முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். அன்றாகும் கூற்றாய் அறம் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள்.
சக்தி பிரபா
சுழன்றாடும் இறுமாப்பு
நன்றூறி நிற்கும்
கடையரும் – மண்ணில்
பண்டாடி வழங்கிய
பண்பாடு இல்லாது
திரியும் மடையரும்
திண்டாடி திரியவே
என்றாகிலும் எழும் வினை.
கறைகளைக் களையாது
எங்காகிலும் தப்பிச்
சென்றாலும் – தவறாது
கனன்று கொன்றாடும்.
மன்றாடி நின்றாலும்
தவறென்று தட்டிச் சாடும்
சரசரவென செருக்கு சரிய
மண்மூடி முடங்கி வீழும்
இன்றாகி நின்ற வினைகளுக்கு
அன்றாகும் கூற்றாய் அறம்!
சின்னக்கண்ணன்
கண்ணால் தினம்பேசிக் காதலித்துக் கைவிட்டு
எண்ண நினைக்காமல் ஏந்திழையை விட்டுவிட்டு
நன்றலாமல் இன்னொரு நற்பெண்ணை நாடினாலோ
அன்றாகும் கூற்றாய் அறம்.
ஹேமா செந்தில்
நின்றழிக்கும் நிலைமறந்து குன்றியவை செயினும்
குன்றாப் புகழும் குன்றும்-என்றாயினும்
நன்றல்லன நன்றி மறந்து செயினும்
அன்றாகும் கூற்றாய் அறம்.
இப்னு ஹம்துன்
வென்றுவிட்ட தான்மை வெளிப்படுந் தோரணை
கொன்றொழிக்கும் அன்பெனும் கொள்கைவழி – என்றென்றும்
நன்றி மறந்து நலமழிக்கச் செய்வாரேல்
அன்றாகும் கூற்றாய் அறம்