Home தொடர்மருத்துவர் பக்கம் -15: சுய மருத்துவம்

மருத்துவர் பக்கம் -15: சுய மருத்துவம்

by Farooq Abdullah
0 comments

உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கை
சமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று, மருந்துகள் மற்றும் பிசியோதெரபி மூலம் நலம் பெற்றவர். தற்போது ரத்த உறைதலைத் தடுக்கும் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையுடனும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளுடனும் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

சமீபகாலமாக அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்படுவதாகக் கூறினார். வழக்கமாக குளிர்காலத்தில் அவருக்கு ஏற்படும் சுவாசப் பாதை அழற்சிக்கு (Pulmonary issues), இந்த முறை மருத்துவரின் ஆலோசனையின்றித் தனது தோழியின் பரிந்துரையின் பேரில் ‘ஆடாதோடை மணப்பாகு‘ என்ற சித்த மருந்தைச் சில மாதங்களாகச் சுய விருப்பத்தின் பேரில் உட்கொண்டு வந்துள்ளார்.

ஏன் இந்த எச்சரிக்கை?
ஆடாதோடை (Malabar Nut) சுவாச நோய்களுக்குச் சிறந்த மருந்தாகச் சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. ஆனால், அதை முறையாகப் பயின்ற சித்த மருத்துவரின் கண்காணிப்பின்றி உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக, நவீன கால மருந்துகளுடன் (Allopathy) சேர்த்து எடுக்கும்போது அது ‘மருந்துகளுக்கு இடையிலான வினை‘ (Drug-to-Drug Interaction) பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஆடாதோடை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி (எ.கா: PubMed ஆய்வு), அது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது:

ரத்த உறைதல் பாதிப்பு: ஆஸ்பிரின் போன்ற ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளின் செயல்பாட்டை இது தடுக்கலாம் அல்லது ரத்த உறைதல் தன்மையை (Clotting tendency) அதிகரிக்கலாம்.

சர்க்கரை அளவு: ரத்தத்தில் சர்க்கரை அளவை எதிர்பாராத விதமாகக் குறைக்கலாம்.

கருப்பை பாதிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் இதை உட்கொண்டால் கருப்பை சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தலைசுற்றலுக்கும் இதற்குமான தொடர்பு என்ன?
இந்தச் சகோதரிக்கு ஏற்பட்ட தலைசுற்றல், அவர் உட்கொண்ட ஆடாதோடை மணப்பாகுவினால் ஆஸ்பிரின் மருந்தின் வீரியம் குறைந்து, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தற்காலிகத் தடையை (Transient Ischemic Attack – TIA) ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாகவே அவர் மீண்டும் நரம்பியல் நிபுணரிடம் (Neurologist) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மக்களுக்கான வேண்டுகோள்:
“நாட்டு மருந்துக்கு பக்கவிளைவுகள் இல்லை” என்ற தவறான எண்ணத்தில் ஆயுஷ் (AYUSH) மருந்துகளைச் சுயமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவும், தன்மையும் உண்டு.

குறிப்பாகப் பின்வரும் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்:

இதய பாதிப்பு ஏற்பட்டு ஸ்டெண்ட் (Stent) வைத்திருப்பவர்கள்.

பக்கவாதம் (Stroke) ஏற்பட்டு மீண்டவர்கள்.

பைபாஸ் சிகிச்சை மற்றும் வால்வு மாற்று சிகிச்சை செய்தவர்கள்.

DVT அல்லது நுரையீரல் ரத்த நாளக் கட்டி பாதிப்பு உள்ளவர்கள்.

நீங்கள் Aspirin, Clopidogrel, Warfarin, Rivaroxaban போன்ற ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர் என்றால், எந்தவொரு கூடுதல் மருந்தையும் (சித்த/ஆயுர்வேத/ஹோமியோபதி) எடுக்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது அவசியம்.

கவனம் முக்கியம்; அலட்சியம் ஆபத்தானது!

Author

You may also like

Leave a Comment