Home கவிதைதிருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 17

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 17

0 comments
This entry is part 22 of 22 in the series திருவை மு.இரா. கவிதைகள்

தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா

நான்கு வயது பிறை நிலா

அவள் எங்கள் வீட்டு வானில் பூத்த
நான்கு வயது பிறை நிலா
அதனாலேயே அவள் உதடுகள் அரைநிலா வடிவில்
மலரும்போதெல்லாம்,

சிரிப்பு வெண்ணிலாப் பொலிவுக்காக
வீடே கைகூப்பி வேண்டிக்கொள்ளும்

அவள் எங்கள் வீட்டு முற்றத்தில் பூத்த முதல் மலர்
எங்கள் வறண்டுபோன இதயங்களில் முளைத்தெழுந்து
மனதில் மந்தாரப் பரிமளத்தைப் பூசுகிறாள்

பொழுதெல்லாம் திரிந்து களைத்து வீட்டை அடைந்ததும்
“சோர்வு தூசி படிந்த” எங்கள் முகங்களை நன்குணர்ந்து
சிறிதுபோல சிரிப்பைப் பொழிந்து கழுவிவிடுவாள்

விண்ணில் விண்மீன்களை வினாவிக்கொண்டிருப்பாள்
மண்ணோடு விளையாடிப் பரவசமடைவாள்

அம்மம்மாவின் சேலை முந்தானையை தலை நிறைய
சுற்றிக்கொண்டு
கால்களை நீட்டி வளைத்து
நிறைவேறா வேண்டுதல்களைக் கைகூப்பி ஓதுகையில்
மனம் தன்வயமாகி உருகி அவள் சின்னஞ்சிறு பாதங்களை
ஆசைதீரக் கொஞ்சிக்கொண்டிருக்கும்

சுவரில் அவள் கிறுக்கிய வெறும் கோட்டுருவங்கள்
திட்டினால் முகஞ்சுளித்து உப்பும் கன்னங்கள்
சின்ன சின்ன அடிவைத்து மடியில் சாய்ந்து
தடுமாறும் சொற்களில் நூறு கதைகள்
எல்லாம் அருமையானவை அபூர்வமானவை

ஒரு காலத்தில் நாங்களும் இயந்திரங்களே
அவள் வருகைக்குப் பின்பே மீண்டும் சுவாசிக்கிறோம்
காலம் புதைத்த எங்கள் பால்ய நினைவுகளை
அவள் குறும்புகளிலிருந்தே
கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டியெடுக்கிறோம்

உண்மையில் அவள் மருமகளே அல்ல
எங்கள் தங்கை எங்களுக்களித்த மற்றுமொரு தாய்.

திருவை மு.இரா. கவிதைகள்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 16

Author

  • மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment