சலனங்கள் இருப்பதுதான் வாழ்வில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு என அந்தக்கொற்றலை ஆற்றில் சற்றே உள்வாங்கி நீராடிக்கொண்டிருந்த சித்திரமாயன் நினைத்தான்.

சுக்ல பக்ஷம் பதின்மூன்று நாட்கள் சென்று பதினான்காம் நாள், மறுநாள் பௌர்ணமி ஆனதாலோ என்னவோ, ஓரளவு வானில் முழு உருப்பெற்றிருந்த சந்திரன் ஸ்திரமான இடத்தில் நின்றிருப்பது போலத் தோன்றினாலும், அதன் பிரதிபிம்பம் ஆற்று நீரில் பட்டு மெல்லிய காற்றின் சலனத்தால் சற்றே கலங்கலாகவும் தெரிந்தது அவனுக்கு.

கொற்றலை ஆறு சற்றே மென்குரலில் சலசலத்துக்கொண்டிருக்க, அந்த இசைக்கு எசப்பாட்டு பாடுவது போலக் கரையோரம் இருந்த பெயர் தெரியாப் பூச்சிகள் சத்தமிட்டுக்கொண்டிருந்தன.

கொஞ்சம் பனிக்காலமென்பதால் ஆற்றின் நீர் குளிர்ந்திருந்தாலும் கூட, அதில் மூழ்கி எழுந்த சித்திரமாயனின் மன வெப்பத்தைக் குறைக்க இயலவில்லை.

பிற்காலத்தில் கம்பரால் எழுதப்பட்ட ராமாயணத்தில் சூர்ப்பனகையிடம் சீதையின் அழகைக் கேட்ட ராவணனுக்குச் சந்திரனின் குளிர்ச்சியான கிரணங்கள் நெருப்பின் நடுவே வைக்கப்பட்ட வெள்ளிக் குழம்பைப் போலத் தகித்ததாம்.

அதுபோலத்தான் சித்திரமாயனுக்கும் இருந்தது. இலங்கைச் சக்கரவர்த்தி பட்டது காம வேதனை. சித்திரமாயனுக்கோ எதிரியிடம் தோற்று நாடிழந்தது மறக்க இயலா வேதனை. அதனாலேயே மனதுள் வெப்பத்தில் உடல் கொதித்தது குளிர்ந்த நீரிலும் சந்திரனின் கிரணங்களாலும்.

மறுபடி ஒருமுறை மூழ்கி எழ முயன்ற போது அந்த ஒலியை அவன் செவிகள் கேட்க, சரேலென மறுபடி மூழ்கி வலப்புறம் செல்ல, இரு வேல்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பாய்ந்து ஆற்று நீரில் வீழ்ந்து ‘களக் களக்’ என ஒலி எழுப்பி நீர் சிதற விட்டு வீழ்ந்தன.

குளிப்பதற்கு ஆழம் வேண்டும் என்பதால் ஆற்றில் கொஞ்சம் தூரத்திலேயே சென்றிருந்தான் அவன். எனில் கரையை நோக்கிச் செல்ல அடி எடுத்துப் பார்த்த போது கரையில் கண்ட காட்சியில் கொஞ்சம் உறையத்தான் செய்தான்.

ஏனெனில் கரையில் நிலவொளியில் நிழலுருவங்களாக இரண்டு ஆடவர்கள் ஒரு பெண்ணிடம் வாளால் மோதிக்கொண்டிருப்பது தெரிய, எட்டி நடை போட்டுக் கரையை அடையவும் இரண்டு ஆண்களும் கீழே வீழவும் சரியாக இருந்தது.

வேகமாகச் சென்று அவர்களைப் பார்க்க, உடை சாளுக்கியர் உடையாக இருந்தது. அந்தப் பெண் மெல்லத் திரும்பிச் சென்று கொண்டிருந்தாள்.

வேகமாக நடந்தவண்ணம் “பெண்ணே நில்!” என்று அழைக்க அவள் திரும்பினாள்.

