Home கவிதைசப்தக்கோர்வை..

சப்தக்கோர்வை..

by விமலன், Vimalan
0 comments

திசையின் தூரத்திலிருந்து
சப்தித்துக்கொண்டேயிருக்கிறார் அவர்
காட்டுப்பறவையின் முரட்டுக்குரல் போல
எதை நோக்கியது அவர் சப்தம்
சப்தத்தின் உட்பொதிவு யாது
எழுதித்தந்திருக்கவில்லை அவர்

போவோர் வருவோர் அக்கம் பக்கம்
தம்மை நோக்கியே சப்தம் என ஊன்றி
அவரைத் தடுத்தாட்கொள்ளவோ
ஆற்றுப்படுத்தவோ யாருமற்றங்கு

தயக்கத்தை முன் விரித்துப் பின் செல்கிறேன்
வீட்டு நடையிலிருந்து வீதியிறங்கி வருகிறார்
அருகில் வந்து காதருகே விஷயம் கசிகிறார்
கோவிலில் அன்னதானமாமே வாங்கிக்கொடு என்கிறார்
வெற்று வயிற்றின் ஆரவாரக்கூச்சல்

சரி உணவு வாங்கி வருகிறேன்
என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்வேன் நான்
என் தந்தை வயதிலிருப்பவரைப் பார்த்து.

Author

  • எழுத்தாளர், விருது நகரில் வசிக்கிறார். இதுவரை ஆறு சிறுகதைத்தொகுப்புகளும், இரண்டு கவிதைத்தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment