சாளரத்தைத் திறந்தவள்
சன்னமாய்ச் சிரித்தாள்
காத்திருப்பின் ரகசியம்
காற்றில் கலந்த கணம்
உள்ளக் கிளர்ச்சி எல்லாம்
ஊர்வலமாய்ப் போகுது
வெள்ளம் திரண்டது போல்
வெகுளித்தனம் மீறுது
கள்ளத்தனம் எல்லாம்
காணாமல் போனது
கரை கடந்த அன்பு இங்கே
கரம் கோர்க்கப் பார்க்குது
ஒற்றை மலர் தனியே
ஒய்யாரமாய் நின்றது
எட்டிப் பார்த்த அவளை
ஏறெடுத்துப் பார்த்தது
சாய்வது போல் நடித்தது
சாளரத்தை முறைத்தது
வாய் திறந்து சிரித்தவளை
வாய் பிளந்து ரசித்தது
தன்னை விட அழகவளை
தனிப்பூவென நினைத்தது
உள்ளத்தில் நிறைத்தது
உதிரும் வரை நினைத்தது
உணர்வும் உயிரும்
உதிரும் மலருக்குண்டு
உறவும் பகையும்
உணர்ந்தால் நன்று!
Author
-
பிறப்பிடம்: திருநெல்வேலி வசிப்பிடம்: மிச்சிகன், அமெரிக்கா வேலை: அலுவலக மேலாளர் கவிதாயினி , எழுத்தாளர் , இதழாசிரியர், தன்னார்வல தமிழ் ஆசிரியர், நிகழ்வுத் தொகுப்பாளர்/தயாரிப்பாளர், கருத்தரங்கம் / கவியரங்கத் தலைமை, கட்டுரையாளர், பட்டிமன்ற பேச்சாளர்/நடுவர், கதை சொல்லி, ஒருங்கிணைப்பாளர்/நெறியாளர். கதம்பம், தென்றல், முத்துக்கமலம், வளரி, வல்லினச் சிறகுகள், இனிய உதயம், மக்கள் முரசு, தாரகை, நெல்லை டைம்ஸ், ஆனந்தச்சந்திரிகை, ஆக்கம், தமிழ்ப்பல்லவி, கொக்கரக்கோ, சித்திரகுப்தன், அன்புப்பாலம், காற்றுவெளி போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர், இதுவரை எழுதிய நூல்கள்: 21, தொகுத்த நூல்கள்: 17, பங்கேற்ற தொகுப்பு நூல்கள்: 20 "சங்கப்புலவர் விருது", "தங்க மங்கை", "சொல்லின் செல்வி", "பாரதியார் விருது", "சமுதாயச்சிற்பி", "ஈரோடு தமிழன்பன் 80", "சிங்கப்பெண்", "முத்தமிழ்த்திலகம்", "உ.வே.சா. விருது", "உவமைக்கவிஞர் சுரதா விருது", "அருந்தமிழ் தாரகை", "நூலேணி தன்முனை இலக்கிய விருது" உள்ளிட்ட விருதுகளைப்பெற்றிருக்கிறார்.