அழகிய சீலை சுற்றியிருந்தாள். கண்களில் மின்னல். இதழில் புன்னகை.

அவள் அருகில் சென்ற சித்திரமாயன், “பெண்ணே நீ யார்? இங்கு எதற்கு வந்தாய்?”.

மென்னகை விரிந்து தாமரையாய் அந்த இரவிலும் அவள் இதழில் மலர்ந்தது.

“நான் யாரா? நான் இங்கு வசிப்பவள். என்னை அறிய வேண்டுமானால் அதோ அந்தக்காட்டிற்குள் வாருங்கள். அதற்கு முன் உடை மாற்றிக்கொள்ளுங்கள். இந்தப் பனி பொல்லாதது” எனச் சொல்லிவிட்டுச் சரேலென வேகநடையில் நடந்து சென்றுவிட்டாள்.

சற்றே திகைத்த சித்திரமாயன் அரையாடை ஈரமாக இருப்பதை அறிந்தவனாய், கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த அவன் குதிரையின் முதுகுப்பையிலிருந்து மாற்றுடை எடுத்து அணிந்து குதிரையின் மீதமர்ந்து காட்டுக்குள் அதை விரட்டினான். என்னதான் அவள் நடந்து சென்றாலும் குதிரையில் அவளைப் பிடித்துவிட முடியும் என நினைத்தவன், காட்டின் ஒற்றையடிப்பாதையில் விரைவாகச் செலுத்திய போதும் கூட அந்தப் பெண்ணைக் கண்டானில்லை.

நெடிதுயர்ந்த புன்னை, வேப்ப, புளிய மரங்கள் இருந்ததால் குதிரையைச் செலுத்திய போது கிரணங்கள் விட்டு விட்டு ஒளி சிந்தினாலும், கூடியவரை இருட்டாகவே இருந்தது. கூடவே அந்தப் பெண்ணையும் காணவில்லை.

ஒற்றையடிப் பாதை மெல்ல மெல்லப் பெரிய பாதையாக மாறிக்கொண்டிருக்க, காற்றைக் கிழித்துக்கொண்டு அவன் செவிகளில் பாய்ந்தது அந்தத் துன்ப கீதம்:

“முன்னவர் வேந்த ரெல்லாம் முனைப்புடன் ஆற்றல் கொண்டே என்றுமே பேசும் வண்ணம் இணையிலாச் சிற்பம் செய்தும் அன்றெலாம் பகைவர் தம்மை ஆழமாய் ஓட விட்டார் இன்றுதான் என்ன ஆச்சு எங்குதான் போச்சு வீரம் சாயுமோ மன்னர் வென்ற தரமுள கீர்த்தி யெல்லாம் பாயுமோ பல்ல வத்தின் பட்டொளி திக்கில் எங்கும் காயுதே நிலவும் வானில் கலங்கியே அங்கு மிங்கும் மாயனைக் காக்க நீயும் வந்திடு தேவி நீயும்”

கீதத்தில் தென்பட்ட குரலொலி குயிலினுடையதா அல்லது சின்னக்கிளியின் மிழற்றலா என அறியாவண்ணம் ஒலி வந்த திசை நோக்கி நடந்த சித்திரமாயன், ஒரு மரத்தின் கீழ் தீப்பந்தம் நடப்பட்டிருக்க அதன் முன் நிழலொளியாய் அவள் நிற்பதைக் கண்டான்.

அவள் நின்ற மரத்தின் பின்னே சற்றுத் தொலைவில் சிறு குடிசை ஒன்றும் அதில் விளக்கும் இருப்பதைக் கண்டான்.

மெல்ல பின்புறம் திரும்பி நின்றிருந்த அவளருகில் சென்று குதிரையிலிருந்து இறங்கி, “பெண்ணே! இப்படி அவதி அவதியென ஓடி வரக் காரணம் என்ன? இந்தச் சோக கீதம் ஏன்?” என்று கேட்டவன் அவள் திரும்பியதும் திகைத்தான்.

