வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இன்பமெனக் கொண்டிடும் இன்று” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.
உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:
அன்பால் அகிலத்தை ஆளலாம் அன்போடு
முன்பே முறுவலித்து முந்துக! – என்றென்றும்
பொன்னான நட்பினைப் போற்றிப் புகழுமனம்
இன்பமெனக் கொண்டிடும் இன்று.
இனி, தெரிவு பெற்ற வெண்பாக்களும் கவிதைகளும்.
சின்னக்கண்ணன்:
வானத்துச் சந்திரனும் வண்ணமாய்க் காயுதென
ஆனபடி வஞ்சியும் அன்றுகொண்ட ஊடலும்
நின்றிருக்கும் வண்ணமுகம் செம்மையாய் நேர்ந்ததை
இன்பமெனக் கொண்டிடும் இன்று
மாலா மாதவன்:
எண்ணத்தில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்
வண்ணமாய் வாழ்வை வரைந்துவிடும் – திண்ணையது
என்னே சுகமென் றிருந்தமர்ந்த பேச்சைமட்டும்
இன்பமெனக் கொண்டிடும்! இன்று!
இப்னு ஹம்துன்:
ஒன்றும் புரியா வயதில் உளமெல்லாம்
என்றுமே யாவருக்கும் எல்லாமும் – என்றிருக்கும்
சென்றுவிட்ட காலத்தைச் சிந்தையில் கண்டுவர
இன்பமெனக் கொண்டிடும் இன்று.
கண்மணி பாண்டியன்:
கணினியை மறந்து
கைபேசியை துறந்து
நான்கு சுவற்றை கடந்து
காற்று வெளியில் நடந்து
இயற்கையில் கலந்து
மனமும் உடலும் தெளிந்து
இன்பமெனக் கொண்டிடும் இன்று.
ஹேமா செந்தில்:
கள்ளங்கபடமில்லா நட்பு
எள்ளளவும் வினயமில்லா பால்ய நட்பு
பள்ளியில் கனிந்த நட்பு
உள்ளம் துழாவிய நட்பு
வெள்ளந்தியான நட்பு அது..
துள்ளி விளையாடிய காலம்
எள்ளி நகையாடிய காலம்
மீட்டெடுக்க முடியாது-ஆயினும்
மீண்டும் மீண்டும் வருடும் சுகமது..
நினைக்க நினைக்க நன்று
நனைந்தோம் நட்பு மழையில் அன்று
மனமாரக் கொண்டாடிய ஒன்று
இன்பமெனக் கொண்டிடும் இன்று.
வென்றவர்களுக்குப் பாராட்டுகளும், கலந்து கொண்டவர்களுக்கு அடுத்த முயற்சியில் வெல்ல வாழ்த்துகளும்.