Home இதழ்கள்இதழ் 13தமிழே அமிழ்தே – 19
This entry is part 19 of 21 in the series தமிழே அமிழ்தே

வெண்பா வகைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்.

1). குறள் வெண்பா.
இரண்டடிகள் கொண்டது.
முதலடியில் நான்கு சீர்களும்
(கடைசி) இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டது. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வருவது. ஈற்றுச் சீர் நாள், காசு, மலர், பிறப்பு ஆகிய ஒன்றில் முடிவது.

சான்று:
எண்ணம் நலமானால் எல்லாம் நலமாகும்
மின்னும் அறிவினும் மேல்

2). அடுத்து, சிந்தியல் வெண்பா என்பது மேற்சொன்ன அதே இலக்கணங்களுடன் மூன்றடியாக வருவது.

சான்று பாடல்:

அன்னையின் சூலதும் ஐயிரண்டு திங்களாம்
பின்னர் மகவின் பெருஞ்சுமை தந்தைக்கோ
இன்பப் பொறுப்பாய் இருப்பு

மூன்றடிகளில், எதுகை அமைய எழுதப்பெறுவது சிந்தியல் வெண்பா.

வெண்பா இலக்கணம்
மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நேர் … போன்ற தளைகள் அமைந்து ஈற்றடி சிந்தடியாக – மூன்று சீர்களும்
1 & 3ஆம் சீர் ஒன்றி மோனை அமைய
நாள் மலர் காசு பிறப்பு வாய்பாட்டில் முடிவது.

3). நேரிசை வெண்பா:
மேற்சொன்ன அதே இலக்கண விதிகளுக்கு உட்பட்டு, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று நான்கடிகளில் வருவது.

சான்று பாடல் :

எவ்விடத்தும் உண்டாம் இயல்பழகு என்றாலும்
செவ்விய நோக்கே சுவைகாணும் – யெளவனப்
பாவென எல்லாமும் பார்வையில்தான் என்றிருக்கும்
ஆகச் சிறந்த அழகு!

4). இன்னிசை வெண்பா:

சுருக்கமாகச் சொன்னால் நான்கடி வெண்பாக்கள் நேரிசை வெண்பாவாக அல்லாத எல்லாமும் இன்னிசை வெண்பா என்கின்றன குறிப்புகள்.
அவை ஒரே எதுகை கொண்டோ, இரண்டு அல்லது மூன்று விகற்பமாகவோ அமையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சான்று பாடல்:

அன்பினை யாரும் அரிதென்(று) உரைத்துவிடார்
என்றாலும் தேடலே என்றாகும் இவ்வுலகில்
என்றும் எவருக்கும் ஏற்புடைய அன்பதுவே
இன்புற வைக்கும் இதம்.

அடுத்து பஃறொடை (பல தொடை) வெண்பா:
நான்கடிகளுக்கு மேல் அமைந்த எல்லா வெண்பாக்களும்.
சிலர் 12 அடிக்கும் மேலே சென்றால் கலிவெண்பா என்று கருதுவர்.

எடுத்துக்காட்டு:

முட்டுதற்குக் கற்பாறை; மூச்சடக்கும் மென்விதையின்
தட்டலில் தாழ்நீக்கும் தற்பிளப்பாய் – வெட்டாமல்
ஊடறுத்து வேதனை உட்கொண்(டு) ஒளிதேடி
ஆடத் துளிர்க்கும் அழகுச் செடியொன்று
காணக் கிடைத்திடும் கானல் வெளியொன்றில்
வானம் வழங்கும் வெளிச்சமும் சற்றே
கருமியின் தானம்போல் கண்டிருந்த நீரும்
உருப்பெற வைத்தே உயர்த்திவிடும் போதில்
உலகெலாம் போற்றும் உவப்பினைச் சாற்றும்
பலவிதம் பெய்திடும் பாராட்டு கண்டும்
அழுதும் தொழுதும் அகமதில் நிற்கும்
விழுதுகள் காணா வலி

இனி,

வெண்பா மட்டுமின்றி தமிழின் நால்வகைப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய இனங்கள் உண்டு.

வெண்பாவின் இனங்களுள் ஒன்றான
வெள்ளொத்தாழிசை
(வெண்+ஒத்த+தாழிசை)
என்பது ஒரே பொருள் மீது மூன்று சிந்தியல் வெண்பாக்களை அடுக்குவது தான். ஒரே பொருள் மீது என்பது அடிப்படை விதி.

அதனபடி அடியேன் எப்போதோ ஆக்கிய
வெள்ளொத்தாழிசை கீழே

அற்புதங்கள் எத்தனையோ ஆகிடக் காணுகிறோம்
பற்பலவும் பூப்பது பாடமெனக் கொண்டுவிடின்
பெற்றதெல்லாம் நல்ல பிறப்பு

சிற்பங்கள் கல்லுக்குள் சிக்கி யிருப்பதைக்
கற்றிட்ட வித்தையால் கண்காண ஓருளியால்
பெற்றிடும் இன்பப் பிறப்பு

கற்பனை யெல்லாம் கவிஞர்தம் சொத்தாக
நற்பயனே உண்டாகும் நல்லவை சொல்லிவரின்
பிற்போதில் ஞானப் பிறப்பு.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 18தமிழே அமிழ்தே – 20 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

You may also like

2 comments

கருணை ப்ரியன் June 29, 2026 - 1:29 pm

வெண்பாவின் பல இனங்களையும் எடுத்துக்காட்டுகளோடு நினைவூட்டிய விதம் சிறப்பு.

இறுதியில் வெள்ளொத்தாழிசை மூலம் மரபின் நயத்தையும் படைப்பின் ஆழத்தையும் உணர வைத்துள்ளீர்கள்.

சிறப்பு மீண்டும் தொடர்க ஆசிரியரே!

Reply
ஊர் நேசன் June 29, 2026 - 1:32 pm

மரபுக் கவிதையின் இலக்கண அழகை அறிய விரும்புவோருக்கு அருமையான வழிகாட்டல்.

வெண்பா வகைகளை இவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் தொகுத்து வழங்கியது மிகப் பயனுள்ளதாக உள்ளது.

Reply

Leave a Comment