ஏனெனில் திரும்பிய பெண்மகள் அவனைக் காப்பாற்றிய வனிதை அல்ல. இவள் வேறு.

ஆனால் இவளை அழகி எனச் சொல்வதும் தவறு. பேரழகி என்றால் சரி.

மேலிருந்து சந்திரனிடமிருந்து வந்த ஒளியெலாம் சேர்த்துச் சிற்பிகள் படைத்த கலைச்சிற்பமாய் மின்னினாள் அவள். வானின் நிலவுப் பக்கம் சென்று கொண்டிருந்த கருமேகம் ஒன்று தொபுக்கெனக் கீழே குதித்து அவள் கூந்தலில் அமர்ந்தது போலக் கார்கூந்தல். முகத்தில் மாலையில்தான் மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போலும். நிலவொளியில் தங்கமெனத் தகதகக்க, அழகாய்ப் பழுத்த மஞ்சள் மாங்கனியின் கதுப்புகளை வைத்தாற்போன்ற கன்னங்கள் இருபுறமும் இருக்க, நாசி சங்குபுஷ்பத்தை நினைவுபடுத்த, கண்களிலோ நாவற்பழச் சலனங்கள். அழகாய் இவள் புருவத்தைப் பார்த்துத்தான் வில் செய்திருப்பார்கள் போலும்! சிவப்பு நிறச் சீலையும் அதற்குப் பொருத்தமாய்க் கச்சும் அணிந்திருந்தாள். அவள் கண்களிலிருந்து விழுந்த நீர் கன்னங்களில் விழுந்ததால் பூரித்து மண்ணில் வீழ்ந்தன.

ஒரு கண நேரத்தில் இவையனைத்தும் பார்த்த அவனிடம், “நான் ஒன்றும் ஓடி வரவில்லையே” எனச் சொன்னாள் அந்தப் பாவை மெல்ல.

“இந்த இரவில் இங்கு என்ன செய்கிறாய் பெண்ணே! அந்தக் குடிசை?”.

“தெய்வத்திற்குப் பூஜை செய்ய மாதா மாதம் உறவினருடன் வருவேன் நான். ஆனால் இன்று பூஜை முடித்து நான் வீரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதுவும் இப்போது பல்லவ நாட்டில் வீரம் ஜோதிடம் பார்த்துத்தான் எழும்பும் போல!”.

நாசூக்காய்ச் சீலையில் கண்களைத் துடைத்துக்கொண்டவள் வெளிறிச் சிரித்தாள்.

“என்ன சொல்கிறாய் பெண்ணே?! நான் யாரென்பது..?”.

“எனக்கும் தெரியும். அங்கு உங்களை எதிர்பார்த்திருப்பவருக்கும் தெரியும். வாருங்கள்” என முன்னால் நடந்த போது அந்தக் குடிலிலிருந்து வெளிப்பட்டவரைப் பார்த்துக் கொஞ்சம் அதிர்ந்தே போனான் சித்திரமாயன்.

ஏனெனில் அங்கிருந்து வந்தவர் அவனது குருநாதர் மகாகவி தண்டி.

“குருநாதரே! தங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை. தங்களைச் சந்திக்கத்தான் ஊருக்குள் செல்லலாம் என இருந்தேன்” எனக் காலில் விழுந்தெழுந்தான் சித்திரமாயன்.

அணைத்து அவனை எழுப்பி குடிலினுள் கூட்டிச் சென்றவர் அமரவைத்து, பின் நின்ற பெண்ணைக் காட்டி, “சித்திரமாயா! இவள் அழகி!”.

“பார்த்தாலே தெரிகிறது குருநாதரே. இவள் பெயர்?”.

சிரித்தார். “இவள் பெயரே அழகிதான். என்னிடம் காவியம் கற்றுக்கொள்ள வந்திருப்பவள்.” என்றவர் முகம் தீவிரமடைந்தது.

“சித்திரமாயா! இன்று காலை ஓலை பார்த்தேன்..”

