AI உலகம் வெறும் திட்டங்கள் அல்ல; புதுமையின் பூந்தோட்டம். ஒவ்வொரு மாதிரியும் ஒரு கதை சொல்கிறது. பார்க்கலாமா?

  • DeepSeek R1: 2023இல் பிறந்தது, Liang Wenfeng உருவாக்கியது. OpenAIயின் சிறந்த மாதிரிகளுக்கு இணையாக, வெறும் 6 மில்லியன் டாலரில், 2,048 GPUகளுடன் உருவாக்கப்பட்டது. பகுத்தறிவு, குறியீட்டு மொழி (Coding) திறனில் சிறந்தது. கட்டற்ற மூல வெளியீடு உலக சந்தைகளை அதிரவைத்தது.
  • Alibabaவின் Qwen தொடர் (Qwen 3, Qwen 2.5): “கட்டற்ற மூல அரசர்” என பெயர் பெற்றது, GPT-4 Turboவுடன் போட்டியிடுகிறது. பல தளங்களில் பொருந்தக்கூடிய தன்மை (Adaptability) அதன் பலம்.
  • Manus AI: 2025இல் தோன்றியது, வெறும் உரையாடி அல்ல, தன்னியல்பாக செயல்படுத்தும் திறன் கொண்டது (Autonomous Executor). விடுமுறை திட்டமிடல் முதல் குறியீடு எழுதுதல் வரை பலவற்றை தானாகவே செய்துவிடுகிறது.
  • Baiduவின் ERNIE தொடர் (ERNIE Bot, ERNIE 4.5): தேடல், தானியக்க ஓட்டம் (Autonomous Driving) மீது கவனம். பல்முனைத் திறன்கள் (Multimodal Capabilities) என பல அன்றாட தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன.
  • Tencentவின் Hunyuan மற்றும் HunyuanDiT: WeChat பயனர் தளத்துடன், சமூக ஊடகம், கேமிங் பணிகளில் சிறந்தது. HunyuanDiT உரை-பட பரவல் மாற்றி (Text-to-Image Diffusion Transformer), படைப்பு துறைகளை மேம்படுத்துகிறது.
  • Moonவின் Dark Side Kimi (k1.5 பல்முனை சிந்தனை மாதிரி): 2025இல் வெளியானது, உரை, படம், ஆடியோவை பதப்படுத்தி பல்முனை பகுத்தறிவில் (Multimodal Reasoning) முன்னோடி.
  • StepFunவின் பல்முனை மாதிரிகள்: Tencent ஆதரவுடன், உரை, வீடியோ, ஆடியோவை கையாள்கிறது. ஆடியோ, இசை உருவாக்கத்தில் புதிய திசைகளை ஆராய்கிறது.
  • iFlytekவின் Spark 4.0 Turbo: குரல் அடையாளத்தில் (Voice Recognition) நிபுணத்துவம், கட்டற்ற புதுமையுடன் சிறந்த அளவுகோல்களில வெளிப்படுத்துகிறது.
  • Huaweiவின் Ascend AI சிப்புகள்: வன்பொருள் புதுமை (Hardware Innovation), Nvidiaக்கு மாற்றாக, தொழில்நுட்ப சுயாட்சியை (Technological Independence) ஆதரிக்கிறது.

உரை உருவாக்கத்தில் பரவல் மாதிரிகள்: சீனாவின் முன்னோடி முயற்சி

சீனாவின் தனித்துவ பங்களிப்பு, பட உருவாக்கத்திற்கு பயன்படும் பரவல் மாதிரிகளை (Diffusion Models) உரை உருவாக்கத்திற்கு (Text Generation) பயன்படுத்தியது. பரவல் மாதிரிகள், தரவுகளுக்கு தேவையில்லாத இரைச்சலைச் சேர்த்து, அதை மீட்டெடுக்க கற்றுக்கொள்வதன் மூலம் செயல்படுகின்றன, அதாவது அரிசியில் உமி கலந்து மீண்டும் பிரித்தெடுப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்! 2023இல் Tong Wu குழு, NeurIPS மாநாட்டில் AR-Diffusionஐ அறிமுகப்படுத்தியது. இது உரை உருவாக்கத்தை 100 முதல் 600 மடங்கு வேகமாக்குகிறது, இயற்கை மொழி ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. இது படங்களுக்கு அப்பால் உரை துறைக்கு பரவல் தொழில்நுட்பத்தை விரிவாக்கிய முன்னோடி முயற்சி.

