Home சிறுகதைஅரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை

அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை

by Iyappan Krishnan
0 comments

தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன்

அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

ஒருநாள் இளைய மகள் தன் அக்காவிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னாள்: “அக்கா, என்னால் ஒரு பூக்கும் மரமாக மாற முடியும். அந்தப் பூக்களை விற்று நாம் பிழைக்கலாம்.”

முதலில் அக்கா நம்பவில்லை. இளையவள் தன் அக்காவிடம் இரண்டு குடம் தண்ணீர் எடுத்து வரச் சொன்னாள். ஒரு குடம் தண்ணீரைத் தன் மேல் ஊற்றச் சொன்னாள். அடுத்த நிமிடம், அவள் ஓர் அழகான சம்பங்கிப் பூக்கள் நிறைந்த மரமாக மாறினாள். அக்கா அந்தப் பூக்களைப் பறித்தவுடன், இரண்டாவது குடம் தண்ணீரை அந்த மரத்தின் மீது ஊற்றினாள். மரம் மீண்டும் பெண்ணாக மாறியது.

பின் இருவரும் சந்தையில் அந்த வாசனை மிகுந்த பூக்களை விற்றுப் பணம் ஈட்டினர். தனித்துவம் கொண்ட வாசத்துடனும் அனைவரையும் கவரக்கூடியதாகவும் அந்தப் பூக்கள் இருந்ததால், பெரும்பாலும் அவற்றைப் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

இப்படியே சில காலம் கழிந்திட, இந்தப் பூக்கள் அரண்மனைக்கும் சென்றன. ஒருநாள் அந்த நாட்டு இளவரசன் இந்தப் பூக்களின் அபூர்வ வாசனையை நுகர்ந்து, அது எங்கிருந்து வருகிறது என்று தேடி வந்தான். மெல்ல மெல்ல பூக்களை விற்கும் பெண்ணை யாருக்கும் தெரியாமல் கண்காணித்து, அந்த ஏழைப் பெண்ணின் ரகசியத்தைக் கண்டறிந்த அவன், அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

இளவரசன் ஆயிற்றே, மறுக்க முடியுமா? திருமணமும் முடிந்தது. இளவரசன் தன் மனைவி மீது அத்தனை பாசத்துடன் இருந்தான். அரண்மனைக்கு வந்த பின்னரும், இளவரசன் அவளை வற்புறுத்தி மரமாக மாறச் சொல்லித் தன் மனைவியின் அழகை ரசித்தான்.

ஆனால், ஒருமுறை இளவரசனின் தங்கை இதைத் திருட்டுத்தனமாகப் பார்த்துவிட்டாள். இளவரசன் இல்லாத ஒரு சமயம், அவனது தங்கை தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை மரமாக மாறச் சொல்லி வற்புறுத்தினாள். மறுத்த அந்தப் பெண்ணைத் துன்புறுத்தினார்கள்.

பயந்துபோன அந்தப் பெண் மரமாக மாறினாள். ஆனால், அங்கிருந்தவர்கள் பொறுப்பற்ற முறையில் மரத்தின் கிளைகளை ஒடித்தனர்; இலைகளைப் பிய்த்தனர்; பூக்களைக் கசக்கினர். மரம் மீண்டும் பெண்ணாக மாற வேண்டிய சமயம் வந்தபோது, அவர்கள் சரியாகத் தண்ணீர் ஊற்றவில்லை. அரைகுறையாகச் செய்த அந்தச் செய்கையால், அவள் முழுமையான பெண்ணாகவும் மாற முடியாமல், மரமாகவும் இருக்க முடியாமல் ஒரு விசித்திரமான உருவத்தைப் பெற்றாள்.

அவளது கைகளும் கால்களும் கிளைகளாகத் தெரிந்தன; உடல் சிதைந்திருந்தது. அவமானத்தால் அவள் அரண்மனையை விட்டு வெளியேறிக் காடுகளிலும் வீதிகளிலும் பிச்சைக்காரியைப் போல அலைந்தாள்.

தன் மனைவியைக் காணாமல் இளவரசன் தேடி அலைந்தான். உடைந்து போய் அவனும் இளைத்துப் பரதேசி போல ஆகிவிட்டான். பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு சத்திரத்தில் உடல்நலம் குன்றி, சிதைந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் கண்டான். அது தன் மனைவிதான் என்று உணர்ந்து கண்ணீர் விட்டான்.

அவளை அரண்மனைக்கு அழைத்து வந்து, மிகுந்த கவனத்துடன் இரண்டு குடம் தெளிந்த நீர் கொண்டு வந்தான். அவன் மிகுந்த அன்போடு முதல் குடம் நீரை ஊற்றினான்; அவள் முழுமையான மரமாக மாறினாள். அதன் கிளைகளைச் சரி செய்து, காயங்களுக்கு மருந்து இட்டு, இரண்டாவது குடம் நீரை ஊற்றினான். மரம் மறைந்து, அவனது மனைவி பழைய அழகுடன் முழுமையான பெண்ணாகத் திரும்பினாள்.

நடந்ததைக் கேட்டறிந்த இளவரசன், இந்தக் கொடுமை செய்த அனைவரையும் அரண்மனையை விட்டுத் துரத்திப் பிச்சைக்காரர்களாக்கினான்.

இந்தக் கதை நமக்கு உணர்த்துவது என்னவென்றால், இயற்கை (மரம்) மற்றும் பெண் ஆகிய இருவருமே இந்த உலகின் அழகிற்கு ஆதாரமானவர்கள். அவர்களைப் பேராசையோடு அணுகினால் அவர்கள் சிதைந்து போவார்கள்; ஆனால் அன்போடு அணுகினால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்று மலருவார்கள். அந்தப் பெண் மௌனமாகப் பட்ட துயரமும், இறுதியில் அவள் மீட்டெடுக்கப்பட்டதும் இன்றும் கன்னட நாட்டுப்புறங்களில் ஒரு பாடலாகவே பாடப்படுகிறது.

Author

You may also like

Leave a Comment