“ஆசிரியரே! உங்கள் ஆசிகளுக்காக வந்தேனே ஒழிய போர் முடிவுக்காக வரவில்லை. சாளுக்கியன் முன்பு என்னைத் தோற்கடித்திருக்கலாம். இப்போது நடவாத காரியம்..”

“எல்லா விஷயங்களுக்கும் இறையருள் என்பது வேண்டும்..”

“முன்பு இல்லாதது எப்படி இப்போது கிடைக்கும்? நான் சிவபக்தன் தான் ஆசிரியரே. போன போரில் ஏதோ கைவிட்டுவிட்டான்..”

“விரக்தியாகவெல்லாம் பேசாதே. இன்று காலை சோழியிட்ட போது உனக்கு ஜெயம் என்று வந்தது.”

“பிறகு?”

“போர் இரு நாளில் துவங்கிவிடும். இடம் பெருவளநல்லூர். ஏற்கனவே உனது தளபதி படை நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறார். நீ சிறிது கண்ணயர்ந்து வெள்ளெனக் கிளம்பிச் செல்!”

“இல்லை ஆசிரியரே! இப்போதே கிளம்பி காலை சேர்ந்து விடுவேன். ஆசி வழங்குங்கள்” சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி எழுந்தான். பின் பார்த்துக்கொண்டிருந்த அழகியிடம், “பல்லவ வீரம் சோடை போகாது என்பதை நிரூபிக்கிறேன் பெண்ணே!” எனச் சொல்லி வெளியே சென்று புரவி ஏறினான் சித்திரமாயன்.


இரண்டு தினங்கள் கழிந்து மீண்டும் கொற்றலை ஆற்றங்கரையில் குதிரையை நிறுத்தினான் சித்திரமாயன். போர்க்களத்தில் வென்று தளபதியிடம் இதர வேலைகளைச் சொல்லிப் பறந்து புரவியிலேறி எங்கும் நிற்காமல் காற்றில் கடுகி வந்ததில் அவன் முகம், உடையெலாம் தூசு. தோளில் வாட்கீறல்கள். இடது தோள்பட்டையில் ரத்தம் நிற்கச் சின்னக்கட்டு. அதன் மீதும் தூசு.

குதிரையை நிறுத்தி கிரீடத்தை அவிழ்த்து ஆற்றில் கை காலலம்பி மறுபடி கிரீடம் அணிந்து மெல்லக் கரையிலேயே நடந்தான் அவன். அவன் நெற்றிக் கோட்டில் சிந்தனை.

பெருவளநல்லூரில் சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தியனோடு நடந்தது கடுமையான போர்தான். போரின் முடிவில் சாளுக்கியனும் பின்வாங்கி ஓடிவிட்டான் தான். அது பற்றிச் சிந்திப்பது சிறுகதையாக இருக்காது; தொடர்கதையாகிவிடும். ஆனால் போரின் முடிவில் என்ன ஆயிற்று?

நினைவுகளை மேலெழுப்பினான் சித்திரமாயன்.

தெய்வாதீனமாக – அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஈட்டி ஒன்று அவனது தோள் கவசத்தைத் துளைத்து மேல் ரத்தக்காயம் ஏற்படுத்தி நின்ற போதில்… நடந்தது என்ன?

அவன் கொஞ்சம் திரும்பி வலதுகையால் ஈட்டியை எடுத்து கீழே விட்டு வாளை எடுத்துச் சுழற்ற ஆரம்பிக்கையிலேயே, சூழ்ந்த எதிரி வீரர்கள் கீழே ‘சொத் சொத்’தென விழுந்துவிட்ட அதிசயம் என்ன?

நினைக்க நினைக்க நெற்றி நரம்புகள் புடைத்தன. காரணம் அவள்.

இவன்தான் அதைச் செய்தானெனப் பரவி “வெற்றிவேல் வீரவேல்” என எழுந்த கோஷம்..

“ம்.. இந்த வெற்றி எனதில்லை. அவளைச் சந்திக்க வெறியுடன் வந்திருக்கிறேன்” என நினைத்த போதில் கேட்டது சிரிப்பு.