சீனாவின் AI முன்னேற்ற படிப்பினைகள்

சீனாவின் சமீபத்திய AI முன்னேற்றங்கள் பல முக்கிய புதுமைகளை தருகின்றன: – அளவில் திறமை (Efficiency in Scale): DeepSeek R1, பில்லியன் செலவுகள் இல்லாமல் உலகத் தர AI சாத்தியம் என நிரூபிக்கிறது. – பல்முனை தேர்ச்சி (Multimodal Mastery): Kimi k1.5, StepFun மாதிரிகள் உரை, படம், ஆடியோவை ஒருங்கிணைக்கின்றன. – தானியங்கு எல்லை (Automation Frontier): Manus AI, உரையாடலில் இருந்து செயல்படக்கூடிய முடிவுகளுக்கு மாற்றுகிறது. – உரைக்கான பரவல் (Diffusion for Text): AR-Diffusion, அடிப்படை AI முறைகளில் சீனாவின் புதுமை திறனை காட்டுகிறது. – கட்டற்ற மூல தாக்கம் (Open-Source Impact): Qwen, ERNIE மாதிரிகள் AIஐ ஜனநாயகமாக்குகின்றன.

நமக்கான பாடம்: கட்டற்ற மூல அலையை ஏற்றல்

இந்த டிஜிட்டல் சதுரங்கம் நமக்கு என்ன சொல்கிறது? சீனாவின் கட்டற்ற மூல உத்தி ஒரு எச்சரிக்கை மணி. புதுமை கட்டண சுவர்களுக்குப் பின்னால் பூட்டப்பட வேண்டியதில்லை. இந்தியா, தனது பெரிய தொழில்நுட்ப திறமை குழுவுடன் (Tech Talent Pool), இதை ஏற்று, பெரு முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சியை விரைவாக்கலாம். DeepSeek, Qwen மாதிரிகளை பயன்படுத்துவதன் மூலம், இந்திய தொடக்க நிறுவனங்கள் (Startups) மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த செலவில் உள்ளூர் தீர்வுகளை உருவாக்க முடியும். மிக முக்கியமாக, இந்தியா AIஐ தேசிய பணியாக (National Mission) முன்னுரிமைப்படுத்த வேண்டும், சீனாவைப் போலவே அரசு ஆதரவுடன் தனியார் புதுமையை இணைக்க வேண்டும். நாம் செயல்படாவிட்டால், மற்றவர்களின் தொழில்நுட்பத்தை வெறுமனே பயன்படுத்துபவர்களாக மாறும் அபாயம் உள்ளது, நமது எதிர்காலத்தை உருவாக்குபவர்களாக அல்ல. இது ஒரு பந்தயம்; சீனா முன்னால் ஓடுகிறது, நாம் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நமது தொழில்நுட்ப திறமையை (Tech Talent) பயன்படுத்தி, நமது பாதையை உருவாக்க வேண்டிய நேரம் இது.

சவாலும் வாய்ப்பும்

சீனாவின் AI புரட்சி ஒரு பெரிய கண்ணாடி போல—அது நமது பலவீனங்களை காட்டுகிறது, ஆனால் நமது சாத்தியங்களையும் சுட்டிக்காட்டுகிறது. அவர்களின் கட்டற்ற மூல மாதிரிகள் (Open-Source Models) எல்லாருக்கும் இலவசமாக கிடைக்கின்றன, ஒரு படிக்கட்டாக அமையலாம். ஆனால், இது நம்மை வெறும் பயனராக முடக்கிவிடக் கூடாது; மாறாக, தூண்டி எழுப்ப வேண்டும். சீனாவின் பயணம் ஒரு பாடம்—மலிவு விலையிலிருந்து முன்னோடியாக மாற முடியும், ஆனால் அதற்கு மூலோபாய திட்டமிடல் (Strategic Planning), முதலீடு, அர்ப்பணிப்பு வேண்டும். இந்தியாவின் ஜனநாயக பலத்துடன், நாமும் ஒரு தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கலாம். போட்டியை உந்துதலாக மாற்றி, ஒத்துழைப்பின் வழியே முன்னேறலாம. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இப்போது நாம் அடியெடுத்து ஆரம்பிக்க வேண்டும்.

Author

You may also like

Leave a Comment