வழக்கத்திற்கு மாறாக
முகம் வாடி அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சி
கூம்பிக்கிடக்கும் அல்லியொன்று
வாடித் தளர்ந்துமிருப்பது போல்
சற்றே தலை சாய்த்து பார்வையை
நிலத்தில் சரிய விட்டிருக்கிறாள்
கனலும் பெருமூச்செறிந்து
ஆறுதலுக்குத் தவிக்கிறாள்.
அதிரும் அமைதியை
பொறுக்கவியலாத பேத்தி
மெல்ல நெருங்கி வருகிறாள்
‘கவுந்த கப்பலையெல்லாம் நிமுத்திரலாம்’
என குறும்பாய்
நாடி தாங்கிக்கொஞ்சுகிறாள் நல்லாச்சியை
‘விலையுள்ளவை ஆயிற்றே
விழியிற் பிறக்கும் முத்துகளை
வீணாக்கலாமா’
வினவியபடி விழிநீர் துடைத்தவளை
அள்ளி மடியிருத்துகிறாள் இராஜமாதா
ஆதுரத்துடன் முதுகு வருடுகிறாள் இளவரசி
சுயநலம் துரோகம் மோசடி உள்ளரசியல் என
இற்றுப்போன இழைகளால்
வலை பின்னும் சுற்றமெலாம்
தன் சதிக்குள் தானே அகப்பட்டுக்கொள்ளும்
செய்தார் செய்த வினை கொய்வார்
அம்பலப்பட்டுத் தலை குனிவார்
என்பதுதானே விதியின் நியதி
புன்மதியாளர்க்கு இன்மதி கிட்டுவதேது
எண்ணித்தெளிகிறாள் பெரியவள்
வருடி வருடி கவலையையெல்லாம்
இறக்குகிறாள் சின்னவள்
பேத்தியின் இளந்தோள்களில் முகம் புதைத்து
துண்டுதுண்டாய் உடையும் துயரத்தை
பனிக்கட்டியாய்க்கரையும் பச்சாதாபத்தை
அடித்துச்செல்லப்படும் ஆதங்கங்களை
காற்றில் தூசாய்க்கலக்கும் கவலைகளை
யாரோ போல்
வேடிக்கை பார்க்கிறாள்
கனத்தையெல்லாம் இறக்கி விட்டு
லேசான மனதுடன் புன்னகைக்கிறாள் நல்லாச்சி
வளையல் கலகலக்கும் கரங்களால்
இன்னும்
ஆறுதலளித்துக்கொண்டுதானிருக்கிறாள் பேத்தி.