திரும்பினால் மின்னலாய் நின்றிருந்தாள் அவள். முகமெல்லாம் சிரிப்பு. அழகிய பச்சைச் சீலை, கச்சு. கூந்தலில் மல்லிகை.

“என்னையா தேடுகிறாய்?”..

சரேலெனப் பாய்ந்தான் சித்திரமாயன். அவளது கைகளைப் பின்னுக்கிழுக்க நிலை தவறியது போல அவள் கீழே மண்டியிட, அவள் கைகளைப் பின்னால் வைத்துத் தன் இடுப்பிலிருந்த கயிறால் இறுகப் பிணைத்தான் அவன்.

அவள் முகத்தில் சற்றே மாறுதலுடன் புதிர்ப்பார்வை பார்த்தாள்.

“என்ன இது வேந்தே!”

“நீ யார் என்று சொல். அன்றும் என்னைக் காப்பாற்றினாய். இன்றும் என்னைக் காப்பாற்றினாய். எனக்குத் தெரியாதா என்ன? என்னைச் சூழ்ந்தவர்கள் வீழ்ந்தது கவசமிட்டுப் போர்க்களத்திற்கு வந்திருந்த உன் வாளால்தான். பெரிய மாயக்காரி போல இருக்கிறாய். உன்னை அரண்மனைக்கு அழைத்து மரியாதை செய்யத்தான் கயிறு கட்டி என் பிடிக்குள் வைத்திருக்கிறேன்”.

“மன்னா! நீ நன்றி செலுத்த விரும்பும் லட்சணம் வெகு அழகு! நீ அல்லவா என் பிடிக்குள் இருக்கிறாய். நான்தான் தொடர்ந்து கொண்டே இருக்கிறேனே உன்னை!”. கலகலவெனச் சிரித்தவாறே எழுந்து பின்கையை உதற, கயிறுகள் அவிழ்ந்திருந்தன.

“இது எப்படிச் சாத்தியம்? நான் வணங்கும் சிவனின் பாதி உமையா நீ?”.

“இல்லை. சிவன் எனக்கு மாமன் முறை வேண்டும்! மன்னா, நீ என்னை உன் வீட்டிற்கு அழைத்துப்போவது இருக்கட்டும். முதலில் எனக்கொரு வீடு கட்டிக்கொடு!”. சொன்னவள் சிரித்தவண்ணம் அவள் முன்னம் சென்ற பாதையிலே ஓட, தொடர்ந்தால் அதே புன்னை மரம். அங்கு முன் கண்ட அதே அழகிதான். ஆனால் அவனைக் காப்பாற்றியவளைக் காணவில்லை.

அழகியும் அவனைப் பார்க்கவில்லை. மரத்தின் அந்தப்பக்கத்தில் கண்மூடி வணங்கிய வண்ணம் இருந்தாள். அருகில் சென்று பார்க்க, அவள் முன்னம் ஒரு சிற்பத்தின் தலைப்பகுதி… இல்லை அது தானாய் உண்டானது. மேலும் அந்த முகம் அவனைக் காப்பாற்றிய பெண்ணின் வடிவம். அதன் அருகில் அழகி பூஜை செய்த தாமரை மலர்கள்.

அப்போதுதான் கண்திறந்த அழகி, “நீங்களா?.. போரின் முடிவு… என்ன இது தோளில் ரத்தம்?” பேசமுடியாமல் திணறினாள்.

“வெற்றிதான் அழகி. அதுதான் நம்மைச் சந்திக்கப் பறந்தோடி வந்திருக்கிறான் பரமேசுவரவர்மன்” என்றபடி வந்தார் தண்டி மகாகவி.

“இது..”

“அன்னை பவானி. கண்டெடுத்தவள் அழகிதான். அவள் தான் பூஜை செய்து உனக்காக வேண்டி வருகிறாள். இந்தக் கொற்றலை ஆறே பவானி ஆறு என்றுதான் சொல்வார்கள். தவிர பவானிதான் கம்சன் சிறையில் தூக்கி எறிந்த எட்டாவது பெண்குழந்தை மாயாவின் அம்சம் என்று சொல்வார்கள்!”.

கண்மூடி வணங்கினான் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மனான சித்திரமாயன்.

புதிர்களுக்கெல்லாம் விடை தெரிய மனது மலர்ந்தது. புதிரானவளும் அவள், விடையானவளும் அவள் தான்.

ஆசிரியரைப் பணிந்து வணங்கிய சித்திரமாயன், “ஆசிரியரே! முடிசூட்டிக்கொண்டு வந்து இங்கு அன்னைக்குக் கோவில் எழுப்புகிறேன்” என்றவன், தன் அன்புக்குப் புதிதான இளையவளான அழகியை ஏறிட்டான்.

“ஆசிரியர் உன்னையும் அழைத்துக்கொண்டு வருவார் காஞ்சிக்கு அழகி. இப்போது என் வீரம் முன்னோர் பெருமை சொல்வதாக இருக்கிறதல்லவா?” எனக் கேட்க, “அது சரி. ஆனால் மறுபடியும் பெண்ணைத் தானே துரத்தி வந்தீர்கள்” என்று அழகி சிரிக்க, அந்தச் சிரிப்பில் ஆசார்ய தண்டியும் கலந்துகொண்டார்.


பின் குறிப்பு:

  1. பரமேஸ்வர வர்ம பல்லவன் ஆந்திர நாட்டிற்குச் சென்று படை திரட்டித் திரும்பிப் பெருவளநல்லூரில் விக்ரமாதித்யனை வெற்றி கண்டான். பல்லவர் வரலாறு – டாக்டர் மா. ராசமாணிக்கனார் – பக்கம் 132
  • 2. கம்ப ராமாயணம் ஆரண்ய காண்டம்.. மாரீசன் வதைப் படலம்
  • அருகு உறு பாலின் வேலை
    அமுது எலாம் அளைந்து வாரிப்
    பருகின பரந்து பாய்ந்த
    நிலாச் சுடர்ப் பனிமென் கற்றை,
    நெரி உறு புருவச் செங்கண்
    அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
    உருகிய வெள்ளி அள்ளி
    வீசினால் ஒத்தது. அன்றே.
  • 3. சமீபத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் சென்றிருந்தேன். பூஜை செய்பவரைக் கேட்டபோது அம்பாள் சுயம்பு என்றும் அவளுக்கு வெள்ளிக் கவசம் சாற்றி இருக்கிறது என்றும், பின்னால் உள்ள திருவுருவம் சுதைச் சிற்பம் என்றும் கூறினார். தல வரலாறுகளில் தேடிப் பார்த்ததில் – சிறைச்சாலையில் கம்சனைத் திட்டி மறைந்து போகும் மாயாவின் அம்சம் தான் பவானி அம்மன் என்கிறார்கள்.
  • 4. பெரியபாளையம் அருகே ஓடும் ஆறு கொசஸ்தலை என்ற கொற்றலை. அதற்குப் பவானி என நான் கற்பனைப் பெயர் சூட்டினேன்.
  • 5. பரமேஸ்வர பல்லவன் போரில் நாட்டமில்லாதவன். சிற்பக் கலையை வளர்த்தவன். வீரத்திலும் குறைவில்லாதவன். இவனது சிற்பக் கலையின் உன்னதத்திற்குச் சாட்சி காஞ்சிபுரம் வைகுந்தநாதப் பெருமாள் கோவில் சிற்பங்கள்.
  • (இவனையும் மகன் ராஜ சிம்மனையும் வைத்து அழகான சரித்திர நவீனம் புனைந்திருக்கிறார் சாண்டில்யன் அவர்கள். (ராஜ திலகம்)
  • 6. பவானிக்குக் கோவில் கட்டினார் என்பது என் கற்பனை.

Author

You may also like

Leave a Comment